

நான் காப்பாளராகப் பணியாற்றும் அரசு ஆதிதிராவிட நலத் துறை மாணவர் விடுதியில் 1 படிக்கும் மாணவன் சில நாட்களுக்கு முன்பு விடுதியிலும் இல்லை, பள்ளிக்கும் போகவில்லை. மறுநாள் அவனிடம் “நேற்று எங்கே போனாய்?” என்று கேட்டேன். “என் தங்கச்சிய டயாலிசிஸ் செய்ய விழுப்புரத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனேன்” என்றான். “வீட்டுல வேற யாருமில்லியா?” என்று கேட்டேன்.
“அப்பா இல்ல, அம்மா மட்டும்தான்” என்றான். “அவங்க போகக் கூடாதா?” என்று கேட்டதற்கு “அம்மா கூலி வேலைக்குப் போறாங்க. ஒரு நாளு வேலைக்குப் போகலன்னாலும் தங்கச்சிய டயாலிசிஸுக்குக் கூட்டிக்கிட்டுப் போவ முடியாது” என்றான். “வாரத்துக்கு எத்தன முற போகணும்?” என்று கேட்டதற்கு “மூணு முற சார்” என்றான். “எத்தனாவது படிக்குது?” என்று கேட்டேன். “ஒன்பதாவது” என்றான். அதற்குப் பிறகு டயாலிசிஸ் நோயாளிகள் பற்றி, அவர்களுடைய குடும்பச் சூழல் பற்றி விசாரித்தேன். மனதை உருக்கும் தகவல்கள் கிடைத்தன.
திட்டக்குடி வட்டம் மேல் ஆதனூர் கிராமத்தில் சின்னசாமி என்ற நோயாளி, முதல் நாள் கூலி வேலைக்குச் சென்றுவிட்டு மறுநாள் டயாலிசிஸுக்குச் செல்வார். கூலி வேலைக்குச் செல்வதே பேருந்துக் கட்டணத்துக்காகச் சம்பாதிப்பதற்காகத்தான். விருத்தாசலத்தில் யூசுப் என்பவர் டயாலிசிஸ் செய்துகொள்ளச் செல்வதற்கான பேருந்துக் கட்டணத்துக்காக இரவு நேரங்களில் மட்டும் தள்ளுவண்டியில் மாட்டுக்கறி விற்கிறார்.
இதுபோன்று வீரன் என்பவர் டயாலிசிஸ் செய்துகொள்வதற்காக திருநாவலூரிலிருந்து விழுப்புரத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார். குமார், யூசுப், வீரன், ஒன்பதாம் வகுப்பு மாணவியின் தாய் போன்றவர்கள் உதாரணங்கள்தான். இவர்களைப் போன்று தமிழ்நாட்டில் தினமும் அல்லாடிக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை நிச்சயம் ஒரு லட்சத்துக்கும் மேல்தான் இருக்கும். விருத்தாசலம், திட்டக்குடி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நோயாளிகளில் பலரும் பெரம்பலூரிலுள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில்தான் டயாலிசிஸ் செய்துகொள்கிறார்கள்.
பழைய காலத்தில் சிறுநீரகச் செயலிழப்பு என்று தெரியாமல் கை வைத்தியம், நாட்டு வைத்தியம், சித்த வைத்தியம் என்று பார்ப்பார்கள். சாமிக்கு வேண்டிக்கொள்வார்கள். கிரியாட்டினின் அளவு அதிகரித்துக் கை, கால்கள் வீங்கி, சிறுநீர் வெளியேறாததால் நெஞ்சடைப்பு, ஆக்ஸிஜன் அளவு குறைந்து பத்திருபது நாட்கள் படுக்கையிலேயே கிடந்து இறந்துவிடுவார்கள். இப்போது மருத்துவ அறிவியல் வளர்ந்திருக்கிறது. ஆனால், நோயாளிகள் படும் துயரத்தின் அளவும் பெருகிக்கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. பழைய காலத்தைவிட சிறுநீரகச் செயலிழப்பு இப்போது பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. நவீன வாழ்க்கை முறை, உணவு முறை, மரபுக் காரணிகள் என்று பல காரணங்கள்.
சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொள்ளலாம். மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவது என்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. மீறி மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்டவர்களுக்கு எவ்வளவு காலத்துக்குப் புதிய சிறுநீரகம் வேலைசெய்யும் என்று உத்தரவாதம் எதுவும் இல்லை. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்களில் 90% பேர் டயாலிசிஸ்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். மாற்று வழி இல்லை.
தற்போது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், மருத்துவக் கல்லூரிகளில் டயாலிசிஸ் செய்துகொள்கிறவர்களின் எண்ணிக்கை சுமார் 75,000 முதல் ஒரு லட்சம் வரை இருக்கலாம். ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு உட்பட்டவர்கள், சிறு விவசாயி அட்டை வைத்திருப்பவர்கள் போன்றோர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில், அரசு மருத்துவமனைகளில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இலவசமாக டயாலிசிஸ் செய்துகொள்ளலாம். மற்றவர்கள் பணம் கட்டி தனியார் மருத்துவமனைகளில்தான் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டும்.
ஒருசிலருக்கு வாரத்துக்கு இரண்டு முறையும், ஒருசிலருக்கு வாரத்துக்கு மூன்று முறையும் டயாலிசிஸ் செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனையில் ஒரு முறை டயாலிசிஸ் செய்துகொள்வதற்கு ரூ.1,700 ஆகும். வாரத்துக்கு மூன்று முறை என்றால் ரூ.5,100. மாதத்துக்கு ரூ.23,000. கிரியாட்டினின் அளவு, ரத்தத்தின் அளவு எவ்வளவு இருக்கிறது என்று மாதத்துக்குக் குறைந்தது இரண்டு முறையாவது பார்க்க வேண்டும். அதற்கு மாதத்துக்கு ரூ.2,000 ஆகும். கூடவே, வாரத்துக்கு ஒரு சத்து ஊசி போட வேண்டும். அதற்கு மாதத்துக்கு ரூ.3,000 ஆகும்.
மாதத்துக்கு ஒரு முறை டயாலிசிஸ் மெட்டீரியல்கள் மாற்ற வேண்டும். அதற்கு ரூ.3,600 வேண்டும். ஒரு டயாலிசிஸ் நோயாளி, ஒரு மாதத்துக்கு மருத்துவமனைக்குக் கட்ட வேண்டிய தொகை மட்டும் சுமார் ரூ.30,000. போக்குவரத்துச் செலவு தனி. ஒரு முறையோ இரண்டு முறையோ டயாலிசிஸ் செய்வதற்குத் தவறிவிட்டால், கை கால்கள் வீங்கிவிடும். வயிற்றில், நுரையீரலில் தண்ணீர் சேர்ந்துவிடும். அப்படிச் சேர்ந்த தண்ணீரை எடுப்பதற்கு ரூ.50,000 முதல் ஒரு லட்சம் வரை செலவாகும். செலவுசெய்ய முடியாதவர்கள் இறந்துபோகிறார்கள். இதெல்லாம் தெரிந்துதான் ஒரு மருத்துவர், டயாலிசிஸ் செய்துகொண்டிருக்கும் 16 வயதுப் பையனின் அப்பாவிடம், “ஒங்க பையனுக்குப் பணம்தான் கடவுள். அதை நிறையச் சம்பாதித்து வையுங்கள்” என்று சொன்னார். பணம் என்ற கடவுளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே நோய் வருவதில்லை.
சிறு விவசாயி அட்டை வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு ரூ.72,000 ஆயிரம் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்துகொள்ளலாம். அப்படிச் செய்துகொள்வதற்கு அரசு பொது மருத்துவமனைகளில் போதிய அளவுக்கு இயந்திரங்கள் இருக்கின்றனவா? நகராட்சியாக இருக்கும் நகரங்களின் மருத்துவமனைகளில்கூட இரண்டு மூன்று இயந்திரங்கள்தான் இருக்கின்றன. மூன்று இயந்திரங்கள் மட்டுமே இருக்கிற மருத்துவமனையில், ஒரு நாளைக்கு 12 நோயாளிகள் மட்டுமே டயாலிசிஸ் செய்துகொள்ள முடியும்.
அங்கே டயாலிசிஸ் செய்துகொள்ள ஒரு நாளைக்குக் குறைந்தது 100 பேர் வருகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், எஞ்சியிருக்கிற 82 பேர் என்ன ஆவார்கள்? தனியார் மருத்துவமனைக்கோ அரசு அனுமதித்துள்ள மருத்துவமனைக்கோதான் செல்ல வேண்டும். உதவியாளர்கள் இன்றி நோயாளியால் செல்ல முடியாது. நோயாளிகளுக்கும் உதவியாளர்களுக்கும் சேர்த்து மாதத்துக்குப் போக்குவரத்துச் செலவு மட்டும் ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை ஆகும். டயாலிசிஸ் நோயாளி உள்ள குடும்பத்துக்கு மாதத்துக்கு ரூ.50,000-ம் வேண்டும் என்ற நிலைதான் இருக்கிறது. ஆக, சிறுநீரகச் செயலிழப்பு என்பது பொருளாதாரரீதியாக அந்தக் குடும்பத்தையே கொன்றுவிடும்.
என்ன செய்யலாம்? அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக டயாலிசிஸ் இயந்திரங்களை வைக்க வேண்டும். தேர்ச்சி பெற்ற செவிலியர்களைப் பணியமர்த்த வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72,000, சிறு விவசாயி அட்டைகள் போன்ற விதிமுறைகளைத் தவிர்க்க வேண்டும். முதியோருக்கு ஓய்வூதியம் வழங்குவதுபோல, மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை, இலவச பஸ் பாஸ் வழங்குவதுபோல சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை உதவித்தொகை வழங்க வேண்டும்.
உதவியாளருக்கும் சேர்த்து இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். இந்த உதவியைச் செய்தால், நோயாளிகளுக்கும் நோயாளியின் குடும்பத்தாருக்கும் பெரிய உதவியாக இருக்கும். அவர்களுக்கு வாழ்வதற்குச் சிறு நம்பிக்கை ஏற்படும். தனியார் மருத்துவமனைகளில் மாற்று உறுப்புகள் பொருத்திக்கொள்வதற்குத் தமிழக அரசு வைத்துள்ள வருமான வரம்பு ஆண்டுக்கு ரூ.72,000 என்பதைக் குறைந்தபட்சம் ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். ‘சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகளுக்கு வீடு தேடிச்சென்று டயாலிசிஸ் செய்யப்படும்’ என்று கேரள அரசு அறிவித்துள்ளதைத் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகளின் ஒருநாள் வாழ்க்கை என்பது போர்க்களத்துக்குள்ளும் நெருப்புக் குண்டத்துக்குள்ளும் வாழ்வது மாதிரிதான். அப்படியான மனிதர்களின் பெரும் துயரக் கண்ணீரைத் துடையுங்கள் என்பதுதான் என் கோரிக்கை. ‘உங்களில் ஒருவன்’ என்ற தன் வரலாற்றை எழுதிய முதல்வரிடம் ‘எங்களில் ஒருவராக’ உங்களை எண்ணி இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன்.
- இமையம், ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: imayam.annamalai@gmail.com