அந்தக் காலம் தேர்தல் ஞாபகங்கள்: தொகுதிப் பக்கமே வராத வேட்பாளர்

அந்தக் காலம் தேர்தல் ஞாபகங்கள்: தொகுதிப் பக்கமே வராத வேட்பாளர்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 1971-ல் இடைத் தேர்தல். மத்திய அமைச்சராக இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் சி.சுப்பிரமணியம் போட்டியிட்டார். அப்போதைய தமிழகத்தின் ஆளும்கட்சியான திமுக அவரை ஆதரித்தது.

போட்டியே இல்லாமல் ஏகமனதாக மத்திய அமைச்சரைத் தேர்ந்தெடுக்க வைக்க வேண்டும் என்று காங்கிரஸும் திமுகவும் விரும்பின. வேறு எந்தக் கட்சியும் போட்டியிடவில்லை. அந்தத் தொகுதியைச் சேர்ந்த செல்வாக்குள்ள பல சுயேச்சைகளும் போட்டியிடவில்லை. ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளர் மட்டும் சத்தம் போடாமல் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டுத் தலைமறைவாகி விட்டார். தொகுதிப் பக்கமே அவர் தலை காட்டவில்லை. அவர் பெயர் வரததேசிகன்.

வரததேசிகனைப் பார்த்துப் பேசி, அவரை வாபஸ் வாங்கச் செய்துவிடலாம் என்று காங்கிரஸாரும் திமுகவினரும் வலைவீசித் தேடினர். ஆனால், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தேர்தல் நாளும் வந்துவிட்டது. கடும் போட்டி இல்லையே, மத்திய மந்திரி எளிதில் ஜெயித்துவிடுவார் என்ற மிதப்பில் வாக்காளர்கள் அனைவரும் இருந்துவிட்டால் மொத்தம் பதிவாகிற வாக்குகளின் எண்ணிக்கையே மிகக் குறைவாகத்தான் இருக்கும் என்பதால், வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்கும்படி வற்புறுத்தினார்கள். மத்திய அமைச்சர் பெருத்த வாக்கு வித்தியாசமில்லாமல் அற்ப ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிற நிலைமை ஏற்பட்டு விடக் கூடாது என்ற கவலை அவர்களுக்கு.

கடைசி வரை தொகுதிப் பக்கமே வரததேசிகன் வரவில்லை. அப்போதைய பல தமிழ்ப் பத்திரிகைகள் அவரை ‘வராத தேசிகன்’ என்று வர்ணித்தன. இறுதியில் திட்டமிட்டபடி மத்திய அமைச்சர் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in