

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் தொழில், பண்பாட்டுச் செயல்பாடுகள் போன்ற பலவும் பெரும் முடக்கத்துக்கும் நெருக்கடிக்கும் ஆளாகின. இதில் இளைய தலைமுறையின் எதிர்காலத்தோடு தொடர்புடைய கல்விச் செயல்பாடுகள் முற்றாகவே முடங்கிப்போயிருந்தன. பேரிடர்க் கால முடக்கத்துக்குப் பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர் - ஆசிரியர் உறவிலும், கற்றல் - கற்பித்தல் நாட்டத்திலும் மிகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
பெரும்பான்மை மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைகள், அலட்சிய மனப்போக்கு, படிப்பில் நாட்டமின்மை, கைபேசிப் பயன்பாடுகள், போதைப் பழக்கம், கண்டிப்பும் கவனிப்பும் இல்லாத பெற்றோர்கள், குறுகிய காலகட்டத்துக்குள் பாடங்களை நடத்தி முடித்து, பல கட்டத் தேர்வுகளை நடத்தி, விடைத்தாள்களைத் திருத்தி, செய்முறைத் தேர்வுகளை முடிக்க வேண்டிய கட்டாயம் எனப் பல நெருக்கடிகளையும் இடர்ப்பாடுகளையும் கடந்துதான் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களைப் பொதுத்தேர்வு எழுதுவதற்குத் தயார்படுத்தியுள்ளனர் ஆசிரியர்கள்.
இன்றிலிருந்து 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு மட்டுமல்லாமல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளி ஆண்டுத் தேர்வுகளும் தொடங்குகின்றன. மாணவர்கள் தேர்வு எழுதப்போகும் இதே காலகட்டத்தில்தான், தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் ஊர்த் திருவிழாக்களும், கோயில் திருவிழாக்களும் நடைபெற்றுவருகின்றன. இரண்டு ஆண்டுகளாக சமூக, பண்பாட்டுச் செயல்பாடுகள் யாவும் முடங்கிப்போயிருந்த நிலையில், கரோனா பேரிடர்க் காலத் தளர்வுகளுக்குப் பின்பு, இந்த ஆண்டுதான் மிகப் பெரிய அளவில் சமூக, பண்பாட்டுக் கூடுகைக்கான களமாகத் திருவிழாக்கள் மும்முரமாகத் தயார்படுத்தப்படுகின்றன.
இந்தத் திருவிழாக் காலம், மனிதத் திரளின் பண்பாட்டுச் செயல்பாடுகளை உயிர்ப்பிக்கும் காலம்தான் என்றாலும், இத்தகைய காலங்களில் ஒலிபெருக்கிகள் அளவுக்கு அதிகமாகவும், அதிக சத்தத்தோடும் பயன்படுத்தப்படுவது மாணவர்களின் கவனச் சிதறலை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகளுள் ஒன்றாக இருக்கிறது. கூம்புக் குழாய் ஒலிபெருக்கிகள், ஒலிபெருக்கிப் பெட்டிகள் ஊர் முழுக்கக் கட்டப்படுவதோடு, காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரைக்கும் மேலாகக்கூட அதிக சத்தத்துடன் ஒலித்துக்கொண்டிருப்பது எல்லா ஊர்களிலும் வழமையாகிக்கொண்டிருக்கிறது.
ஊர்த் திருவிழாக்கள் பெரும்பாலும் கோயில் வழிபாட்டோடு தொடர்புடையவை. தெய்வ வழிபாட்டை அடிப்படை நோக்கமாகக் கொண்டிருந்த ஊர்த் திருவிழாக்கள் பலவும், இப்போது ஊர்த் தலைக்கட்டுகளின், சாதிகளின், பங்காளிகளின், வகையறாக்களின் கெளரவத்தையும் ஆடம்பரத்தையும் பகட்டையும் பெருமிதத்தையும் காட்டிக்கொள்ளும் வகையில் மாறிப்போயிருக்கின்றன. இந்தத் திருவிழாக்கள் மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் தருகின்றன என்றாலும், திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளும் பட்டாசுகளும் மாணவர்களின் நிகழ்காலக் கல்வியையும் எதிர்கால வாழ்க்கையையும் சீர்குலைக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன என்பதை அந்தந்த ஊர் மக்களும் அரசும் காவல் துறையும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இது பள்ளி மாணவர்களின் தேர்வுக்காலம். எல்லாக் கல்வி ஆண்டிலும் மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்துவிடும். இந்தக் கல்வி ஆண்டில் மட்டும்தான் தாமதமாகப் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மே மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெற்றுவருகின்றன. வழக்கம்போல எல்லா ஊர்களிலும் இது திருவிழாக் காலம்தான். இந்த ஆண்டு இது தேர்வுக்காலம் என்பதால், திருவிழாக்களே நடத்தக் கூடாது என்று கூறவும் கூடாது, கூறிவிடவும் முடியாது. அது மக்களின் பண்பாட்டு மனநிலைக்கு எதிரானதாக அமைந்துவிடக்கூடும். அதேவேளையில், திருவிழாக் காலத்தில் மாணவர்களின் தேர்வுக்காலமும் வருவதால், திருவிழா நடைமுறைகளில் இந்த ஆண்டு மட்டும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நல்லது.
ஊர்த் திருவிழா குறைந்தது நான்கு நாட்களாவது நடைபெறுகிறது. இந்த நான்கு நாட்களும் நாள் முழுக்க ஒலிபெருக்கிகள் ஒலிப்பது, தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்தைச் சிதறடித்துச் சீர்குலைத்துப் படிப்பதற்குத் தடங்கல்களை ஏற்படுத்தும். இதுபோன்ற விஷயங்கள் அதிகம் இல்லாத நகரத்துவாசிகளுக்கு இது ஒரு பெரிய விஷயமா என்று தோன்றலாம். ஆனால், வசதி வாய்ப்புகள், கற்றலுக்கான வாய்ப்புகள், மின்சாரம், இணையம் போன்ற ஏராளமான விஷயங்களில் நகரத்து மாணவர்களோடு ஒப்பிடும்போது, கிராமத்து மாணவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில், சமமற்ற தளத்தில்தான் இருக்கிறார்கள். ஆனால், இரண்டு மாணவர்களுக்கும் ஒரே தேர்வு எனும் சமதளத்தில் போட்டி வைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வான நிலையில், திருவிழாக்களின் ஒலிபெருக்கிகள் வழியாக கிராமத்து மாணவர்களுக்கு ஏற்படும் இடையூறு அவர்களின் எதிர்காலத்தைப் பாதித்துவிடக் கூடாது அல்லவா!
ஏற்கெனவே, கரோனா காலத்தில் கற்றலில் நாட்டமில்லாமல், கற்பித்தல்-கற்றலில் தொடர்ச்சி இல்லாமல் இருந்த மாணவர்கள், இரண்டு ஆண்டுகளாகப் பொதுத்தேர்வு / ஆண்டுத் தேர்வு எதையும் எழுதவில்லை; எதிர்கொள்ளவும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மிகக் குறுகிய காலத்துக்குள் தேர்வு அனுபவத்தை எதிர்கொள்ளவிருக்கின்றனர். ஆகவே, நம் வீட்டுப் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, இந்தக் காலத்தில் மட்டுமாவது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தாமல் திருவிழாக்களைக் கொண்டாடலாமே.
ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தாமல் திருவிழாக்களைக் கொண்டாடுவது ஒன்றும் தெய்வக் குற்றம் ஆகிவிடாது. ஒலிபெருக்கிகள் இல்லாமல்தான் பன்னெடுங்காலமாகத் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டும் வந்திருக்கின்றன. மாணவர்களின் படிப்பில் கவனச் சிதறலையும் இடையூறையும் ஏற்படுத்தாமல் இருக்க ‘ஒலிபெருக்கி இல்லா திருவிழாக்கள்’ கொண்டாடுவதுதான் சாலச் சிறந்ததாக இருக்கும்.
கல்வியாளர்கள், கல்வித் துறையினர், அரசு நிர்வாகிகள், காவல் துறையினர், உள்ளாட்சி அமைப்பினர், பொதுமக்கள், தன்னார்வலர்கள் அனைவரும் மாணவர்களின் தேர்வுக் காலத்தை, படிப்புக்கு உகந்த காலமாக உருவாக்கித் தருவதற்கு முன்வர வேண்டும்.
- மகாராசன், ஆய்வாளர், ஆசிரியர். தொடர்புக்கு: maharasan1978@gmail.com