

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கல்வி தொடர்பாகப் பெரிதும் பேசப்பட்ட வார்த்தைகள் இவை: கற்றல் இழப்பு, கற்றல் இடைவெளி. இந்த இரண்டாண்டுகளில் கற்றல் இழப்பு குறித்துப் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டதற்குக் காரணம், அனைத்துத் தரப்பினரின் குழந்தைகளும் பாதிக்கப்பட்டதால்தான். அதிகாரம், செல்வாக்கு உடையவர்களின் குழந்தைகளும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் முதல்வரின் தனிப் பிரிவுக்கு ஆசிரியர் கூட்டணியின் தீனன் உள்ளிட்ட சிலர் மனு கொடுத்திருந்தனர். மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கடந்த பத்தாண்டுகளாக ஓராசிரியர் பள்ளிகளாக இயங்கிவருகின்றன. அந்தப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. அதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் இது: “மொத்தமுள்ள 76 இடங்களில் 12 இடங்கள் சமீபத்தில் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் விரைவில் நிரப்பப்படும்.” ஆக, கல்வி உரிமைச் சட்டம் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட இந்தப் பத்தாண்டு காலமும் தொடர்ந்து நிலவிவந்த அவலம் இன்னும் முடியவில்லை. 50-க்கும் மேற்பட்ட இந்தப் பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு எந்த அளவுக்குக் கற்றல் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
ஓராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, மத விடுப்பு, ஈட்டிய விடுப்பு எடுக்கும்போதெல்லாம், மாற்றுப் பணிக்கு இரண்டு முதல் நான்கைந்து ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து ஆசிரியர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். அப்படிச் செல்லும்போதெல்லாம், ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரையிலும் ஒன்றாக வைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டிவரும். அந்த நாட்களில், எல்லாக் குழந்தைகளையும் அமைதியாக உட்கார வைப்பது, சண்டை, சத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்வது போன்றவற்றுடன் வாய்ப்பு இருந்தால் ‘ஒன்று, இரண்டு 100 வரை எழுதுங்க... 200 வரை எழுதுங்க... ஏபிசிடி எழுதுங்க... கஙச எழுதுங்க...’ என்பது போன்ற பொதுவான கற்றல் செயல்பாடுகளைத்தான் கொடுக்க முடியும். அப்போது, அந்தந்த வகுப்புக் குழந்தைகளுக்கு ஏற்படும் கற்றல் இழப்பை நாம் எவ்வாறு கணக்கிட முடியும்?
மேலும், ஆசிரியர்களுக்கு நடைபெறும் பயிற்சிகள், அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டாரக் கல்வி அலுவலர், சுகாதாரத் துறை, இன்ன பிற சிறப்புக் கூட்டங்கள் நடக்கும்போதெல்லாம், இதே போல மாற்றுப் பணியில் இன்னொரு பள்ளியிலிருந்து ஆசிரியர்கள் ஓராசிரியர் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லாப் பாடநூல்கள், குறிப்பேடுகள், சீருடைகள், காலணிகள் என பத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்தப் பொருட்களை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்தான் சென்று கையெழுத்துப் போட்டுப் பெற்று வர வேண்டும் என்கிற நிலைமை இன்னும் தொடரவே செய்கிறது.
இந்தப் பொருட்கள் அனைத்தும் ஒரே நாளில் வழங்கப்பட்டுவிட்டால் ரொம்ப நல்லதுதான். மூன்றாம் வகுப்பு இரண்டு நூல்களில் தொகுதி 1 இருக்கும். தொகுதி 2 இருக்காது. அதற்கொரு நாள் போக வேண்டும். சட்டை இருக்கும்... கால்சட்டை இருக்காது. அதற்கொரு நாள் போக வேண்டும். அப்போதெல்லாம் அந்த ஓராசிரியர் பள்ளித் தலைமை ஆசிரியர் போக வேண்டும். அவர் போகும் நாளெல்லாம் இன்னொரு பள்ளி ஆசிரியர் மாற்றுப் பணிக்கு அங்கே வர வேண்டும். மூன்று பருவங்கள். அவற்றுக்கு எத்தனை வகுப்புகள், எத்தனை பாடநூல்கள், குறிப்பேடுகள்?! அவ்வளவு நாட்களும் அந்தக் குழந்தைகளுக்கு ஏற்படும் கற்றல் இழப்பை நாம் எவ்வாறு கணக்கிட முடியும்?
இது போக, அலுவலகப் படிவங்கள் நிரப்பிக் கொடுப்பதற்கு என்றே போகும் நாட்கள் எத்தனையெத்தனை! உதாரணத்துக்கு ஆசிரியர்கள் படிவங்களை நிரப்பிக் கொடுக்கவும், அவற்றைச் சரிபார்க்கவும், திருத்தவும் எனப் பல முறை தலைமை ஆசிரியர் கூட்டங்கள் நடக்கின்றன. அப்போதெல்லாம் இதே போல மாற்றுப் பணியில் ஆசிரியர்கள் அனுப்பப்படுவது வழக்கம். இப்படி ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டுமே ஆயிரக்கணக்கான ‘ஆசிரியர் வேலை நாட்கள்’ பாதிக்கப்படுகின்றன. வசதிகள் நவீனமயமாகும்போது செய்ய வேண்டிய பணிகள் எளிமைப்படுத்தப்பட வேண்டாமா? இது வெறும் நிர்வாகப் பிரச்சினை மட்டுமல்ல, முதன்மையாகக் குழந்தைகளின் கல்விப் பிரச்சினை ஆகும். இதை அனுமதிக்கலாமா?
எந்த ஒரு சூழலிலும் ஒரு பள்ளியை நம்பி வந்த குழந்தை எந்தவிதக் கற்றல் இழப்புக்கும் ஆளாகாமல் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் நேரம் முழுவதையும் கற்பித்தல் பணிக்காகச் செலவிடுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். வழங்கப்படும் அத்தனை பொருட்களும் நேரடியாகப் பள்ளியில் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளியில் இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். விடுப்பு கால மாற்றுப் பணிக்கு என்றே ‘ரிசர்வ்’ அல்லது உபரி ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட வேண்டும். மீதி நேரங்களில் அவர்கள் கற்றல் வள மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
புதிய புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசு, பள்ளிக் குழந்தைகளின் கற்றல் இழப்பைக் குறைக்கும் விதமான நடவடிக்கைகளில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான வழிவகைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை நிறைய சிந்திக்க வேண்டும். வளர்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் முடிவெடுக்கும்போது சூழலியல் பாதிப்பு, இழப்பு குறித்துக் கவனம் செலுத்தப்படுவதுபோல பள்ளிக் கல்வித் துறையின் ஒவ்வொரு அறிவிப்பிலும், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் ஒவ்வொரு சுற்றறிக்கையிலும், பள்ளிகளிலிருந்து 24 மணி நேரமும் ஏராளமான தகவல்கள் கேட்கப்படுகின்றன. அவ்வாறு கேட்கும் ஒவ்வொரு முறையும், அந்தத் தகவல் சேகரிப்பால் பள்ளியில் குழந்தைகளுக்கு ஏற்படப்போகும் கற்றல் இழப்பு குறித்து அதிகாரிகள் சிந்திக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் காலமெல்லாம் கற்றலை இழந்துகொண்டிருக்கும் நிலை மாற வேண்டும். இதற்கு, ஆசிரியர்கள், அதிகாரிகள், பெற்றோர் ஆகிய அனைவரும் இணைந்து, கற்றல் இழப்புக்கு எதிராகப் போராட வேண்டும். வரும் கல்வியாண்டு கற்றல் இழப்பு இல்லாத ஆண்டாக அமைய அனைவரும் பாடுபடுவோம்
- தேனி சுந்தர், மாநிலச் செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம். தொடர்புக்கு: sundar.tnsf@gmail.com