Published : 04 May 2022 07:30 AM
Last Updated : 04 May 2022 07:30 AM
சென்ற மாதம் வரை மக்களின் பொதுப்புழக்கத்தில் அவ்வளவாக அறியப்படாமல் இருந்த ‘அலோபீசியா ஏரியேட்டா’ (Alopecia Areata) எனும் மருத்துவ மொழி, அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவையடுத்து, உலகளவில் பிரபலமாகிவிட்டது. தனது மனைவி ஜடா பிங்கெட்டை உருவக் கேலி செய்ததற்காக, விழா தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுபெற்ற வில் ஸ்மித் விழா மேடையிலேயே அதிரடியாகக் கன்னத்தில் அறைந்த நிகழ்வுதான் அதற்குக் காரணம்.
அந்த விழாவில் ஜடா பிங்கெட்டின் தலையில் முடி இல்லாததை வைத்து கிறிஸ் ராக் கேலி செய்திருந்தார். ஜடா பிங்கெட்டுக்கு முடி உதிரும் பிரச்சினை கடந்த சில வருடங்களாக இருந்துவருகிறது. இது சாதாரண முடி உதிரும் பிரச்சினை இல்லை. குளித்தாலோ தலையைச் சீவினாலோ கொத்துக்கொத்தாக முடி உதிரும் ஒரு கொடுமையான பிரச்சினை. இதனால் ஜடா பிங்கெட் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்தச் சூழலில் கிறிஸ் ராக் செய்த கேலி வில் ஸ்மித்துக்குக் கோபத்தைக் கிளற, நிதானம் இழந்துவிட்டார். பின்னர், விழா மேடையில் அவர் மன்னிப்புக் கேட்கவும், பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து, ‘அலோபீசியா ஏரியேட்டா’ தொடர்பில் ஊடகங்களில் உரையாடப்பட்டன. நவீன மருத்துவத்தில் அதற்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் குறித்து யூடியூப்களில் விளக்கம் கூறப்பட்டன. அதேநேரத்தில், அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர் பிரெட் கிங் ‘அலோபீசியா ஏரியாட்டா’வுக்கு ‘பேரிசிடினிப்’ (Baricitinib) மருந்து நல்ல பலன் அளிப்பதாக அறிவித்தார். அந்த மருந்து தொடர்பான ஆய்வுக் கட்டுரையும் ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்’ மருத்துவ ஆய்விதழில் வெளிவந்துள்ளது.
இது சென்ற வாரம் முழுவதும் மருத்துவத் துறையில் பேசுபொருளானது. தலைமுடி உதிரும் பிரச்சினைக்குப் புதிய விடியலாகப் பேசப்படும் இந்த மருந்து குறித்து அறியும் முன்னர், ‘அலோபீசியா ஏரியேட்டா’வின் மருத்துவ அறிவியலைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம். முடி என்பது ‘கெரட்டின்’ எனும் புரதத்தால் ஆனது. ரோமக்காலில் (Hair Follicle) இருந்து வளரக்கூடியது. நம் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. இதற்கு மேல் முடி உதிர்ந்தால் கவனிக்க வேண்டும்.
முடி உதிர்வதற்குப் பொதுவான பெயர், அலோபீசியா. இதில் பல விதம் உண்டு. அதிலொன்று, ‘அலோபீசியா ஏரியேட்டா’. நம் உடலில் உள்ள ‘தடுப்பாற்றல் மண்டலத்தின்’ (Immune System) தவறான கணிப்பு காரணமாக இது ஏற்படுகிறது. பொதுவாக, உடலுக்குக் கெடுதல் செய்யும் கிருமிகளுக்கு எதிராக, ‘எதிரணுக்கள்’ (Antibodies) எனும் சிப்பாய்களை அனுப்பி, அந்த எதிரிகளை அழித்து, நம்மைக் காப்பது தடுப்பாற்றல் மண்டலத்தின் தற்காப்பு வேலை. சமயங்களில் இது உடலில் இருக்கும் இயல்பான உறுப்பையும் தன் எதிரியாக நினைத்துச் செயலில் இறங்கிவிடுவதுதான் துயரம்.
அப்படித்தான் சிலருக்குத் தலைமுடி வளர்கிற ரோமக்கால்களையே எதிரியாக நினைத்து இது அழித்துவிடுகிறது. அப்போது அந்த இடங்களில் கொத்துக்கொத்தாக முடி உதிர்ந்து வழுக்கை விழுகிறது. தொடக்கத்தில் பழைய ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு இந்த வழுக்கை தோன்றும். போகப்போக இது உள்ளங்கை அகலத்துக்குப் பரவிவிடும். இதைத்தான் மருத்துவர்கள் ‘அலோபீசியா ஏரியேட்டா’ என்கின்றனர். உடல் தன்னைத் தானே கெடுத்துக்கொண்டு இப்படி ஒரு நோயை ஏற்படுத்துவதால், இதைச் ‘சுயத் தடுப்பாற்றல் நோய்’ (Auto Immune Disease) எனும் வகையில் சேர்த்துள்ளனர். மேலும், வம்சாவளிக் காரணிகளும் மனக்கவலை, உளக்கொந்தளிப்பு உள்ளிட்ட உளவியல் பிரச்சினைகள் இருந்தாலும் ‘அலோபீசியா ஏரியேட்டா’ தூண்டப்பட வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.
இந்த வகை வழுக்கையானது எந்த வயதிலும் வரலாம். ஆண், பெண் என்ற பாகுபாடெல்லாம் இதற்குக் கிடையாது. உலகில் 2% பேருக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் ஏறத்தாழ 7 லட்சம் பேர் இதற்காகச் சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். இப்போதுவரை தலையில் தடவப்படும் சில வகை ஸ்டீராய்டு களிம்புகளைப் பரிந்துரை செய்வதுதான் இந்தப் பிரச்சினைக்கு முதல் நிலை சிகிச்சை. அது பலன் தராதபோது, தலையில் தோலுக்கு அடியில் ஸ்டீராய்டு மருந்துகளை ஊசி மூலம் செலுத்துவது வழக்கத்தில் உள்ளது. இது தவிர, பி.ஆர்.பி. (Platelet Rich Plasma) எனும் சிகிச்சையும் உள்ளது. அதாவது, பயனாளியின் உடலிலிருந்து ரத்தத்தை எடுத்து, அதைத் தலைப் பகுதியில் சில மாத இடைவெளியில் ஊசி மூலம் செலுத்தும் சிகிச்சை முறை இது.
இன்னும் சிலருக்குத் தலையின் முன்பகுதியில் மட்டும் முடி உதிரும். பின்னந்தலையில் முடி இருக்கும். இவர்களுக்கு ‘முடி மாற்று சிகிச்சை மூலம்’ முடி முளைக்க வைப்பதுண்டு. அதாவது, பின்னந்தலையில் இருக்கும் முடியை எடுத்து, தலையின் முன்பகுதியில் நாற்றங்கால் பயிர் எடுத்து நடுவதுபோல் நடுவது. இந்த சிகிச்சைகள் எல்லாமே 60% வரைதான் பலன் தரும். பலருக்கு இது நல்ல பலன் அளித்தாலும் மீண்டும் மீண்டும் முடி உதிரலாம். ஆகவே, இதற்கு முழுமையாகத் தீர்வு கொடுக்கும் வகையில் புதிய வழிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் உலகளவில் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் யேல் பல்கலைக்கழக ஆய்வு.
இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட ‘பேரிசிடினிப்’ மருந்து ‘ஜேஏகே தடுப்பான்கள்’ (JAK inhibitors) எனும் மருந்து வகையைச் சேர்ந்தது. இது ஏற்கெனவே ருமட்டாய்டு மூட்டுவலிக்குப் பயன்படுத்தப்பட்டுவரும் மருந்துதான். இப்போது இது தலைமுடி உதிரும் பிரச்சினைக்கும் தீர்வு தருவதாகத் தெரிய வந்துள்ளது. எப்படி? நோய்த் தடுப்பாற்றலைத் தருகிற தைமஸ் நிணவணுக்களில் குறிப்பிட்ட சில அணுக்கள் மட்டும் தவறுதலாக தலைப் பகுதி ரோமக்கால் வேர்களை எதிரிகளாக நினைத்து அழித்துவிடுகின்றன. இதுதான் ‘அலோபீசியா ஏரியேட்டா’ வழுக்கை விழுவதற்குக் காரணம். இவர்களுக்கு ‘பேரிசிடினிப்’ மருந்தைக் கொடுத்தபோது தைமஸ் நிணவணுக்கள் ரோமக்கால் வேர்களை அழிக்கிற வழிகள் அனைத்தும் அடைபட்டுப்போயின. இதன் பலனால், ரோமக்கால்கள் அழிவதும், வழுக்கை விழுவதும் தடுக்கப்பட்டன. ஆகவே, தலைமுடி உதிரும் பிரச்சினைக்கு ‘பேரிசிடினிப்’ மருந்து நல்லதொரு வழியைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.
இந்த ஆய்வில் பங்கு பெற்ற 74% பேருக்கு 52 வாரங்களில் 90% முடி முளைத்துவிட்டது. பக்கவிளைவுகள் அவ்வளவாக இல்லை. அதனால் ‘அலோபீசியா ஏரியேட்டா’ பிரச்சினை கடுமையாக உள்ளவர்களுக்கு இந்த மருந்தைப் பயன்படுத்தலாம் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கழகம் (FDA) ஒப்புதல் கொடுத்துள்ளது. விரைவில் இது இந்தியாவிலும் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT