

திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு கிராமத்தில் வசிக்கும் முனைவர் பட்டதாரி ஒருவர், 2006-லிருந்து அருகிலுள்ள சுயநிதி கலை அறிவியல் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணிபுரிந்துவந்தார். 2019, டிசம்பர் 11 அன்று, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். தமிழ்த் துறையின் தலைவராக எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்துவந்த அவருக்கு, போதுமான பணி ஒதுக்கீடு செய்ய முடியாததால் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் மேலும், அவரோடு சேர்த்து ஆறு பேராசிரியர்களையும் இதே காரணத்தைக் கூறி பணியிலிருந்து நிர்வாகம் நீக்கியது.
இந்தப் பணிநீக்கத்தை எதிர்த்து முதலில், கல்லூரியின் நிர்வாகிகளிடமும் பின்னர் பல்கலைக்கழகம், கல்லூரிக் கல்வி இயக்குநரகம், உயர் கல்வித் துறைச் செயலர் எனப் பலரிடமும் தனியாகவும், தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் சங்கத்தின் மூலமாகவும் அப்பேராசிரியர் முறையிட்டும், இதுநாள் வரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. கல்வியாண்டின் பாதியில் பணியிலிருந்து நீக்கப்பட்டதாலும், சில மாதங்களில் கரோனா பொது முடக்கம் வந்ததாலும், அவரால் வேறு கல்லூரியில் பணியில் சேர முடியாமல் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார். இதன் காரணமாக, ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி, சிறிய கடை ஒன்றை ஆரம்பித்து, அதன் மூலம் தன்னுடய மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
இந்த சம்பவத்துக்குச் சில மாதங்களுக்கு முன்பாக இன்னொரு கல்லூரியிலும் இதே பாணியில் 14 பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட அடுத்த மாதமே பெண்கள் கல்லூரி ஒன்றில், இரண்டு பேராசிரியர்கள் முறையான தகவல்கூடத் தரப்படாமல் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உள்ளிட்ட உயர் கல்வித் துறை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்றும், இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை. சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்கள் எவ்வாறு பணிப் பாதுகாப்பின்றி இருக்கின்றனர் என்பதற்கான ஒருசில உதாரணங்கள் இவை.
சுயநிதிக் கல்லூரிகள் வருவதற்கு முன்பு, அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் மட்டுமே இருந்த காலகட்டத்திலேயே இந்தப் பிரச்சினைகள் தொடங்கிவிட்டன. அரசு உதவிபெறும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள், ஊழியர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்குவதில்லை, நினைத்த நேரத்துக்கு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்கின்றன என்று 1970-களில் ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை நடத்தின. இதன் விளைவாக, அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறை) சட்டம்-1976-ஐ அன்றைய முதல்வர் மு.கருணாநிதி கொண்டுவந்தார். இந்தச் சட்டம் பணிப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்தது, அரசுக் கல்லூரி ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெறவும் உதவியது.
1980-களில் அரசு உதவியே இல்லாமல் சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளிலும் அவர்கள் சுயநிதிப் படிப்புகளை வழங்கலாம் என்ற நிலை 1990-களில் உருவானது. கடந்த 30 ஆண்டுகளில் அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டு, சுயநிதிக் கல்லூரிகளின் எண்ணிக்கையும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுயநிதிப் பிரிவுகளின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்துள்ளன.
உயர் கல்விக்கான அகில இந்தியக் கணக்கெடுப்பு (AISHE - 2019-20) அறிக்கையின்படி, அகில இந்திய அளவில் உயர் கல்வியில் சேர்பவர்கள் 27% மட்டுமே. ஆனால், தமிழ்நாட்டில் 51.4% பேர் உயர் கல்வியில் சேர்கிறார்கள். தமிழ்நாட்டில் உயர் கல்வியின் வளர்ச்சி தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் பணியாற்றும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பங்கும் முக்கியமானது. ஆனால், இவர்கள் குறைந்த ஊதியம் பெறுகிறவர்களாகவும் எவ்விதப் பணிப் பாதுகாப்புமின்றி, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பணியிலிருந்து நீக்கப்படலாம் என்ற அச்சத்தில் பணிபுரிவதாகவும் இருந்த நிலைமை கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு மிகவும் மோசமடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் 1950-களில் 54 கல்லூரிகளும், இரண்டு பல்கலைக்கழகங்களும் இருந்தன. தற்போது 59 பல்கலைக்கழகங்களும் 2,608 கல்லூரிகளும் உள்ளன. இந்த 2,608 கல்லூரிகளில், 2,000 கல்லூரிகள் தனியார் சுயநிதிக் கல்லூரிகள் ஆகும். இந்தத் தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள 13.29 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தோடும் தமிழ்நாட்டின் உயர் கல்வியின் தரத்தோடும் தொடர்புடையதாக சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு இருக்கிறது.
ஒரு வருடத்துக்கு முன்பாக அரசு உதவி பெறும் கல்லூரியில் சுயநிதிப் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றிய ஒருவர், தன்னைப் பணிநீக்கம் செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இரு தரப்பையும் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டது. விசாரணை நடத்திய இயக்குநரகம் அவரைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளும்படி நிர்வாகத்துக்கு ஆணை அனுப்பியது.
அந்த ஆணையை எதிர்த்து நிர்வாகம் மீண்டும் நீதிமன்றம் சென்று, சுயநிதிப் பிரிவில் பணிபுரியும் ஆசிரியருக்குத் தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறை) சட்டம்-1976 பொருந்தாது எனவும், இயக்குநரகம் அனுப்பிய ஆணையை நிறுத்தி வைக்குமாறும் வாதாடியது. மீண்டும் இயக்குநரகம் இதைப் பரிசீலித்து, நிர்வாகத்துடன் கலந்து பேசி, எட்டு வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு நீதிபதி கூறியுள்ளார். அந்தப் பேராசிரியரும் தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.
தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறை) சட்டம்-1976-ல் சுயநிதிக் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுயநிதிப் பிரிவுகளுக்கும் பொருந்தும் என்கிற வகையில் சில மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம், தனியார் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தவும் ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தவும் முடியும். கேரளத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுயநிதிக் கல்லூரிகளுக்கு என்று தனியாகச் சட்டம் கொண்டுவந்ததைப் போன்று, தமிழ்நாடு அரசும் ஒரு சட்டம் கொண்டுவரலாம்.
‘சம வேலைக்குச் சம ஊதியம்’ என்கிற அடிப்படையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரியில் அரசு கொடுக்கும் சம்பளத்தையே சுயநிதிக் கல்லூரி/ சுயநிதிப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்குவதே நியாயம். இதில் அரசு தலையிட்டு, உடனடி நடவடிக்கையாக அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தைத் தீர்மானிக்க வேண்டும். அதேபோல், விடுப்பு, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட ஏனைய பயன்களும் உரிமைகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக இருப்பதையும் உத்தரவாதப்படுத்த வேண்டும்.
- ஏ.பி.அருண்கண்ணன், பேராசிரியர், தொடர்புக்கு: arunkannandrf@gmail.com