அரசற்ற அரசுதான் அற்புதங்களை விளைவிக்கும்!: ருட்கர் பிரெக்மன் நேர்காணல்

அரசற்ற அரசுதான் அற்புதங்களை விளைவிக்கும்!: ருட்கர் பிரெக்மன் நேர்காணல்
Updated on
6 min read

ருட்கர் பிரெக்மன். ‘புதிய சிந்தனைகளைக் கொண்ட இளம் டச்சு மேதை’ என்று ‘தி கார்டியன்’ நாளிதழால் புகழப்பட்டவர். 33 வயதாகும் பிரெக்மனின் சமீபத்திய புத்தகமான ‘Humankind: A Hopeful History’ உலகெங்கும் சலசலப்பை ஏற்படுத்திவருகிறது. ‘மனிதகுலத்தை முற்றிலும் புதியதொரு கண்ணோட்டத்தில் பார்க்க இந்நூல் என்னைத் தூண்டியது’ என்று யுவால் நோவா ஹராரி இந்த நூலைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அறிவியல் ஆய்வுகள், வரலாற்று நூல்கள் பலவும் மனிதர்களை அடிப்படையிலேயே சுயநலமானவர்கள், தீய இயல்பைக் கொண்டவர்கள் என்று கூறியிருக்கும் நிலையில் அந்தக் கருத்தாக்கங்களையெல்லாம் இந்தப் புத்தகத்தின் மூலம் ருட்கர் பிரெக்மன் தகர்த்து, மனித குலத்தைப் பற்றி நம்பிக்கையூட்டும் ஒரு பார்வையை வைத்திருக்கிறார். நவீன அரசுகள், பொருளாதாரம், நிறுவனங்கள், சிறை அமைப்புகள் போன்றவை இயங்குவதற்கான சிறந்த முன்மாதிரிகளையும் அவர் இந்த நூலில் முன்வைக்கிறார். இந்தப் புத்தகத்தை நாகலட்சுமி சண்முகம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ருட்கர் பிரெக்மனுடன் ஜூம் சந்திப்பு வழியாக நடத்திய உரையாடலிலிருந்து சில பகுதிகள்...

உலகெங்கும் பாசிஸம் புத்துயிர் பெற்றுவரும் அவநம்பிக்கையான சூழலில், மனிதகுலத்தின் நல்லியல்பு பற்றிய புத்தகத்தை நீங்கள் எழுதக் காரணம் என்ன?

வெவ்வேறு துறைகளாக அறிவியல் பரந்து விரிந்திருக்கிறது. மானுடவியலர், தொல்லியலர், சமூகவியலர், உளவியலர் என்றெல்லாம் துறைசார் நிபுணர்களும் பெருகியிருக்கிறார்கள். தத்தம் துறைகளின் இண்டுஇடுக்குகள் அனைத்தையும் அவர்கள் அறிவார்கள். ஆனால், பிற துறைகளில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பற்றி அவர்களுக்குத் தெரிவதில்லை. நான் செய்ய நினைத்தது என்னவென்றால், அதை உருப்பெருக்காடி வைத்துப் பெரிதுபடுத்திக் காட்டுவதுபோல் மக்களுக்குக் காட்ட வேண்டும் என்பதுதான்.

இரண்டாவது காரணம், அனைவருக்கும் அடிப்படை ஊதியத்தை வழங்குவதன் மூலம் வறுமையை எப்படி நாம் ஒழிக்கலாம் என்று என்னுடைய முந்தைய புத்தகத்தில் கூறியிருந்தேன். ‘உண்மையில், மனிதர்கள் அவர்களின் மனதின் ஆழத்தில் மிகவும் சுயநலமிகளாகவும் சோம்பேறிகளாகவும் இருக்கிறார்கள்; ஆகவே, இந்த யோசனை எடுபடாது’ என்று பலரும் கூறினார்கள். அப்புறம்தான் எனக்குத் தோன்றியது, நான் மிக முக்கியமானவை என்று நினைக்கும் ஏராளமான உட்டோப்பியக் கருத்தாக்கங்கள் அடிப்படையில் மனித குலம் மீதான நம்பிக்கையானதும் ஊக்கமளிப்பதுமான பார்வையையே சார்ந்திருக்கின்றன. அதனால்தான் இந்தப் பயணத்தைத் தொடங்கினேன். ஐந்து ஆண்டுகள் நீண்ட பயணத்தின் விளைவுதான் இந்தப் புத்தகம்.

மனிதர்கள் சுயநலமிகள் என்ற கருத்து ஏன் உங்களைத் தொந்தரவுக்குள்ளாக்குகிறது?

இந்தப் புத்தகத்தின் முதல் பாதியானது மனித இயல்பைப் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்பதைப் பற்றியது. நட்புணர்வு கொண்ட இனங்களே தப்பிப்பிழைக்கும் என்பது குறித்த அத்தியாயம் இந்தப் புத்தகத்தில் முக்கியமான ஒன்று. விலங்குகளின் உலகத்தில் மிகவும் நட்புணர்வு கொண்ட இனங்களுள் மனித இனமும் ஒன்று. நாமெல்லாம் கூட்டாகச் சேர்ந்து செயல்படுவதற்குக் கற்றுக்கொண்டிருக்கிறோம். விலங்குகளின் உலகத்தில் இந்த அளவுக்கு வேறு எந்த இனமும் இப்படிச் செயல்பட முடியாது. இதுதான் பெரும் வல்லமையின் உண்மையான ரகசியம். பெரும் புவிக்கோளினை நாம் எப்படி வெற்றிகொண்டோம் என்பதற்கான பதில் இது.

நீங்கள் ஒரு நிறுவனத்தின் மேலாளர் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்கள் ஊழியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படிப்பட்டவர்களாகத்தான் அவர்கள் இருப்பார்கள். உங்களின் பெரும்பாலான ஊழியர்கள் சுயநலமிகளாகவும் சோம்பேறிகளாகவும் வேலைசெய்ய விரும்பாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால், அதன் பிறகு நிறுவனரீதியிலான படிநிலையை நீங்கள் உருவாக்குகிறீர்கள். பொறுப்பில் இருக்கும் தலைவர் தனக்குக் கீழே உள்ளவர்களுக்கு உத்தரவு பிறப்பிப்பார். உங்கள் ஊழியர்களெல்லாம் நல்லவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் முற்றிலும் வேறு வகையான வழிமுறையை நோக்கி நகர்கிறீர்கள் என்று அர்த்தம். மிகவும் சமத்துவமான ஒரு கட்டமைப்பு அது.

மனிதர்கள் சுயநலமானவர்கள் என்ற பார்வை என்னைத் தொந்தரவுக்குள்ளாக்குகிறது, அந்தப் பார்வையே ஒரு கட்டுக்கதை. ஏனெனில், அதன் விளைவுகள் மிகவும் தீவிரமானவையாக இருக்கின்றன. மிகவும் மோசமானதொரு சமூகத்தை இது நமக்குத் தந்திருக்கிறது. கருத்தாக்கங்களெல்லாம் ஒருபோதும் வெறும் கருத்தாக்கங்கள் அல்ல. கதைகள் ஒருபோதும் வெறும் கதைகள் அல்ல. மனிதர்களாகிய நாம், நமக்கு நாமே என்ன கதைகளைச் சொல்லிக்கொள்கிறோமோ அந்தக் கதைகளாகவே நாம் ஆகிறோம்.

உங்களைப் பொறுத்தவரை மனித குலத்தின் மிகச் சிறந்த நற்செயல், மிக மோசமான கொடுஞ்செயல் என்று எவற்றைக் கூறுவீர்கள்?

மனிதர்கள் மிகவும் முரண்பாடான இனம். ஒருபக்கம் விலங்குகளின் உலகத்தில் மிகவும் நட்புணர்வு கொண்டவர்களாக நாம் இருக்கிறோம். மனிதர்களின் நற்செயல் என்று குறிப்பாக ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த 30-40 ஆண்டுகளில் அசாதாரணமான முன்னேற்றத்தை நாம் அடைந்திருக்கிறோம். வறுமை குறைந்திருக்கிறதா, அதிகரித்திருக்கிறதா என்று கேட்டால், பலரும் வறுமை அதிகரித்திருக்கிறது என்றுதான் சொல்வார்கள். உண்மை இதற்கு மாறானது. வறுமை பெருமளவு குறைந்திருக்கிறது. மனித ஆயுள் அதிகரித்திருக்கிறது. இது பெரிய சாதனை.

மறுபக்கம் விலங்குகளின் உலகத்தில் நாம்தான் மிகவும் கொடூரமானவர்களாகவும் இருக்கிறோம். பிற விலங்குகள் செய்யத் துணியாத செயல்களையெல்லாம் நாம் செய்கிறோம். சித்ரவதை முகாம்களை உருவாக்கியிருக்கிறோம், போர்புரிகிறோம், இனப் படுகொலை செய்கிறோம். ஆனால், இதுவும் நமது வரலாற்றின், இயல்பின் ஒரு பகுதி.

உங்கள் புத்தகம் தனிமனிதர்களின் இயல்புகளைப் பற்றிப் பேசுகிறது. ஆனால், அந்தத் தனிமனிதர்கள் ஒரு அமைப்பின், நிறுவனத்தின் பகுதிகளாகும்போதோ ஒரு சர்வாதிகார/ பாசிச அரசிடமோ நீங்கள் கூறும் அணுகுமுறை எடுபடாது அல்லவா! இதுபோன்ற அமைப்புசார் சூழலை எப்படி எதிர்கொள்வது?

இன்று ரஷ்யக் குடிநபராக நீங்கள் இருந்தால், நீங்கள் புதினின் செயல்பாடுகளுக்கு எதிரானவர் என்றால், அதையெல்லாம் எதிர்த்து நிற்பதற்கு உங்களுக்கு உண்மையிலேயே துணிச்சல் வேண்டும், அதற்கென்று பெரிய விலை கொடுக்க வேண்டும். கும்பலிலிருந்து விலகி நிற்க வேண்டுமென்றால், சரியான செயல்களைச் செய்ய வேண்டுமென்றால், நாம் சில சமயம் மற்றவர்களைப் பகைத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

செல்வந்த நாடான நார்வேயில் உள்ள சிறைக் கைதிகளுக்கு நல்ல வசதியான சூழல் ஏற்படுத்தித் தரப்பட்டிருப்பதுடன் கண்ணியமாகவும் நடத்தப்படுகிறார்கள் என்றும் அதனால் அவர்களிடம் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் எழுதியிருக்கிறீர்கள். ஆனால், வறிய நாடுகளின் பிரச்சினைகள் மிகவும் தீவிரமானவை, வாழ்வாதாரம் சார்ந்தவை. ஆகவே, அங்கே இதெல்லாம் எப்படிச் சாத்தியம்?

இதை நான் முற்றிலும் மறுக்கிறேன். நார்வே பணக்கார நாடுதான். 40 ஆண்டுகளுக்கு முன்பும் அது பணக்கார நாடாகத்தான் இருந்தது. அப்போது அங்கே முற்றிலும் வேறு வகையான குற்றவியல் சட்ட அமைப்பு முறை இருந்தது. அமெரிக்காவும் பணக்கார நாடுதான். ஆனால், அங்கே குற்றவாளிகள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதில்லை. விலங்குகள்போல் நடத்தப்படுகிறார்கள். ஆகவே, அவர்கள் அப்படியே ஆகிறார்கள். மக்களை, குறிப்பாகக் குற்றவாளிகளை, கண்ணியமாக நடத்துவதென்பது மிகவும் செலவுபிடிக்கும் விஷயம் இல்லை. நார்வே நாட்டின் சிறை அமைப்பை எந்த நாட்டிலும் பின்பற்றலாம். இது பணம் தொடர்பான விஷயம் இல்லை, மதிப்பீடுகள் தொடர்பானது. கோஸ்டா ரீக்காவில் பணக்காரர்கள் மிகவும் குறைவு. ஆனால், மகிழ்ச்சியாக வாழும் மக்கள் நிறைந்த நாடுகளில் அதுவும் ஒன்று. சிறைக் கைதிகளை நார்வே கண்ணியமாக நடத்துவதால், அவர்கள் மறுபடியும் குற்றம்செய்யும் வாய்ப்பு வெகுவாகக் குறைகிறது. ஆகவே, பணம் மிச்சம்தானே. ஆனால், மக்களையும் கைதிகளையும் கண்ணியமற்ற, மனிதத்தன்மையற்ற விதத்தில் நடத்துவதுதான் சமூகத்துக்கு மிகுந்த பொருள் இழப்பை ஏற்படுத்துகிறது.

மேலைநாட்டினர் எழுதும் தத்துவ, அறிவியல் வரலாற்று நூல்களெல்லாம் மேலைநாடுகளை மையப்படுத்தியவையாகவே இருக்கின்றன. உங்கள் புத்தகமும் மேலைநாடுகளை மையப்படுத்தியதாகவே இருக்கிறது. ஆசிய நாடுகள் பற்றி கிட்டத்தட்ட பேசப்படவே இல்லை. ஒரே ஒரு வரியில் மட்டும் காந்தியின் பெயரைக் குறிப்பிடுகிறீர்கள். ‘மனிதர்கள் இயல்பாகவே நல்லவர்கள்’ என்று எப்போதும் கூறியவர் அவர். அவரை எப்படித் தவற விட்டீர்கள்?

இது மேற்கத்திய பார்வை சார்ந்த புத்தகம்தான். நான் வளர்ந்தது இந்த மரபில்தான். மனிதர்கள் அடிப்படையில் சுயநலமிகள் என்பது முழுக்க முழுக்க மேற்கத்தியக் கருத்து. அது பண்டை கிரேக்கர்களிடமிருந்து தொடங்கியது, பிறகு கிறிஸ்தவத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பின்பு மேலைச் சிந்தனை முழுவதையும் அது ஆக்கிரமித்துக்கொண்டது. உலகெங்கும் ஏற்றுமதியும் செய்யப்பட்டது.

பெரிதும் அமெரிக்கர்கள்தான் இந்தச் சிந்தனையை எங்கும் பரப்புகிறார்கள். ஆகவே, இந்தச் சிந்தனை எங்கே தோன்றியது, இது எப்படி அடிப்படையிலேயே தவறான ஒன்று என்பதையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு இதனைத் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துவது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். மனித இயல்பைப் பற்றிய கீழை நாடுகளின் பார்வை குறித்து நான் படிக்க விரும்புகிறேன். ஆனால், அதைப் பற்றி நான் எழுத முடியாது. ஏனெனில், நான் அதில் வல்லுநர் அல்ல. மனித இயல்பைப் பற்றி எனக்கு மிகவும் குறைவாகவே தெரிந்திருக்கிறது என்பதைப் பற்றி உணர்ந்துகொள்வதற்கே எனக்குப் பல ஆண்டுகள் ஆயின.

சமூக ஊடகங்கள் மக்களை இணைப்பதாகத் தெரியவில்லை. சமூக ஊடகங்களின் காலத்தில் நம்மை நாமே காப்பாற்றிக்கொள்வது எப்படி?

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றிலிருந்து வெளியேறுவது நல்ல தொடக்கமாக இருக்கும். சமூக ஊடகங்களில் சில நல்ல விஷயங்களும் இருக்கின்றன. மக்களுக்கிடையில் தகவல்தொடர்பு பாலமாக இருக்கின்றன, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு உதவுகின்றன. ட்விட்டரிலிருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன். ஒரு துறையின் நிபுணரைக் கண்டுபிடித்து, அவரைப் பின்தொடர்வது என்பது இப்போது மிகவும் எளிது. ஆனால், சமூக ஊடங்களில் வெளிப்படுத்தும் ஆவேசங்கள் இருக்கின்றனவே! ஒரு விஷயத்தில் நீங்கள் எந்த அளவுக்கு ஆவேசத்தை வெளிப்படுத்துகிறீர்களோ அந்த அளவுக்கு விருப்பக் குறிகளைப் பெறுவீர்கள். உங்களைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்வதும் இவற்றிலிருந்து உங்களைத் தற்காத்துக்கொள்வதும் முக்கியம்.

மனித குலத்துக்குத் தேசியவாதம் நல்லதா?

தேசியவாதம் குறித்து எனக்கு இரண்டு நிலைப்பாடுகள் இருக்கின்றன. ஒருபக்கம், தேசியவாதம் மிகவும் ஆபத்தானது, மோசமானது என்பதை நிரூபிப்பதற்கு வரலாற்றில் நிறைய எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. தேசியவாதம் என்பது விஷம் என்று இடதுசாரிகள் கூறுகிறார்கள். ஆனால், தேசியவாதம் என்பது மக்கள் கொண்டிருக்கும் சக்திவாய்ந்த அடையாளங்களுள் ஒன்று. மக்களை இணைக்கிறது என்ற விஷயத்தில் மட்டும் அது நல்லது. டச்சுக்காரனாக இருப்பதில் எனக்கு உண்மையில் பெருமையாக இருக்கிறது. ஆனால், நான் ஜெர்மானியர்களை வெறுக்கிறேன் என்று அர்த்தமாகாது. கூட்டுறவை உருவாக்குவதற்கான நாட்டுப்பற்றாக தேசியவாதத்தைப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு எதிராக டச்சு மக்களைத் திரட்டுவதற்குத் தேசப்பற்று தேவையென்றால் அதைப் பயன்படுத்தலாம்.

பெரும்பாலான மக்கள் தங்களை இந்த உலகின் குடிமக்களாக நினைப்பதில்லை. பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர், சொந்த மதம் போன்றவற்றோடே தங்களைப் பிணைத்துக்கொள்கிறார்கள்... இது எல்லாம் நல்லதுதான். ஆனால், ஒரு நாடாகவும் ஒரு தனிநபராகவும் நீங்கள் யார் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தீர்கள் என்றால் வெளியுலகத்துக்கு உங்கள் கதவைத் திறந்துவிடலாம், உங்கள் ஜன்னலைத் திறந்துவிடலாம். மற்றவர்களைப் பற்றி அஞ்சுவதற்கு அவசியம் இல்லை. நீங்கள் யார் என்பதில் உங்களுக்கு எந்த உறுதியும் இல்லை என்றால்தான் நீங்கள் மற்றவர்களைப் பார்த்து அச்சப்பட ஆரம்பிக்கிறீர்கள். அப்போதுதான் தேசியவாதம் மிகவும் ஆபத்தானதாகிறது. ஆரோக்கியமான, பன்மைத்துவமான தேசியவாதத்தை நீங்கள் வளர்த்தெடுக்க வேண்டும். அமெரிக்காவைப் பார்த்தீர்களென்றால், அதன் வரலாற்றின் வெற்றிகரமான காலகட்டத்தில் கோடிக்கணக்கான வெளிநாட்டு மக்களுக்கு அது இடமளித்திருக்கிறது. டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள் என்று எல்லாருமே ஒன்றுசேர்ந்து அந்த நாட்டை மாபெரும் அடையாளமாக மாற்றுகிறார்கள். இது அமெரிக்காவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.

முதலாளித்துவம், கம்யூனிஸம் ஆகிய இரண்டின் மீதும் விமர்சனம் வைக்கிறீர்கள். இவற்றுக்கு மாற்றாக எதை நீங்கள் பரிந்துரைப்பீர்கள்?

நமது சமூகத்தின் கணிசமான பகுதி எப்போதும் கம்யூனிஸப் பண்பு கொண்டதாகவே இருந்திருக்கிறது. இதற்கு ‘அடிப்படை கம்யூனிஸம்’ என்று பெயர். ஒருவருக்கொருவர் பணம் பெற்றுக்கொள்ளாமல் நாம் நிறைய விஷயங்களைச் செய்கிறோம். நம் உறவினர்களுக்கு உதவிசெய்வதற்கு நாம் பணம் கேட்பதில்லை. இந்த உலகமானது கம்யூனிஸம், முதலீட்டியம் ஆகிய இரண்டின் கலவையாகத்தான் இருக்கிறது. ஆனால், அனார்க்கிஸ அரசில்தான் (அரசற்ற அரசு) நான் ஆர்வம் கொண்டுள்ளேன். அரசு என்ற பிரமிடு போன்ற அமைப்பில் பிரதமர் உச்சியில் இருப்பார். அரசு நிர்வாகம் அடுத்ததாகக் கீழே இருக்கும். அதற்கும் கீழே அந்த அரசின் குடிமக்கள். எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி ஒழுங்காற்றுவதில் மிகவும் மிதமான அணுகுமுறை கொண்ட அரசு ஒன்றைக் குறித்துதான் நான் ஆர்வம் கொண்டிருக்கிறேன். மக்கள் தாங்களாகவே முடிவெடுத்துச் செயல்படுவதற்கு வாய்ப்பு தருவது என்பது ஒரு லட்சியக் கனவு. என்னுடைய புத்தகத்தில் உடல்நலப் பராமரிப்பு அமைப்பு ஒன்றைப் பற்றி நான் பேசியிருக்கிறேன். ஐரோப்பாவிலேயே மிகவும் வெற்றிகரமான உடல்நலப் பராமரிப்புச் சேவை நிறுவனம் அது. அந்த நிறுவனம் வரிப் பணத்தால் இயங்குகிறது. ஆகவே, இதுபோன்ற நிறுவனங்களை உருவாக்குவதற்கு வரிவிதிப்பு அவசியமாகிறது. மிகவும் சமத்துவமான முறையில் இந்த நிறுவனம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனத்தில் மேலாளர் போன்ற பதவிகளோ மேலாண்மை செய்யும் கட்டமைப்போ இல்லை. செவிலியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் தாங்களாகவே தங்களுக்குள் ஒன்றிணைந்து முடிவெடுத்து எல்லாவற்றையும் செய்கிறார்கள். இதன் விளைவு மிகவும் வியப்பை ஏற்படுத்தக்கூடியது. உலகிலேயே மிகவும் தரமான, செலவு குறைவான மருத்துவப் பராமரிப்பு இதுதான். இந்த நிறுவனம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றி ஆய்வுசெய்வதற்காக உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் இங்கே வருகிறார்கள். இதை முதலீட்டிய அமைப்பு என்று சொல்வீர்களா, கம்யூனிஸ அமைப்பு என்று சொல்வீர்களா? இரண்டும் இல்லை. இது அரசால் நடத்தப்படும் அனார்க்கிஸம். ஆம், அதுதான். உங்கள் ஊழியர்களை நீங்கள் நம்புவீர்கள் என்றால், உங்கள் குடிமக்களை நீங்கள் நம்புவீர்கள் என்றால், தங்கள் முடிவுகளை எடுக்க அவர்களை நீங்கள் அனுமதிப்பீர்கள் என்றால் அற்புதங்கள் நிகழக் காண்பீர்கள்.

சந்தையை சந்தையே நடத்துவதற்கு அனுமதித்தால் அது ஏற்றத்தாழ்வையே அதிகரிக்கும். முதலீடுகளுக்கு அதிக வரிவிதிப்பு, உழைப்புக்கு மிகக் குறைந்த வரிவிதிப்பு என்ற அமைப்பை நோக்கி நாம் நகர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். உங்களிடம் அதிக சொத்து இருந்தால் நீங்கள் மிக அதிகமாக வரிசெலுத்த வேண்டும். இதனை நான் சோம்பேறித்தனத்தின் மீதான வரி என்பேன்.

அறிவியலும் தொழில்நுட்பமும் இந்த உலகத்தை மேம்பட்ட ஒரு இடமாக மாற்றும் என்று நம்புகிறீர்களா?

தொழில்நுட்பம் குறித்து நாம் அவநம்பிக்கை கொண்டிருக்கிறோம். நம்முடைய வாழ்க்கையைத் தொழில்நுட்பம் பெருமளவுக்கு மாற்றியமைத்திருக்கிறது. கடந்த 10-12 ஆண்டுகளின் மிக முக்கியமான புத்தாக்கம் என்பது கைபேசி வழியிலான பணப்பரிவர்த்தனையாகும். அது வங்கிக் கணக்கை நோக்கி நம்மை எளிய முறையில் செலுத்துகிறது. கடந்த 200 ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களெல்லாம் தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட முன்னேற்றங்களே. 1800-ல் உலகின் 90% மக்கள் வறுமையில் வாடினார்கள். அந்த நிலையைத் தொழில்நுட்பம் தற்போது வெகுவாகக் குறைத்திருக்கிறது. அதேபோன்றவைதான் தடுப்பூசிகளும்.

உங்களுக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கக்கூடிய தற்கால உலகத் தலைவர்கள் யார்?

அரசியல் தலைவர்கள்மீது நான் ஆர்வம் காட்டுவதில்லை. புதுப் புது எண்ணங்களுடன் வரும் மக்கள்மீதுதான் எனது ஆர்வமும் அக்கறையும். நாம் அரசியலர்கள்மீது அதிகக் கவனம் செலுத்துகிறோம். மாற்றங்கள் தொடங்குவது அங்கிருந்தல்ல, வேறு இடத்திலிருந்துதான். எனினும், நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆடர்னை மிகச் சிறந்த தலைவராக நான் கருதுகிறேன். அவர் மிகவும் பரிவுணர்வு கொண்டவராகவும் பகட்டு இல்லாதவராகவும் இருக்கிறார். உலகத் தலைவர்கள் பலரின் வெட்கங்கெட்டத்தனம் குறித்துதான் நான் கவலை கொள்கிறேன். ரஷ்யாவில் புதின், அமெரிக்காவில் ட்ரம்ப், பிரேசிலில் போவ்செனாரோ போன்றவர்கள் அப்படிப்பட்டவர்கள். ‘கடைசியாக நீங்கள் எப்போது வெட்கப்பட்டீர்கள்?’ என அரசியல் தலைவர்களைப் பார்த்தால், இதழியலாளர்கள் கேட்க வேண்டிய கேள்விகளுள் ஒன்றாக இருக்கும்.

உங்களின் அடுத்த புத்தகம் பற்றிச் சொல்லுங்களேன்...

எனது அடுத்த புத்தகத்துக்கான இப்போதைய தலைப்பு ‘ரைட் சைடு ஆஃப் ஹிஸ்டரி’ (வரலாற்றின் சரியான பக்கத்தில் நிற்பது). வரலாற்றை உந்தி முன்செலுத்தக்கூடிய மக்கள்மீது நான் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறேன். எடுத்துக்காட்டாக, 18-வது நூற்றாண்டில் அடிமை முறை என்பது மிகவும் இயல்பான ஒன்று. அதை நம்மால் ஏதும் செய்துவிட முடியாது. பிறகு, புரட்சியாளர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்ட சிறிய குழுவினர் வந்தார்கள். ஒன்று பெருவாரியான மக்களால் அங்கீகரிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ படுவதற்கு முன்பு வரலாற்றின் சரியான பக்கத்தில் நின்ற இதுபோன்றவர்களைப் பற்றி எழுதுவதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம். எதிர்கால வரலாற்றாய்வாளர்கள் நம்மை எப்படிப் பார்ப்பார்கள்? இன்று நாம் செய்துகொண்டிருக்கும் மிகப் பெரிய குற்றங்கள் எவை? இந்தக் கேள்விகள்தான் என்னை மிகவும் கவர்ந்திழுக்கின்றன.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in