

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் பல் மருத்துவர் எட்வர்ட் கேம்ஸன். ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றிருந்த எட்வர்டுக்கு, ஐரோப்பாவின் புகழ்பெற்ற இடங்களுக்குச் செல்லலாம் என்று யோசனை தட்டியது.
உடனே தனக்கும் தனது நண்பருக்கும், லண்டனிலிருந்து ஸ்பெயினில் உள்ள கிரனடாவுக்குச் (Granada) செல்ல, விமானப் பயணச்சீட்டுக்கு ஏற்பாடு செய்யுமாறு பயண முகவரிடம் கூறியிருக்கிறார். முகவர் காதில் என்ன விழுந்ததோ, அவர் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள கிரனடா (Grenada) நாட்டுக்கான பயணச் சீட்டை வழங்கிவிட்டார்.
விமானம் அட்லாண்டிக் கடலுக்கு மேலே அமெரிக்காவின் திசை நோக்கிச் செல்வதை விமானத்துக்குள் இருந்த மின்னணுத் திரையில் ஒளிர்ந்த செய்தி உணர்த்தியதும் எட்வர்ட் அதிர்ந்துவிட்டார். “இது… ஸ்பெயினுக்குப் போற வழி மாதிரி தெரியலையே..” என்று சந்தேகம் தொனிக்க விசாரித்த பின்னர்தான் மனிதருக்கு விஷயம் புரியவந்தது. கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற அவர், நஷ்ட ஈடு கேட்டு, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின்மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
ஒரு எழுத்து தவறானதால் அவர், 3,75,000 மைல்களுக்கு வீணாக விமானத்தில் அலைய வேண்டியதாகிவிட்டது. ‘எழுத்தின்' வலிமையை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்!