

இந்திய விடுதலையின் 75-ம் ஆண்டைக் கொண்டாடிவரும் இச்சூழலில் கல்வி, தொழில், வணிகம், தகவல் தொழில்நுட்பம் போன்ற எல்லாத் துறைகளிலும் பன்னாட்டுப் பெருநிறுவனங்களை முன்னிறுத்திவிட்டோம். விடுதலைக்கு முன் ஆங்கிலேயர்களால் நசுக்கப்பட்ட உள்ளூர் தொழில் வளங்களை மீட்டெடுப்பதற்கு, சுதேசிக் கப்பல் விட்ட வ.உ.சி.யின் 150-வது பிறந்த ஆண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில், சுதேசியத்தை மீள்கட்டமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் மாநிலங்கள் இருக்கின்றன.
விடுதலை பெற்ற இந்தியாவின் தொழிற்பெருக்கம் மற்றும் வறுமை ஒழிப்புக்காக 1950-களில் யுனெஸ்கோ உதவிசெய்ய முன்வந்தது. இதனை யுனெஸ்கோவின் பிரதிநிதியாக ஆதிசேசய்யா அப்போதைய பிரதமர் நேருவிடம் தெரிவித்தார். “எங்கள் நாட்டில் 40 கோடி இதயங்கள் உள்ளன. இந்த மனித வளத்தைக் கொண்டு எங்களுக்குத் தேவையான சாலைகள், ரயில்வே நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், வீடுகள் போன்றவற்றை நாங்களே கட்டமைத்துக்கொள்கிறோம். யுனெஸ்கோவிடம் நாங்கள் எதிர்பார்ப்பது கல்விக்கான உதவியை மட்டும்தான். அதனை யுனெஸ்கோ எங்களுக்கு வழங்கினால் போதும்” என்று நேரு சொன்னதாக ஆதிசேசய்யா குறிப்பிடுகிறார்.
யுனெஸ்கோவின் உறுப்பு நாடுகளின் - குறிப்பாக அப்போது சுதந்திரம் பெற்றிருந்த ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் நாடுகளின் – கல்வி வளர்ச்சியைச் செழுமைப்படுத்த மிகப் பெரிய தொகை வேண்டியிருந்தது. யுனெஸ்கோவால் பெருந்தொகையை இந்நாடுகளுக்குச் செலவிட முடியாது என்பதால், உலக வங்கியிடம் கல்வி வளர்ச்சிக்காகவும் இந்நாடுகளுக்குக் கடன் கொடுக்க வேண்டும் என்று வேண்டினார் யுனெஸ்கோவின் பிரதிநிதியான ஆதிசேசய்யா. ‘பணத்தைப் போட்டுப் பணத்தை அள்ளுவதையே’ குறிக்கோளாகக் கொண்ட உலக வங்கி, வணிக நோக்கத்துக்கு மட்டுமே, அதாவது உள்கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு மட்டுமே கடனளித்துவந்தது.
அதனால், ஆதிசேசய்யாவின் வேண்டுதலுக்கு முதலில், ‘கல்விக்காகக் கடன் அளிப்பது என்பது தனது பணியில்லை’ என்று கைவிரித்தது. ‘வறுமை ஒழியவும், பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் மக்களுக்குக் கல்வி அவசியம். அதனால் கல்விக்கு உலக வங்கி கடன் வழங்க வேண்டும்’ என்பதை தொடர்ச்சியாக அவர் வலியுறுத்தி, யுனெஸ்கோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவைத்தார். உலக அளவில் இது மிகப் பெரிய மாற்றத்தைக் கொணர்ந்தது. ஒரு தமிழர், உலக வங்கியைத் தனது பேச்சாலும் செயலாற்றலாலும் சேவைத் துறைக்கு மடைமாற்றம் செய்ததை இதுவரை யாரும் செய்யவில்லை என்றே சொல்லலாம்.
இதன் பயனாக முதன்முதலாக 1964-ல் பிலிப்பைன்ஸுக்கு வேளாண் கல்லூரி அமைக்க உலக வங்கி கடன் அளித்தது. அதே ஆண்டு ஆப்கானிஸ்தானின் கல்வி வளர்ச்சித் திட்டத்துக்கும் உதவிசெய்தது. உலக வங்கிக் கடனுதவியுடன் வளர்ந்துவரும் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் கல்வி வளர்ச்சிக்காக முறையே ‘கராச்சி திட்டம்’ (1959), ‘அடிஸ் அபாபா திட்டம்’ (1961), ‘சாண்டியாகோ-டி-சில்லி திட்டம்’ (1962) ஆகியவற்றைச் செயல்படுத்தி, அந்நாட்டு மக்கள் கல்வியில் முன்னேற்றமடையப் பெரும் பங்காற்றினார் ஆதிசேசய்யா.
யுனெஸ்கோ துணைப் பொதுச்செயலாளராக அவர் பணியாற்றியபோதும்கூட யுனெஸ்கோ உறுப்பு நாடுகளில் அந்தந்த நாடுகளின் கலாசாரத்துக்கு ஏற்ற கல்வி, அறிவியல் தொழில்நுட்பங்களை அங்கே மீள்கட்டமைப்பு செய்தார். “கல்வி என்பது ஒரு குழந்தையின் மூளையில், மாணவரின் மனதில் நடக்கும் ஒரு செயலாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். டெல்லியிலோ சென்னையிலோ ஏன் வேலூர் போன்ற மாவட்டத் தலைநகரங்களிலோ இருந்துகொண்டு, ஒரு பள்ளியின் செயல்பாட்டை நெறிப்படுத்த முடியாது” என்கிற பார்வையின் ஊடாக ஆதிசேசய்யாவின் சுதேசியச் சிந்தனையை நாம் புரிந்துகொள்ள முடியும்.
கல்வி, பொருளாதாரச் சிந்தனையாளராக மட்டுமே அதிகம் பேசப்பட்ட மால்கம் ஆதிசேசய்யா ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்திலும் சுதேசியம் வேண்டும் என்பதைப் பல தருணங்களில் வலியுறுத்திப் பேசியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக ஆதிசேசய்யா இருந்தபோது, தென்மாநிலத் தென்னை விவசாயிகளுக்காகக் குரல் எழுப்பியதோடு, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்ற தொலைநோக்குத் திட்டத்தையும் முன்வைத்திருக்கிறார்.
“தென்னை விவசாயத்தில் நமக்குப் பயனுள்ள ஏழு பொருட்கள் கிடைக்கின்றன. தேங்காய்த் துருவலைக் கொண்டு கர்நாடகம், தமிழ்நாடு, கேரளத்தில் பல உணவுகளைத் தயாரிக்கின்றனர். கொப்பரையிலிருந்து எண்ணெய் எடுத்துப் பயன்படுத்துகிறோம். மட்டையிலிருந்து கயிறு எடுக்கிறோம்; தென்னங்கீற்று பல்வேறு கிராமப்புற மக்களின் வீட்டுக் கூரையாகப் பயன்படுகிறது. இதுமட்டுமல்லாமல், வீட்டைச் சுத்தம் செய்வதற்கும் இதிலிருந்து கிடைக்கும் பொருளைப் பயன்படுத்துகிறோம். தென்னையிலிருந்து எடுக்கப்படும் பதநீர் மிக முக்கியமான ஒன்று. இது உடலுக்கு நன்மையை விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது.
பன்னாட்டு நிறுவனங்களின் கோகோ கோலா, கேம்பா கோலா போன்ற செயற்கையாய்த் தயாரிக்கப்படும் பானங்களுக்கு மாற்றாக இந்தப் பதநீரை நாம் பதப்படுத்தி விற்றால், அது தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வளப்படுத்தும். 1 ரூபாய் 35 பைசாவுக்கு மக்கள் வாங்கி அருந்தும் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர் பானங்களுக்கு மாற்றாக 25 பைசாவுக்கு விற்கப்படும் – உடலுக்கு நலம் பயக்கும் இந்தப் பதநீரை அரசும், தென்னை வளர்ச்சி வாரியமும் பதப்படுத்தி விற்பனை செய்ய ஆலோசிக்க வேண்டும்…” என்று தென்னை வளர்ச்சி வாரியம் குறித்து, 1979-ல் மாநிலங்களவையில் ஆதிசேசய்யா விரிவாகப் பேசியிருக்கிறார்.
கடந்த 2018-ல் கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் தென்னை விவசாயிகள் முழுமையாக வாழ்வாதாரத்தை இழந்ததையும், இரண்டாண்டுகளுக்குப் பிறகு 2020 வரையிலும்கூட அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்பதையும் 2020, நவம்பர் 16 அன்று ‘இந்து தமிழ் திசை’ கட்டுரை வெளியிட்டிருப்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது. தென்னை விவசாயம் குறித்த ஆதிசேசய்யாவின் பேச்சு, சுதேசியத்தை மட்டும் வலியுறுத்துவதாக இல்லை; அதனோடு தென்னை விவசாயிகளின் எதிர்காலம், ‘மதுவை ஒழிப்போம்’ என்பதற்கான மாற்று ஆலோசனை ஆகியவற்றையும் முன்னிறுத்துவதாக உள்ளது. வறுமை ஒழிப்பு, அனைவருக்குமான கல்வி, ஏழைகளின் முன்னேற்றம் ஆகியவற்றையே தனது குறிக்கோளாகக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் பணியாற்றிய ஆதிசேசய்யா கல்வி, பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், இயற்கை வளம், வறுமை ஒழிப்பு, தற்சார்பு என அனைத்திலும் சுதேசியச் சிந்தனையாளராக இருந்து, தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தவர். அவர் பெயரில் ஒரு விருதையும் நிதி நல்கையையும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.
- ஆ.அறிவழகன், ‘இந்தியப் பொருளாதாரம்: வரலாறு காட்டும் வழிகள்’ என்ற நூலின் தொகுப்பாசிரியர். தொடர்புக்கு: aazhagan@rediffmail.com
18.04.2022 ஆதி சேசய்யாவின் 113-வது பிறந்த நாள்