பனையும் மா.அரங்கநாதனும்
மதுரை உயர் நீதிமன்றம் ‘பனை மரத்தை வெட்டுகிறவர்களுக்குத் தண்டனை நிச்சயம் என்ற நிலை வர வேண்டும்’ என்று அறிவித்தபோது, விளிம்புநிலை மக்களின் வரலாற்று அறிஞர் ஆ.சிவசுப்பிரமணியம், “திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள ‘திருபனங்காட்டாங்குடி’ என்ற ஊரிலுள்ள கோயிலின் ஸ்தல விருட்சமே பனைதான்; அங்கு கிடைத்த கல்வெட்டு ஒன்றில், ‘உயிருள்ள பனையை வெட்டினால் தண்டனை’ வழங்கப்பட்ட செய்தி கிடைக்கிறது; மன்னராட்சிக் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட அந்த மரபை மதுரை உயர் நீதிமன்றம் பின்பற்றியுள்ளது” என்று பாராட்டினார். அவர் ‘பனை மரமே! பனை மரமே!’ என்ற அற்புதமான நூலை தமிழுக்குத் தந்துள்ளார்.
இயற்கையின் கொடையில் பனை மரம் ஓர் அற்புத நிகழ்வு. ‘ஸ்தலவிலாசம்’ எனற பழைய நூலொன்று பனை மரத்தால் மனிதர்களுக்கு 801 வகையான பயன்கள் வாய்க்கின்றனவென்று பட்டியல் போட்டுள்ளது. 36 முதல் 42 மீட்டர் வரை வளர்ந்து 150 ஆண்டுகள் வாழ்ந்து பயன் அளிக்கக்கூடிய பனை மரம் 2018-ல் எடுத்த கணக்கின்படி, இந்தியா முழுக்க (பெரும்பாலும் ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ்நாடு) 8.59 கோடியாம். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5.10 கோடி. செங்கல் சூளைகளுக்காக, உலகப் பன்னாட்டு முதலாளிகளின் பெரும் தொழிற்சாலைகளுக்கு நில ஆக்கிரமிப்பு செய்வதற்காக என்றெல்லாம் கூசாமல் வெட்டித் தள்ளிவிட்டார்கள். கஜா புயலின்போது எல்லா மரங்களும் மண்ணைக் கவ்விய நிலையில், ஒன்றுகூட சாயாமல் மண்ணைப் பிடித்து நிமிர்ந்து நின்ற மரம் பனைதான். அதற்குத்தான் இந்தக் கதி!
இப்படி இவர்கள் வெட்டிச் சாய்த்துக்கொண்டிருக்கிற இந்தப் பனை மரத்தை அய்யா வைகுண்டரைப் பின்பற்றும் சமூகத்தினர் பத்ரகாளியாக வழிபடுகின்றனர். தங்களை அந்தப் பத்ரகாளியின் பிள்ளைகளெனக் குறிப்பிடுவார்கள்.
இப்படிப் பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படும் காலமொன்று வரும் என்பதைச் சந்தைப் பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்ட 90-களில், மா.அரங்கநாதன் எழுதிய தன் ‘பனை’ என்கிற கதையில் முன் அனுமானம் செய்திருப்பார்.
முத்துக்கறுப்பனின் பள்ளிப் பருவம். திருக்கார்த்திகைக்கு வெட்டிச் சாய்ப்பதற்காகப் பனை மரத்தை விலை பேசிவிட்டார் தன் தந்தை என்பதைக் கூடப் படிக்கிற பையன் மாணிக்கம் வழியாகத் தெரிந்துகொள்கிறான். மரத்தைக் கொடுக்க வேண்டாம் என்கிறான் முத்துக்கறுப்பன். தந்தையிடம் அதற்கு அவன் சொல்லும் காரணம், “மரத்துச் சத்தம் நல்லாயிருக்கு.” இசை மேதை மொசார்ட் (1756-1791) மிகச் சிறிய வயதிலேயே பன்றி உறுமும் சத்தத்தைக் கேட்டவுடன் அந்த ஒலி ஓர் இசைக் குறிப்பு என்று கண்டுகொண்டார் என்று சமீபத்தில்தான் படித்தேன். நம் முத்துக்கறுப்பனும் பனை மரத்திலிருந்து வரும் ஓசையை அப்படியொரு இசைக் குறிப்பாகக் கண்டுகொண்டானோ என்னமோ என்று வாசிக்கிற எனக்குத் தோன்றியது.
படித்தவர்களுக்கு அழகு, நம் பாரம்பரியம் சார்ந்த அனைத்தையும் இழிவாகக் கருதும் மனோபாவத்தைப் பெறுவதுதான் என்று பொதுப்புத்தியில் படிந்துவிட்ட காலனித்துவ மனப்பான்மையையும் போகிற போக்கில் கதைசொல்லிப் பதிவுசெய்கிறார்.
‘‘பனை போனால் நானும் போயிடுவேன்” என்று சொல்லும் அளவுக்கு மகன் மரத்தைக் கொடுக்கக் கூடாது என்பதில் வலுவாக நிற்கிறான். “போயிடுவியா - அவ்வளவு தூரத்துக்குப் பேச ஆரம்பிச்சுட்டியா. போயிடு பார்க்கலாம்” என்கிறார் தந்தை.
பள்ளிப் பருவத்தில் பனை மரத்துக்காக அப்பனிடம் கோபித்துக்கொண்டு ஓடிப்போன சிறுவன்தான் பின்னாளில் சித்த மருத்துவராகத் திரும்பி வந்திருக்கிறார். பனை மரம் நிற்கிறது; தந்தை நிற்காமல் போய்ச் சேர்ந்துவிட்டார். ஊருக்குப் புறம்பாக அமைத்துக்கொண்டுள்ள தன் வீட்டுச் சன்னல் வழியாக அந்தப் பனை மரத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்துக்கொண்டே நிற்கிறார். முக்காலும் வெள்ளை ஓலைகளாகப் போய்விட்ட அந்தத் தனிமரம் சலசலத்துக் கொண்டிருக்கிறது. உள்ளுக்குள் நினைவலைகள்.
தன்னைப் போலவே தனிமையின் அடையாளம்; நாரையின் நாக்குக்குப் பனங்கிழங்கின் நடுவில் இருக்கும் குருத்தை உவமையாகச் சொன்ன புலவனின் திறம்; பத்துப் பனை இருந்தா அன்றைக்குப் பணக்காரன் (இந்த இடத்தில் தனக்கு ஆயிரம் பனைகள் இருந்ததாக கி.ரா. சொன்ன நினைவு எனக்கு. கூடவே, 68% பனையேறிக் குடும்பங்களுக்குச் சொந்தமாக மரமில்லை என்ற புள்ளிவிவரமும் நினைவுக்கு வருகிறது); செய்நன்றியறிதலைப் பற்றிப் பேசும்போது ‘தினையளவு நல்லது செய்தாலும் அதன் அருமை அறிந்தவர்கள் அதைப் பனையளவாகக் கருதிக் கொண்டாடுவர்’ என்று எழுதியுள்ள அந்தப் புலவன், கீழ்ச் சாதியாகக் கருதப்பட்ட பனையேறியாகத்தான் இருக்க வேண்டும் என்று உலக இலக்கியம் கற்ற ஒரு பெரியவரிடம் சொன்னபோது, அதற்கு அவர் “தெரியவில்லை; ஆனால் அந்த ஆசிரியன் எனது தோளில் கையைப் போட்டுக்கொண்டு, என்னுடன் நடந்து வந்துகொண்டே அதைச் சொல்லுகிறான்” என்று பதில் சொன்னாராம்.
இவ்வாறு பனை மரத்தைப் பார்த்துக்கொண்டு பல்வேறு நினைவலைகளில் மிதந்தபடி சன்னலோரத்தில் நிற்கும்போது, வாசலில் பக்கத்து வீட்டுச் செல்லத்தாயி மருத்துவம் பார்க்க வந்து நிற்பதைக் கண்டவுடன் உட்காரச் சொன்னார். உற்றுப் பார்க்கும் அவள் அடையாளம் கண்டுகொண்டாள். கால் நூற்றாண்டு கால இடைவெளி கணப்பொழுதில் கூடிவிட்டது இருவரிடமும். “நீ கல்யாணம் செய்துக்கலியா?” என்று செல்லத்தாயி கேட்டபோது, பதில் கூறாமல் தன்னை அந்த மரத்தைப் போலவே தனி மரமாகக் கருதிக்கொள்வதுபோல், மரத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். தான் கேட்ட கேள்விக்குப் பதில் வராமல் போகவே செல்லத்தாயி, ‘பனை நூறாண்டு இருக்கும்… அது ஒருவேளை வெட்டப்பட்டுப் போயிருந்தாலும்கூட நீ இருக்கியே’ என்கிறார்; மருத்துவரும் ‘அதை உணர்ந்தவர்போலத் தென்பட்டார்’ என்று கதையை முடித்து வைக்கிறார் மா.அரங்கநாதன்.
பனையின் மேல் பிரியம் இருக்கிற முத்துக்கறுப்பன் போன்றோர் இருக்கும் வரை பனை மரங்கள் இல்லாமல் போய்விடாது என்ற நம்பிக்கையை விதைக்கிறார் கதைசொல்லி. அதற்கு ஏற்றவாறு ஒரு லட்சம் பனைவிதை நடுகிறோம்; ஐம்பதாயிரம் நடுகிறோம் என்று பனை மர அன்பர்கள் அங்கங்கே செயலில் இறங்கியிருப்பதும் ஆறுதல் தருகிறது.
- க.பஞ்சாங்கம், பேராசிரியர், திறனாய்வாளர். தொடர்புக்கு: drpanju49@yahoo.co.in
