

பாரதியால் ‘ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி/ கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்!’ என்று புகழப்பட்டது ரஷ்யப் புரட்சி. அந்தப் புரட்சியின் தலைவர் லெனின். ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்று உரத்த குரலில் ஓங்கி ஒலித்த மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் தத்துவங்களை நடைமுறைப்படுத்தியவர் லெனின்.
1870-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பிறந்த லெனின், விளாடிமிர் இல்யீச் உல்யானவ் என்ற பெயருடன் வளர்க்கப்பட்டார். பின்னர், ரஷ்யாவில் ஓடிய லீனா நதியின் பெயரே லெனின் என்ற புனைபெயராகி, அதுவே பெயராகவும் மாறியது. தன்னுடைய இளமைக் காலத்தில், அவரது அண்ணன் அலெக்சாண்டர் மூலமாக மார்க்ஸின் நூல்களைப் படிக்கும் வாய்ப்பு லெனினுக்குக் கிட்டியது. அலெக்சாண்டர் சதிக் குற்றம்சாட்டப்பட்டு, 1887-ம் ஆண்டு மார்ச் மாதம் பீட்டர்ஸ்பர்க்கில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார். பின்னர், 1887-ம் ஆண்டு மே மாதம் 8-ம் தேதி அன்று அலெக்சாண்டர் தூக்கிலிடப்பட்டார். இதுவே, ஜார் சக்ரவர்த்திக்கு எதிராக லெனின் களம் இறங்குவதற்கான சம்பவமாக அமைந்தது.
புரட்சி பற்றி லெனின் பின்வருமாறு குறிப்பிடுகிறார் “அரசியல், சமூகம், பொருளாதாரம், சமயம் ஆகிய துறைகளில் அடிப்படை மாற்றங்களைச் செய்துகொண்டு, புதுமுறையாக வாழ்வதற்கான வழிமுறைகளை வகுத்துக்கொண்டு, அதன்படி வாழ்வதும் அதற்கான செயல்முறைகளில் ஈடுபடுவதுமேதான் புரட்சி. ஒரு நாட்டின் அரசியல் அதிகாரங்களை மட்டும் ஒருசாரார் கைப்பற்றிக்கொண்டு ஆள்வது புரட்சி ஆகாது” என்றார்.
1905-ம் ஆண்டு ஜனவரியில் பீட்டர்ஸ்பர்க்கில் புத்திலோவ் தொழிற்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள். ஜார் சக்ரவர்த்தியிடம் விண்ணப்பம் செய்யும் பொருட்டு, 1905-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் என ஊர்வலமாக அரண்மனை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அந்த ஊர்வலத்தில் ஜார் சக்ரவர்த்தியின் படங்கள், கிறிஸ்தவ மதச் சிலைகளை ஏந்திக்கொண்டும், மதம்சார்ந்த பாடல்களைப் பாடிக்கொண்டும் ஆண்கள், பெண்கள், முதியோர், இளையோர், குழந்தைகள் என அனைவரும் பங்கேற்றனர். அந்த அமைதி ஊர்வலத்தின்மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், தொழிலாளர்கள் ஜாரின் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்தப் படுகொலை ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காரணத்தால் அந்த ஞாயிறு உலக வரலாற்றில் ‘படுகொலை ஞாயிறு அல்லது ரெட் சன்டே’ என்று வர்ணிக்கப்படுகிறது. இந்தப் படுகொலையின் விளைவே, லெனின் தலைமையில் 12 ஆண்டுகள் கழித்து 1917-ம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் அக்டோபர் புரட்சியாகும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் புரட்சியைப் பற்றி ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ என்ற புத்தகத்தை அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜான் ரீட் எழுதினார். நிமிடத்துக்கு நிமிடம் சாகசம் நிறைந்த புரட்சியாக அந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது. செம்படையினர், ராணுவ வீரர்கள், கடற்படையினர் ஆகியோர் பெட்ரோகிராட் நகரைச் சுற்றி வளைத்தனர். ரயில் நிலையங்கள், அஞ்சல் நிலையங்கள், மத்தியத் தொலைபேசி இணைப்பகம் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. ‘அரோரா’ போர்க் கப்பலும் புரட்சிக்கு ஆதரவாகத் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது.
மார்க்ஸும் எங்கெல்ஸும் கண்ட சித்தாந்தப் பாதையில் லெனின் தலைமையிலான ‘பாட்டாளி வர்க்க அர’சாக சோவியத் அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. சுரண்டும் வர்க்கத்துக்கு எதிரான அரசாக, உழைக்கும் மக்களின் அரசாகப் பொதுவுடைமை அரசை நிறுவினார் லெனின்.
புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் அக்டோபர் மாதம் 26-ம் தேதி, இரண்டாவது காங்கிரஸின் இறுதிக் கூட்டத்தில் லெனின் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அவரது முதல் அரசாணை சமாதானம் பற்றியதே. சமாதான உடன்படிக்கைகள் செய்துகொள்வதை சோவியத் அரசு விரும்புகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்து, நிலத்தின்மீது உரிமை கொண்டாடும் தனியுடைமை உரிமை இன்று முதல் அகற்றப்படுகிறது எனவும் அதற்காக நஷ்டஈடு எதுவும் கொடுக்கப்படாது எனவும் அறிவித்தார். மேலும், பெரிய பண்ணை நிலங்கள், அரச குடும்பத்துக்குச் சொந்தமான பண்ணை நிலங்கள், தேவாலயங்களுக்குச் சொந்தமான பண்ணை நிலங்கள் அனைத்தும் சோவியத் சபைகளின் பராமரிப்பில் இருக்கும் என அறிவித்தார். விவசாயிகளுக்குச் சொந்தமான துண்டு நிலங்கள் பறிமுதல் செய்யப்படாது எனவும் அறிவிப்புகளை வெளியிட்டு, உலகைத் திடுக்கிடச் செய்ததோடு உலக வரைபடத்தில் ரஷ்யாவைப் ‘பாட்டாளி மக்களுக்கான அரசு’ எனத் தெளிவாக அறிவித்தார்.
சோவியத் ரஷ்யா என்ற புதிய நாட்டை நிர்மாணித்து காலனி நாடுகள் பலவற்றின் விடுதலைக்கு வழியமைத்துக் கொடுத்து, மாபெரும் அக்டோபர் புரட்சிக்குக் காரணமான ‘ஏழைப் பங்காளன்’ லெனினை வரலாறு என்றென்றும் நினைவில் கொள்ளும். உலகில் காணப்படும் வறுமை, அறியாமை, போர்வெறி ஆகிய மூன்றையும் போக்கி, சமூகம் மனிதப் பண்போடு வாழ்வதற்குப் புரட்சியாளர் லெனினின் பாதை நமக்கு என்றும் துணையாக இருக்கும்.
- தி.மருதநாயகம், ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர். தொடர்புக்கு: marutha1971@gmail.com
ஏப்ரல் 22: லெனின் பிறந்தநாள்