சாதிச் சான்றிதழுக்காகப் பழங்குடியினர் மரப்பொந்திலா வசிக்க வேண்டும்?

சாதிச் சான்றிதழுக்காகப் பழங்குடியினர் மரப்பொந்திலா வசிக்க வேண்டும்?
Updated on
2 min read

பழங்குடியினருக்கு அரசமைப்பு வழங்கிடும் பல உரிமைகள் நடைமுறையில் அதிகாரவர்க்கத்தால் மறுக்கப்படுகின்றன. ‘ஜெய்பீம்’ திரைப்படம் பழங்குடியினர் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளைப் பேசியதன் விளைவாகத் தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடியினரின் கோரிக்கைகளான, இலவச வீட்டுமனைப் பட்டா, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட சில பிரச்சினைகள் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்த்து, அதிகாரிகள் பழங்குடியினர் வசிப்பிடங்களுக்குச் சென்று அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிவருகின்றனர்.

குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டம் வீரகநல்லூர் கிராமத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 30 இருளர் பழங்குடியினக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியதுடன், அவர்களுக்கு 6 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து, அவர்களுக்கென்று சொந்தமாகச் செங்கல் சூளை அமைத்துக் கொடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய-மாநில அரசின் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றையும் நலத்திட்டங்களையும் பெறுவதற்குப் பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் அவசியமான ஒன்று. தமிழ்நாட்டில் அனைத்துப் பழங்குடிகளும் சந்தித்துவரும் ஒரு அவலம் சாதிச் சான்றிதழ் பெறுவது. பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பதால், அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு, வனஉரிமைச் சட்டத்தின் கீழ் நில உரிமை, பழங்குடியினர் நலவாரியத்தின் பல்வேறு நலத்திட்டங்கள் போன்றவற்றைப் பெற முடியாமல் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றிபெற்ற கோயம்பத்தூர் மாவட்டம் ரொட்டிகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி சங்கவி, தனக்கு சாதிச் சான்றிதழ் கோரிக்கை விடுத்த மனுக்கள் வருவாய்த் துறையினரால் ஐந்து முறை நிராகரிக்கப்பட்டு, பின்னர் ஊடகங்களில் செய்தி வெளியானவுடன் தனக்கு சாதிச் சான்றிதழ் கிடைத்ததாகக் கூறுகிறார். பழங்குடி சாதிச் சான்றிதழ் கோரிய மனுக்களை ஒரு மாவட்டத்தின் வருவாய்க் கோட்டாட்சியர் நிராகரித்து, அதற்கு அவர் கூறிய காரணங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. சாதிச் சான்றிதழ் கோரிக்கை விடுத்த மனுதாரர்கள் மரப்பொந்தில் வசிக்கவில்லை என்றும், குடும்பத்துப் பெண்கள் மேலாடை அணிந்துள்ளார்கள் என்றும் அதனால் சாதிச் சான்றிதழ் மறுக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

ஆவண ஆதாரங்கள், அரசாணைகள், தமிழ்நாட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் போன்றவற்றின்படி சாதிச் சான்றிதழ் கொடுக்க உத்தரவிட வேண்டிய சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், மூன்றாம் நபர்களின் தலையீடு காரணமாக சாதிச் சான்றிதழ் வழங்க முடியாது என்று கூறுகிறார். பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் கேட்டுப் பல்வேறு ஆவணங்களைக் கொடுத்த பிறகும் அந்த ஆவணங்களைப் பரிசீலனைக்குக்கூட எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்கும் போக்கு தமிழ்நாட்டில் பல்வேறு வருவாய்க் கோட்டாட்சியர்களிடம் உள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கிவிட்டு, அவரின் உடன் பிறந்த சகோதரிக்கு சாதிச் சான்றிதழ் மறுப்பதும், தந்தைக்கு சாதிச் சான்றிதழ் வழங்கிவிட்டு, அவரின் குழந்தைக்கு சாதிச் சான்றிதழ் மறுப்பதும் வாடிக்கையாக உள்ளது.

தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை கடிதம் எண்: 19574/சா.மெ. 1/2013 நாள் 13.12.2013 மூலமாகத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு உரிய விசாரணை செய்து ஒரு வார காலத்துக்குள் வழங்கவும், ஐயம் ஏற்படும் நேர்வுகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு 15 நாட்களுக்குள் சாதிச் சான்றிதழ் வழங்கவும் வேண்டும். ஏற்கெனவே, மாநிலக் கூர்நோக்குக் குழுவின் விசாரணையில், சாதிச் சான்றிதழ் மெய்த்தன்மை உடையது என்று சான்று பெற்ற நபர்களின் வாரிசுகள் மற்றும் ரத்த வழி/ மரபுசார் உறவினர்களுக்குச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மேற்கண்ட கடிதம் மூலமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால், மேற்கண்ட ஆணை பல மாவட்டங்களில் பின்பற்றப்படுவதில்லை. குடியிருக்க வீடே இல்லாத பழங்குடியினரிடம் 1950-ம் ஆண்டுக்கு முந்தைய நிலப் பத்திரம் கேட்பதும், 100 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களின் முன்னோர்கள் செய்த தொழிலைத் தற்போதும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் எவ்விதத்திலும் நியாயம் இல்லை. தந்தைக்கு சாதிச் சான்றிதழ் இருந்தால் அவரின் பிள்ளைகளுக்கும், உறவினர் ஒருவருக்கு சாதிச் சான்றிதழ் இருந்தால் அவரின் மற்ற உறவினர்களுக்கும் அதே கோப்பின் அடிப்படையில் சாதிச் சான்றிதழ் வழங்கப் பல வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளன.

இந்த நடைமுறை தமிழ்நாட்டில் பல வருவாய்க் கோட்டங்களில் பின்பற்றப்படுவதில்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மத்திய - மாநில அரசுகளின் நலத்திட்டங்களின் காரணமாகப் பழங்குடியினரின் தோற்றம், உணவு முறை, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், பழங்குடியினக் கிராமங்களிலும் நகரங்களிலும் வசிக்கும் பல்வேறு சாதி மக்களோடு கலந்து வாழும் சூழலில், பழங்குடியினரின் அன்றாட வாழ்க்கையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தேசியப் பழங்குடியினர் ஆணையம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றமும் பல தீர்ப்புகளில் இதனை உறுதிசெய்துள்ளது.

பழங்குடியினரின் இடப்பெயர்வுகள் காரணமாக அவர்களின் பண்பாட்டுக் கூறுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனைப் பல்வேறு மானிடவியல் ஆய்வாளர்கள் தங்கள் கள ஆய்வின் மூலம் உறுதிசெய்துள்ளனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், அவர்களின் வாழ்க்கை முறை குறித்துக் கேள்வியெழுப்புவதும், வருவாய்க் கோட்டாட்சியர்கள் பலரும் இயந்திரத்தனமாகச் செயல்படுவதும் அரசமைப்புக்கு முரணானது. பழங்குடியினரின் இனச்சான்று என்பது அவர்களின் அடையாளம் ஆகும். நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்பும் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் பெற முடியாமல் பரிதவிப்பது, அதனால் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை மறுக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.

பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட வேண்டும். மேலும், தமிழ்நாடு முழுவதும் ஒரே நடைமுறையைப் பின்பற்றும் வகையில், அரசாணை வெளியிடப்பட வேண்டும். பழங்குடியினரின் நலன்களை உறுதிப்படுத்துவதுடன், அவர்களுக்கு அரசமைப்பு வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெறுகிறார்களா என்பதையும் பழங்குடியினர் நலத் துறையும் அரசும் உறுதிசெய்திட வேண்டும்.

- ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர், சிபிஐ(எம் )

தொடர்புக்கு: grcpim@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in