

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உலகப் புத்தக நாள், தமிழ்நாட்டில் பரவலாகக் கடந்த வாரம் கொண்டாடப்பட்டது. அது பதிப்புரிமை நாளும்கூட. பதிப்புரிமை என்று சொல்லும்போது, எழுத்தாளர்களுக்குப் பதிப்பாளர்கள் உரிமத் தொகை வழங்க வேண்டிய உரிமையும் இதில் அடங்குகிறது.
2020-ம் ஆண்டுக்கான பால சாகித்ய விருது பெற்ற ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ நூலின் அச்சுப் பிரதியை யார் வேண்டுமானாலும் பதிப்பித்துக்கொள்ளலாம் என எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி, உலகப் புத்தக நாளன்று அறிவித்தார். தன் நூலைப் பதிப்புரிமை அற்றதாக எழுத்தாளரே அறிவிப்பது முன்னோடி அறிவிப்பு. இதுபோன்ற முயற்சிகள் பெருகவும் அதிகரிக்கவும் வேண்டும். ஆனால், ஒரு எழுத்தாளர் தான் எழுதியவற்றுக்கு உரிய சன்மானம், உரிமத்தொகை, விருது போன்றவற்றை உரிய காலத்தில் பெறும்போது மட்டும்தான் இப்படி நடப்பது சாத்தியம்.
விடுதலைக்கு முன்பும் தற்போதும்
‘எழுத்தை நம்பி வாழ முடியாது’ – தமிழ் எழுத்துலகில் நீண்ட காலமாகச் சொல்லப்பட்டுவரும் வாசகம் இது. தன் எழுத்து தீப்பெட்டியைப் போல தமிழ்நாட்டின் வீடுகளுக்கெல்லாம் எளிதாகச் சென்றுசேர வேண்டும் என நினைத்தார் பாரதியார். ‘எமக்குத் தொழில் கவிதை’ என்று முழங்கிய அவரும், எழுத்தையே தொழிலாகக் கொண்டிருந்த ‘நவீனச் சிறுகதை பிதாமகன்’ புதுமைப்பித்தனும் வாழ்ந்த காலத்தில் பெரிய வருமானத்தைப் பெறவில்லை. இருவரும் இளம் வயதிலேயே மரித்தும்போனார்கள். ஆனால், அவர்களுடைய எழுத்து வீச்சின் காரணமாக அவர்களுடைய எழுத்து மலிவு விலைப் பதிப்பாக இன்றைக்கு வாசகர்களின் கரங்களைச் சென்றடைந்துள்ளது.
நாடு விடுதலை பெறுவதற்கு முன் பெரிய வளர்ச்சி பெற்றிராத பதிப்புத் துறை, தொழில்நுட்ப வளர்ச்சியின்மை, வாங்குவதற்கான வாசகர்களின் வசதியின்மை போன்ற பல்வேறு சிக்கல்கள் நிலவிவந்தன. நாடு விடுதலை பெற்றதற்குப் பிந்தைய கடந்த 75 ஆண்டுகளில் இந்தச் சிக்கல்கள் பெருமளவு மாறியுள்ளன. மாநில மொழிப் பதிப்புத் துறைகள் இன்றைக்கு லாபகரமான வியாபாரமாகவே உள்ளன. புத்தாயிரம் ஆண்டுத் தொடக்கம் முதல் மாநிலம் முழுவதும் வளர்ச்சி கண்டுவரும் புத்தகக்காட்சிகளே இதற்கு சாட்சி.
எல்லா வியாபாரங் களையும் போலவே பதிப்புத் துறைக்கும் சில சிக்கல்கள் உள்ளன. 2016-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பு நீக்கம், 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. காகிதம் சார்ந்த பொருட்களுக்கு விதிக்கப்பட்டது, 2020-ல் கரோனா பெருந்தொற்று போன்றவை பாதிப்பை ஏற்படுத்தின. அதே நேரம், இந்தச் சிக்கல்கள் காரணமாகப் பதிப்புத் தொழில் மொத்தமாக நொடித்துப் போய்விடவோ தேங்கிவிடவோ இல்லை. சென்னை தொடங்கி பல மாவட்டத் தலைநகரங்களில் சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ள புத்தகக்காட்சிகளின் விற்பனையே இதற்கு சாட்சி.
ஏமாற்றும் முறைகள்
எழுத்தாளர், ஓவியர், வடிவமைப்பாளர், மெய்ப்புத் திருத்துநர், அச்சகர், நூல் உருக்கொடுப்பவர் (Binder), பதிப்பாளர், விற்பனையாளர் எனப் பலரையும் உள்ளடக்கியது பதிப்புத் தொழில். இவர்களில் எழுத்தாளரைத் தவிர்த்த மற்ற பங்களிப்பாளர்களுக்கு உழைப்புக்கு உரிய வகையில் இல்லையென்றாலும்கூட, குறைந்தபட்ச ஊதியமாவது கொடுக்கப்படுகிறது. அப்படிக் கொடுக்காவிட்டால் அடுத்த வேலை நகராது. இவற்றுக்குப் பின் நூலின் விற்பனையைப் பொறுத்து விலையில் 40-50% பதிப்பாளருக்குக் கிடைக்கிறது. ஆனால், ஒரு நூலின் தோற்றத்துக்கு அடிப்படைக் காரணகர்த்தாவாக இருக்கும் எழுத்தாளருக்கோ பெரும்பாலான பதிப்பாளர்கள் கையை விரித்துவிடுகிறார்கள். இத்தனைக்கும் குறைந்தபட்ச லாபம் கிடைக்கும் என்கிற உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே, பெரும்பாலான நூல்கள் பதிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. எழுத்தாளருக்குத் தர வேண்டிய உரிமத் தொகையை லாபத்தின் ஒரு பகுதியாகவே பதிப்பாளர்கள் கருதுகிறார்கள்.
நூலக ஆணையைப் பெறுவதற்காகக் குறிப்பிட்ட ஆண்டில் பதிப்பிக்கப்பட்டதாக, அதற்கடுத்த ஆண்டு களிலும்கூட அச்சிடுதல் நீண்ட காலமாக நடைபெற்றுவருகிறது. அதே முறையையே எழுத்தாளருக்கு உரிமத்தொகை தராமல் இருப்பதற்கு தமிழ்நாட்டின் பல பதிப்பாளர்கள் பயன்படுத்துகிறார்கள். உரிமத்தொகை குறித்து நூலாசிரியர் கேட்கும்போதெல்லாம், இன்னும் முதல் பதிப்பே விற்றுத்தீரவில்லை என்பதே அவர்களுடைய பதிலாக இருக்கும்.
சமீப காலத்தில் தமிழில் அதிகமும் வாசிக்கப்பட்ட சூழலியல் நாவல் ‘காடோடி’. அந்த நூல் வெளியாகிக் குறுகிய காலத்திலேயே அதிகமாக விற்பனையானது, பல விருதுகளையும் பெற்றது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் இந்த நூலின் பெயரிலேயே ‘காடோடி பதிப்பக’த்தைத் தொடங்கி தன் எல்லா நூல்களையும் எழுத்தாளர் நக்கீரன் பதிப்பித்துவருகிறார். இதற்குக் காரணம், தன் நூல்கள் பரவலாக விற்பனையாகியும் உரிமத்தொகை அவரை வந்தடையவில்லை என்பதால்தான்.
எழுத்தாளர் ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி‘, ‘கடலுக்கு அப்பால்‘ நாவல்களைப் பல பதிப்பகங்கள் பதிப்பித்திருப்பதற்கு, அவற்றுக்கு உரிமத்தொகை கொடுக்க வேண்டியதில்லை என்பதே முதன்மைக் காரணம். எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பிரபலமான நவீன இலக்கிய எழுத்தாளர்களும் சொந்தமாகப் பதிப்பகம் தொடங்குவதற்குக் காரணம், உரிய உரிமத்தொகையைப் பதிப்பகங்கள் தரவில்லை என்பதே.
காற்றில் பறக்கும் நெறிமுறைகள்
உண்மையில் ஒரு பதிப்பாளர் ஒரு நூலின் எத்தனை பிரதிகளை அச்சிட்டார், எத்தனையாவது பதிப்பை அச்சிட்டார் என்கிற தகவலை எழுத்தாளருக்குத் தெரிவிக்க வேண்டும். வெளிப்படைத்தன்மை-பதிப்பு நெறிமுறை சார்ந்த இந்தச் செயல்பாடு தமிழ்நாட்டில் பின்பற்றப்படுவதில்லை. ஆங்கிலப் பதிப்பகங்களும் தமிழ்நாட்டின் சில பதிப்பகங்களும் விதிவிலக்கு. தங்கள் நூல் விரைவாக வெளியாக வேண்டும் என்கிற ஆவல் மட்டுமே பல எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. உரிமத்தொகை, பதிப்பு ஒப்பந்தம் போன்றவற்றைப் பற்றி எழுத்தாளர்களிடம் பல பதிப்பகங்கள் வாயே திறப்பதில்லை.
தமிழின் முன்னோடி நூல்களை வெளியிட்ட ‘சக்தி காரியாலயம்’ வை.கோவிந்தன் பூர்விகச் சொத்தை விற்றுப் பதிப்பகமும் இதழையும் நடத்தினார். ‘வாசகர் வட்டம்’ லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வீட்டை அடகு வைத்து பதிப்பகத்தைத் தொடங்கினார். இன்றைய பதிப்பாளர்கள் நிச்சயமாக இந்த நிலையில் இல்லை. அந்தப் பதிப்பகங்களைப் போல் முன்னுதாரண நூல்களை மட்டுமே வெளியிடுபவர்களாகவும் இருப்பதில்லை. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மற்ற துறைகளைச் சார்ந்த பல சங்கிலித்தொடர் கடைகள் மூடப்பட்டுவிட்ட நிலையிலும் தமிழ்ப் பதிப்பகங்கள் நடத்தப்பட்டுதான் வருகின்றன. இணையவழி விற்பனை போன்ற புதிய வாசல்கள் பதிப்பகங்களுக்குத் திறந்திருக்கின்றன. இவை மட்டுமல்லாமல், ஒவ்வொரு புத்தகக்காட்சிக்கும் புதுப்புதுத் தலைப்புகளைக் கொண்டுவரும் பதிப்பகங்கள் நஷ்டத்திலேயே இயங்கிவருகின்றன என்று சொல்வது நம்பக்கூடிய காரணமாகவும் இல்லை.
எழுத்தாளர்களுக்கு உரிமத்தொகை கொடுக்காமல் பதிப்பாளர்கள் ஏமாற்றுவதற்கு எழுத்தாளர்களிடையே ஒற்றுமையின்மையும் எழுத்தாளர் உரிமைகளை வலியுறுத்தும் அமைப்புகள் இல்லாததும் மற்றொரு காரணம். நவீன இலக்கிய எழுத்தாளர்கள் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து கிடக்கிறார்கள். ‘இலக்கியச் சண்டை’ நடத்துவதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை. சக எழுத்தாளரை எழுத்தாளர்களும், எழுத்தாளர்களைப் பதிப்பாளர்களும் உரிய வகையில் மதிக்கும்போதும் நெறிமுறைகளைப் பின்பற்றும்போதும்தான் இதெல்லாம் மாறும்.
- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in