2024-ல் காங்கிரஸ் ஆட்சி | பாதியில் முறிந்த பிரசாந்த் கிஷோரின் ‘மாஸ்டர் பிளான்’ - கட்சியின் அடுத்த நகர்வுக்காக காத்திருக்கும் தொண்டர்கள்

2024-ல் காங்கிரஸ் ஆட்சி | பாதியில் முறிந்த பிரசாந்த் கிஷோரின் ‘மாஸ்டர் பிளான்’ - கட்சியின் அடுத்த நகர்வுக்காக காத்திருக்கும் தொண்டர்கள்
Updated on
5 min read

இந்தியாவில் தேர்தல் திட்டமிடுதலுக்கு புகழ்பெற்ற ஐ-பேக் என்ற அமைப்பின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்ய எடுத்த முயற்சி தான் சமீபத்திய அரசியல் பரபரப்பாகும். எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாமல் விழுந்துகிடக்கும் குதிரையாக உள்ள காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்தி, அசுர பலத்துடன் ஆட்சியில் உள்ள பாஜக-வை வீழ்த்தும் சக்தியாக மாற்றிக் காட்ட முடியும் என்று பிரசாந்த் கிஷோர் நம்பிக்கை விதைத்து காய்களை நகர்த்தினார்.

இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் 85 பக்க செயல்திட்டம் ஒன்றை அவர் அளித்தார். நாட்டின் அசைக்க முடியாத சக்தியாக ஒருகாலத்தில் திகழ்ந்த காங்கிரஸ் கட்சி அதளபாதாளத்திற்கு சரிந்தது எப்படி? அக்கட்சி தற்போது சந்தித்துவரும் பிரச்சினைகள், அதை தீர்ப்பதற்கான வழிமுறைகள், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த தேவையான மாற்றங்கள், மக்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்த செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள், கூட்டணி தந்திரங்கள், வரும் தேர்தலில் வெற்றிக்கனியை பறிப்பதற்கு தேவையான உத்திகள் என விரிவான ‘மாஸ்டர் பிளான்’ அந்த செயல்திட்டத்தில் இடம்பெற்றிருந்தது.

பிரசாந்த் கிஷோர் அளித்த திட்டத்தை ஏற்று நடைமுறைப்படுத்தினால் அடுத்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைப்பது உறுதி என்று பல தலைவர்கள் பேசும் அளவுக்கு அவரது திட்டங்கள் இருந்தன. ஆனால், நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க பழம்பெரும் கட்சியில் இதுபோன்ற அதிரடி மாற்றங்களை ஏற்றுக் கொள்வதில் இருக்கும் சிக்கல்கள் ஏராளம். அந்த தடைகளைத் தாண்டி காங்கிரஸ் குதிரை எழுந்துநின்று ஓடி வெற்றிபெறுமா என்ற கேள்வியுடன் நாட்டு மக்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். ஆனால் நடந்ததே வேறு.

நடுத்தர வகுப்பினர் 28.3 கோடி; நகர்ப்புற ஏழைகள் 13 கோடி; நாள் ஒன்றுக்கு 2 டாலருக்கும் (ரூ.153) குறைவான வருவாய் உள்ளவர்கள் 80 கோடி; பழங்குடிகள் 700+, சாதிகள் 3000+, சாதி பிரிவுகள் 2500+

கட்சி கட்டமைப்பு

# அகில இந்திய காங். கட்சி தலைவர்
# மத்திய தேர்தல் குழு
# காங்கிரஸ் காரிய கமிட்டி
# நாடாளுமன்ற குழு
# தேர்தல் பணிக்குழு
# மாநில காங்கிரஸ் தலைவர்
# மூத்த துணைத் தலைவர்
# மாநில பொதுச்செயலாளர்
# மாவட்ட காங்கிரஸ் தலைவர்
# வட்டார காங்கிரஸ் தலைவர்
# பஞ்சாயத்து காங். தலைவர்
# கிராம காங்கிரஸ் தலைவர்

25 - நாடு தழுவிய உறுப்பினர் சேர்க்கை கடந்த 25 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை

பதவிகளுக்கு குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம்

* ஒரு குடும்பம் ஒரு பதவி
* 50 சதவீதம் தேர்தல் மூலம்
* 50 சதவீதம் நியமன முறை

பாஜக-வுடன் நேரடியாக போட்டியிட்டதில் முடிவுகள்

நேரடி போட்டியில் காங்கிரஸ் கட்சி

2014-ல் 90 சதவீதமும், 2019-ல் 92 சதவீதமும் தோல்வியை தழுவியுள்ளது

கூட்டணி

ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் தனித்துப் போட்டி மற்றும் கட்சியில் தேசிய தன்மை மாறாமல் சில பகுதிகளில் மாநில கட்சிகளுடன் கூட்டணி (5-6 கட்சிகள்)

பிரசாந்த் கிஷோருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு

பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் அமைப்பு தெலங்கானாவில் 2023 சட்டசபை தேர்தலில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி(டிஆர்எஸ்) உடன் இணைந்து பணியாற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலருக்கு பிடிக்கவில்லை. அவரது முரண்பாடான நிலையை பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அவர் தேர்தல் ஆலோசகராக இல்லாமல் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும், முரண்பாடான எந்தக் கட்சியுடனும் பணியாற்றக் கூடாது என்று ஒரு சில தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். 2024 பொதுத்தேர்தலுக்கான திட்டங்களை வகுக்க அதிகாரமளிக்கப்பட்ட 8 பேர் அடங்கிய செயற்குழு ஒன்றை சோனியாகாந்தி அமைத்துள்ளார். இக்குழுவில் முக்கியமான ஒருவராக பிரசாந்த் கிஷோர் இணைந்து காங்கிரஸ் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர் ஏற்க மறுத்து விலகிவிட்டார்.

அவரது ட்விட்டர் பதிவில், ‘நான் காங்கிரஸில் இணைவதைவிட கட்சித் தலைமை பிரச்சினையை சரிசெய்வதும், கட்டமைப்பை வலுப்படுத்துவதுமே இப்போதைக்கு அவசியமான ஒன்று என்பது என் தாழ்மையான கருத்து’ என்று தெரிவித்து விலகிவிட்டார். கட்சித் தலைவராக சோனியா காந்தியும், கூட்டணி கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் மூத்த தலைவர் ஒருவரும், நாடாளுமன்ற கட்சித் தலைவர் பொறுப்பில் ராகுல் காந்தியும், நேரு குடும்பத்தைச் சேராத ஒருவருக்கு துணைத்தலைவர் பொறுப்பு வழங்குவதும் பிரசாந்த் கிஷோர் அளித்த பரிந்துரைகளில் ஒன்றாகும்.

தேர்தலில் பிரசாந்த் கிஷோர் நேரடியாக சோனியாவுக்கு மட்டுமே பதில் சொல்ல வேண்டியவராக இருக்கும் வகையில் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது அவரது நிபந்தனையாக இருந்தது. மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில், ‘பிரசாந்த் கிஷோரின் புள்ளிவிவரங்கள் மிகவும் பயனுள்ளவை. அந்த விவரங்கள் காங்கிரஸ் கட்சியிடம் கூட இல்லை. ஆனால், கட்சித் தலைமை பிரச்சினைக்கு அவர் தீர்வு சொல்லவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது உதய்பூரில் நடைபெற உள்ள மாநாடு மட்டுமே காங்கிரஸ் தொண்டர்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கிறது. இந்த மாநாட்டில் எடுக்கப்போகும் முடிவுகளைப் பொறுத்தே 2024-ல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறுமா, இல்லையா என்பது முடிவாகும்.

கட்சியின் பலவீனங்கள்

* வயதான தலைவர்கள்
* மக்களுடன் தொடர்பற்ற நிலை
* ஜனநாயகமற்ற கட்சி அமைப்பும் செயல்பாடும்

வெ.நாராயணசாமி, முன்னாள் மத்திய இணையமைச்சர்

இந்தியாவில் கிராமங்கள் தோறும் தொண்டர்களைக் கொண்டுள்ள கட்சி காங்கிரஸ். இக்கட்சி வலுவாகவே உள்ளது. தொண்டர்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அதற்காகவே சோனியா காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டங்கள் தோறும் தேர்தல்கள் நடத்தப்பட்டு புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. புதிய தலைவர்களின் சிந்தனைகள் மூலம் கட்சியில் புதிய மாற்றங்கள் உருவாகும். மத்திய மற்றும் மாநில அளவில் பொறுப்பு வகிக்கும் 400-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கும் 'கருத்து பரிமாற்ற மாநாடு' ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வரும் மே 13, 14, 15 தேதிகளில் நடைபெற உள்ளது.

அதில் தற்போதுள்ள அரசியல் சூழல், பொருளாதார நிலை, சமூகநீதி, பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் விரோத கொள்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. அதனடிப்படையில் கட்சியினர் அனைவரும் கிராமங்கள்தோறும் அடித்தட்டு மக்களை சந்தித்து விளக்க இருக்கிறோம். இது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுக்கவும் உதவும். அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி அழைத்தது குறித்தும், கட்சியில் சேர பிரசாந்த் கிஷோர் மறுத்தது குறித்தும் கருத்து கூற விரும்பவில்லை. 2024 தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டுமெனில் தமிழக முதல்வர் ஸ்டாலினை போல மதச்சார்பற்ற கூட்டணியை காங்கிரஸ் உருவாக்க வேண்டும். விட்டுக்கொடுத்து, அனைவரையும் அரவணைத்து தேர்தலை சந்தித்தால் காங்கிரஸுக்கு 2024 தேர்தலில் வெற்றி நிச்சயம்.

மாற்ற வேண்டிய பலவீனங்கள்

குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள்

2014 தேர்தல் - காங்கிரஸ் - 28 சதவீதம் - மற்ற கட்சிகள் 17 சதவீதம்
2019 தேர்தல் - காங்கிரஸ் - 39 சதவீதம் - மற்ற கட்சிகள் 19 சதவீதம்
முகம்தெரியாத நபர்களிடம் இருந்து நன்கொடை பெற்றதில் காங். முதலிடம்

கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்

நாடு முழுவதும் பலமாக உள்ள கட்சி காங்கிரஸ் மட்டும் தான். கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை என்பதற்காக பலவீனமடைந்திருப்பதாக கருதக் கூடாது. இது 60 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த கட்சி. அவ்வளவு எளிதில் பலவீனம் அடையாது. கட்சிக்கு புத்துணர்வு, புது சிந்தனைகளும் ஊட்ட வேண்டியுள்ளது. பாஜகவுக்கு எதிராக ஒரு அணி அமைக்க வேண்டுமெனில், காங்கிரஸ் பங்களிப்பு இன்றி அமைக்க முடியாது என்பது சரத்பவார் போன்ற பல தேசிய தலைவர்களின் கருத்தாக உள்ளது. அதிகாரத்தில் இல்லை அவ்வளவு தான். இது ஒரு வகையில் நல்லது தான். அப்போது தான் கட்சியின் நிறை, குறைகளை கண்டறிந்து மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

உதய்பூர் மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை செயல்படுத்தும்போது காங்கிரஸ் வலுப்பெறும். தமிழகத்தில் முந்தைய தேர்தல்களில் காங்கிரஸுக்கு இடம் ஒதுக்கீடு செய்தால் தோல்வி அடைவதாக கருதப்பட்டது. இப்போது மக்களவை, சட்டப்பேரவை, நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், வார்டுகளை திட்டமிட்டு தேர்ந்தெடுத்து போட்டியிடுதல், சரியான வேட்பாளரை நிறுத்துதல் போன்ற நடவடிக்கைகளால் காங்கிரஸின் தேர்தல் வெற்றி 72 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போது கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை, இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் காங்கிரஸுக்கு இனி வரும் காலங்கள் ஏறு முகம் தான். 2024 தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும்.

- மா.சண்முகம், ச.கார்த்திகேயன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in