Published : 04 Apr 2022 07:38 AM
Last Updated : 04 Apr 2022 07:38 AM

சமூகத்திலிருந்து பள்ளியை விலக்கி வைக்கக் கூடாது!

ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் அமைந்துள்ள பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்துவதற்கான தீவிர முன்னெடுப்புகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது. இந்த முன்னெடுப்புகள், சமூகத்தின் பல தரப்புகளிலிருந்தும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன. அதே நேரத்தில், அக்குழுவின் செயல்பாடுகளும் கட்டமைப்பும் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. சு.உமாமகேஸ்வரி எழுதிய ‘பள்ளி மேலாண்மைக் குழு எதிர்கொண்டிருக்கும் ஆபத்து’ கட்டுரையில் (‘இந்து தமிழ் திசை’ 31.03.22) பள்ளி மேலாண்மைக் குழுவில் உள்ளாட்சித் தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பது குழுவின் செயல்பாட்டுக்கே ஆபத்தை விளைவிக்கும் என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். 

மொத்தம் 20 உறுப்பினர்களைக் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழுவில் 75% பேர் பெற்றோர்களாக இருப்பார்கள். குறைந்தது 15 உறுப்பினர்கள் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களாக இருக்க வேண்டும். மேலும், குழுவில் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழி உறுப்பினராகவும், ஆசிரியர் பிரதிநிதியாக ஒரு ஆசிரியரும், சுய உதவிக்குழு பிரதிநிதியாக ஒருவரும், கல்வியாளர் அல்லது அரசு சாரா நிறுவனத்தின் உறுப்பினர் அல்லது ஓய்வுபெற்ற ஆசிரியர் இவர்களில் யாரேனும் ஒருவர் குழுவின் ஒரு பிரதிநிதியாக இருக்கும் இந்தக் குழுவில், இரண்டு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருக்க வழிவகை செய்துள்ளது சட்டம்.

இந்த இருவரில் ஒருவர் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்க முடியும். இதைத்தான் பிரச்சினையாகப் பார்க்கிறார்கள் சிலர். பள்ளி மேலாண்மைக் குழுவுக்கான முதன்மைப் பயிற்றுநராகப் பயிற்சி வழங்கிவருபவன் என்ற முறையிலும், இக்குழுவின் கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்வது குறித்த விவாதங்களில் பங்கேற்றவன் நான். ஆகவே, இந்தக் கட்டமைப்பு உருவாவதற்குப் பல வல்லுநர்களின், சமூக ஆர்வலர்களின் அனுபவரீதியான ஆலோசனைகளின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை என்னால் உறுதியாகக் கூற இயலும். 

அரசுப் பள்ளிகள், மக்களுக்கான பள்ளிகளாக, அப்பகுதி மக்களின் பங்கேற்பை விரும்பி வரவேற்கும் இடமாக அமைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே, குழுவின் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்துக்கும் சமூகத்துக்கும் இடையே தற்போது உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான முக்கியமான படிதான் இந்த முயற்சி. அதில் யார் இருக்கிறார்கள் என்பது மிக முக்கியம்.

ஆசிரியர்களுக்கும் சமூகத்துக்குமான இடைவெளி அதிகமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இது முற்றிலும் நிராகரிக்க முடியாத ஒன்று. பொதுவாக, விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் தொடங்குவதற்கு முன்பான நாட்களில், ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குச் சில ஆசிரியர்கள் வந்து செல்வதைப் பார்க்க முடியும். பள்ளி தொடங்க இருக்கிறது, பள்ளியைத் தூய்மைப்படுத்துவதற்கு எங்களுக்குத் தூய்மைப் பணியாளர்களை அனுப்பி வையுங்கள் என்று கேட்பதற்காக ஊராட்சி மன்றத்துக்கு வந்திருப்பார்கள்.

நிச்சயமாகப் பள்ளி தூய்மைக்கான உதவிகளைப் பள்ளிக்கு வழங்கக் கடமைப்பட்டிருக்கிறது ஊராட்சி நிர்வாகம். அதே வேளையில், ஆசிரியர்கள் எத்தனை முறை கிராம சபைக் கூட்டத்துக்கு வந்திருப்பார்கள் என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். சமூகத்தோடு பள்ளியை இணைப்பதற்கு ஆசிரியர்கள் பாலமாக இருக்க முடியும், இருக்க வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பள்ளி மேலாண்மைக் குழு என்னும் ஜனநாயக அமைப்பில் ஊராட்சி மன்றத் தலைவர் இருக்கக் கூடாது எனச் சொல்வது சமூகத்திலிருந்து பள்ளியை விலக்கி வைத்துவிடும். 

மேலும், சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, அப்பகுதி மக்களால் பெரிதும் மதிக்கப்படும் ஒரு ஆசிரியரின் கருத்துக்கு நேரெதிராக எந்த ஒரு உள்ளாட்சிப் பிரதிநிதியாலும் செயல்பட்டுவிட முடியாது என்பதையும் ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பள்ளி நிர்வாகம், தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று சில தலைமை ஆசிரியர்கள் நினைக்கிறார்கள் என்பதையும் நாம் பல பள்ளிகளில் பார்க்கிறோம். ஜனநாயக அமைப்பாக இருக்கக்கூடிய பள்ளி, தலைமை ஆசிரியர் விருப்பப்படி மட்டுமே இயங்க வேண்டும் என்ற கட்டுக்குள் கொண்டுவர முடியாது. அங்கு மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெற்றோரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கட்டமைப்பில் ஊராட்சிப் பிரதிநிதிகளின் பங்கை உறுதிசெய்திருக்கிறது சட்டம். 

தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சித் தலைவர்களில் ஒருவர்கூட பள்ளி மேலாண்மைக் குழுவில் உறுப்பினராக வரக் கூடாது என்று சிலர் நினைத்தால், அது ஏற்புடையதாக இருக்க முடியாது. நாங்கள்  நேரடியாகப்  பார்த்ததில், எத்தனையோ ஊராட்சித் தலைவர்கள் தங்கள் உள்ளாட்சியில் உள்ள பள்ளிகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்பதில் பெரும் முயற்சி எடுத்துவருகிறார்கள். கடந்த மார்ச் 20-ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அளவிலான பெற்றோர்களுக்கான சந்திப்புக் கூட்டத்தைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்பதற்காக வீடுதோறும் சென்று, பெற்றோர்களை அழைத்து வந்த ஊராட்சித் தலைவர்களையும் வார்டு உறுப்பினர்களையும் பார்க்க முடிந்தது. யாரையும் விலக்கி வைப்பதால் குழுவை வலுப்படுத்த முடியாது. அனைவரையும் ஒன்றுசேர்த்து இயங்க வேண்டியது அவசியம்.

ஊராட்சி மன்றத் தலைவர்கள் குழுவில் உறுப்பினர்களாக இருக்கிறார்களே ஒழிய அவர்கள் தலைவர்களாக இல்லை. பெற்றோர்தான் தலைவராக இருக்கப்போகிறார். துணைத் தலைவரும் ஒரு பெற்றோர்தான். தலைமை ஆசிரியரும் அப்பள்ளியின் ஓர் ஆசிரியரும் குழு உறுப்பினர்களாக இருக்கப்போகிறார்கள். இத்தனை பேர் இருக்கும்போது இந்தக் குழுவின் முடிவுகளை முழுமையாக ஊராட்சித் தலைவர் கட்டுப்படுத்திவிடுவார் என்ற அச்சத்தைக் கொண்டுவந்து, அது ஆபத்து என்று முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதே நேரத்தில், சு.உமாமகேஸ்வரியின் அச்சத்தை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அலட்சியப்படுத்திவிடக் கூடாது. பல உள்ளாட்சித் தலைவர்களுக்கு அந்தப் பள்ளி தாங்கள் படித்த பள்ளியாகக்கூட இருக்கும். அப்பள்ளியின் நலன் கருதுபவர்கள்கூட ஊராட்சித் தலைவர்களைப் பள்ளி மேலாண்மைக் குழுவில் சேர்த்துக்கொள்வதற்கு ஏன் அச்சம் தெரிவிக்கிறார்கள் என்பதை நடுநிலையோடு அணுக வேண்டும். ஜனநாயகக் கட்டமைப்பான பள்ளி மேலாண்மைக் குழுவில் ஆசிரியர்களின் பங்கு, பெற்றோர்களின் பங்கு, கல்வியாளர்களின் பங்கு, மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் பங்கு, அரசு சாரா நிறுவனப் பிரதிநிதிகளின் பங்கு, உள்ளாட்சித் தலைவர்கள், பிரதிநிதிகளின் பங்கு என அனைவரின் பங்கும் எந்த விதத்திலும் குறைந்தது அல்ல.  

‘‘எதிர்காலச் சந்ததிகளான நம் குழந்தைகளின் நலனுக்காகத்தான் இத்தனை முயற்சிகளும். அவர்களின் முகம் நம் மனத்திரையில் வரும்போது, நமக்குள் வரும் எந்தத் தடையையும் நாம் இயல்பாகக் கடந்துவிட முடியும்" என்று எங்களுக்கான பயிற்சியின்போது பள்ளிக்கல்வித் துறை உயர் அலுவலர் ஒருவர் குறிப்பிட்டதை மறக்கக் கூடாது.

நாளைய தலைவர்களுக்காக இந்திய ஜனநாயகம் உருவாக்கியிருக்கும் இந்தப் பள்ளி மேலாண்மைக் குழு, தமிழ்நாட்டில் புதிய வரலாற்றைப் படைப்பதற்கு அனைவரின் முயற்சியும் ஒத்துழைப்பும் பங்கேற்பும் இன்றியமையாதவை. ஒன்றிணைந்து முன்னெடுப்போம்!

- நந்தகுமார் சிவா, உள்ளாட்சிச் செயற்பாட்டாளர் மற்றும் பொதுச் செயலாளர், தன்னாட்சி அமைப்பு.

தொடர்புக்கு: nanda.mse@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x