மருத்துவம் அனைவருக்குமான உரிமை!

மருத்துவம் அனைவருக்குமான உரிமை!
Updated on
3 min read

‘அனைவருக்கும் மருத்துவப் பராமரிப்பு’ (யூ.எச்.சி.) என்ற திட்டத்துக்கு உயிர்கொடுப்பதற்குத் தற்போதைய கரோனா பெருந்தொற்று நெருக்கடி சரியான தருணம் ஆகும். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் ஏற்கெனவே தாமதமாகிவிட்டது. (அமெரிக்காவைத் தவிர்த்த) செல்வந்த நாடுகளில் மட்டுமல்ல பிரேசில், சீனா, இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அவற்றுள் சில நாடுகள், குறிப்பாக தாய்லாந்து, 20 ஆண்டுகளுக்கு முன்பே ‘அனைவருக்கும் மருத்துவப் பராமரிப்’பை நோக்கி அடியெடுத்துவைத்தன. தாய்லாந்தின் அப்போதைய தனிநபர் ஜிடிபி தற்போதைய இந்தியாவின் தனிநபர் ஜிடிபியைவிட அதிகம் கிடையாது. இந்தியா, அல்லது குறைந்தபட்சம் சில இந்திய மாநிலங்கள், துணிந்து காரியத்தில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

பிரிட்டனில் ‘தேசிய மருத்துவ சேவை’ (என்.எச்.எஸ்.) தொடங்கப்படுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த உனைருன் பெவனின் (Aneurin Bevan) வார்த்தைகள் இந்தத் திட்டத்தின் நோக்கத்தைத் தெளிவுபட உணர்த்துகின்றன: “உடல்நலம் குன்றிய ஒருவரிடம் பணம் இல்லாததால் அவருக்கு மருத்துவச் சிகிச்சை மறுக்கப்படுமானால், அந்தச் சமூகத்துக்குத் தன்னை நாகரிகச் சமூகம் என்று கூறிக்கொள்வதற்கு எந்தத் தகுதியும் இல்லை.” 1946-ல் அமைக்கப்பட்ட போர் கமிட்டியை உந்தித் தள்ளியது இந்தச் சிந்தனைதான்; இந்தியாவும் தனக்கே உரிய ‘என்.எச்.எஸ் -மாதிரி’யான மருத்துவப் பராமரிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அப்போது வலியுறுத்தப்பட்டது.

யூ.எச்.சி.க்கான வழிமுறைகள்: ‘யூ.எச்.சி.’ வழக்கமாக பொதுச் சேவை, சமூகக் காப்பீடு ஆகிய அணுகுமுறைகளைச் சார்ந்திருக்கிறது. முதல் அணுகுமுறையில் மருத்துவப் பராமரிப்பானது தீயணைப்புத் துறை, பொது நூலகம் போன்று கட்டணமில்லாத பொதுச் சேவையாக வழங்கப்படுகிறது. இது ஏதோ சோஷலிஸச் சிந்தனைபோலத் தோன்றுகிறதா? அதேதான். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த சோஷலிஸத் திட்டமானது க்யூபா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளில் மட்டுமல்ல, பிரிட்டனைத் தாண்டி ஏனைய முதலாளித்துவ நாடுகளிலும் வெற்றிகரமாக இயங்கிவருகிறது.

இரண்டாவது அணுகுமுறையானது, மருத்துவப் பராமரிப்பில் தனியார் சேவையையும் அரசுத் துறை சேவையையும் அனுமதிக்கிறது. ஆனால், அதற்கான செலவு நோயாளியின் மீது சுமத்தப்படாமல், சமூகக் காப்பீட்டு நிதியால் (social insurance fund) பொறுப்பேற்றுக்கொள்ளப்படுகிறது. ஆகவே, எல்லோருக்கும் தரமான மருத்துவச் சிகிச்சை கிடைக்கிறது. சமூகக் காப்பீடு என்பது தனியார் காப்பீட்டுச் சந்தையைவிட மிகவும் வேறுபட்டது. அனைவருக்குமான, கட்டாயக் காப்பீடு என்பது இதன் மிகமிக எளிய வடிவம். இதற்கான நிதி பொதுவான வரிகளிலிருந்து பெறப்படுகிறது. இந்தக் காப்பீடானது மக்கள் நலனுக்காக, லாப நோக்கமற்ற ஒரே ஒரு நிறுவனத்தால் நடத்தப்படுவது. இப்படித்தான் கனடாவில் இந்த அமைப்பு வெற்றிகரமாகச் செயல்படுகிறது.

சில சவால்கள்: சமூகக் காப்பீட்டில் மருத்துவச் செலவைக் கட்டுப்படுத்துவது பெரிய சவால். ஏனெனில், செலவுபிடிக்கக்கூடிய மருத்துவப் பராமரிப்பில் நோயாளி, மருத்துவப் பராமரிப்பு அளிப்பவர் ஆகிய இரு தரப்பினரின் நலனும் அடங்கியிருக்கிறது. ஒரு தரப்பு நல்ல சிகிச்சை பெற வேண்டும், இன்னொரு தரப்பு வருமானம் ஈட்ட வேண்டும். இதற்கு ஒரு தீர்வு என்னவெனில், செலவின் ஒரு பகுதியை நோயாளி ஏற்க வேண்டும் என்று சொல்வது. ஆனால், இது ‘அனைவருக்கும் மருத்துவப் பராமரிப்பு’ என்ற கொள்கைக்கே முரணானது. நோயாளிகளிடமிருந்து கட்டணத்தின் மிகச் சிறிய பகுதியைப் பெற்றுக்கொள்வதும்கூடத் தரமான மருத்துவ சிகிச்சை பெறுவதிலிருந்து ஏழை நோயாளிகள் பலரையும் விலக்கிவைத்துவிடுகிறது.

இன்று, ‘அனைவருக்கும் மருத்துவப் பராமரிப்பு’ திட்டத்தைச் செயல்படுத்தும் நாடுகளில் பெரும்பாலானவை, பொதுத் துறை சேவையும் சமூகக் காப்பீடும் கலந்த ஒரு கலவையான முறையைச் சார்ந்திருக்கின்றன. நமக்குத் தெரிந்தவரை பொதுத் துறை சேவையை அடிப்படையாகக் கொண்ட, துடிப்பான ‘தேசிய மருத்துவச் சேவை’தான் சிறந்த முறையாகும். இதற்கு, நல்ல நிர்வாகமும் போதுமான வள ஆதாரங்களும் மட்டுமல்ல, நல்ல பணிக் கலாச்சாரமும் தொழில்முறை நெறிகளும் முக்கியம். ஆரம்ப சுகாதார நிலையங்களால் அற்புதங்களை நிகழ்த்த முடியும். ஆனால், மருத்துவர்களும் செவிலியர்களும் அங்கே இருந்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தால்தான் அது சாத்தியம். அந்த விஷயத்தில் இந்தியாவின் பொதுச் சுகாதாரச் சேவைகள் கெட்ட பெயரைச் சம்பாதித்திருக்கின்றன. ஆனால், அவை தற்போது மேம்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவற்றால் இன்னமும் நல்ல நிலையை எட்ட இயலும்.

மருத்துவப் பராமரிப்புக்கான உரிமை: அவ்வளவு சீக்கிரம் ‘அனைவருக்குமான மருத்துவப் பராமரிப்பு’ திட்டம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாத வகையில் தனியார் துறையானது கோலோச்சிக்கொண்டிருக்கிறது. எனினும், மருத்துவப் பராமரிப்பை அடிப்படையாகக் கொண்டு, அதை ஒரு பொதுச் சேவையாக வழங்கக்கூடிய ‘அனைவருக்கும் மருத்துவப் பராமரிப்பு’ திட்டம் ஒன்றுக்கான சட்டகத்தை உருவாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் உரிய காலத்தில் ‘தேசிய மருத்துவச் சேவை’ போன்ற ஒன்றை நோக்கி நகர முடியும்.

‘விருப்பத்தின் அடிப்படையில் மருத்துவப் பராமரிப்பைப் பொதுச் சேவையாகப் பெறுதல்’ (ஹோப்ஸ்-HOPS) என்று இந்தச் சட்டகத்தை அழைக்கலாம். ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பினால், ஏதாவதொரு அரசு மருத்துவமனையில் தரமான, கட்டணமற்ற மருத்துவப் பராமரிப்பைப் பெறுவதற்குச் சட்டபூர்வமாக உரிமையுடையவர்கள் என்பதுதான் இதன் நோக்கம். தங்கள் சொந்தச் செலவில் ஒருவர் தனியார் மருத்துவமனைகளை நாடுவதை இது தடுக்காது. ஆனால், பொதுத் துறையானது, தரமான மருத்துவச் சேவையை ஒவ்வொருவரின் உரிமை என்று மதித்து, கட்டணமின்றி வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். ஒருவகையில், சில இந்திய மாநிலங்கள் இதைச் செய்வதற்குத்தான் ஏற்கெனவே முயன்றுகொண்டிருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் பெரும்பாலான நோய்களைத் திருப்திகரமான விதத்திலும், நோயாளிகளுக்கு மிகக் குறைந்த அளவே செலவாகும் வகையிலும் குணப்படுத்திவிட முடியும். இந்த மாநிலங்களில் மருத்துவச் சேவையில் தனியார் துறையின் கையும் ஓங்கித்தான் இருக்கிறது. ஆகவே, அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஆனால், விருப்பப்படுபவர்களுக்குத் தரமான மருத்துவப் பராமரிப்பானது அரசு மருத்துவமனைகளில் கட்டணமின்றிக் கிடைக்கிறது.

‘ஹோப்ஸ்’ முறையானது ‘என்.எச்.எஸ்.’ அல்லது தேசிய மருத்துவக் காப்பீடு போன்றவற்றின் அளவுக்கு சமத்துவமானதாக இருக்காதுதான். எனினும், ‘அனைவருக்கும் மருத்துவப் பராமரிப்பு’ என்பதை நோக்கி எடுத்துவைக்கும் பெரும் காலடியாக ‘ஹோப்ஸ்’ இருக்கும். காலப்போக்கில் அது மேலும் சமத்துவமிக்கதாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. பொதுத் துறையில் தரமான மருத்துவப் பராமரிப்பு கட்டணமின்றிக் கிடைத்தால், தனியார் மருத்துவமனைகளை நாடுவதற்குப் பெரும்பாலான நோயாளிகளுக்கு எந்தக் காரணமும் இருக்காது.

சமூகக் காப்பீடானது மருத்துவப் பராமரிப்பைச் செலவுபிடிக்கக் கூடியதாக, சிறப்பு மருத்துவமனைகளைச் சார்ந்ததாக, பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடியதாக ஆக்கிவிடும் ஆபத்து இருக்கிறது. லாபநோக்கம் கொண்ட மருத்துவப் பராமரிப்பு வழங்குநர்களிடமும் சமூகக் காப்பீட்டை ஒப்படைப்பது ஆபத்தானது. ஏனெனில், அவர்களின் அதிகாரமும் செல்வாக்கும் அப்படி. சமூகக் காப்பீடானது லாபநோக்கமற்ற துறைகளில் மட்டுமே வெற்றிகரமாகச் செயல்படும். ஆகவே, லாபநோக்கத்துடனான மருத்துவப் பராமரிப்பை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு விட்டுவிட வேண்டும்.

‘ஹோப்ஸ்’ முறையில் முதன்மையான சிக்கல் என்னவென்றால், மருத்துவப் பராமரிப்புக்கான உத்தரவாதம், தரமான சிகிச்சை போன்றவற்றின் எல்லை எதுவென்று தீர்மானிப்பதாகும். ‘ஹோப்ஸ்’ முறைக்கு மருத்துவப் பராமரிப்புத் தரஅளவுகோல்கள் மட்டுமல்ல, அந்தத் தரஅளவுகோல்களைக் குறிப்பிட்ட கால அளவுக்கு ஒருமுறை மாற்றியமைக்க வேண்டியதும் அவசியம். ‘இந்தியப் பொது மருத்துவத் தரஅளவுகோல்கள்’ என்பது போன்ற பயனுள்ள சில விஷயங்கள் ஏற்கெனவே இருக்கின்றன.

தமிழ்நாடு அரசு முன்மொழிந்திருக்கும் மருத்துவ உரிமை மசோதாவுக்கு உட்பட்டு, ‘ஹோப்ஸ்’ முறையை நடைமுறையாக்குவதற்கு உரிய காலம் கனிந்திருக்கிறது. பொதுத் துறையில் பெரும்பாலான மருத்துவ சேவைகளைத் தமிழ்நாடு அரசால் ஏற்கெனவே வெற்றிகரமாக வழங்க முடிந்திருக்கிறது (தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான குடும்பங்கள் சிகிச்சைக்கென்று அரசு மருத்துவமனைகளைத்தான் நாடுகின்றன என்று தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு கூறுகிறது).

இந்தச் சேவைகளின் எல்லையும் தரமும் விரிந்துகொண்டே இருக்கின்றன. மருத்துவ உரிமை மசோதாவானது, அனைவருக்கும் தரமான சிகிச்சை வழங்குவதில் தமிழ்நாடு கொண்டிருக்கும் ஈடுபாட்டை நிலைநாட்டும். நோயாளிகளும் அவர்களின் குடும்பங்களும் தங்களுக்குத் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்று குரல்கொடுப்பதற்கு அவர்களுக்கு இந்த மசோதா அதிகாரம் வழங்கும், இது மருத்துவக் கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும். இது இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் உந்துதலாகவும் இருக்கும்.

- ஜீன் த்ரஸே, வருகைதரு பேராசிரியர், பொருளியல் துறை, ராஞ்சி பல்கலைக்கழகம், ஜார்க்கண்ட். ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in