

தமிழ்நாடு முதலமைச்சர் ‘சமபந்தி போஜனம்’ என்பது இனி ‘சமத்துவ விருந்து’ என அழைக்கப்படும் என்று 13.04.2022 அன்று அறிவித்திருப்பது நல்ல தமிழை விரும்பும் அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது. இவ்வேளையில், எழுத்துத் தமிழிலும் பேச்சுத் தமிழிலும் வரம்பின்றி ஆங்கிலக் கலப்பு பெருகிவருவது தமிழ் மீது அக்கறை உள்ள அனைவராலும் கவலையோடு பார்க்கப்படுகிறது. அறிஞர்களும் தமிழ் நலம் விரும்பிகளும் பல அரசியல் தலைவர்களும் தமிழ் மொழிப் பயன்பாடு ஆங்கிலக் கலப்பின்றி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், வலியுறுத்துகிறார்கள்.
பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதில் கடைப்பிடிக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வு தொல்காப்பியர் காலத்திலேயே ஆழமாக வேர் விட்டிருந்தது. வடமொழிச் சொற்களைத் தமிழ்க் கவிதையில் பயன்படுத்தும்போது, தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்த வேண்டும் என்று விதி வகுத்த தொல்காப்பியரின் வழிகாட்டல், தமிழ் இலக்கிய இலக்கண மரபின் நெடுகிலும் பின்பற்றப்பட்டிருப்பதைக் காண முடியும். பிறமொழித் தொடர்புகளாலும் சமூக, அரசியல் காரணங்களாலும் பல்வேறு காலகட்டங்களில் பிறமொழிச் சொற்கள், குறிப்பாக சம்ஸ்கிருதத்திலிருந்து, கடன் வாங்கப்பட்டுள்ளன. பிறமொழிச் சொற்கள் கலந்து தமிழ் பேசப்பட்டு வந்துள்ளது.
மொழிக் கலப்புக்கு எதிராக பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்ய மொழி போன்ற உலக மொழிகளிலும் வங்க மொழி, மலையாளம் போன்ற இந்திய மொழிகளிலும் மொழித் தூய்மை பற்றிய சிந்தனைகளும் செயல்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் தமிழ்மொழிப் பயன்பாட்டில் பிறமொழிக் கலப்பில்லா மொழித் தூய்மையை வலியுறுத்தி அதில் மிகப் பெரிய வெற்றியையும் பெற்றிருக்கும் தனித்தமிழ் இயக்கத்துக்குத் தனி இடமுண்டு.
பிரான்சிஸ் எல்லீஸ் ஒயிட், ராபர்ட் கால்டுவெல் போன்றோரின் ஆய்வுகள் அவர்கள் சுட்டிக்காட்டிய தமிழின் மேன்மையும் பெருமையும், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் செயல்பாடுகள், பாம்பன் சுவாமிகள் எழுதிய ‘சேந்தன் செந்தமிழ்’ (1906), சிவஞான யோகியின் திருவிடர் கழகத்தின் (1908) செயல்பாடுகள் என்று பல காரணிகள் தனித்தமிழ் இயக்கம் தோன்றுவதற்கு வழிவகுத்தன. மறைமலை அடிகளால் தொடங்கப்பட்ட தனித்தமிழ் இயக்கத்தின் (1916) முக்கிய நோக்கம் பிறமொழிச் சொற்களை, குறிப்பாக வடமொழிச் சொற்களின் பயன்பாட்டைத் தவிர்த்துத் தமிழ் மொழிக்கே உரிய சொற்களால் தமிழ் எழுதப்பட வேண்டும் என்பதாகும்.
தனித்தமிழ் இயக்கம் எழுத்துத் தமிழில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதன் மூலம் சம்ஸ்கிருதச் சொற்கள் பலவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டுக்கு வந்ததோடு கலைச் சொல்லாக்கத்தில் மிகப் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான தூய தமிழ்க் கலைச்சொற்கள் உருவாக வழிவகுத்தது. இவ்வாறு எழுத்துத் தமிழ் புதிய சொற்களையும் புதிய நடையையும் பெற்று வளர்ந்தபோதும் பேச்சுத் தமிழில் ஆங்கிலக் கலப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வந்ததோடு மட்டுமின்றி, அது எழுத்துத் தமிழுக்குள்ளும் ஊடுருவத் தொடங்கியது. ஆங்கில மொழிக் கலப்புக்குக் காரணமாக இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் ஆங்கிலம் படித்தவர்கள். பொதுமக்களோடு எப்போதும் தொடர்புகொள்ள வாய்ப்புள்ள பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போர், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் முதலானவர்கள் இக்கலப்பு மொழிப் பயன்பாட்டில் பெரும்பங்கு வகிக்கின்றனர்.
மிக நீண்ட இலக்கிய மரபு உள்ள கிரேக்கம், அரபி மொழிகளைப் போலவே தமிழிலும் எழுத்துத் தமிழ், வானொலி மற்றும் தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பு, அரசியல் மற்றும் இலக்கிய மேடைகள் போன்ற சூழல்களில் பயன்படுத்தப்படும் தமிழுக்கும் ஒரு குறிப்பிட்ட வட்டார, சமூக அல்லது தொழில் சார்ந்த மொழிக்கூறுகள் இல்லாத பொதுப் பேச்சுத் தமிழுக்கும் இடையில் பயன்பாட்டு அடிப்படையிலான வேறுபாடு உண்டு.
இது இரட்டை வழக்கு என அழைக்கப்படுகிறது. இவ்விரண்டு வழக்குகளுக்கு இடையிலான இடைவெளி அண்மைக் காலமாகக் குறைந்துவருவதைப் பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இப்போது, தொலைக்காட்சி விவாதங்கள், தொலைக்காட்சி நேர்முகங்கள், ஆசிரியர்- மாணவர் உரையாடல் அனைத்தும் பெரும்பாலும் பொதுப் பேச்சு வழக்குக்கு மாறிவிட்டதைக் காண முடிகிறது. அரசியல் மேடைகளிலும் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட மேடைத் தமிழ்நடை இப்போது மாறி, பொதுப் பேச்சுத் தமிழ்ப் பயன்பாட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
இவ்விடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டியுள்ளது. தனித்தமிழ் இயக்கம் எழுத்து மொழிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை இயல்பான பொதுப் பேச்சுத் தமிழுக்குக் கொடுக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். இன்றைக்கும் தனித்தமிழ் அல்லது தூய தமிழில் மிகுந்த பற்றுள்ளோர் பேசும்போது இலக்கிய நடையில் பழந்தமிழ் சொற்களையும் சேர்த்துப் பேசுவதைப் பார்க்க முடியும். இதன் காரணமாகத் தூய தமிழ் அல்லது நல்ல தமிழ் என்றால் இலக்கிய நடையில் பேசுவதுதான் என்ற பொதுவான புரிதல் உள்ளது. அவ்வாறு இலக்கிய நடையில் பேசுவது அனைவருக்கும் இயலாததாக இருப்பதால், நல்ல தமிழில் பேச இயலாது எனும் மனப்பான்மையும் மக்களிடத்தில் உள்ளது... இது உண்மையல்ல. இயல்பான பேச்சுத் தமிழில் பிறமொழிக் கலப்பின்றிப் பேசுவது நல்ல தமிழ்தான் எனும் எண்ணம் வளர வேண்டும்.
எழுத்து மொழியில் பேச்சு மொழியின் தாக்கம் ஏற்படுவது இயல்பானது என்றாலும் ஆங்கிலச் சொற்களை அப்படியே செய்தித்தாள்கள், இதழ்களில் எழுதும் போக்கு பெருகிவருகிறது. ‘மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டபோது பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதால், ஷோரூமில் நிறுத்தியிருந்த…’, ‘புரமோஷன் வாங்குன எஸ்.எஸ்.ஐ.க்களுக்கு 10 வருஷ சர்வீஸுக்குப் பிறகு ஊக்கத்தொகை குடுப்பாங்க’ என்பது போன்ற ஆங்கிலச் சொற்களைக் கலந்து எழுதுவதைச் சில நாளிதழ்களில் காண முடியும்.
அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், உயர் அலுவலர்கள் ஆகியோரில் பலர் செய்தியாளர் சந்திப்பில் ஆங்கிலம் கலந்து பேசுவது இயல்பாகிவிட்டது. அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் செய்தி ஊடகங்களுக்கு அளிக்கும் செவ்விகளில் ‘ரிசல்ட் முழுமையா வரட்டும்’, ‘நீங்க சப்போர்ட் பண்ணுங்க’, ‘நாளைக்கு மார்னிங்குக்குள்ள இந்தப் பிரச்சினை தீர்ந்திடும்’, ‘எங்க டிபார்ட்மென்ட் வெரிஃபை பண்ணிக்கிட்டிருக்கு’ என ஆங்கிலச் சொற்கள் மிக இயல்பாக வந்து விழுவதைப் பார்க்க முடிகிறது. புழக்கத்தில் உள்ள ‘முடிவு’, ‘ஆதரவு’, ‘காலை’, ‘துறை’ போன்ற சொற்கள்கூடப் பயன்படுத்தப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
தவிர்க்க இயலாத இடங்களில், தமிழில் கலைச்சொல் உருவாக்கப்படாத நிலையில், அளவோடு ஆங்கிலக் கலைச் சொற்களைப் பயன்படுத்திப் பேசுவதை ஒரு தற்காலிக ஏற்பாடாக வைத்துக்கொள்ளலாம். ஒரு காலகட்டத்தின் மொழிப் பயன்பாடுதான் அக்காலகட்டத்தின் மொழி வளர்ச்சி. ஆங்கிலம் கலந்த பொதுப் பேச்சுத் தமிழ் மீது தனித்தமிழ் மீது பற்றுள்ள, தமிழ் வளர்ச்சியில் அக்கறையுள்ள அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
காட்சி ஊடகங்களில் நடைபெறும் விவாதங்கள், செய்தியாளர் சந்திப்பு, சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்புகளின் கூட்ட விவாதங்கள் முதலான முறைசார்ந்த சூழல்களில் பொதுப் பேச்சுத் தமிழை இயன்றவரை ஆங்கிலக் கலப்பின்றிப் பயன்படுத்தும் நிலை உருவாக வேண்டும். அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் உயர் அலுவலர்களும் பொதுமக்களோடு தொடர்பிலுள்ள பொறுப்பிலுள்ளோரும் தேவையற்ற ஆங்கிலச் சொற்களைக் கலக்காமல் பேசுதல் எனும் கொள்கையைக் கைக்கொள்ள வேண்டும். இதுவே, தேவையற்ற ஆங்கிலக் கலப்பைத் தடுத்து நிறுத்தி தமிழின் தனித்தன்மையைக் காக்க உதவும்.
- கோ.பாலசுப்ரமணியன், மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். தொடர்புக்கு: gbalu123@gmail.com