

கடந்த 2022 மார்ச் 20 அன்று அனைத்துப் பெற்றோர்களையும் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்.எம்.சி.) பற்றிப் பேச வைத்தது, பள்ளிக் கல்வித் துறை ஏற்படுத்திய மாபெரும் அதிர்வு. அடித்தளம் சரியாக இருந்தால் மட்டுமே, மேல் கட்டுமானம் சரியாக இருக்கும். அடித்தளமாக விளங்குவது எஸ்.எம்.சி. உறுப்பினர்கள். நமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் நமது எதிர்காலத்தையும் மனக்கண்முன் நிறுத்தி, அவர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது பெற்றோர்களாகிய நமது பொறுப்பு.
எதிர்வரும் எஸ்.எம்.சி. மறுகட்டமைப்பு நிகழ்வில் 20 பேர் கொண்ட குழுவில், ஆசிரியர்கள் 2 பேர், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர்கள் 2 பேரைத் தவிர்த்து (இவர்கள் பதவி வழியில் உறுப்பினர்களாக ஆக்கப்படுவார்கள்), நமது ஊர் சார்ந்த, மிகச் சிறந்த கல்வியாளரை நாம் அடையாளம் கண்டு இணைக்க வேண்டும். மீதமுள்ள 15 பதவிகளுக்கு (எஸ்.எம்.சி. வழிகாட்டுதலின்படியான) ஆர்வமிக்க, அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட, விவரமான பெற்றோர்களைச் சாதி, மத, அதிகார மயக்கங்களுக்கு அப்பாற்பட்டு நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பள்ளிக்கூடத்தைத் திட்டமிட்டு நிர்வகிக்கக் கூடியவர்கள் பெற்றோர்களே! அவர்களுக்குத் துணையாகவே ஆசிரியர்களும் உள்ளாட்சி உறுப்பினர்களும் கல்வியாளர்களும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் அனைவரும் இணைந்து, இணக்கமான ஜனநாயகத் தன்மையோடு செயல்பட்டால் மட்டுமே சிறப்பான பள்ளிச் சூழலை உருவாக்க முடியும்.
வரும் ஏப்ரல் 23 தொடங்கி, அடுத்தடுத்த வாரங்களில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மறுகட்டமைப்பு நடக்கவிருக்கிறது. இதைப் போன்ற மறுகட்டமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இனிவரும் காலங்களில் புதுப்புதுப் பரிணாமங்களோடு முறையாக நிகழ்ந்தேறும் என்று உறுதியாக நம்பலாம். பெற்றோர்களாகிய நாம், பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு 2009 இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், பல்வேறு வழிகாட்டுதல்களோடு இணைத்து, கீழ்க்கண்ட வகையில் செயல்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறோம்.
1. ஒவ்வொரு ஆண்டும் கல்விக்காக இந்திய ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதி எவ்வளவு, தமிழ்நாடு அரசு ஒதுக்கும் நிதி எவ்வளவு, அதில் நமது மாவட்டத்துக்கு, மண்டலத்துக்கு, பள்ளிக்கு என ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு, எவையெவற்றுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது, எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பது போன்ற விவரங்களையெல்லாம் அறிந்தவர்களாகவும் கண்காணிப்பவர்களாகவும் பெற்றோர்கள் இருக்க வேண்டும்.
2. அரசின் மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகள், திட்டங்கள் போன்றவையும் கொடுக்கப்படும் விலையில்லா 14 வகைப் பொருட்களும் தரமான வகையில், உரிய நேரத்தில், அவற்றுக்கு உரிய அனைத்து மாணவர்களுக்கும் சென்றுசேர்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
3. நம் வீட்டுப் பிள்ளைகள், நம் வீட்டைக் காட்டிலும் பகல் நேரத்தில் கூடுதல் நேரம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறார்கள். அனைத்து வசதிகளும் பெற்ற இடமாக ஒவ்வொரு பள்ளியும் இருக்க வேண்டும். அதன் வெளிப்புறத் தோற்றம், உட்புறக் கட்டமைப்பு, விளையாட்டுத் திடல், நூலகம், ஆய்வுக்கூடம், பூங்காக்கள் போன்றவை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பப் போதுமானவையாகவும் சிறப்பானவையாகவும் பாதுகாப்பானவையாகவும் இருக்க வேண்டியதை உறுதிப்படுத்த வேண்டும்.
4. ஓராசிரியர் பள்ளி, ஈராசிரியர் பள்ளி என்பவை கல்வித் துறைக்கு ஏற்பட்ட நோயின் வெளிப்பாடு. வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்துக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையே அரசுப் பள்ளிகளைத் தக்கவைக்கும், ஒவ்வொரு மாணவருக்கும் தனிக் கவனத்தைக் கொடுக்கும். மாணவர்களைக் கூடுதலாக அரசுப் பள்ளிகளை நோக்கி ஈர்க்கும். எனவே, வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்துக்கு ஒரு ஆசிரியர் என்ற ஆசிரியர் நியமனங்களை எஸ்.எம்.சி. உறுதிப்படுத்த வேண்டும்.
5. நமது பிள்ளைகளின் உடல்நலம், மனநலம் கருதி, பகுதிநேர ஆசிரியர்களாக உள்ள உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், கைவினை ஆசிரியர் இன்ன பிற ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக நியமித்துப் பிள்ளைகளின் உடலையும் மனத்தையும் திறத்தையும் மேம்படுத்துவதற்குத் தீர்மானங்கள் நிறைவேற்றிச் செயல்படுத்த வேண்டும்.
6. ஒவ்வொரு பள்ளியிலும் சுகாதாரமான கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர், தூய்மையான, பாதுகாப்பான பள்ளி வளாகம் போன்றவற்றை உறுதிப்படுத்த வேண்டும். கழிப்பறைத் தூய்மைப் பணியாளர், வளாகத் தூய்மைப் பணியாளர், பகல் நேர- இரவு நேரக் காவலர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோரை நியமிக்க வேண்டும்.
7. பள்ளி மேலாண்மைக் குழு மட்டுமல்லாமல் ஆர்வமிக்க, அர்ப்பணிப்பு மிக்க, பள்ளிக்கூடத்தின் அனைத்துப் பெற்றோர்களையும் பல்வேறு குழுக்களாக அமைத்து, பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு குழுவுக்குத் தலைமைப் பொறுப்பேற்று சத்துணவுக் குழு, விளையாட்டுக் குழு, பள்ளித் தூய்மைக் குழு, விழாக் குழு, தோட்டக் குழு, சுகாதாரக் குழு, மாணவர் கற்றல் அடைவு கண்காணிப்புக் குழு என்பன போன்ற குழுக்களைச் சூழலுக்கு ஏற்றவாறு கட்டமைத்துச் செயல்படுத்தலாம்.
8. மிக முக்கியமாக, மாதந்தோறும் நடக்கும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களில், அவற்றின் உறுப்பினர்கள் முழுமையாகக் கலந்துகொண்டு பள்ளியின் வரவு-செலவுக் கணக்குகளைச் சரிபார்த்து, பள்ளிக்கான, மாணவர்களுக்கான அனைத்துத் தேவைகளையும் பட்டியலிட்டு, பள்ளி மேம்பாட்டுத் திட்டம் (School development plan) தீட்டி, சம்பந்தப்பட்ட துறைகளை அணுகி, அவற்றைப் பெற வேண்டும்.
பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடுகளின் மூலமாக பெற்றோர்கள் அனைவரும் கல்வியாளர்களாக, குழந்தைகளின் உளவியல் மற்றும் உரிமைச் செயல்பாட்டாளர்களாகப் பரிணமிக்கக்கூடிய அருமையான சூழல் பிறந்திருக்கிறது. இப்படிப்பட்ட வாய்ப்பை நாம் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
- பா.கா.தென்கனல் இசைமொழி, ச.சு.இசைமொழி தென்கனல், அரசுப் பள்ளி பெற்றோர், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம். தொடர்புக்கு: rajinisang38690@gmail.com