

ஆடு, மாடு மேய்த்தல், காடுகளுக்குச் சென்று புளியங்காய் அடித்தல், களாக்காய், இலந்தைக்காய் பறித்து விற்பது, சீமார் புல் அறுத்தல் இவைதான் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே விளாங்கோம்பை வனக் கிராமத்தில் வசித்துவரும் ஊராளியினப் பழங்குடி மக்களின் பிரதானப் பணிகள். இப்பழங்குடி மக்களின் வாழ்வாதாரமே இவ்வாறான சொற்ப வனப் பொருட்கள் சேகரமும் ஆடு, மாடு மேய்த்தலுமேயாகும்.
குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் வனவிலங்குகள் நடமாட்டம் மிக்க அடர்ந்த யானைக்காடுதான் இந்த விளாங்கோம்பை வனக் கிராமம். இவர்களுக்குக் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, சாலை வசதி உள்ளிட்டவை எட்டாக்கனி. 8 கி.மீ. நடந்து வந்தால்தான் ரேஷன் உள்ளிட்ட மளிகைப் பொருட்களையே வாங்க முடியும். இவ்வாறு இருக்கும் நிலையில், கல்வி குறித்துச் சிந்திப்பதெங்கே?
கல்வி வாசனையே அறியாத இக்கிராமத்தில் முகாமிட்டுக் கல்வியின் அவசியம் குறித்த உரையாடலை 2007-ல் தொடங்கியது ‘சுடர்’ தன்னார்வ அமைப்பு. வனத் துறையின் துணையோடு ஒரு வாகனத்தை ஏற்பாடுசெய்து 8 கி.மீ. தொலைவில் உள்ள வினோபா நகர் நடுநிலைப் பள்ளியில் முதற்கட்டமாக 10 குழந்தைகளைச் சேர்த்தது. சில மாதங்களிலேயே குழந்தைகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. இந்த 8 கி.மீ. வனப் பயணம் ஆபத்து மிகுந்தது. காட்டு யானைகளை மட்டுமல்ல, காட்டாறுகளையும் கடந்தே செல்ல வேண்டும்.
காட்டாறுகளைக் கடந்து செல்ல நான்கு தரைப்பாலங்கள் கட்டப்பட்டிருந்தன. 2010-ல் வந்த பெருவெள்ளத்தில் இந்தத் தரைப்பாலங்கள் அடித்துச்செல்லப்பட்டன. இக்கிராமம் துண்டிக்கப்பட்டுத் தனித்தீவானது. குழந்தைகளின் கல்வி தடைபட்டது. குழந்தைகள் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பஞ்சு மில்லுக்கும் போர்வெல் வண்டிகளுக்கும் கரும்பு வெட்டவும் செங்கல் சூளைகளுக்கும் வேலைக்குச் செல்லத் தொடங்கினார்கள். இவர்கள் மீட்கப்பட்டு, மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இக்கிராமத்திலேயே குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளியைத் தொடங்கிக் கல்வி வழங்கியது சுடர் அமைப்பு.
இக்குழந்தைகளுக்கு எட்டாம் வகுப்பு வரை பிற பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதைப் போலவே, பாடப் புத்தகங்கள், பள்ளிச் சீருடை, மதிய உணவு உள்ளிட்ட அரசு வழங்கும் அனைத்துப் பொருட்களும் இவர்களுக்கு வழங்கப்பட்டன. கூடுதலாக, மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகை ரூ.150 குழந்தைகளின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்டது.
இவ்வாறாகச் செயல்படும் இப்பள்ளி, ஒரு இடத்தில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே செயல்பட இயலும். இரண்டு ஆண்டுகளில் பயிற்றுவிக்கப்பட்ட இக்குழந்தைகள், அருகில் உள்ள முறைசார் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும். இங்குதான் 8 கி.மீ. தொலைவில் பள்ளிகளே இல்லையே, ஆகவே, இந்த சிறப்புப் பள்ளியே தொடர்ந்தது. 25 குழந்தைகள் பயின்றுவந்தனர். தொடக்கப் பள்ளி தொடங்கப்பட வேண்டுமென தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கமும் பல ஆண்டுகளாகப் போராடிவருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகவே இத்திட்டத்துக்கான நிதியைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வந்தது. குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை ரூ.150-லிருந்து ரூ.400 ஆக 2017-ல் உயர்த்தியது. உத்தரவுதான் வந்தது. நிதி நிறுத்தப்பட்டது. பணியாற்றும் தன்னார்வ ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான ஊதியமும் இரண்டாண்டுகளாக நிறுத்தப்பட்டது.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மும்மடங்கு உயர்ந்துள்ள இந்நிலையில், கடந்த மார்ச் 31 முதல் இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது. மத்திய அரசின் இந்த முடிவு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல உள்ளது. இதனால், இக்குழந்தைகள் அருகில் உள்ள முறைசார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
சேர்க்கப்பட்டவர்களின் நிலையென்ன?
விளாங்கோம்பை குழந்தைத் தொழிலாளர் பள்ளியில் பயின்ற 25 குழந்தைகள், வினோபா நகர் நடுநிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகும் நிலையில், இவர்களின் பெயர் மட்டும்தான் வினோபா நகர் பள்ளியின் வருகைப் பதிவேட்டில் உள்ளது. இவர்கள் வழக்கம்போல காடுகளுக்குள் ஆடு, மாடு மேய்க்கும் வேலையைத் தொடர்கின்றனர்.
ஒரு கி.மீ. தொலைவில் தொடக்கக் கல்வியை உறுதிசெய்யச் சொல்கிறது இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம். தொடக்கப் பள்ளி தொடங்கப்படும் வரை போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்கிறது இச்சட்டம். சட்டங்கள் செயல் வடிவம் பெறுமென நம்புகிறோம்.
தமிழ்நாடு முதல்வர் இவ்விஷயத்தில் தலையிட வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்திட மாநில அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவருவது காலத்தின் தேவை.
- ‘சுடர்’ நடராஜ், பழங்குடியினச் செயல்பாட்டாளர்,
தொடர்புக்கு: sudarinfo@gmail.com