சர்வாதிகார நாடாகிறதா இலங்கை?

சர்வாதிகார நாடாகிறதா இலங்கை?
Updated on
3 min read

இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவைப் பதவி விலகக் கோரி பொதுமக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு நாடு முழுவதும் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். கடந்த மார்ச் 31-ம் திகதி முன்னிரவில் கொழும்பு, மிரிஹானையில் உள்ள ஜனாதிபதி மாளிகையைச் சூழவும் பொதுமக்கள் தமது கைக்குழந்தைகளையும் சுமந்துகொண்டு மெழுகுத்திரிகளையும், ஜனாதிபதியைப் பதவி விலகக் கோரும் பதாகைகளையும் ஏந்திக்கொண்டு அமைதியாகப் போராடிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஆயுதங்களோ தடிகளோ இருக்கவில்லை.

எந்தக் கட்சியையும் சாராமல் சுயமாக ஒன்றுசேர்ந்த அந்த மக்கள் கூட்டத்தைக் கலைக்கக் கண்ணீர்ப் புகைகுண்டுகளையும், துப்பாக்கி வேட்டுகளையும் பயன்படுத்தியது இலங்கை காவல் துறை. ஜனாதிபதியின் இல்லத்துக்குச் செல்லும் பாதைக்குக் குறுக்காக ஒரு பேருந்து நிறுத்தப்பட்டு, அதை இனம்தெரியாத ஒருவர் பற்ற வைக்கும் காணொளிகளும், போலீஸ் வாகனம் ஒன்றைப் பற்ற வைக்கும் காணொளிகளும் சர்வதேச ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவத் தொடங்கின.

உடனடியாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு, ‘தீவிரவாதிகள் ஒன்று கூடித் தாக்குதல் நடத்தினர்' என்று அறிவிக்க, காவல் துறையும் ராணுவமும் அங்கிருந்த மக்களைக் கண்மூடித்தனமாகச் சுடவும் தாக்கவும் கைதுசெய்யவும் தொடங்கின. அந்த வாகனங்களைப் பற்ற வைக்கும்போதோ, அவை பற்றி எரியும்போதோ காவல் துறையோ ராணுவமோ அவற்றை அணைக்க எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு நாளைக்கு 15 மணித்தியாலங்களுக்கும் மேலான மின் தடை காரணமாக மருத்துவமனைகளில் அவசர அறுவைச்சிகிச்சைகள் பலவும் கைபேசி வெளிச்சத்தில்தான் செய்யப்படுகின்றன எனும்போது, இலங்கையில் தற்போது மக்கள் எதிர்கொண்டிருக்கும் நிலையின் தீவிரம் விளங்கும். பெற்றோல், டீசல், சமையல் எரிவாயு இல்லாமல் நாட்டில் எதுவும் இயங்குவதில்லை. போதாதற்கு அத்தியாவசிய உணவுகளின் தட்டுப்பாடு மக்களின் கழுத்தைப் பட்டினியால் நெரித்துக்கொண்டிருக்கிறது.

தற்போது தெருக்களில் ஒன்றுகூடும் பொதுமக்களின் மனங்களில் ஒரேயொரு நோக்கம்தான் இருக்கிறது. பட்டினியற்ற, சுமுகமாக உயிர் வாழத் தேவையான சூழலுடன் கூடிய, வரிசைகளில் பொதுமக்கள் விழுந்து மரணிக்காத அமைதியான நாடொன்றுதான் அவர்களது இலக்கு. இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடிக்கு முதலில் பொறுப்புக் கூற வேண்டியவர், நாட்டின் ஜனாதிபதிதான். உண்மையில், கோத்தபயவை ஜனாதிபதியாக ஆக்க 69 லட்சம் வாக்குகளை அளித்த மக்களிடையே ஜனாதிபதி மீது மூன்று விதமான நம்பிக்கைகள் இருந்தன. அவர்தான் முப்பதாண்டு கால யுத்தத்தை வென்றார் என்பது ஒன்று. இரண்டாவது, சிங்கப்பூரை ஒப்பிட்டு நகர அபிவிருத்தி தொடர்பாக அவர் முன்வைத்த வாக்குறுதிகள். மூன்றாவது, அவர் முன்னர் அரசியல்வாதியாக இருக்கவில்லை என்பதால், தைரியமாகவும் நேர்மையாகவும் ஆட்சி நடத்துவார் என்பது.

ஒரு நாட்டை ஆள்வதற்கு இந்தத் தகுதிகள் போதுமானவையா என்று மக்கள் அப்போது யோசிக்கவில்லை. ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் கொள்கை என்பது, இனவாதத்தையும் மதவெறியையும் பரப்பி, சர்வாதிகார ஆட்சியை மேற்கொள்வது அல்லாமல், நாட்டை முன்னேற்றுவது அல்ல என்பதை அப்போது மக்கள் அறிந்திருக்கவில்லை. அந்தக் குடும்பத்தின் பொருளாதாரக் கொள்கை என்பது, இயன்ற அளவு ஊழல்களைச் செய்து, தமது குடும்பத்துக்குத் தேவையான சொத்துகளைச் சேர்த்துக்கொள்வதுதான் என்பதையும் மக்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.

அந்தக் குடும்பத்தின் வாரிசு ஒருவர் கடந்த மாதம் மக்கள் பணத்தில் 35 லட்சம் ரூபாய் செலவழித்து, ஓவியம் ஒன்றை வாங்கியிருக்கிறார் எனும்போது, இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான மூல காரணம் உங்களுக்கு விளங்கும். ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு வருட காலத்துக்குள் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டிருந்த கொலைகாரர்களும் ஊழல்வாதிகளுமான அரசியல்வாதிகள் அநேகமானவர்களுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததோடு, அவர்களுக்கு உயர் பதவிகளையும் வழங்கியுள்ளார். இவ்வாறாக, ஜனாதிபதி மீது வைத்திருந்த நம்பிக்கைகள் அனைத்தும் இப்போது முழுமையாகப் பொய்த்துப்போயுள்ள நிலையிலேயே மக்கள் தெருவில் இறங்கியிருக்கிறார்கள்.

ஏப்ரல் மூன்றாம் திகதி நாடு முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தப்போகும் தகவல் தெரிய வந்தவுடனேயே இரண்டாம் திகதி மாலை ஆறு மணியிலிருந்து திங்கட்கிழமை காலை ஆறு மணி வரை ஜனாதிபதி நாடளாவியரீதியில் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்திருந்தார். நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அனைத்துச் சமூக வலைதளங்களையும் முடக்கினார்.

தொடர்ந்து தனக்கு எதிராகக் கிளம்பியுள்ள இவ்வாறான எதிர்ப்புகளைக் கண்டு பதற்றமுற்ற ஜனாதிபதி கோத்தபய, இம்மாதம் முதலாம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில், அவசரகாலச் சட்டத்தை நாட்டில் பிரகடனப்படுத்தி, அதிவிஷேட அரசாங்க அறிவித்தல் ஒன்றை வெளியிட்டதோடு, அந்தச் சட்டத்தைப் பிரயோகித்து அறுநூறுக்கும் அதிகமான பொதுமக்களைக் கைதுசெய்ய உத்தரவிட்டார்.

இந்த அவசர கால நிலையின்போது, மக்கள் ஒன்றுகூடுவதற்கான, கருத்துகளைத் தெரிவிப்பதற்கான, ஒரு குழுவாகச் சேர்வதற்கான, நடமாடுவதற்கான, தொழில்புரிவதற்கான உரிமைகளும், சமயம், கலாச்சாரம், மொழி ஆகியவற்றுக்கான உரிமைகளும் மட்டுப்படுத்தப்படுகின்றன. அத்தோடு, பிடியாணை இன்றியே எவரையும் கைதுசெய்யும் அதிகாரமும், ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரமும் காவல் துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சந்தேக நபர்களை எவ்வளவு காலமும் தடுத்து வைக்கலாம், சந்தேக நபர்களின் வாக்குமூலங்களைச் சாட்சிகளாகப் பயன்படுத்தலாம், தேடுதல் ஆணை இல்லாமலே எந்த இடத்திலும், எந்தக் கட்டிடத்திலும் தேடுதல்களைக் காவல் துறை மேற்கொள்ளலாம்.

எவரினதும் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை அரசுக் கட்டுப்பாட்டில் எடுக்கலாம். அதுமட்டுமின்றி, சந்தேக நபர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளையும், தேவையான விசாரணைகளை மேற்கொள்ளவும் ராணுவப் பாதுகாப்புப் படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அத்தோடு, சட்ட மா அதிபரின் அனுமதியின்றி, சந்தேக நபர்களைப் பிணையில் செல்ல அனுமதிக்கவோ, விடுதலை செய்யவோ நீதவானுக்கு அதிகாரமில்லை என்பது போன்ற சர்வாதிகார விதிமுறைகள் அந்த அதிவிஷேட அரசாங்க அறிவித்தலில் காணப்படுகின்றன.

இலங்கை குறித்து சர்வதேச அளவில் எழுந்திருக்கும் அழுத்தங்கள் மற்றும் தனக்கு எதிரான மக்களின் எதிர்ப்பைத் தடுத்து நிறுத்தவே ஜனாதிபதியால் இவ்வாறெல்லாம் செய்யப்படுகின்றன என்பது எவருக்கும் விளங்கும். இலங்கையில், கடந்த பல தசாப்தங்களாகவே இயக்கங்களாலும், அரசியல் கட்சிகளாலும் வழிநடத்தப்பட்ட லட்சக்கணக்கான தேசப்பற்று மிக்க இளைஞர்கள், இலங்கை அரசின் தீவிரவாத முத்திரையின் கீழ் உயிர்ப் பலி கொடுக்கப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

உண்மையில், தேசப்பற்று மிக்க இன்றைய இளைஞர் தலைமுறைக்கு, இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் வன்முறைகளையும் நெருக்கடிகளையும் தாங்கிக்கொள்ள முடியாதிருக்கிறது. வருங்காலத்தில் தேசத்தைப் பொறுப்பேற்கக் காத்திருப்பவர்கள் அவர்கள். பல தசாப்தங்களாக இலங்கை இழந்துகொண்டிருக்கும் இளைஞர் சக்தி, அவர்களது பலம், உத்வேகம் ஆகியவற்றின் காரணமாகத்தான் ஊழல் மிகுந்த முதிய அரசியல்வாதிகள் இப்போதும் இலங்கையை ஆண்டுகொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்துவிடவில்லை.

எனவேதான், தெருவில் இறங்கித் தமது தாய்நாட்டைத் தற்போதைய ஆட்சியிலிருந்து மீட்க அமைதியாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் மீண்டும் மீண்டும் இளைஞர்களைப் பலி கொடுக்க நேர்ந்திருக்கும் கொடூரமான நிலையானது, இனியும் ஜனாதிபதியின் சர்வாதிகாரப் போக்கால் நேருவதற்கு இடமளிக்கக் கூடாது.

- எம்.ரிஷான் ஷெரீப், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலர், இலங்கை. தொடர்புக்கு: mrishansh@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in