கே. சந்திரசேகர ராவ்

கே. சந்திரசேகர ராவ்
Updated on
2 min read

தெலங்கானாவின் முதல் முதல்வராகப் பதவியேற்றுள்ளார் கே. சந்திரசேகர ராவ். 60 வயதாகும் ராவுக்கு இது இரட்டை வெற்றி. தனி தெலங்கானா மாநிலம் வேண்டும் என்று தனிக்கட்சியே தொடங்கி, கிளர்ச்சியைத் தலைமையேற்று நடத்திய அவர் விரும்பியபடியே மாநிலம் உதயமாகியிருக்கிறது. அந்த மாநிலத்துக்கு அவரே முதலமைச்சராகவும் பதவியேற்றுவிட்டார்.

இந்தியாவின் 29-வது மாநிலம் தெலங்கானா. விசேஷம் அதுவல்ல. இந்தி பேசாத மாநிலங் களில், நடந்திருக்கும் மொழிசாராத முதல் பிரிவினை இது. ஒருகாலத்தில், மொழிவழி மாநிலங்கள் அமைய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி பொட்டி ராமுலு நடத்திய நெடிய உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாகத் தோன்றிய ஆந்திர மாநிலம், பிராந்திய அளவில் பின்தங்கிய பகுதியின் வளர்ச்சிக்காக 9 மாவட்டங்கள் சுமார் 3.5 கோடி மக்கள் தொகையுடன் இன்று தெலங்கானாவைத் தனியே அனுப்பியிருக்கிறது. இதற்கு முக்கியமான காரணங்களில் ஒருவராகியிருக்கிறார் சந்திரசேகர ராவ்.

பழைய ஹைதராபாத் மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில் சித்திப்பேட் மண்டலத்தில் உள்ள சிந்தமடக்கா என்ற கிராமத்தில் 1954-ல் பிறந்த ராவ், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தெலுங்கு இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சந்திரபாபு நாயுடுவைப் போலவே இவரும் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில்தான் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். சஞ்சய் காந்தியின் சீடகோடியாகத் திகழ்ந்தார். நெருக்கடிநிலை பிரகடனத்துக்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தபோதும் இந்திரா காந்தியின் ஆதரவாளராகவே தொடர்ந்தார். 1983-ல் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.

சித்திப்பேட் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஆந்திர சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பதவியையும் வகித்தார். 2001 ஏப்ரல் 27-ம் தேதி சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தனி தெலங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி 'தெலங்கானா ராஷ்டிர சமிதி' என்ற கட்சியைத் தொடங்கினார். கிளர்ச்சி மீண்டும் தொடங்கியது. மாணவர்கள் இதில் தீவிரம் காட்டினர். 2014 மக்களவை பொதுத் தேர்தலின்போது ஆந்திரத்துக்கும் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தெலங்கானா மாநிலத்துக்கான முதல் வேட்பாளரை தெலங்கானா ராஷ்டிர சமிதி சார்பில் சந்திரசேகர ராவ்தான் அறிவித்தார். அமையவிருக்கும் தெலங்கானா சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 63 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்டிர சமிதி வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானா பகுதிக்கான மக்களவைத் தொகுதிகள் 17-ல் இவருடைய கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்று தனது செல் வாக்கைச் சந்தேகமின்றி நிரூபித்திருக்கிறது.

2004 மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். தெலங்கானா மாநிலம் ஏற்பட உதவுவோம் என்று காங்கிரஸ் வாக்குறுதி தந்தது. ஆனால், 2009 வரை எதுவும் செய்யவில்லை. இதனால் சந்திரசேகர ராவ் காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகினார். மீண்டும் நிறைய போராட்டங்கள், அரசியல் பேரங்களுக்கு இடையே தெலங்கானாவைப் பிரித்தது காங்கிரஸ்.

ராவ் வித்தியாசமானவரோ விதிவிலக்கானவரோ கிடையாது. ஆனால், காரியக் காரர். தனது மகன் கே.டி. ராமராவ், உறவினர் ஹரீஷ் ராவ் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் அளித்திருக்கும் ராவ், தன் மகள் கே. கவிதாவை நிஜாமாபாத் மக்களவை உறுப்பினராக்கியிருக்கிறார். ஒரு காலத்தில் தான் இருந்த காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய இரண்டின் பகையையும் சம்பாதித்துக்கொண்டு தனது அரசியல் பயணத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் ராவ். தனி மாநிலம் மூலம், சென்னா ரெட்டிக்குக் கிடைக்காத வெற்றி சந்திரசேகர ராவுக்குக் கிடைத்திருக்கிறது.​

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in