கட்டுமானத் தொழில் பசுமையாக வேண்டும்

கட்டுமானத் தொழில் பசுமையாக வேண்டும்
Updated on
3 min read

நமது தேவைகள் நாள்தோறும் பெருகிவருகின்றன. அவற்றுள் கட்டிடங்கள் முக்கியமானவை. ஆனால், தேவைகளைப் பூர்த்திசெய்யும் முனைப்பில் நாம் சுற்றுச்சூழலை மாசுபடுத்திக்கொண்டிருக்கிறோம். மனிதச் செயல்கள் ஒவ்வொன்றும் சுற்றுச்சூழலை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கின்றன. அபரிமிதமாக வெளியேற்றப்படுகின்ற கரியமிலவாயு வளிமண்டலத்தைச் சிதைக்கிறது. உலகளவில் மொத்த காரியமிலவாயு உற்பத்தியில் கட்டுமானத் தொழில் மூலம் வெளியேற்றப்படுவது மட்டும் 40 சதவீதத்தைத் தொடுகிறது. அமெரிக்கச் சுற்றுச்சூழல் ஆய்வாளர் பால் ஹாக்கென் கூறுகிறார் - “ஆண்டுதோறும் சுமார் 50,000 கோடி டன் மூலப்பொருட்கள் பூமியிலிருந்து எடுக்கப்படுகின்றன.

அவற்றில் 6% மட்டுமே நுகர்வோர் பொருளாக மாறுகிறது. மீதி 94% மீண்டும் பூமிக்கே தீங்கு விளைவிக்கும் திட, திரவ மற்றும் வாயுக் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலை தொடருமானால், பொருட்களுக்கு பஞ்சம் ஏற்படுவதற்கு முன்னால் நம் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் நிலைத்திருப்பதற்கு ஏற்ற சுற்றுச்சூழல் இல்லாமல் போய்விடும்.” நமது நாகரிக வளர்ச்சிக்குக் கட்டுமானத் தொழில் அடித்தளம் அமைத்தாலும், அதுவே நம் வாழ்வாதாரம் பாதிப்படையவும் வழிவகுக்கிறது. புவி வெப்பமாதலில் கட்டுமானத் தொழில் பெரும்பங்கு வகிக்கிறது. ஆகவே, அது பசுமையாக்கப்பட வேண்டும்.

தற்போதைய உலக மக்கள்தொகை சுமார் 775 கோடி. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் இருப்பிடங்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இந்தியாவின் நகர்ப்புறத்தில் வீடுகளின் தற்போதையத் தேவை சுமார் 1.88 கோடி. இது தவிர, நகரங்களில் உள்ள குடிசைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 கோடி. நம் நாடு சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக ‘அனைவருக்கும் நிரந்தர வீடு’ என்னும் பெரும் சவாலான திட்டத்தை நம் பிரதமர் 2015-ல் தொடங்கினார்.

நமது தற்போதைய நிலைமை

உலகத்தில் அனைவருக்கும் வீடு என்பது பெரும் சவாலாக இருந்தாலும், அந்த மாபெரும் இலக்கை அடைந்துவிட்டோம் என்று ஒரு கற்பனை செய்துகொள்வோம். அந்த வெற்றியை நாம் மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியுமா என்பது பெரும் கேள்விக்குறிதான். ஏனென்றால், சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாமல் நம்மால் அந்த இலக்கை எட்ட முடியாது. மேலும், இந்த இலக்கை நோக்கி நாம் பயணிக்கும் கால இடைவெளியில், நமது பழைய வீடுகளும் கட்டிடங்களும் பழுதாகியிருக்கும்; அவை இடிக்கப்பட வேண்டிய நிலையிலோ பாதுகாப்பில்லாமலோ போயிருக்கும். அப்படியென்றால், நாம் அந்த இலக்கை அடைவதற்குச் சாத்தியமே இல்லையா?

சமீபகாலத்திய சில நிகழ்வுகள் நம் நம்பிக்கையை மேலும் குலைக்கும்படியாக உள்ளன. தமிழகத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆயிரக்கணக்கான பள்ளிக் கட்டிடங்களையும் அரசுக் குடியிருப்புகளையும் இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஹரியாணாவில் குருகிராமில் 700 குடியிருப்புகளை இடிக்க முடிவெடுத்துள்ளனர். கட்டி முடித்து நான்கே ஆண்டில் அவை பாதுகாப்பற்றவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கவலையளிக்கிறது. மேற்சொன்ன கட்டிடக் குறைபாடுகளில் உயிரிழப்பு நேர்ந்திருப்பதால், அவை நம் கவனத்துக்கு வந்துள்ளன. ஆனால், பல்லாயிரக்கணக்கான அரசு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பல அசௌகரியங்களுக்கிடையே மனப் புழுக்கத்துடன்தான் வாழ்ந்துவருகின்றனர்.

புதிய பாதை தேவை

நாம் தற்போது பின்பற்றும் கட்டுமான வழிமுறைகளை மாற்றியமைக்காமல், நாம் எவ்வளவு புதிய கட்டிடங்களைக் கட்டினாலும், எதிர்காலத்தில் புதிய கட்டிடங்களின் தேவை குறையாது. வரவும் செலவும் சமமாகவோ அல்லது செலவு அதிகமாகவோ இருக்கும். அதிகச் செலவு நம்மீது கடன் சுமையை ஏற்றி வைக்கும். இந்த நிலை மாற வேண்டுமென்றால், நாம் கட்டிடங்களை நெடுங்காலத்துக்கு உழைக்கும்படியாகக் கட்ட வேண்டும். கட்டிட விதிகளின்படி பொதுவான கட்டிடங்களின் வயது 50 ஆண்டுகள், உயிர்நாடி உள்கட்டமைப்புகளின் (பாலம், துறைமுகம், அணைக்கட்டு முதலியன) வயது 100 ஆண்டுகள். ஒரு கட்டிடத்தின் வயது 50 ஆண்டுகள் என்றால், அதற்குப் பிறகு அது பாதுகாப்பில்லாமல் போய்விடும் என்று அர்த்தமில்லை.

குறைந்தபட்சப் பராமரிப்பு வேலைகளைச் செய்துவந்தால் கட்டிடம் பழுதாகாது. உறுதிசெய்யப்பட்ட வயதுக்குப் பிறகு அந்தக் கட்டிடத்தைப் புதுப்பிக்கும் அவசியம் ஏற்படலாம். புதுப்பித்த பிறகு, மீண்டும் அந்தக் கட்டிடம் தனது பயணத்தை மேலும் தொடரும். சுமார் 30 ஆண்டுகளில் கட்டிடங்களை இடிக்க வேண்டிய நிலை என்பது நம் சந்ததியினருக்கு நாம் செய்யும் பெரும் துரோகம். முதற்கட்டமாக நாம் கட்டும் கட்டிடங்கள் கட்டிட விதிகளின்படி அதற்கு உறுதிசெய்யப்பட்ட காலத்துக்கு நீடிக்கும்படியாகக் கட்ட வேண்டும். அடுத்த கட்டமாக, இனிவரும் காலத்தில் நாம் புதிய கட்டிடங்களின் தேவைகளைக் படிப்படியாகக் குறைக்க வேண்டும். இது எப்படிச் சாத்தியமாகும்?

நீடித்து உழைக்கும் கட்டிடங்கள்

பேராசிரியர் பி.குமார் மெஹ்தா ஒரு யோசனை தருகிறார் - “நாம் கட்டிடங்களை வழக்கமான 50 ஆண்டுகளுக்குக் கட்டாமல் அவற்றை 250 ஆண்டுகள் உழைக்கும் வண்ணம் கட்ட வேண்டும்.” அப்படிச் செய்தால், காலப்போக்கில் புதிய வீடுகளின் தேவை குறைய ஆரம்பிக்கும். இயற்கை வளங்கள் ஐந்து மடங்காக உயரும். நாம் செயலளவில் 25-30 வருடங்களே தாக்குப்பிடிக்கும் கட்டிடங்களைக் கட்டுகிறோம். மெஹ்தாவின் கருத்து நமது தற்கால நடைமுறைக்கு நேரெதிராக உள்ளது.

கட்டிடங்களை நீண்ட காலம் நீடிக்கும்படியாகக் கட்டுவது பகீரதப் பிரயத்தனமாகத் தோன்றலாம். ஆனால், அது கைக்கு எட்டாத தூரத்தில் இல்லை. மறைத்திருக்கும் தூசியைத் தட்டினால் உண்மை வெளிப்படும். சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரோம் நகரின் ‘பாந்தியன் கோவி’லும் ஐரோப்பாவில் கட்டப்பட்ட பல நீர்க்கால்வாய்களும் இன்றைக்கும் சிறப்பாக உள்ளன. இதில் கவனிக்கத்தக்க இன்னொரு அம்சம் என்னவென்றால், இவை அனைத்தும் கருங்கல்லால் அல்ல, சிமென்ட்டால் கட்டப்பட்டவை.

கட்டிடங்களின் ஆயுட்காலத்தை உயர்த்துவதால் எதிர்காலத்தில் புதிய வீடுகளின் தேவை குறைய ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் தேவை குறையக் குறைய இயற்கை வளம் உயர ஆரம்பிக்கும். அப்போது இயற்கையை அழிக்காமல் நம்மால் காப்பாற்ற முடியும். இதன் மூலம், நம் சந்ததியினருக்கு வளமான சூழலை விட்டுச் செல்ல முடியும்.

- சி.கோதண்டராமன், புதுவை பொறியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர், தொடர்புக்கு: skramane@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in