Last Updated : 29 Apr, 2016 10:21 AM

 

Published : 29 Apr 2016 10:21 AM
Last Updated : 29 Apr 2016 10:21 AM

கண்டுபிடிக்கப்பட்ட அரிய ஆவணம்!

முதன்முதலில் எழுத்துப்பட பாரதி கவிதை உயர்ந்தது என்று எடுத்துக்காட்டியவர் பாரதிதாசன்

இந்திய அளவில் பாரதியின் இடம்குறித்த முதல் தமிழ்ப்பதிவு மகாகவி பாரதியைத் ‘தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும் தலைவன்’ எனவும், ‘பாரத நாட்டின் கவிஞன்’ எனவும், ‘உலக கவி’ எனவும் முதலில் கவிதையில் போற்றி எழுதியவர் பாரதிதாசன். அவர் 75 ஆண்டுகளுக்கு முன் சுயமரியாதை இயக்க ‘நகரதூதன்’ இதழில் எழுதிய கட்டுரையில் ஒரு செய்தியைப் பதிவுசெய்திருந்தார்.

பல்லாண்டுகளுக்கு முன் பெல்ஜியக் கவிஞர் வெர்ஹேரன் இறந்தபோது, ‘சுதேசமித்திரன்’ இதழில் தாம் ஒரு கட்டுரையை எழுதியிருந்ததாகவும், அந்தக் கட்டுரையுள் தமிழ்நாட்டில் பாரதி உயர்ந்த கவி என்பதை விளக்கிக் காட்டியதாகவும், அதுவே பாரதி கவிதை உயர்ந்தது எனத் தமிழில் எழுதப்பட்ட முதல் பதிவு எனவும், முதன்முதலில் எடுத்துக்காட்டியவன் நான்தான் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

“பாரதியார் அநேக வருஷங்களாகக் கவிதை ருசியாக எழுதிவருவது தெரிந்திருந்தும், வி.வி.எஸ். ஐயர் அவரைப் பாராட்ட வேண்டியதிருக்க ‘அநேக நூற்றாண்டாகத் தமிழ்நாட்டில் கவிதை தோன்றவில்லை’ என்று பத்திரிகையில் எழுதினார். அதையடுத்து, அயர்லாந்தில் வெர்ஹேரன் கவி இறந்தார். அதுபற்றி நான் சுதேசமித்திரனில் அப்போது ஓர் கட்டுரை எழுதினேன். அதில் தமிழ்நாட்டில் பாரதி உயர்ந்த கவி என்பதை விளக்கிக் காட்டினேன். முதன்முதலில் எழுத்துப்பட பாரதி கவிதை உயர்ந்தது என்று எடுத்துக்காட்டியவன் நான்தான்.’ (நகரதூதன், 15-09-1940)

எங்கே அந்த எழுத்து?

பாரதிதாசன் இப்படிச் சொல்லியுள்ள போதிலும் பாரதிதாசனின் எழுத்துகளாக இதுவரை வெளிவந் துள்ளவற்றில் அப்படியொரு எழுத்து இடம்பெறவில்லை.

நான் மேற்கொண்ட தேடலில், பாரதிதாசன் ‘சுதேசமித்திரன்’ இதழில் எழுதியதாகக் குறிப்பிட்டிருந்த அந்தக் கட்டுரையைக் கண்டெடுத்துள்ளேன். ‘நகரதூதன்’ இதழில் குறிப்பிட்டிருந்தபடி வெர்ஹேரன் இறந்தபோது அவரால் எழுதப்பட்ட கட்டுரை அது. அந்தக் கட்டுரை வெளிவந்து சரியாக 100 ஆண்டுகள் ஆகும் நிலையில் அது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாரதியின் மீது செல்வாக்குச் செலுத்திய கவிஞர்களுள் ஒருவர் எனக் கைலாசபதி முதலியோரால் குறிப்பிடப்படும் வெர்ஹேரன் பற்றி, பாரதியாரால் உரைநடையில் குறிப்பிடப்பட்ட கவிஞர்களுள் ஒருவராகிய வெர்ஹேரன் பற்றி பாரதியாரின் சமகாலத்திலேயே பாரதியார் தொடர்ந்து எழுதும் ‘சுதேசமித்திரன்’ இதழிலேயே பாரதிதாசனும் எழுதியிருக்கின்றார். இன்னுமொரு சிறப்பு பாரதிதாசனின் வெர்ஹேரன் குறித்த கட்டுரையும், பாரதியாரின் ‘ வைஷ்ணவம்’ என்னும் கட்டுரையும் சுதேசமித்திரன் இதழில் ஒரே பக்கத்தின் மேற்பகுதியில் பாரதி கட்டுரை, கீழ்ப்பகுதியில் பாரதிதாசன் கட்டுரை என இடம்பெற்றிருந்தன. 1917 ஜனவரி 3 அன்று இவை வெளிவந்திருந்தன.

முதல் பதிவு ஒரு ஆய்வு

தாம் எடுத்துக்காட்டி ‘சுதேசமித்திர’னில் எழுதியதே ‘பாரதியார் உயர்ந்த கவி’ எனத் தமிழில் எழுதப்பட்ட முதல் பதிவு என்று பாரதிதாசன் கூறியிருப்பது எண்ணத்தக்கதாக அமைகிறது.

பாரதி வாழ்ந்த காலத்தில் அவரைப் போற்றி எழுதப்பெற்றவையாக மு.ராகவையங்கார், பரலி சு.நெல்லையப்பர், ராஜாஜி, ஏ.வி.சுப்பிரமணிய ஐயர், வ.வெ.சு.ஐயர் ஆகியோரின் எழுத்துகள் முதல்நிலையில் காட்சியளிக்கின்றன. ராகவையங்கார் பாரதியாரைப் பாராட்டி எழுதியது ‘ஸ்வதேச கீதங்கள்’ நூலின் மதிப்புரை (1908). நூல் மதிப்புரை என்னும் நிலையிலும், இனிய கவிகள் பாட வல்லவர் பாரதியார் எனக் குறிப்பிடும் நிலையிலும் அமைந்தது இது. பாரதியை உச்சநிலையில் வைத்துப் பாராட்டி எழுதப்பட்ட ஏ.வி.சுப்பிரமணிய ஐயரின் கட்டுரையானது ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. அன்னிபெசன்ட் நடத்திய ‘நியூ இந்தியா’ பத்திரிகையில் அது 1919-ல் வெளிவந்தது. ‘மறுமலர்ச்சிக் கவிஞர்’ என்னும் தலைப்பில் வ.வே.சு.ஐயர் எழுதிய கட்டுரை 1918 ‘சுதேசமித்திரன் வருஷ மல’ரில் வெளிவந்தது. ராஜாஜியின் குறுங்கட்டுரையோ 1916-ல் அன்னிபெசன்ட் நடத்திய ‘காமன்வீல்’ இதழில் வெளிவந்ததாயினும் ஆங்கிலத்தில் அமைந்தது. பரலி சு.நெல்லையப்பரின் மிகச் சிறந்த பதிவுகள் 1917 ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில்தான் கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, முரசு ஆகிய நூல்களின் முகவுரைகளாக இடம்பெற்றன. இவை நூலைப் பதிப்பித்தவர் கூறியவை என்னும் நிலையில் அமைவன.

இவற்றையெல்லாம் தொகுத்து நோக்கும்போது பாரதியார் உயர்ந்த கவி எனக் குறிப்பிடும் பகுதியைக் கொண்ட, 1917 ஜனவரி 3 அன்று வெளிவந்த பாரதிதாசனின் கட்டுரையே பாரதியைச் சிறப்பித்துக் கூறும் முதற்பதிவு என்று கொள்ளத் தோன்றுகின்றது.

பாரதிதாசன் சொல்லவில்லை

தமிழில் எழுதப்பட்ட பதிவுகளுள் பாரதி உயர்ந்த கவி எனத் தெரிவிக்கும் பகுதி பாரதிதாசன் கட்டுரையில்தான் முதன்முதலில் இடம்பெற்றுள்ளது எனினும், அக்கருத்து பாரதிதாசனின் சொந்தக் கருத்தாக இடம்பெறவில்லை. அவரே நான் ‘எடுத்துக்காட்டினேன்’ என்று சொல்வதற்கேற்ப அயர்லாந்தின் சிறந்த கவிஞராகவும் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரத்தில் உள்ள இம்பீரியல் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியராக விளங்கியவருமாகிய ஜேம்ஸ் எச்.கஸின்ஸ் கூற்றே பாரதிதாசனின் கட்டுரையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. கஸின்ஸ், பாரதியின் கவிதையை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவருமாவார்.

அன்னிபெசண்ட் நடத்திய ‘காமன்வீல்’ இதழில் 1916 டிசம்பர் 8 அன்று வெர்ஹேரன் குறித்து அவர் மறைவையொட்டி கஸின்ஸ் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையின் பல செய்திகள் பாரதிதாசனால் தமிழில் ‘வெர்ஹேரன் என்ற பெல்ஜியக் கவிராயர்’ என்னும் தலைப்பிலான கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்றன. ‘சுதேசமித்திரன்’ இதழில் கட்டுரையாளர் பெயர், பாரதிதாசனின் இயற்பெயர் அடிப்படையில் அக்காலத்தில் அவர் பயன்படுத்திய வடிவமாகிய ‘கனகசுப்பரத்தினம்’என இடம்பெற்றிருந்தது. ஆங்கிலப் புலமை அதிகமற்ற பாரதிதாசன், ஆங்கிலம் அறிந்த பாரதியின் நண்பர்களால் கஸின்ஸ் கட்டுரையைப் பயின்று தமிழில் எழுதியிருக்க வேண்டும்.

வெர்ஹேரன் மறைவையொட்டி எழுதிய கட்டுரையில், அவருடைய சிறப்பைச் சொல்ல வருகையில் இந்தியாவின் சிறந்த கவிஞர்களாக நால்வரையும் அவர்தம் கவிதைப் போக்கையும் கஸின்ஸ் குறிப்பிடுகின்றார். தாகூர், அரவிந்தர், சரோஜினி நாயுடு, பாரதி ஆகிய நால்வரே அவர் சுட்டும் கவிஞர்களாவர். இதில் இடம்பெறும் தமிழ்க் கவிஞர் பாரதி மட்டுமே. பாரதியைப் போற்றி அமைந்துள்ள இந்தப் பகுதியைத் தமிழுலகம் நன்கறிந்த ‘சுதேசமித்திரன்’ இதழின் வாயிலாகத் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே பாரதிதாசன் கஸின்ஸ் எழுதிய கட்டுரையைப் பெரிதும் தழுவித் தமது கட்டுரையைப் படைத்திருக்கின்றார்.

பாரதிதாசன் கட்டுரை வெளிவந்த சில ஆண்டுகள் கழித்து, ஜேம்ஸ் எச்.கஸின்ஸ் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் இந்தப் பகுதியைப் பாரதியின் துணையோடு பாரதியின் தொடர்புடையோர் தாம் வெளியிட்ட பாரதி நூல்களின் பிரசுரம் பற்றிய ‘தமிழ் வளர்ப்புப் பண்ணை’ அறிக்கையில் (1920) ஆங்கிலத்திலும் தமிழ் மொழிபெயர்ப்பிலுமாக அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியின் மொழிபெயர்ப்பை பாரதியே செய்திருக்கலாம்.

தலைசிறந்தவர்களில் ஒருவர்

இந்தியாவின் சிறந்த கவிஞர் நால்வருள் ஒருவராக, தாகூர், அரவிந்தர், சரோஜினி நாயுடு ஆகியோரோடு இணைத்து எண்ணத்தக்க ஒருவராக பாரதி விளங்குவதை முதலில் ஆங்கிலத்தில் எழுதி விளக்கியவராக ஜேம்ஸ் எச்.கஸின்ஸ் திகழ்கின்றார். அதனைத் தம் தமிழ்க் கட்டுரையின் வாயிலாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டிய முதலாமவராக பாரதிதாசன் விளங்குகின்றார். பாரதியார் மீது 1917-லேயே பாரதிதாசன் கொண்ட ஈடுபாட்டையும், ‘சுதேசமித்திர’னுக்குக் கட்டுரைகள் எழுதும் திறத்தையும், உலகக் கவிஞர்களுள் ஒருவராகிய வெர்ஹேரன் பற்றி அறிந்துகொண்ட நிலையையும் உணர்த்துவதாக பாரதிதாசனின் கட்டுரை அமைகின்றது!

கட்டுரையாளர் பேராசிரியர் - தலைவர் (பொ.),
தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகைத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
தொடர்புக்கு: v.y.manikandan@gmail.com

இன்று பாரதிதாசனின் 126 - வது பிறந்த நாள்

மோடார் வண்டியிலும் கவிதையுண்டு

பாரதியியலிலும் பாரதிதாசனியலிலும் முக்கியமான படைப்பாக, ஆவணப் பதிவாகத் திகழும் இதனை, முதன்முறையாக இன்றைய தமிழுலகம் பாரதிதாசனின் 126-ம் பிறந்த நாளான இன்று கண்டு மகிழும் வண்ணம் இங்கே வெளியிடப்பெறுகிறது.

வெர்ஹேரன் என்ற பெல்ஜியக் கவிராயர்

கனகசுப்பரத்தனம்

சில வாரங்களின் முன்பு பிரான்ஸு தேசத்திலுள்ள ‘ரூவன்’பட்டணத்தில், ரயில் வண்டி அதிவேகமாக ஓடும்போது அதில் ஏறப் போய்த் தவறி விழுந்து, ‘வெர்ஹேரன்’ என்ற கவிராயர் இறந்துவிட்டார் என்று தந்தி வந்தது.

இப்புலவரின் தெளிவை வியந்து சென்னை ‘காமன்வீல்’ பத்திரிகையில் ‘ஜேம்ஸ் கஸின்ஸ்’ என்ற ஐர்லாந்து தேசத்துப் புலவர் நல்லதொரு லிகித மெழுதியிருக்கிறார்.

பெல்ஜியம் தேசத்தில் ஆன்ட் வெர்ப் நகரத்தருகேயுள்ளதொரு சிறிய கிராமத்தில் அறுபத்தொரு வருஷங்களுக்கு முன்னே, (1855) வெர்ஹேரன் பிறந்தார். அதே ஜில்லாவிலேதான் மகா கீர்த்திமானாகிய மாரிஸ் மெடர்லிங்க் என்ற வித்வானும் பிறந்தார்.

வெர்ஹேரன் இலக்கியத் தொழிலிலே தலையிட்ட காலம் தாமே கீர்த்திகொண்டு தனிச்சுடராக நிற்பதற்குத் தகுந்த காலமில்லை. ஏற்கெனவே, ரோஸெத்தி, ரஸ்கின் என்ற ஆங்கிலேய வித்வான்களின் நெறியை அனுஸரித்து பெல்ஜியம் தேசத்தில் புதிய இலக்கிய முறை தோன்றி நடைபெற்றது. இம்முறை அவ்விடத்தாரால் ‘ரியலிஸம்’அதாவது ‘ப்ரத்யக்ஷ நெறி’ என்று சொல்லப்படுவது. அதென்ன முறை என்றால், கண்டதே காக்ஷி கொண்டதே கோலம் என்று நம்பி, ஏறக்குறைய ஆத்மா இல்லையென்று பாவனை செய்வது.

இளமையில் வெர்ஹேரன் சிற்றின்பங்களில் மூழ்கினார். பிறகு, கண்ணை விழித்தார். வலிமைக் கொள்கையிலே சேர்ந்தார். ஆத்மாவை வணங்கவில்லை. சக்தியை வணங்கினார். மோடார் வண்டியிலும் கவிதை யுண்டென்று வெர்ஹேரன் சொன்னார்.

கஸின்ஸ் எழுதுகிறார் அந்த காமன்வீல் பத்திரிகையில் - பொருளின் வெளி வடிவத்திலே அழகு காண்பது காட்சியன்று. பொருளின் இயல்பிலே அழகு காண வேண்டும். எந்தப் பொருளிலும் வடிவத்துக்குள்ளே வந்து ஒன்று நிற்கிறது. வடிவத்தைக் கருதாது வஸ்துவை நேரிடப் பார்ப்பதே காட்சியாம். வெர்ஹேரன் விடுதலைக் கற்பனைக்கு மிகவும் சமீபத்திலே வந்துவிட்டான்.

ஆனால், பாரதக் கவிராயராகிய ரவீந்திரநாத் டாகுர், ஸரோஜினி நாயுடு, அரவிந்த கோஷ், சி.சுப்பிரமணிய பாரதி இந்த நால்வரும், இவர்களைப் போலே, ஏரின் (ஐர்லாந்து) தேசத்திருப்போரும், செய்திருக்கும் ‘கவிதை’சாலவும் பெரிது. ‘ஏன்?’ எனில் இவர்கள் அழகுத் தெய்வத்தை நேரே கண்டனர்! கண்டதைக் கண்டபடி பாட்டாலே சொல்லினர்! பெல்ஜியம் தேசத்தார் கொண்டாடிய ‘ப்ரத்யக்ஷ மின்றி’க் கவிதையெல்லாம், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் நூலைப் படித்துப் பாரீர்! பிறகு ஏரின் தேசத்துக் கவிராயனாகிய A E (என்ற குறிப் பெயருடையான்) பாடிய பின்வரும் செய்யுளைப் படித்துப் பாரீர்!

காதல்

காதலிப் பெண்ணே;
உள்ளத் திடையே கனவுற வேண்டும்.
காதல் முன்பு காட்சி பின்பு
நின்னிடையுள்ள பரம்பொருள் காண்பேன்
நின்னை அதன்பின் வணங்குவேன்,
நீ செயும் செய்கையிலெல்லாம்,
நினது தெய்வ - இயல் காண்பேன்.
நினதழகைக் கருதேன். ‘திருவனை’
வணங்குவேன்.

(சுதேசமித்திரன், 3 ஜனவரி 1917 ப. 6)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x