

பள்ளி மேலாண்மைக் குழு பற்றி கடந்த 20.03.2022 அன்று அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்தப்பட்ட விளக்கக் கூட்டத்துக்குப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நாமக்கல் மாவட்டத்தில், ஒரு ஊராட்சித் தலைவர் பள்ளி மாணவர்களின் சீருடை போலவே உடை அணிந்துகொண்டு, அனைத்துப் பெற்றோர்களையும் வீடுவீடாகச் சென்று சந்தித்தார்.
துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் என அனைவரையும் உடன் அழைத்துச் சென்றார். தனது இரு பிள்ளைகளையும் தனது ஊராட்சியிலுள்ள அரசுப் பள்ளியில் சேர்த்துள்ள இவர், பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்துவது, ‘இல்லம் தேடிக் கல்வி’ தன்னார்வலர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது, அவர்களை ஊக்கப்படுத்துவது என எப்படியாவது தங்கள் கிராமக் குழந்தைகளின் கல்வி மேம்பட வேண்டுமெனப் பெருமுயற்சி எடுத்துவருகிறார். இதற்காகச் சுழன்று இயங்குகிறது அவ்வூராட்சி நிர்வாகம்.
அவ்வூராட்சியைப் போல, பழங்குடி மக்களுக்கான முன்னேற்றத்தில் முழுமையாக ஈடுபடுவது; ஊராட்சியின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது; பாரம்பரிய மரக்கன்றுகளையும் பழ மரக்கன்றுகளையும் வீடுதோறும் கொடுத்துத் தங்கள் ஊராட்சியைப் பசுமையான ஊராட்சியாக மாற்றுவது, ஊராட்சியின் வரவு-செலவுக் கணக்குகளைத் துண்டறிக்கையாக அச்சடித்து வீடுவீடாகச் சென்று கொடுப்பது என சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், மக்களின் வாழ்வாதாரப் பெருக்கத்துக்கும், வெளிப்படையான நிர்வாகத்துக்கும், நலிவுற்றோர் நலனுக்கும் தேவையான கனவுத் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறார்கள் பல ஊராட்சி மன்றத் தலைவர்களும் பிரதிநிதிகளும்.
ஊராட்சிப் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல், கிராம சபைக்கான முன்னெடுப்பு, நீர்நிலைகள் பராமரிப்பு, ஊராட்சி நிலைக் குழுக்களில் பங்கெடுப்பது எனப் பல சமூக ஆர்வலர்களும் தங்கள் ஊரை முன்னேற்றுவதற்குத் தங்களாலான பங்களிப்பை வழங்கிவருகிறார்கள். இந்த முயற்சிகள் முழுமையாக மக்களைச் சென்றடைய வேண்டுமென்றாலோ அவை பல ஊராட்சிகளுக்குப் பரவலாக்கப்பட வேண்டுமென்றாலோ, மாநில அரசு ஊராட்சிகளை எப்படிப் பார்க்கிறது, அதனை எப்படி அதிகாரப்படுத்துகிறது என்பது மிகவும் முக்கியம்.
காரணம், நம் அரசமைப்பு, உள்ளாட்சிகளை வலுப்படுத்துவதற்கான பொறுப்பை மாநில அரசுகளிடம் ஒப்படைத்துள்ளது. மாநில அரசுகளின் கடப்பாட்டைப் பொறுத்துதான் இன்றைக்கு இந்தியாவில் அந்தந்த மாநில உள்ளாட்சிகள் வெவ்வேறு விதமாக வலுப்பெற்று அல்லது வீழ்ச்சியுற்று இருக்கின்றன.
‘தமிழ்நாட்டில் கரோனா காலத்திலாவது உள்ளாட்சிகளை முழுமையாகக் களமிறக்க வேண்டும், நோய்ப் பரவல் தடுப்புப் பணிகளில் அவற்றை ஈடுபடுத்த வேண்டும்’ எனச் சமூக இயக்கங்கள் கோரிக்கை வைத்தன. ஆனால், அரசின் கவனம் உள்ளாட்சிகள் பக்கம் திரும்பவே இல்லை. ஊராட்சிக்கு உரிய நிதிப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்பதும் ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதிகளை வேறு திட்டங்களுக்கு மடைமாற்றக் கூடாது என்பதும், மிக முக்கியமாக ஊராட்சி நிர்வாகத்தில் அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்களின் தலையீடு இருக்கக் கூடாது என்பதும் தமிழகத்தில் சமூக இயக்கங்கள் தொடர்ந்து முன்வைக்கும் கோரிக்கைகள். ஆனால், ஆட்சி மாறினாலும் இந்தப் பிரச்சினைகள் மட்டும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
திராவிட மாதிரி என்பதைத் தற்போது அடிக்கடி கேட்கிறோம். தனது சுயசரித நூலான ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் தொகுதியை வெளியிட்டுப் பேசிய நம் முதல்வர், ‘திராவிட மாதிரி’யை இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்வோம் எனக் குறிப்பிட்டார். தற்போது அரசு உயர் பொறுப்பில் இருக்கும் பலரும் ‘திராவிட மாதிரி’ பற்றிப் பேசிவருவதைப் பார்க்க முடிகிறது.
தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ‘அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் - II’-ல் பணிகளைச் செயல்படுத்தும் அதிகாரம் ஊராட்சிகளிடமிருந்து பறிக்கப்பட்டு, அலுவலர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு பெரிய முரண்? அரசு, ஊராட்சி நிர்வாகத்தை எப்படி வைத்திருக்க முயல்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. ஊராட்சிகளுக்குப் பொறுப்புகள் கொடுத்து, அதைப் பலப்படுத்த வேண்டும் என ஊராட்சிகள் சட்டம் குறித்துச் சட்டமன்றத்தில் பேசிய அண்ணாவின் உரையை (24.09.1958) படித்த யாரும் அவரது பெயரில் இருக்கும் இந்தத் திட்டமா இப்படி ஊராட்சிகளின் பொறுப்பைப் பறிக்கிறது என அதிர்ச்சிக்குள்ளாவார்கள்.
மாநிலச் சுயாட்சியாக இருந்தாலும், திராவிட மாதிரியாக இருந்தாலும் அதில் உள்ளாட்சிக்கான உரிய அதிகாரப்பரவலாக்கம் என்பது ஒரு முக்கிய அங்கமாக இருக்க வேண்டாமா?
அண்டை மாநிலங்களின் அணுகுமுறை
1994-ம் ஆண்டு ஊராட்சி அளவிலேயே வளர்ச்சித் திட்டம் தீட்டுவதை இயக்கமாகவே முன்னெடுத்தது கேரள அரசு. அனைத்து ஊராட்சிகளுக்கும் சேர்த்து திருவனந்தபுரத்திலிருந்து ஒரு திட்டத்தைத் தயாரித்து, அதை அம்மக்கள்மீது திணிக்காமல், ஒவ்வொரு ஊராட்சியிலிருந்தும் கொடுக்கப்படும் திட்டத்துக்கான நிதியை வழங்கியது அம்மாநில அரசு. கேரளம் மட்டுமல்ல, ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வராக இருந்த காலத்திலிருந்தே கர்நாடகத்தில் உள்ளாட்சிகளுக்காக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருகிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கிராம ஊராட்சிகளுக்கு முக்கியப் பங்கு வழங்கி, அதனை வலுப்படுத்தியது ஒடிசா அரசு. இந்திய அளவில் ஒரு முன்மாதிரி முயற்சியாக ஒடிசாவின் முயற்சி பாராட்டப்பட்டது. தெலங்கானாவில் புதிய பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதனை வலுப்படுத்தியிருக்கிறார்கள். கிராம சபையில் ஊராட்சிக்குத் தொடர்புடைய 17 அலுவலர்கள் கட்டாயமாகப் பங்கேற்க வேண்டும் என்கிறது தெலங்கானா பஞ்சாயத்துகள் சட்டம். மஹாராஷ்டிர மாநிலமோ அதன் கிராமங்களில் உள்ள மதுக் கடைகளை அகற்றுவதற்கான அதிகாரத்தைச் சம்பந்தப்பட்ட கிராம சபைக்கு வழங்கியிருக்கிறது.
தமிழ்நாடும் தன் உள்ளாட்சிகளை வலுப்படுத்தும் பாதையில் பயணிக்கத் தொடங்க வேண்டும். மாறாக, சென்னையில் இருந்துகொண்டே தமிழ்நாட்டின் 12,525 ஊராட்சிகளுக்கும் திட்டங்களை வகுத்துவிடலாம், மாவட்ட ஆட்சியர்களை வைத்துக்கொண்டு மாவட்ட அளவில் பணிகளை மேற்பார்வையிட்டுவிடலாம் என்பதெல்லாம் திராவிட மாதிரியின் சாராம்சமாக இருக்கவே முடியாது. அதை இந்தியா முழுமைக்கும் எடுத்துச்செல்லவும் முடியாது.
பள்ளிகளை ஜனநாயகப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்களைச் சீரமைக்கத் தமிழ்நாடு அரசு பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டுவருவது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.
மக்களுக்குப் பக்கத்திலிருந்து இயங்கும் உள்ளாட்சிகளை வலுப்படுத்துவது மிகப் பெரிய ஜனநாயகச் சீர்திருத்தமாக இருக்கும். அதுவே மக்களையும் மாநிலத்தையும் வலுப்படுத்தும். நம்பிக்கையோடு தங்கள் ஊருக்காகப் பணியாற்றும் ஊராட்சிப் பிரதிநிதிகளின், சமூக ஆர்வலர்களின் கரங்களை அது வலுப்படுத்தும்.
கேரள மாநிலம் கண்ணூரில் சமீபத்தில் பேசிய நம் முதல்வர், மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்தியா காப்பாற்றப்படும் என்றார்கள். உண்மைதான்! அதேபோல, உள்ளாட்சிகள் காப்பாற்றப்பட்டால்தான் மாநிலம் காப்பாற்றப்படும் என்பதும் உண்மைதானே?
- நந்தகுமார் சிவா, பொதுச்செயலாளர், தன்னாட்சி அமைப்பு. தொடர்புக்கு: nanda.mse@gmail.com
ஏப்ரல் 24, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்.