நூறு நாள் வேலை வெட்டி வேலையா?

நூறு நாள் வேலை வெட்டி வேலையா?
Updated on
3 min read

நூறு நாள் வேலைத் திட்டம் என்று மக்கள் சுருக்கமாக அழைக்கும், ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்ட’த்தைப் ‘பசிப்பிணி மருத்துவன்’ என்று அழைத்தல் மிகவும் பொருத்தமானது. இதன் அடிப்படை நோக்கம், கிராமப்புற மக்களின் பசியைப் போக்குவது, ஏழைகளுக்குக் குறைந்தபட்ச கௌரவமான வாழ்வை உத்தரவாதம் செய்வது. இவை எல்லாவற்றையும்விட, உழைப்பை உரிமையாக்கிய ஒரே திட்டம் என்றும் இதைக் கூறலாம். இத்திட்டத்தின் நீண்ட கால விளைவு உழைப்பு சார்ந்த பொருளாதார வளர்ச்சி, வேளாண்மை வளர்ச்சியை முடுக்கிவிடும் சொத்து உருவாக்கம் ஆகியவை ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதுணை செய்வது ஆகும். இதனை மையப்படுத்திய பல பணிகள் தண்ணீர் தொடர்பானவை. ஏரி, குளம் தூர்வாருதல், பாரம்பரிய நீர் ஆதாரக் கட்டுமானங்களைப் பராமரித்தல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல், சிறுபாசன நீர்த்தேக்கங்களைப் பாதுகாத்தல், தூர்ந்துபோன நீர்நிலைகளை உயிர்ப்பித்தல், மழைநீர் சேகரிப்பு, கிராமப்புறக் குடிநீர் மேம்பாடு, கிராமப்புற சாலை வசதி, கிராம சுகாதார மேம்பாடு, மரம் வளர்ப்பது, சூழலியல் மேம்பாடு ஆகியவற்றை விரிவான பணிகளாகக் கூறலாம்.

இத்தகைய பணிகளால் உண்மையான பொருளாதார வளர்ச்சிப் பலன்கள் உண்டா, வேளாண்மை செழிக்க ஏதேனும் ஒரு வகையில் இத்திட்டம் பக்கபலமாக இருக்கிறதா என்றெல்லாம் கேட்கலாம். இந்த சந்தேகங்களை புதுடெல்லியில் உள்ள பொருளாதார வளர்ச்சி நிறுவனம், ஹைதராபாதில் உள்ள சர்வதேச வெப்பமண்டல மானாவாரிப் பயிர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வுகள் போக்குகின்றன.

2018-ல் பொருளாதார வளர்ச்சி நிறுவனம் 21 மாநிலங்களில், 30 மாவட்டங்களில், வேளாண்மை வெட்பநிலை வேறுபாடுகள் உள்ள 14 பகுதிகளில் 2015 முதல் 2018 வரை இந்த ஆய்வை நடத்தியது. ஆய்வின் முடிவில், நீர்ப்பாசனப் பணிகள் 30.6 விழுக்காட்டிலிருந்து 58.9 விழுக்காடாக இக்காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. தனிநபர் நிலம் சார்ந்த சொத்து உருவாக்கப் பணிகள், 31 விழுக்காட்டிலிருந்து 48 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. ஆனால், இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காலத்தில், தனிநபர் சொத்து உருவாக்கப் பணிகள் குறைந்துள்ளன. சமூக சொத்துக்களின் உருவாக்கப் பணிகள் விரிவடைந்துள்ளன என்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

10.85 லட்சம் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் 222.2 கோடி கியூபிக் மீட்டர் நீர் கொள்ளளவு கொண்டவை. இதன் வழியாக, சராசரியாக கிராமம் ஒன்று, 34 லட்சம் லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும். கிராமப்புறத்தில் வாழும் மக்களுக்கு, நபர் ஒன்றுக்குச் சராசரியாக 55 லிட்டர் தண்ணீர் நாளொன்றுக்குத் தேவைப்படுகிறது. இந்த மதிப்பீட்டின்படி, நூறு நாள் வேலைத் திட்டத்தின் வழியாக ஒரு கிராமத்தில் சேமிக்கப்பட்ட தண்ணீரை, அங்கு வாழும் 170 பேர் ஆண்டு முழுவதும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அது மட்டுமின்றி, இத்தகைய பண்ணைக் குட்டைகள், மண்ணரிப்பைத் தடுக்கும் வகையிலான பத்து லட்சம் தடுப்பு மண் ஏரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீரை உயர்த்தவல்ல 18 ஆயிரம் தடுப்பு அரண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 35 லட்சம் பாசன வசதி தொடர்பான பணிகளும், 30 ஆயிரம் வடிகால் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய பணிகள் நடைபெற்றுள்ள ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் 72 லட்சம் கியூபிக் மீட்டர் வழிந்தோடும் நீரை நிலத்தடி நீராக மாற்ற முடிந்திருக்கிறது.

2019-ம் ஆண்டு வரை மாநிலங்கள் பெரும் நீர்த்தேக்கத் திட்டங்களுக்காகச் செலவிட்ட தொகை, சுமார் ரூ.4 லட்சம் கோடி. ஆனால், நூறு நாள் வேலைத் திட்டத்தில், சிறு பாசன வசதிக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு வகைத் தண்ணீர் சேகரிப்புப் பணிகளைச் செய்து முடிக்க, ரூ.20,189 கோடி மட்டுமே செலவாகியுள்ளது. பெரும் நீர்த்தேக்கத் திட்டங்களுக்காகச் செலவிடப்பட்ட நிதியில், இது 5.4 விழுக்காடே. மொத்தமுள்ள பாசன நிலங்களில் பெரும் நீர்த்தேக்கங்கள் மூலம், பாசன வசதி பெறும் நிலங்கள் 49%. நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலம் இப்பணிகளை மேலும் பரவலாக்கினால், இன்னும் கூடுதல் பாசனப் பரப்பைக் குறைந்த செலவில் விரிவாக்க முடியும்.

2016-ல், சர்வதேச வெப்பமண்டலப் பயிர் ஆராய்ச்சி நிறுவனம், தண்ணீர்ப் பற்றாக்குறை மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றில் ஓர் ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில், 100 நாள் வேலைத் திட்டத்தின் பணிகள் வழியாக, பாசன நீர் சேகரிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த மாநிலங்களில் உருவாக்கப்பட்ட 470 தண்ணீர் சேகரிப்புக் கட்டமைப்புகளில், 144 கட்டமைப்புகளின் பணிகள் மதிப்பீடு செய்யப்பட்டன. பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் உள்ளிட்ட, கட்டி முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்த நீர் சேகரிப்புக் கட்டுமானங்கள் இவை.

அந்தப் பகுதியின் மண்ணின் தன்மை, மழைப்பொழிவு, நீர்ப்பிடிப்புப் பகுதிகள் ஆகியவற்றைப் பொறுத்து, 5 ஹெக்டேர் முதல் 95 ஹெக்டேர் வரை பாசனப் பரப்பளவு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில், ஆழ்துளைக் கிணறுகளில் நீரின் அளவும் உயர்ந்துள்ளது. மண் அரிப்பு தடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், அபைபூர் என்ற கிராமத்தில் மிகச் சிறப்பாக மழை நீர் சேகரிப்புப் பணிகள் நடைபெற்றதால், கடுகு பயிரிட்டுவந்த விவசாயிகள் கோதுமை சாகுபடிக்கு மாறினர். இதன் விளைவாக, ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை ஒரு ஹெக்டேருக்கு வருமானம் அதிகரித்துள்ளது.

ஆழ்துளைக் கிணறுகளில் நீர்ப்பிடிப்பு, 100 நாள் வேலைத் திட்டப் பணிகளுக்குப் பிறகு 63-77 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. இதன் விளைவாக, பயிர் விளைச்சல் கடந்த ஆறு ஆண்டுகளில், 30 முதல் 50 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. ஒட்டுமொத்த வேளாண் வருவாய், ஆண்டொன்றுக்கு, ஒரு ஏக்கருக்கு, 4,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய் வரை அதிகரித்திருக்கிறது. மண் வளம் உயர்ந்திருக்கிறது. 2014-ல் ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’ இதழில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரை ஒன்று, இதே பணிகள் மஹாராஷ்டிரத்தில் மேற்கொள்ளப்பட்டதைப் பற்றி பேசுகிறது.

அது தனியார் நிலத்தில் 35 விழுக்காடும், சமூக நிலத்தில் 30 விழுக்காடும் மழைநீர் சேகரிப்பு அதிகரித்துள்ளதை உறுதிசெய்கிறது. அதேபோல், காடு வளர்ப்பு (6%), தோட்டப் பயிர்கள்(4%), இதர பணிகள் (18%), குடிநீர், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றிலும் நூறு நாள் வேலைத் திட்டம் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்று மதிப்பீடு செய்யப்பட்டது. ஆக, நூறு நாள் வேலைத் திட்டம் ஒரு வெட்டி வேலை; வேளாண்மை வளர்ச்சிக்கு எதிரானது என்று நம்மில் பலர் வைக்கும் வாதங்களுக்கு எதிராகவும் அதேசமயம், இது வெறும் வறுமை ஒழிப்புத் திட்டம் மட்டுமல்ல, அதற்கு மேல் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிசெய்யும் திட்டமே என்பதை இந்த ஆய்வுகள் உறுதிசெய்கின்றன.

- நா.மணி, பேராசிரியர் மற்றும் தலைவர், பொருளாதாரத் துறை,

ஈரோடு கலை அறிவியல் கல்லூரி.

தொடர்புக்கு: tnsfnmani@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in