

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் ஃபேஸ்புக்குக்கு நான் வந்த புதிதில் திரைப்படம், இசை (ராஜா x ரஹ்மான்), உணவு வகைகள் என்பன உள்ளிட்டவற்றைப் பற்றிய கருத்துகளையே பெருமளவில் அதில் பார்க்க முடிந்தது. புதிய நண்பர்கள், ஏற்கெனவே தெரிந்தவர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என்று சேர்ந்திருந்த நட்பு வட்டத்தில் பல கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. 2009 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் சூழல் மாறியது. பலர் தேர்தல் அரசியலில் தங்கள் நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தார்கள். அதற்கு முன்னர் அரசியல் தலைவர்கள், சமூக நிகழ்வுகள் தொடர்பான விவாதங்கள் நடைபெறுவதுண்டு. ஆனால், அது பெரிய அளவில் தீவிரமடையாது. தேர்தல் என்று வந்தவுடன் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, இடதுசாரிக் கட்சிகள் என்று தங்கள் அபிமானத்துக்குரிய கட்சிகள் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துகளையும், தங்களுக்கு உவப்பில்லாத கட்சிகள், தலைவர்கள் தொடர்பான கடும் விமர்சனங்களையும் நண்பர்கள் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியிருந்தனர். இயைந்த கருத்து கொண்டவர்கள் அணியாகச் சேர்ந்துகொள்ளவும் தொடங்கியிருந்தனர்.
அந்தத் தேர்தலின்போது, திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிரான மனநிலை உருவாகியிருந்ததைச் சமூக வலைதளங்கள் மூலம் உணர முடிந்தது. 2009-ல் இலங்கை உள்நாட்டுப் போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டது தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியிருந்தது. 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக வெளியான செய்திகளும் விவாதங்களில் பிரதான இடம்பிடித்தன. அது தொடர்பாகப் பல பதிவுகளை ஃபேஸ்புக்கில் காண முடிந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணிக்கே சாதகமாக இருந்தன. அந்தத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 262 இடங்களில் வென்றது. அக்கூட்டணியில் இருந்த திமுக 18 இடங்களில் வெற்றிபெற்றது.
பெரும் தாக்கம்
ஆனால், 2011-ல் நிலைமை மாறியது. சட்டமன்றத் தேர்தலில் 11 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள். இளை ஞர்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சமூக வலை தளங்களில் இயங்கிக்கொண்டிருந்தவர்கள். தேர்தலையொட்டி சமூக ஊடகங்களில், குறிப்பாக ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ளப்பட்ட பதிவுகளில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிரான மனநிலையும், அதிமுகவுக்கு ஆதரவான மனநிலையும் தென்பட்டதை ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. அத்தேர்தலில் திமுக தோல்வியடைந்தது.
2014 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி பெற்ற வெற்றியில் சமூக ஊடகங்களுக்கும் பங்கு இருந்தது என்று சொல்லலாம். தேர்தலுக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே 2ஜி ஊழல், நிலக்கரி பேர ஊழல், மன்மோகன் சிங் அரசின் செயல்பாடுகள் தொடர்பாகவும் எதிர்மறையான கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. பாகிஸ்தான், சீனா ஆகிய அண்டை நாடுகளின் ஊடுருவல்கள், தாக்குதல்களும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டன. சமூக ஊடகங்கள் மட்டுமல்லாமல், செய்தி இணையதளங்களில் இடப்படும் பின்னூட்டங்களிலும் இந்த மனநிலையைப் பார்க்க முடிந்தது. அத்தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றது. சமூக ஊடகங்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட தலைவர் என்ற பெயரும் மோடிக்குக் கிடைத்தது. சமூக ஊடகங்களில் மோடிக்கு ஆதரவான எண்ணற்ற கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டதும், ட்விட்டரில் மோடி நேரடியாகப் பங்கேற்றதும் பிற அரசியல் தலைவர்களுக்கு ஊக்கமாக இருந்தது.
கருணாநிதி, ஸ்டாலின், அன்புமணி, விஜயகாந்த் என்று பல தலைவர்களுக்கு இன்றைக்கு அதிகாரபூர்வ ஃபேஸ்புக் தளங்கள் இயங்குகின்றன.
சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தின்போது தமிழக அரசின் செயல்பாடு தொடர்பாகச் சமூக ஊடகங்களில் எழுந்த விமர்சனங்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் சலனத்தை ஏற்படுத்தியது. ‘வாட்ஸ் அப்’ மூலமாக அரசின் நடவடிக்கைகள் குறித்து ஜெயலலிதா அனுப்பிய அறிக்கையும் இதை உறுதிசெய்தது. அதைத் தொடர்ந்து, சிம்புவின் ‘பீப்’ பாடல் யூடியூபில் பகிரப்பட்டதும், அது தொடர்பாக எழுந்த சர்ச்சையும் அரசின் மீதான விமர்சனத்திலிருந்து சமூக ஊடகத்தின் பார்வையைத் திசைதிருப்பியது. இப்படி, சமகாலத்தில் சமூக நிகழ்வுகளும், சமூக ஊடகமும் பரஸ்பரம் ஒன்றையொன்று பிரதிபலித்துக்கொண்டிருப்பதை உணர முடிகிறது. அதேசமயம், சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்களின் இருப்பு மட்டுமே கைகொடுக்குமா?
தொடக்கப்புள்ளி
அமெரிக்காவில் சமூக வலைதளங்களை ஒப்பிடும்போது இந்திய அரசியலில் முக்கியமான வேறுபாடு ஒன்று உண்டு. அந்நாட்டு அரசியல் தலைவர்கள் தேர்தல் பரப்புரையைக் காட்டிலும், தேர்தல் நிதியைத் திரட்டுவதற்காகவே சமூக வலைதளங்களைப் பெரிய அளவில் பயன்படுத்துகிறார்கள். இதை முதன்முறையாக வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர், ஹோவார்டு டீன். 2004 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களில் ஒருவராகப் போட்டியிட்டவர். 1991 முதல் 2003 வரை, வெர்மான்ட் மாகாண ஆளுநராகப் பதவி வகித்தவர் இவர். முதன்முதலாக இணையதளம் வழியாகத் தனக்கு ஆதரவாளர்களையும், தேர்தல் நிதியையும் திரட்டி, இவ்விஷயத்தில் மற்ற தலைவர்களுக்கு முன்னோடியாக இருந்தவர். இணையம் மூலமாகவே, 41 மில்லியன் டாலரைத் திரட்டியது இவரது சாதனை. ‘மீட்-அப்’ எனும் வலைதளம் மூலம் தன்னுடைய ஆதரவாளர்கள் சந்தித்து உரையாடிக்கொள்ளவும் வழிவகுத்தார்.
ஆனால், இத்தனைக்குப் பிறகும், ஹோவார்டு டீனால் ஜனநாயகக் கட்சியின் பிரதான வேட்பாளராக முடியவில்லை. ஜான் கெர்ரிதான் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டார். சமூக வலைதளங்களின் பயன்பாடு மட்டும் தேர்தலில் கைகொடுக்காது என்பதற்கும் முதல் உதாரணமாக ஹோவார்டு டீன் இருக்கிறார். 2004 தேர்தலில் இன்னொரு சுவாரஸ்யமும் உண்டு. ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜான் கெர்ரியின் கள அமைப்பாளராக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் பணியாற்றியிருக்கிறார். அதே ஆண்டில்தான், ஃபேஸ்புக் சமூக வலைதளத்தையும் உலகுக்கு அவர் அறிமுகப்படுத்தினார்.
விவாதத்துக்கு இடம் இல்லை
தேர்தல் அரசியலில் சமூக ஊடகங்களின் பங்கு பற்றி நண்பர்களிடமும், இணைய போக்குகளைக் கவனித்து வருபவர்களிடமும் விவாதித்தேன். “சமூக வலைதளங்களில் அமெரிக்க அரசியல் தலைவர்களின் செயல்பாடுகளுக்கும், தமிழக அரசியல் தலைவர்களின் செயல்பாட்டுக்கும் இடையே முக்கிய வேறுபாடு உண்டு” என்கிறார், நவீன தொழில்நுட்பம் மற்றும் இணைய உலகம்குறித்துத் தொடர்ந்து எழுதிவரும் சைபர் சிம்மன். “பெரும்பாலும் தமிழகத் தலைவர்களின் ஃபேஸ்புக் பக்கங்களில் அவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் படங்கள், அறிவிப்புகள் போன்றவை பதிவேற்றப்படுகின்றன. ஆனால், இணையப் பயனாளர்களுடன் இங்குள்ள தலைவர்கள் இணையத்தில் நேரடியாக உரையாடுவது இல்லை. அமெரிக்காவில் அரசியல் தலைவர்கள் தனது ஆதரவாளர்களுடன் உரையாடுவதில் பெரும் ஆர்வம் செலுத்துகிறார்கள்” என்கிறார் அவர்.
மேலும், மேடைப் பேச்சுக் கலாச்சாரத்தின் தொடர்ச்சியாகவே, சமூக வலைதளங்களைத் தமிழக அரசியல் தலைவர்கள் பார்க்கிறார்கள் என்று சைபர் சிம்மன் குறிப்பிடுகிறார். ஒரு விஷயம் குறித்த தனது நிலைப்பாடு தொடர்பாக பொதுமக்களின் கருத்து என்ன என்று தெரிந்துகொள்வதில் தமிழக அரசியல் தலைவர்கள் ஆர்வம் செலுத்துவதில்லை. தேர்தல் அறிக்கைகளைத் தங்கள் கட்சி வட்டாரத்துக்குள் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் வடிவமைப்பதும் இந்தியத் தலைவர்களின் வழக்கம். அங்கும் பொது விவாதத்துக்கு இடமில்லை. தங்கள் அபிமானம் பெற்ற தலைவர்களின் நிலைப்பாடுகுறித்து விரிவாகப் பேசுபவர்கள்தான் விவாதங்களின் முக்கிய முகங்களாக இருக்கிறார்கள்.
பொதுவாக, குறிப்பிட்ட அரசியல் கட்சிகளை ஆதரிப் பவர்கள், எதிர்ப்பவர்கள், உண்மையான நடுநிலையாளர்கள், அரசியல் என்றாலே வெறுத்து ஒதுக்குபவர்கள், எல்லா தலைவர்களும் மோசம் என்ற நிலைப்பாடு கொண்டவர்கள், எல்லா நிகழ்வுகளையும் சகட்டுமேனிக்குக் கிண்டல் செய்து மீம்ஸ் உருவாக்குபவர்கள் என்று சமூக வலைதளங்களில் பல தரப்பினர் இயங்கிவருகிறார்கள். குறிப்பாகச் சொன்னால், இன்றைய நவீன உலகில் அரசியலின் நிழல் விழாத நபர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இந்நிலையில், சமூக வலைதளங்களின் கருத்துகள் தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகளையே தீர்மானிக்கும் சக்தியாக மாறாவிட்டாலும், புதிய தலைமுறை வாக்காளர்களின் கருத்தியலில் நிச்சயம் தாக்கம் செலுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in