அப்பா ஆவதில் ஆண்களுக்கு என்ன பிரச்சினை?

அப்பா ஆவதில் ஆண்களுக்கு என்ன பிரச்சினை?
Updated on
3 min read

உலகில் சுமார் 8 கோடித் தம்பதிகளுக்குக் குழந்தைப்பேறு இல்லை. இந்தியாவில் 15% இளம் தம்பதிகளுக்கு இதே நிலைதான். ‘குழந்தை இல்லை’ எனும் குறைக்கு கணவன், மனைவி இருவரும் காரணம் ஆகின்றனர். ஆனால், நடைமுறையில் ‘விதை பழுதில்லை; நிலம்தான் பாழ்’ எனத் தவறாக முடிவெடுத்து, மனைவிக்குத்தான் ஏராளமான பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். செயற்கைக் கருத்தரிப்பு மையங்களில் உள்ளம் உடைந்து காத்திருக்கும் பெண்களே இதற்குச் சாட்சி.

தன்னிடம் குறையில்லை எனத் தெரிந்துகொண்ட ஒரு பெண், தன் கணவரை மருத்துவரிடம் பரிசோதிக்க அழைத்தபோது, “பையனிடம் ஒரு குறையுமில்லை. எங்கள் பரம்பரையில் இந்தக் கோளாறு யாருக்கும் இல்லை. உன்னிடம்தான் குறை” என்று வீடு மொத்தமும் அந்தப் பெண்ணை உலுக்கி எடுத்ததால், இப்போது அந்தக் குடும்பங்கள் இரண்டுபட்டுக் கிடப்பதை நான் அறிவேன்.

குழந்தை இல்லாத விஷயத்தில், ஆணுக்குக் குறை இருந்தால், ‘இந்தச் சமுதாயம் தன்னைப் பார்த்துக் கேலிசெய்யுமோ’ எனப் பயந்து, ஆண்கள் தங்கள் குறையை ஒப்புக்கொள்ளத் தயங்குகின்றனர். அடுத்து, ஆண்மைக் குறைவையும் மலட்டுத்தன்மையையும் குழப்பிக்கொள்கின்றனர். ஆண்மைக் குறைவு என்பது, இல்லறத்தில் முழுவதுமாக ஈடுபட முடியாமல் போகும் நிலை. மலட்டுத்தன்மை (Infertility) என்பது விந்தணு தொடர்பில் உண்டாகும் பிரச்சினை.

மலட்டுத்தன்மை உள்ள ஆண்களால் இல்லறத்தில் முழுவதுமாக ஈடுபட முடியும். ஆனால், அவர்களால் குழந்தைப்பேற்றைக் கொடுக்க முடியாது. இந்த வேறுபாடு தெரியாமல், “எனக்குக் குறையில்லை; உன்னை முதலில் பரிசோதித்துக்கொள்” என்று மனைவி மீது பழி சுமத்துகின்றனர். பலருக்கும் ‘ஆண் ஆளுமை’ ஆட்டுவிப்பதால், மருத்துவப் பரிசோதனைகளுக்கு மனைவியுடன் சேர்ந்து செல்லவும் மறுக்கின்றனர். இது பெண்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அநீதி என்பதை எப்போது இவர்கள் புரிந்துகொள்ளப்போகின்றனர்?

நவீன வாழ்க்கையின் விளைவு: உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், இதயநோய், நீரிழிவு, புற்றுநோய் வரிசையில் நவீன வாழ்க்கை கொடுத்திருக்கும் அடுத்த ‘கொடை’ மலட்டுத் தன்மை. காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால் 90% இதைக் குணப்படுத்த முடியும். ஆனால், வெளியில் சொல்ல வெட்கம் தடுப்பதால், அநேகரும் போலி மருத்துவர்களை நாடிப் பிரச்சினையைப் பெரிதாக்கிக்கொள்கின்றனர்.

‘ஆண்களுக்கான விந்தணுக்கள் அதிர்ச்சி தரும் அளவில் குறைந்துவருகின்றன’ என்று 20 வருடங்களுக்கு முன்பே உலக ஆராய்ச்சிகள் எச்சரித்தன. அப்போது குழந்தையின்மைப் பிரச்சினைக்கு ஆண்களின் மலட்டுத்தன்மை 20% காரணம் என்றனர். இப்போது 50 சதவீதமாக அது உயர்ந்துவிட்டது என்கின்றனர். என்ன காரணம்?

எதிரியாகும் துரித உணவுகள்: இன்றைய இளைய தலைமுறையினர் விரும்பி உண்ணும் துரித உணவுகளின் நிறம், மணம், சுவை எல்லாமே ரசாயனம் கக்கிய விஷங்கள். பருகும் பால்கூட ஹார்மோன் ஊசி போட்டுக் கறந்த பாலாகத்தான் இருக்கிறது. இப்படி, ரசாயனம் ஊட்டி வளர்த்த உணவுகள் அனைத்தும் விந்தணுக்களை அழிக்கிற அசுரர்கள். ஆனால், அதைப் புரிந்துகொள்ளும் பக்குவமே இல்லாமல் இருக்கின்றனர். மேலும், விந்தணுக்களின் வளர்ச்சிக்குத் துத்தநாகம், தாமிரம், செலினியம், ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகளும் தேவை. துரித உணவுகளில் இவை குறைவாகவே இருக்கும்; கொழுப்பும் எண்ணெயும்தான் மிதக்கும். இவை உடலைத்தான் பெருக்கும்; பருத்த உடலானது பாலியல் ஹார்மோன்களைச் சிதைக்கும்; விந்தணுக்களைப் புதைக்கும்.

ஆபத்தாகும் அலுவல் அழுத்தம்: நாட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் படையெடுத்த பிறகு, இளையோருக்கு ஓய்வில்லாத உழைப்பு தேவைப்படுகிறது. அலுவல் அழுத்தம் கவலையளிக்கிறது. இந்த அழுத்தங்களால் உடலில் ரத்த அழுத்தம் உயர்வதிலிருந்து இல்லற உறவுகளில் சிக்கல் ஏற்படுவது வரை பல்வேறு பிரச்சினைகள் முளைவிடுவது அநேகருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், அதே அழுத்தங்கள் ஆண்களுக்கு விந்தணுக்களையும் அழிக்கும் என்பதைப் பலரும் அறிந்திருக்கவில்லை. விந்தணுக்களின் உற்பத்திக் கூடங்கள் விரைகள் (Testes) என்றால், அவற்றின் மூலப்பொருட்கள் செம்மையாகச் செயல்படும் ஹார்மோன்கள். ஆணிவேரில் அமிலத்தைக் கொட்டினால் என்ன ஆகுமோ அதுபோலத்தான் மன அழுத்தமானது ஹார்மோன் செயல்பாட்டைத் தடுக்கிறது. அதுதான் அவர்களை ‘அப்பா’ ஆக விடாமலும் தடுக்கிறது.

மடிக்கு வேண்டாம் மடிக்கணினி : ஆண்களின் விதைப்பை குளிர்ச்சியை விரும்பும் உறுப்பு. இதை உஷ்ணத்தால் உசுப்பக் கூடாது. உதாரணமாக, இறுக்கமான உள்ளாடை/ஜீன்ஸ் ஆடை அணிந்தால், விதைப்பையில் உஷ்ணம் அதிகரித்து, விந்தணுக்களை அழித்துவிடும். அதனால்தான், தளர்வான உள்ளாடைகளை அணிய வேண்டும் என்கிறோம். இப்போதைய வாழ்க்கை முறையில் இளையோர் அநேகரும் நள்ளிரவு தாண்டியும் மடிக்கணினியை மடியில் கட்டிக்கொள்வது வழக்கமாகிவிட்டது. அதிலும், கரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலைசெய்வது அதிகரித்துவிட்டதால், மடியில் மடிக்கணினி அமரும் நேரமும் அதிகரித்துவிட்டது. இதனால், அநேக இளையோருக்கு உஷ்ணம் கூடிவிட்டது; விந்தணு விளைச்சல் குறைந்துவிட்டது. விளைவாக, ‘மடிக்கணினியை மடியில் கட்டாதீர்கள்!’ எனும் புதிய கோஷம் பிறந்திருக்கிறது.

இப்போதெல்லாம் பகலில்தான் என்றில்லை, இரவுப் படுக்கையிலும் கைபேசித் திரை ஒளிர்கிறது. அந்தக் கதிர்வீச்சு விந்தணுக்களுக்கு எதிரி ஆகிறது. மேலும், வாகனப் புகை, ஞெகிழியை எரிக்கும்போது பிறக்கும் டயாக்ஸின், காற்றில் கலக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவை நம் சுவாசத்தில் கலந்து, உடலுக்குள் புகுந்து, ‘செர்ட்டோலி’ செல்களைச் சிதைத்து, விந்தணு உற்பத்திக்குத் தடைபோடும். சிறுவயதில் ஏற்பட்ட அம்மைநோய், இளைமைக்கால நீரிழிவு, விரைகள் விதைப்பைக்கு இறங்காமல் இருப்பது, விதைப்பையில் சிரைக்குழாய்கள் சுருண்டுகொள்வது (Varicocele), விந்துநாளங்கள் அடைத்துக்கொள்வது, புராஸ்டேட் பிரச்சினை, புகை, மது, போதைமருந்துப் பழக்கம், வெப்பமான சூழலில் வேலை பார்ப்பது, மரபணுப் பிரச்சினை, கதிர்வீச்சுச் சிகிச்சை என விந்தணுக்களுக்கு எதிரிகள் ஏராளம்.

இத்தனை எதிரிகள் அணிதிரண்டாலும், நவீன மருத்துவத்தில் விந்தணு நாளத்தையும், விதைப்பைச் சிரைக்குழாய்களையும் சீர்படுத்துவதில் தொடங்கி, விந்தணு தானம் பெறுவது, செயற்கைக் கருத்தரிப்பு எனப் பலதரப்பட்ட சிகிச்சைகள் கைகொடுப்பது ஆறுதல். முக்கியமாக, சிறுதானிய உணவுகளையும் புரத உணவுகளையும் அதிகப்படுத்துவது, உடற்பயிற்சி செய்வது, உயரத்துக்கேற்ப உடல் எடையைப் பராமரிப்பது, மன அழுத்தம் தவிர்ப்பது, போதிய ஓய்வு, நல்ல உறக்கம் ஆகிய வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்தி, புகை, மது, போதைமருந்து எனும் முப்படைத் தாக்குதல்களைத் தவிர்ப்பதே, தரமான விந்தணு விளைச்சலுக்குச் சரியான அணுகுமுறை. மருத்துவம் தேவைப்படும் ஆண்கள், ஊடகங்களில் போதிக்கும் போலி மருத்துவர்களிடம் ஏமாந்துபோகாமல், அறமும் அனுபவமும் மிகுந்த மருத்துவர்களை அணுகினால், மலட்டுத்தன்மை மறைந்து மழலைச் செல்வத்தைத் தோளில் சுமக்க முடியும்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com'

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in