

சமூக வலைதளம் அதகளப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட தமிழணங்கின் ஓவியம்தான் இப்போது பேசுபொருள். அந்த அணங்கின் நிறம் கறுப்பு. அவள் கையில் தமிழாயுதம். முகத்தில் சினம். விரிந்த கூந்தல். தாண்டவக் கோலம். படம் வைரலானது. ரஹ்மான் படத்தைப் பதிவிட்ட நேரமும் அதற்கொரு காரணம். கடந்த வாரம்தான் (7.4.22) ஒன்றிய அமைச்சர் அமித் ஷா ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை இந்தியாவின் இணைப்பு மொழி ஆக்க வேண்டும் என்று பேசினார். அதையொட்டி அமைந்துவிட்டது ரஹ்மானின் பதிவு. நெட்டிசன்கள் பலரும் தமது இந்தி எதிர்ப்பை வெளிப்படுத்த அந்த ஓவியத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.
எனினும் விமர்சனங்களுக்கும் குறைவில்லை. தமிழணங்கின் முகத்தில் தெய்வாம்சம் இல்லை, படம் அலங்கோலமாக இருக்கிறது என்றார் ஒரு தமிழறிஞர். தமிழ்த்தாய் அழகானவள், ஆனால் படம் அகோரமாக இருக்கிறது, ஆகவே இதை வரைந்தவர் வக்கிர புத்தி உள்ளவராகத்தான் இருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தவர் ஓர் அரசியல் விமர்சகர். அவர் குறிப்பிடும் ஓவியர் சந்தோஷ் நாராயணன் இந்த ஓவியத்தை வரைந்தது 2019-ல், இதே போன்ற இந்தி மொழிச் சர்ச்சை ஒன்றுக்கு இடையில்தான்.
ஓர் அரசியல் தலைவர், அணங்கின் படம் பேயைப் போல் இருக்கிறது என்று சொன்னார். இதை அவர் பாரதியிடம் சொல்லியிருந்தால், “அதனாலென்ன?” என்று அவன் கேட்டிருப்பான். தனது பாரத மாதாவை “பேயவள் காண் எங்கள் அன்னை” என்று பாடியவன் பாரதி. அவனது பாரத மாதா பெரும் பித்துடையவளாகவும் வேல் கையிற் பற்றித் துள்ளிக் குதிப்பவளாகவும் இருந்தாள். சந்தோஷின் தமிழணங்கும் அந்த வழியில் வந்தவள்தான். பாரத மாதாவுக்கும் தமிழன்னைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு முறை அறிஞர் அண்ணாவிடம் ஓர் எதிர்க்கட்சி அரசியலர், “தமிழன்னை தமிழன்னை என்கிறீர்களே, அவள் எங்கே வசிக்கிறாள்?” என்று கேட்டாராம். “உங்கள் பாரத மாதாவின் பக்கத்து வீட்டில்தான்” என்பது அண்ணாவின் பதிலாக இருந்தது.
நாட்டை, மொழியைப் பெண்ணாக, தாயாக உருவகிப்பது காலங்காலமாக இருந்து வருவதுதான். ஆனால், இந்த முறை சிலர் அதையும் கேள்வி கேட்டனர். சிலர் ஏன் தமிழணங்கு நவீன மோஸ்தரில் இருக்கக் கூடாது என்றும் கேட்டனர். ஆனால், எதிர்ப்பாளர்கள் பலருக்கும் பிரச்சினை இந்தத் தமிழணங்கு அழகாக இல்லை என்பதில்தான். அதற்கு அணங்கின் நிறம்தான் முக்கியக் காரணி. ‘சூடு ஒரு சுவை, சிவப்பு ஒரு அழகு' என்பது ஒரு சொலவடை. சிவப்பழகு கிரீமைத் தடவிய கறுப்புப் பெண்ணின் முகச் சருமம் பாம்புத் தோல்போல் உரியும் விளம்பரம் சில காலம் முன்பு வரை சுற்றில் இருந்தது. மணமகள் தேவை அறிவிப்புகளில் கறுப்பு மணமகனின் கறுப்புப் பெற்றோர் சிவப்புப் பெண் வேண்டுமென்று கேட்பது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அதனால் நமது திரைப்பட நாயகிகள் பலரும் சிவப்பழகிகள்தான். தயாரிப்பில் இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இளவரசி குந்தவை (த்ரிஷா) ஒய்யாரமாக நடந்து வரும் ஒளிப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகியது. அவரின் சிவப்பழகை உயர்த்திக் காட்டுவதற்காகவோ என்னவோ சுற்றிலும் கறுப்புச் சேடிகள் நின்றிருந்தனர்.
நாயகிகள் மட்டுமில்லை. நமது நாயகர்களில் பலரும் சிவப்பு நிறத்தவர் (அல்லது சிவப்பு நிறம் தரித்தவர்). எம்.ஜி.ஆர். ஓர் எடுத்துக்காட்டு. ‘உயர்ந்தவரென்ன தாழ்ந்தவரென்ன?/ உடல் மட்டுமே கறுப்பு /அவர் உதிரம் என்றும் சிவப்பு’ என்று பாடினார் எம்.ஜி.ஆர். பதிலுக்கு அந்தக் கறுப்பு மனிதர்கள் அவரை உளமார நேசித்தார்கள். அதற்கு எம்.ஜி.ஆரின் ‘பிள்ளை மனமும் வள்ளல் குணமும்’ மட்டுமில்லை, அவரது ‘பொன்னின் நிறமும்’ ஒரு முக்கியக் காரணம்.
சிவப்பு மோகம் நமக்கு மட்டுமில்லை என்பதைச் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிந்துகொள்ள வாய்த்தது. இடம்: ரியாத், சவுதி அரேபியாவின் தலைநகரம். அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் வீட்டையொட்டி மெட்ரோ ரயில் நிலையத்தின் வாயில் ஒன்று கட்டப்படவிருந்தது. பிரமுகர் தனது வீடு பாதிக்கப்படும் என்று கருதினார். மெட்ரோ ரயில் இயக்குநரிடம் முறையிட்டார். அந்த நிலையத்தின் வடிவமைப்புக் குழுவில் நானும் இருந்தேன். வீட்டுக்குப் பாதிப்பு ஒன்றும் நேராது என்று இயக்குநருக்கு விளக்கினேன். இயக்குநர் திருப்தி அடைந்தார். அதே விளக்கத்தைப் பிரமுகரிடம் போய் சொல்லச் சொன்னார். போகும்போது டேவிட்டையும் அழைத்துப் போங்கள் என்றார். பிரமுகரிடம் டேவிட் விளக்கினால் சிலாக்கியமாக இருக்கும் என்றும் சேர்த்துக்கொண்டார். டேவிட் எங்கள் குழுவில் பணியாற்றிய இளம் பொறியாளர், ஆங்கிலேயர். ஏன் டேவிட் விளக்கினால் நல்லது? வெள்ளைக்காரன் பொய் பேச மாட்டான் என்கிற நம்பிக்கை இந்தியர்களுக்கு மட்டுமில்லை, அரேபியர்களுக்கும் இருக்கிறது.
இந்தச் சிவப்பு மோகம்தான் கறுப்பு ராமரைச் சிவப்பாக்கிவிட்டது. கம்பனின் விசுவாமித்திரர் ராமனைக் ‘கரிய செம்மல்’ என்றுதான் குறிப்பிடுகிறார். கண்ணதாசன் கண்ணனை ‘கருமை நிறக் கண்ணா’ என்றுதான் விளிக்கிறார். ஆனால், அமர் சித்ரா கதைப் புத்தகங்களில் கண்ணனும் ராமனும் நீல நிறத்தில்தான் காட்சியளிக்கிறார்கள். இவ்விரு கடவுளரின் கலியுக அவதாரமாகக் கருதப்பட்ட என்.டி.ராமாராவும் நீல நிறத்தில்தான் பவனிவந்தார். பின்னாளில் ராமாயணம் தொலைக்காட்சித் தொடராகியபோது இராமர் சிவப்பாக மாறியிருந்தார். யாருக்கும் புகார் இருந்ததாகத் தெரியவில்லை.
நான் முதன்முதலில் பார்த்த தமிழ்த்தாயும் சிவப்பாகத்தான் இருந்தாள். காரைக்குடிக் கம்பன் விழா மேடையில் அவள் ஓவியமாக வீற்றிருந்தாள். வெள்ளைத் தாமரைப் பூவில் இருந்தாள். நான்கு கரங்கள். ஒரு கரம் யாழிசைக்க, ஒரு கரம் சுவடி ஏந்தியிருக்கும். பின்னிரு கைகளில் சுடரும் ருத்ராட்ச மாலையும் இருக்கும். இது கம்பனடிப்பொடி சா.கணேசன் அறிவுரையில் எஸ்.கருப்பையா எனும் ஓவியர் வரைந்த படம் என்பார்கள்.
பிற்பாடு சா.கணேசன் கம்பன் மணிமண்டப வளாகத்துக்குள் தமிழ்த்தாய்க்கு ஓர் ஆலயம் எழுப்பினார். 1993-ல் கலைஞர் திறந்து வைத்தார். இதுவே, தமிழ்த்தாய்க்கு எழுப்பப்பட்ட முதற் கோயிலாக இருக்கலாம். கருப்பையாவின் ஓவியத்தைக் கற்சிலையாக்கியவர் சிற்பி கணபதி. நான்கு கரங்களும் அவை ஏந்திய பொருட்களும் மாறவில்லை. இப்போது அன்னையின் இருபுறமும் அகத்தியரும் தொல்காப்பியரும் நின்றுகொண்டனர். பின்னால் உள்ள திருவாச்சியை மூவேந்தர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை அலங்கரித்தன. 1981-ல் மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் தமுக்கம் மைதான நுழைவாயிலில் தமிழன்னைக்கு ஒரு சிலையை நிறுவினார் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தவர் பிரதமர் இந்திரா காந்தி.
காரைக்குடியிலும் மதுரையிலும் தமிழன்னைக்கு அமைக்கப்பட்டவை கற்சிலைகள். ஆகவே, அவை கறுப்பு நிறத்தவை. அந்த அன்னைகளின் முகத்தில் அமைதி தவழும். அவை வைதிக நெறிகளின்படி உருவாக்கப்பட்டவை. மாறாக சந்தோஷின் தமிழணங்கு நாட்டார் வழிபாட்டு முறையில் கிளைத்தவள். கண்ணதாசன் தனது பாடல் ஒன்றில் அடுக்குகிற பட்டாளம் பழவேட்டம்மா, பெரம்பூர் அங்காளம்மா, பத்து நூறு கை கொண்ட புல்லாத்தம்மா, கருமாரியம்மா, காளியம்மா, கம்பனூர் நீலியம்மா முதலியோரின் வழி வந்தவள் இந்தத் தமிழணங்கு. இவள் உக்கிரமானவள். இவள் தமிழர்களின் அணங்கு. இவள் தமிழர்களின் நிறத்தில்தான் இருக்க முடியும். ஆகவே இவள் கறுப்பாகத்தான் இருப்பாள். அவளுக்குச் சில வேலைகள் இருக்கின்றன. அது வரை அவள் உக்கிரமாகத்தான் இருப்பாள். விரிந்த கூந்தலை அள்ளி முடிப்பதற்கு நேரம் வரும். அப்போது அவள் சீவிக் குழல் முடிப்பாள்.
- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com