Published : 26 Apr 2016 09:36 am

Updated : 26 Apr 2016 09:36 am

 

Published : 26 Apr 2016 09:36 AM
Last Updated : 26 Apr 2016 09:36 AM

தேர்தல் மாநிலங்களில் ஒரு கழுகுப் பார்வை: கிராமம் கரை சேர்க்குமா மம்தாவை?

இன்று இடதுசாரிகளுடன் இணைந்து போரிடுகிறது காங்கிரஸ். பழைய வரலாற்றை இரண்டு கட்சிகளும் மறக்கத் தயாராக இருக்கின்றன. ஐந்து வருட ஆட்சியில் மம்தா சாதித்தது ஒன்றுமே இல்லை என்று பெரும்பாலான அறிவுஜீவிகள் கருதுகிறார்கள். பலர் இடதுசாரிகளிடம் திரும்பச் செல்கிறார்கள்!

கிராமம் கரை சேர்க்குமா மம்தாவை?


தமிழகத்தை அமைதிப் பூங்கா என்று அழைப்பதை நகைச்சுவையாகக் கருதுபவர்கள், சில மாதங்கள் மேற்கு வங்காளத்தில் இருந்து பார்க்க வேண்டும். அங்கும் அமைதிதான். ஆனால், எப்போது எரிமலை வெடிக்கும் என்று கூறமுடியாத நிலையின் அமைதி. பெரிய நகரங்களில் வன்முறையைக் கட்டுப்படுத்தத் தேவையான சாதனங்கள் இருக்கின்றன. கிராமங்களில் அவை அநேகமாகக் கொஞ்சம்கூட இல்லை எனலாம். எனவே, எப்போதும் மறைவில் தயாராக வன்முறை காத்துக்கொண்டிருக்கிறது என்று நண்பர்கள் சொல்கிறார்கள்.

மாநிலத்தில் 80% கிராமப்புறம் என்பதால், சிறிய சண்டைகள்கூடப் பெரிய கலவரங்களாக உருவெடுக்கும் அபாயம் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. இதனால்தான் அங்கு ஆறு கட்டங்களில் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம். நம்முடைய அமைதிப் பூங்காவில் ஒரே நாளில் நடத்த முடிகிறது.

ரத்தத்தில் எழுதப்பட்ட வரலாறு

இந்த நிலைமைக்குப் பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமானது வரலாற்றுக் காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். வங்காளத்தின் சமீபத்திய வரலாறே ரத்தத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. சென்ற நூற்றாண்டில் மட்டும் அது மூன்று முறை பிரிக்கப்பட்டிருக்கிறது. 1905-ம் ஆண்டு வங்காளப் பிரிவினை இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு உலை வைத்தது. 1911-ல் மீண்டும் ஒன்று சேர்ந்த வங்கம் 1947-ம் ஆண்டில் துண்டாடப்பட்டது. கிழக்கு வங்காளம் பிரிந்து பாகிஸ்தானோடு சேர்ந்தது. 1971-ம் ஆண்டு கிழக்கு வங்காளம் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து பங்களாதேஷாக உருவெடுத்தது. ஒவ்வொரு பிரிவினையின் அதிர்வுகளையும் மேற்கு வங்காளம் உணர்ந்தது. இவற்றைத் தவிர, 1943-ல் பிரித்தானிய அரசின் மெத்தனத்தால் ஏற்பட்ட கொடிய பஞ்சம், ஜின்னா தயவால் விளைந்த 1946 மதக் கலவரம்,1947-ல் ஏற்பட்ட பிரிவினைக் கலவரம். 1960-70களில் நடந்த நக்சல்பாரி இயக்கம் 1970-களில் நேர்ந்த கிழக்கு வங்க அகதிகளின் வருகை போன்றவை மக்களை அமைதியாக வாழவிடாமல் செய்தன.

நன்றி சொல்வோம்

ஒரு சிறிய உதாரணம்.. தமிழகத்தில் இலங்கையிலிருந்து வந்த அகதிகள் இன்று இரண்டு லட்சம் பேர் இருக்கலாம். மேற்கு வங்காளத்தில் 1950-ல் பரிசால் நகரத்தில் நடந்த கலவரம் தொடர்பான அகதிகள் மட்டும் 20 லட்சத்துக்கும் மேல் இருப்பார்கள். இதுவரையான அகதிகள் இரண்டு கோடிக்கும் மேல். 1947-ல் 28% இந்துக்கள் பங்களாதேஷில் இருந்தார்கள். இன்று 9%துக்கும் குறைவு. எனவே, இத்தனை நெருக்கடிகளுக்கும் இடையே மேற்கு வங்காளத்தில் பெரிய மதக் கலவரங்கள் அதிகம் நிகழ்வதில்லை என்றால், அதற்குக் காரணம் அங்கிருக்கும் மக்களும் அரசும்தான். இந்தியா முழுவதும் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால், சமன்பாடற்ற வாழ்க்கைக்கும் அமைதிக்கும் இடையே இருக்கும் தொலைவு அதிகம். இந்தப் பின்புலத்தில்தான் நாம் மேற்கு வங்க அரசியலைப் பார்க்க வேண்டும்.

அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளின் முதல் ஆண்டுகளிலும் இடதுசாரி இயக்கங்களை ஒடுக்க அப்போது மத்தியில் ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் அரசு கண்மூடித்தனமான வன்முறையைக் கையாண்டது. இருப்பினும், மக்களின் ஆதரவுடன் 1977-ம் ஆண்டு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் தலைமையில் ஆட்சியமைத்த இடதுசாரிக் கூட்டணி 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் ஆட்சி புரிந்தது. மக்கள் அவர்களுக்குத் தொடர்ந்து ஓட்டுப் போட்டதற்கு வலுவான காரணங்கள் இருந்தன. முக்கியமாக நிலச் சீர்திருத்தம். இன்று 84% நிலங்கள் 2.5 ஏக்கருக்கும் குறைவாக வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்குச் சொந்தமாக இருக்கின்றன. இதனால் பயன் அடைந்தவர்களில் 50% மேல் தலித்துகளும் ஆதிவாசிகளும். 1977-ல் அரிசி இறக்குமதி செய்துகொண்டிருந்த மேற்கு வங்கம் இன்று அரிசி விளைச்சலில் முதன்மை வகிக்கிறது. 2005 -2011 ஆண்டுகளில் நாட்டில் உற்பத்தித் தொழில்களில் உருவாக்கப்பட்ட வேலைகளில் 40% மேற்குவங்கத்தில் உருவாக்கப்பட்டது. சிங்குர், நந்திகிராம் போராட்டங்கள் மும்முரத்தில் இருந்த 2007-8-ம் ஆண்டுகளில்கூட மாநிலத்தில் தொழில் வளர்ச்சி இந்தியாவிலேயே முதலாவதாக 12% இருந்தது.

விலகுகின்றதா நகரம்?

எனினும், மக்கள் மாற்றம் வேண்டும் என்று விரும்பினார்கள். அறிவுஜீவிகளும், நக்சல் இயக்கத்தினரும்கூட மம்தாவுக்கு ஆதரவு அளித்தனர். காங்கிரஸும் திரிணமூலும் இணைந்து போட்டியிட்டன. மம்தா 184 தொகுதிகளில் வெற்றி பெற்றுப் பதவி ஏற்றார். ஆனாலும் இடதுசாரிக் கூட்டணி 41% ஓட்டுகள் வாங்கியது.

இன்று இடதுசாரிகளுடன் இணைந்து போரிடுகிறது காங்கிரஸ். பழைய வரலாற்றை இரண்டு கட்சிகளும் மறக்கத் தயாராக இருக்கின்றன. ஐந்து வருட ஆட்சியில் மம்தா சாதித் தது ஒன்றுமே இல்லை என்று பெரும்பாலான அறிவுஜீவிகள் கருதுகிறார்கள். பலர் இடதுசாரிகளிடம் திரும்பச் செல்கிறார் கள். ஆனால், திரிணமூல் கட்சியினர் இவர்களது ஆதரவை இழந்ததைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரெக் ஒப்ரியன், ‘யார் இவர்கள்? என்றைக்காவது ஓட்டுப் போட்டிருக்கி றார்களா?’ என்று எள்ளலுடன் கேட்கிறார். முன்பு கூறியதுபோல 80% ஓட்டுகள் கிராமப்புறத்தில் இருக்கின்றன. கிராமப்புற மக்கள் போடும் ஓட்டு மம்தாவைக் கரைசேர்த்துவிடுமா? நகரங்கள் மம்தாவை விட்டு விலகிவிட்டனவா?

- தொடரும்

- பி. ஏ. கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்,

தொடர்புக்கு: tigerclaw@gmail.com


தேர்தல் மாநிலங்கள்கழுகுப் பார்வைகிராமம் கரை சேர்க்குமா மம்தாவை?

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x