நகர்ப்புற உள்ளாட்சிகளுக்குப் புதிய விடியல்

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்குப் புதிய விடியல்
Updated on
3 min read

நகர்ப்புற உள்ளாட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கான ஒருநாள் பயிற்சி முகாம்கள் நடைபெற்றுள்ளன. மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள் மற்றும் நகராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஆகியோருக்குத் தனியாக ஒரு நாளிலும், பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கு மற்றொரு நாளிலும் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகளின் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் நடந்தேறிய வரவேற்கத்தக்க நிகழ்வுகள் இவை.

முதலமைச்சர் இம்முகாம்களில் ஆற்றிய உரைகள் தனிக் கவனம் பெறுகின்றன. சென்னை மாநகர மேயராகப் பணியாற்றியதன் மூலம், தான் பெற்ற அனுபவங்களை அவர்களோடு பகிர்ந்துகொண்டதுடன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எப்படியெல்லாம் பணியாற்ற வேண்டும், எப்படியெல்லாம் பணியாற்றினால் மக்களின் நன்மதிப்பைப் பெற முடியும் என்ற ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். அவ்வுரைகள், உள்ளாட்சிமீது அவர் கொண்டிருக்கும் பிணைப்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தின.

புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவராகச் சிறப்பாகப் பணியாற்றியதுடன், எல்லாக் காலத்திலும் மக்களோடு நெருக்கமாகப் பழகிவருபவர், உள்ளூர் நிர்வாகம், மக்கள் பிரச்சினைகள் ஆகியவற்றையும் நன்கு அறிந்தவர் அமைச்சர் நேரு. சென்னை மேயராகப் பணியாற்றி மக்கள் அன்பைப் பெற்றவர் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆலந்தூர் நகராட்சித் தலைவராகப் பணியாற்றியவர் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி. இந்த அனுபவசாலிகள் எல்லாம் இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்டு, உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகத் தாங்கள் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன் பயனுள்ள ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.

இதற்கு முன்பு எந்த ஒரு முதலமைச்சரோ, துறை அமைச்சரோ உள்ளாட்சித் தேர்தல் முடிந்து மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புக்கு வந்தவுடன், அவர்கள் அனைவரையும் அழைத்து ஒன்றுசேர அமர்த்தி, அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கியது இல்லை. அந்த வகையில், இது ஒரு வரலாற்றுச் சிறப்பே. நகர்ப்புற உள்ளாட்சிகளின் நிதி ஆதாரங்களை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக சொத்துவரி சீராய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கியது, நவம்பர் மாதம் முதல் நாளை, ‘உள்ளாட்சிகள் தினம்’ என்று கொண்டாட ஆணையிட்டிருப்பது, ஊராட்சிகளின் கிராமசபைக் கூட்டத்தில் முதலமைச்சரே கலந்துகொண்டு பொதுமக்களைச் சந்திப்பது போன்ற செயல்பாடுகளெல்லாம் முதலமைச்சர் உள்ளாட்சிகள்மீது கொண்டுள்ள அக்கறையை மீண்டும் மீண்டும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சிகளின் பொறுப்புக்கு வந்திருப்பவர்களில் பெரும்பாலோருக்கு உள்ளாட்சி நிர்வாகம் புதிது; பலருக்குப் பொதுவாழ்க்கையே புதிது. இவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் பெண்கள். இவர்கள் எல்லோரும் எந்த ஊரின் நிர்வாகத்துக்குப் பொறுப்பேற்றுள்ளார்களோ அந்த ஊர் அவர்கள் அறிந்த, அவர்கள் வாழும் சொந்த ஊர்தான். இத்தனை நாட்களாக உள்ளாட்சி மன்றங்களின் சேவைகளை எதிர்நோக்கியிருந்த, சாதாரணக் குடிநபர்களாக இருந்த இவர்கள், இன்று அந்த உள்ளாட்சி மன்றங்களின் நிர்வாகப் பொறுப்புக்கு வந்துள்ளார்கள்.

குடிமக்களாக இருப்பது வேறு, குடிகளின் நிர்வாகப் பொறுப்பில் செயல்படுவது வேறு என்பதை அவர்கள் உணரும் நேரம் இது. இந்தப் புதியவர்களின் தோள்களில் புதிய சுமை ஏறியுள்ளது. இது அவர்கள் விரும்பிக் கேட்டுக்கொண்டதன் பேரில் உள்ளூர் மக்கள் ஏற்றிவைத்த சுகமான சுமை. தங்களை முதன்மைப்படுத்தியதற்கான நன்றிக்கடனாக மக்களுக்கு நல்ல நிர்வாகத்தைக் கொடுப்பதுடன், தற்கால, எதிர்காலத் தலைமுறையினருக்குப் பயன்படும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளைச் சிறப்பாக மேம்படுத்தித் தரவேண்டிய பொறுப்பும் கடமையும் அவர்களுக்கு இருக்கின்றன.

பொறுப்புக்கு வந்திருப்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. மன்றக் கூட்டச் செயல்பாடுகளை நன்கு அறிந்து வைத்திருத்தல், அலுவலக நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை பற்றிய புரிதல்கள், பொதுமக்களுடன் நல்லிணக்கத்துடன் உறவாடுதல் பற்றிய தெளிவு, சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகளைப் பற்றிய புரிதல்கள், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்த புரிதல்கள், அடிப்படைத் தேவைகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான திட்டங்களைத் தீட்டுதல், அவற்றைச் செயல்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தல் என்று எத்தனையோ விஷயங்களை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. சுருக்கமாக, அவர்களின் இன்றைய தேவை திறன் மேம்பாடு. முறையான பயிற்சிகள் மட்டுமே இத்தகைய திறன் மேம்பாட்டுக்கு உதவும். சமீபத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒருநாள் பயிற்சி நல்ல தொடக்கம்தான் என்றாலும், அவர்களின் திறன் மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வலுவான அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படுவது ஒரு அவசரத் தேவையாக உள்ளது.

காரணம், அவர்கள் தங்களின் பணியை ஏற்கெனவே தொடங்கிவிட்டார்கள். இவர்களைத் தேர்ந்தெடுத்த பொதுமக்கள் இவர்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் இவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். ஒரு திறமையான நிர்வாகம் என்பது நிர்வாக அளவிலான முடிவெடுப்பவர்களை மட்டும் சார்ந்தது அல்ல. நிர்வாக இயந்திரமும் தனது பங்களிப்பைத் திறம்பட வழங்கினால் மட்டுமே எதிர்பார்க்கப்படும் சிறப்பான பலன்களை எட்ட முடியும். தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகக் கட்டமைப்பும் அவற்றின் செயல்திறனும் எதிர்பார்ப்புகளை எட்டும் அளவுக்கு வலுவானவையாக இல்லை. சில மாநகராட்சிகளும் பெரிய நகராட்சிகளும் மட்டுமே அத்தகைய கட்டமைப்புகளைக் கொண்டிருக்கின்றன.

நிர்வாகக் கட்டமைப்பை மேம்படுத்துவது என்பது போதுமான அளவில் பணியாளர்களை நியமிப்பது மட்டுமல்ல, அவர்களின் செயல்திறன் தொடர்பானதும்கூட. நகர்ப்புற உள்ளாட்சிகளில் போதுமான அளவில் பணியாளர்கள் இல்லை என்பது நீண்ட காலமாக நிலவிவரும் பெருங்குறைபாடு. பணிபுரியும் குறைந்தபட்ச அலுவலர்களும் பணியாளர்களும்கூட, பணிச்சுமையாலும் அழுத்தங்களாலும் தங்கள் பணிகளை இயந்திரகதியில் செய்துவருகிறார்கள் என்பதும், பொதுமக்களுக்கு மரியாதை அளிப்பது இல்லை என்பதும் பொதுவான குற்றச்சாட்டுகள்.

பணியாளர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள வசதியாகப் புத்தாக்கப் பயிற்சிகள் எதுவும் நீண்ட காலமாக வழங்கப்படவில்லை. அரசுத் துறைப் பணியிடங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல் குறித்த சீராய்வு எதுவும் நீண்டகாலமாக செய்யப்படவில்லை எனவும், அதனால் பல குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன எனவும், அவ்வாறான சீராய்வு முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் சில நாட்களுக்கு முன்பு தமிழக நிதியமைச்சர் தெரிவித்தார். அமைச்சர் குறிப்பிட்ட அந்த நிலை, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் பொருந்தும். எனவே, அதேபோல ஒரு நடவடிக்கை நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் மேற்கொள்ளப்பட்டால் அது நிர்வாகத்துக்கு மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் பயன் அளிக்கும்.

மொத்தத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், தற்போதைய சூழ்நிலைகளுக்கேற்பத் தங்களைத் தகவமைத்துக்கொண்டு புதிய விடியலை நோக்கி நகர வேண்டிய காலம் கனிந்திருக்கிறது.

- ஜெயபால் இரத்தினம், ‘தமிழக வரலாற்றில் பெரம்பலூர்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: jayabalrathinam@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in