இலங்கையிலிருந்து தப்பிச்செல்லும் ராஜபக்சவின் உறவுகள்

இலங்கையிலிருந்து தப்பிச்செல்லும் ராஜபக்சவின் உறவுகள்
Updated on
3 min read

இலங்கையில் ராஜபக்ச குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றும்போதெல்லாம், அவரது குடும்ப உறுப்பினர்களுக்குப் பிரதான பதவிகளை வழங்கிவந்ததுதான் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. தற்போதைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச, கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டு வரை இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தார். கடந்த வாரம் கலைக்கப்பட்ட அமைச்சரவையில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பசில், சமல், நாமல் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தார்கள். தற்போதைய பொருளாதார நெருக்கடியானது, ராஜபக்ச குடும்பம் அதிகாரத்தில் இருந்த காலப்பகுதி முழுவதும் அவர்கள் செய்ததாகக் கருதப்படும் ஊழல்களினதும் முறைகேடுகளினதும் விளைவாகும் என்பது மக்களின் ஏகோபித்த கருத்து.

ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு மக்களிடையே சரிவது இது முதல் தடவையல்ல. 2015-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர் தோல்வியுறுவதற்கு, அவரது காலத்தில் நடைபெற்ற ஊழல்களும் காரணமாக இருந்தன. அந்தக் குடும்பத்தின் ஆட்சியின்போது நடைபெற்ற ஊழல்களையும், பண மோசடிகளையும் நம்பும் விதத்தில் அந்தக் குடும்பத்தின் சொத்துக்கள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மிதமிஞ்சியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நாமல் ராஜபக்ச கத்தார் தேசத்திலுள்ள ALBG எனும் நிறுவனத்தின் நிதி இயக்குநராகப் பதவி வகிக்கிறார். டாலர்கள் இல்லாமல் திவாலாகியுள்ள நிலையில், இலங்கையில் இருந்த டாலர்கள் எங்கே போயிருக்கும் என்பதற்கு இது ஒரு சாட்சியாகும்.

2015-ல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்த சீர்திருத்தங்களை நிறைவேற்றத் தவறியதும், 2019-ம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களும் ராஜபக்ச குடும்பத்தின் மீள்வருகைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தன. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் ராஜபக்ச குடும்பம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதைப் பற்றி விரிவாக விசாரிக்க அரசாங்கம் தயங்கிவருகிறது.

2019-ல் கடுமையான சிங்கள தேசியவாதப் பாதையில் பயணித்த கோத்தபய ராஜபக்ச, பேரினவாதத்தைத் தூண்டும் விதத்தில் நடந்துகொண்டு, நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு வழிவகுத்தார். அந்தப் பேரினவாதச் செயல்பாடு பலனளித்ததால், தேர்தலில் வென்று ஜனாதிபதி ஆனதுமே இலங்கை அரசியலமைப்பின் 19-வது திருத்தச் சட்டத்திலுள்ள முக்கிய விடயங்களை நீக்கி, ஜனாதிபதிக்கு மேலதிக நிறைவேற்று அதிகாரங்களை வழங்கும் வகையில், 20-வது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து, அனைத்து அதிகாரங்களையும் தன்வசமாக்கியுள்ளார்.

இவ்வாறாக, ஜனாதிபதி தனது அதிகாரங்களைப் பலப்படுத்தி நாடாளுமன்றத்தைப் பலவீனப்படுத்தி யுள்ளதோடு, சர்வ அதிகாரங்களோடும் நாட்டைத் தன்னிச்சையான திசையில் இப்போது வரை வழிநடத்திவருகிறார். இவை அனைத்தும் மக்களுக்குத் தெரியவந்துள்ள நிலையில், அந்தக் குடும்பத்தின்மீது மக்கள் கடும் வெறுப்பைக் காட்டிக்கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பிரதமரும் ஜனாதிபதியும் தவிர்த்த ஏனைய ராஜபக்ச குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் ரகசியமாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

உலகத் தலைவர்களின் ரகசிய சொத்து விவரங்களை அம்பலப்படுத்தும் புலனாய்வான பண்டோரா பேப்பர்ஸ் எனும் ஆவணத்தில் குற்றவாளியாக இடம்பெற்றுள்ளவரும், இலங்கைப் பிரதமர், ஜனாதிபதி ஆகியோரின் உறவினருமான நிருபமா ராஜபக்ச கடந்த வாரம் இலங்கையிலிருந்து ரகசியமாக வெளியேறியுள்ளார். மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப் பகுதியில், நீர்வழங்கல் பிரதியமைச்சராகக் கடமையாற்றிய நிருபமா ராஜபக்சவும் அவரது கணவர் திருக்குமார் நடேசனும் அமெரிக்கா, நியூஸிலாந்து, பிரித்தானியா போன்ற நாடுகளில் 8 நிறுவனங்களை ஆரம்பித்துள்ளது குறித்தும், அவர்களது வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் வைப்பில் இடப்பட்டுள்ள 160 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறித்தும் பண்டோரா பேப்பர்ஸ் கடந்த 2021, அக்டோபர் மாதம் அம்பலப்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து, இலங்கையில் கண்துடைப்பான விசாரணை நடத்தப்பட்டபோதிலும், அரசியல் தலையீடுகளின் காரணமாக இதுவரை எந்தத் தீர்ப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையிலேயே அவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

அவரைப் போலவே ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரும், அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவருமான நிஸ்ஸங்க சேனாதிபதியும் இலங்கையை விட்டு இரவோடு இரவாகத் தப்பிச் சென்றிருக்கிறார். மிதக்கும் ஆயுதக் களஞ்சிய சாலைக்கு அனுமதி வழங்கியமை மற்றும் 355 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றமை போன்ற வழக்குகளில் சிக்கியிருந்த நிஸ்ஸங்கவை, கோத்தபய ராஜபக்ச ஜனாதிபதியானதும் வழக்குகளிலிருந்து விடுவித்தார். தொடர்ந்து அவர் ஜனாதிபதியோடு நெருங்கிய தொடர்பைப் பேணிவந்ததோடு, தற்போது ஜனாதிபதிக்கு எதிரான கோஷங்கள் வலுக்கத் தொடங்கியுள்ள நிலையில், தனது குடும்பத்தோடு நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இவர்கள் விமான நிலையத்தினூடாகச் செல்லும்போது, மேலிட உத்தரவின் கீழ் விமான நிலையத்திலுள்ள தானியங்கி கேமராக்கள் எதுவும் செயல்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பால், மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிர்வரும் 18-ம் திகதி வரை வெளிநாடு செல்லத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறே தற்போது நாட்டை விட்டுச் செல்ல முடியாத நிலையிலுள்ள அமைச்சர்கள் பலரும் தமது குடும்பத்தினரோடு நாட்டிலுள்ள முன்னணி ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கியிருக்கிறார்கள். என்றாலும், இலங்கையில் தற்போது நிதியமைச்சரோ, மத்திய வங்கி ஆளுநரோ, செயலாளரோ இல்லாத நிலையிலும் கடந்த வாரமும் 11,900 கோடி ரூபாய் அச்சிடப்பட்டிருக்கிறது.

இவ்வாறான செயல்பாடுகள் மக்களை மேலும் கொந்தளிக்கச் செய்துள்ளன. எனவே, மக்கள் எழுச்சிப் போராட்டத்துக்குத் தினந்தோறும் அதிக அளவான பொதுமக்கள் சேர்ந்துகொண்டேயிருக்கிறார்கள். அந்தப் போராட்ட வளையங்களுக்குள் இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்த இனந்தெரியாத நபர்கள், ஆயுதங்களை ஏந்தியவாறு வலம்வந்து பொதுமக்களை அச்சுறுத்திக்கொண்டிருப்பதும் நடந்துவருகிறது. அவ்வாறான ஆயுததாரிகளைத் தடுத்து நிறுத்தி, பொதுமக்களுக்கு ஆபத்து நேராதவாறு பாதுகாத்த போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் ஒன்றாகக் குரலெழுப்பியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் கண்டு, பொதுமக்களின் இந்தப் போராட்டத்தில் வன்முறைகளைப் பிரயோகிக்காதிருக்குமாறு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் மக்களை ஒடுக்க அரசாங்கம் வன்முறையைப் பிரயோகிக்கிறதா என்பதைத் தாம் உன்னிப்பாகக் கவனித்துவருவதாகவும் அந்த அலுவலகம் எச்சரித்திருக்கிறது.

கடந்த மாதம் வரைக்கும், ராஜபக்ச குடும்பமானது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தாம் வாழ்ந்துவரும் சுகபோக வாழ்க்கையைப் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுக்கொண்டேயிருந்தார்கள். நாடு முழுவதும் பஞ்சமும் நெருக்கடியும் பட்டினியும் மேலோங்கியிருக்கும் நிலையில், அந்தக் குடும்பத்தின் இவ்வாறான செயல்பாடுகள் பொதுமக்களை மேலும் அவர்களை வெறுக்கச் செய்ததோடு, போராட்டங்களை மேற்கொள்ளவும் தூண்டியிருக்கின்றன. அவர்களுக்கு மத்தியில் ஆயுததாரிகளை அனுப்பிவிட்டு ஜனாதிபதி தைரியமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று குற்றம்சாட்டப்படுகிறது. காரணம், அவர் ஆட்சிக்கு வந்தவுடனே அவருக்கு சார்பாகத் திருத்தியமைத்துக்கொண்ட சட்டத்தின் பிரகாரம் சர்வ அதிகாரங்களும் இப்போதும் அவர் வசம் மாத்திரமே இருக்கின்றன.

- எம்.ரிஷான் ஷெரீப், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலர், இலங்கை. தொடர்புக்கு: mrishansh@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in