லாக்கப் படுகொலைகள் இனியும் தொடரலாமா?

லாக்கப் படுகொலைகள் இனியும் தொடரலாமா?
Updated on
3 min read

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, ‘‘படத்தில் இடம்பெற்ற காட்சிகள் யாவும் என் மனதைக் கனமாக்கி, இரவுப் பொழுதைப் பகல் பொழுதாக்கித் தூக்கத்தைப் போக்கிவிட்டன’’ என எழுதியதோடு, தனக்குக் காவல் துறையால் இழைக்கப்பட்ட அநீதியையும் மனித உரிமை மீறலையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

‘‘காவல் நிலையம் ஒன்றில் நடந்த இதே போன்ற தாக்குதல்தான், சென்னை மத்திய சிறையில் 1976-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் நாள் இரவு எனக்கும் நடந்தது. என்மீது விழுந்த பல அடிகளைத் தாங்கியவர் சிட்டிபாபு. அதனால் அவரது உயிரே பறிபோனது. அன்று நடந்த சித்ரவதைகளை ‘சிறை டைரி’யாக சிட்டிபாபு எழுதியுள்ளார். இந்த நினைவுகள் அனைத்தும் நேற்று ‘ஜெய்பீம்’ பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது என் மனக்கண் முன் நிழலாடியது’’ என உணர்வுபூர்வமாக எடுத்துரைத்திருந்தார்.

சரி, இன்று நடப்பது என்ன?

திடீர் கைது

தலைமைச் செயலகம், காவல் துறை இயக்குநர் அலுவலகம் போன்ற அரசின் அதிகாரம் கோலோச்சும் சென்னை மாநகரின் மையப் பகுதியில், அதுவும் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலேயே ஒரு லாக்கப் படுகொலை நிகழ்ந்துள்ளது.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ஜி.சுரேஷ் (28), அவரது நண்பர் விக்னேஷ் (25) இருவரையும் புரசைவாக்கம் கெல்லீஸ் சந்திப்பு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் 2022 ஏப்ரல் 18 அன்று கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரில் தலித் சமூகத்தைச் சேர்ந்த விக்னேஷ், காவல் துறையின் கட்டுப்பாட்டில் காவல்நிலையத்தில் மரணமடைந்துவிட்டார். அவரோடு கைதுசெய்யப்பட்ட சுரேஷ் கஞ்சா, பட்டாக்கத்தி வைத்திருந்ததாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லாக்கப்பில் இறந்த விக்னேஷுக்குப் பெற்றோர் இல்லை. அடுத்த நாள் விடியற்காலை முதல் அவரது சகோதரர்களைக் காவல் துறை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துவிட்டது. விக்னேஷைப் பார்க்கச் சென்ற அவரது அத்தை முனியம்மாவும் காவல் துறை கட்டுப்பாட்டின்கீழ் பல மணி நேரம் வைக்கப்பட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் இறந்த விக்னேஷின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. உறவினர் யாரும் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் ஏப்ரல் 20 அன்று காவல் துறையினரே இறுதிச் சடங்கை நடத்தியுள்ளனர்.

மூடி மறைக்க முயற்சி

இன்னும் ஒருபடி மேலே போய், விக்னேஷ் குடும்பத்தினர் குடியிருந்த பகுதியிலிருந்து அவர்கள் வேறு பகுதிக்குக் காவல் துறையினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, உறவினர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு அரசியல் கட்சியினரும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் பெரும் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அது மட்டுமல்ல, இறந்துபோன விக்னேஷ் குடும்பத்துக்கும் சிறையில் உள்ள சுரேஷ் குடும்பத்துக்கும் காவல் துறை தரப்பில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து, மேற்கண்ட சம்பவம் குறித்து வேறு எங்கும் பேசக் கூடாது என வற்புறுத்தப்பட்டதாக விக்னேஷ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கில இணைய இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்த லாக்கப் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, சிபிசிஐடி விசாரணை வேண்டுமென அறிக்கை வெளியிட்டிருந்தார். அடுத்த சில மணி நேரத்தில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழகக் காவல் துறை இயக்குநர் அறிவித்தார். லாக்கப் மரணத்தோடு தொடர்புபடுத்தப்பட்ட ‘ஜி 5 செக்ரிடரியேட் காலனி காவல்நிலைய’த்தைச் சேர்ந்த மூன்று போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது கேள்விகள்

தூத்துக்குடி லாக்கப் படுகொலைக்கு எதிராக எழுந்த கண்டனக் குரல்கள், அரசியல் இயக்கங்களின் ஆர்ப்பாட்டங்கள், சமூக வலைதளங்களின் மனித உரிமை முழக்கங்கள், சென்னை மாநகரில் நடைபெற்ற இந்த லாக்கப் படுகொலையில் வெளிப்படாமல் போனது ஏன்? சந்தேக வழக்கில் கைதுசெய்யப்படக்கூடிய ஒரு நபர், காவல் நிலையத்தில் மரணமடைந்தவுடன் அது குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கியுள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது ஏன்? பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முழுமையாகக் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அரசியல் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் நேரடியாக அந்தக் குடும்பத்தினரைப் பார்த்து உரையாடுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவது ஏன்?

சம்பவம் நடந்து ஐந்து தினங்கள் கழித்து, மொத்த விஷயமும் வெளியே தெரிய ஆரம்பித்த பின்பும் ஒரு கட்சியின் கண்டன அறிக்கை வந்த பின்பும்தான் காவல் துறை இயக்குநர் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏன் உருவாகிறது? காவல் துறையின் சித்ரவதைகளை நேரடியாக அனுபவித்தவர், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் காவல் துறை காரணமாக ஏற்பட்ட மரணங்களுக்கு எதிராகக் களத்தில் மக்களோடு மக்களாக நின்று குரல்கொடுத்த இன்றைய முதல்வரின் ஆட்சியில் லாக்கப் படுகொலைகளுக்கு எதிராக விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டாமா?

அதிலும், நடந்த கொலைகளை மறைக்க ‘ஜெய் பீம்’ திரைப்படத்தைப் போன்றே காவல் துறையினர் கட்டுக்கதைகளைப் புனைந்து, மனித உயிர்ப் பறிப்பை நியாயப்படுத்தலாமா? இப்படியான கேள்விகளுக்கு முகம்கொடுத்து, நீதிக்கான போராட்டத்தில் எளிய மக்களோடு தமிழக முதலமைச்சர் நிற்க வேண்டும். வருங்காலத்தில் சாதி, மதம், வர்க்கம், தோலின் நிறம் பார்த்துக் காவல் துறையினர் அத்துமீறல்கள் மேற்கொள்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன நாம் எதிர்பார்க்க முடியும்?

- ஜி.செல்வா, தொடர்புக்கு: selvacpim@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in