

தமிழகத் தேர்தல் வரலாற்றில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா என வலுவான ஒரு மாற்றுச் சக்தி உருவாகியுள்ள மிக முக்கியமான காலகட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்பில் முத்தரசன் உள்ளார். எளிய பின்னணியிலிருந்து பொதுவாழ்வில் உயர்ந்த பொறுப்புகளுக்கு வர முடியும் என்று நிரூபித்தவர் முத்தரசன்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள அலிவலம் கிராமத்தில் 1950 ஜனவரி 18-ல் முத்தரசன் பிறந்தார். அப்பா ராமசாமி, அம்மா மாரிமுத்து, அக்கா, அண்ணன், தம்பி, இரண்டு தங்கைகள் என பெரிய குடும்பம் அவருடையது. அவர் பிறந்த காலத்தில் ஊரில் பள்ளிக்கூடம் இல்லை. கிராமத்துக் கணக்குப்பிள்ளை வீட்டுத் திண்ணையில்தான் படிக்கத் தொடங்கினார். அதன் பிறகு ஊருக்கு ஒற்றை ஆசிரியருடன் பள்ளிக்கூடம் வந்தது. உரிய வயதைக் கடந்த நிலையில்தான் அப்பள்ளியில் சேர்ந்தார் முத்தரசன்.
மாணவச் செயல்பாட்டாளர்
1965-ல் ஆலத்தம்பாடி ஜானகி அண்ணி உயர் நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்ந்தார். முப்பது, நாற்பது கிராமங்களுக்கு உயர்நிலைப் பள்ளிக் கல்வியை அளிக்கும் ஒரே பள்ளிக்கூடமாக அது திகழ்ந்தது. அந்த ஆண்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மாநிலம் எங்கும் தீவிரமடைந்தது. ஆலத்தம்பாடி பள்ளியிலும் தன்னெழுச்சியாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். பள்ளிக்கு அருகேயிருந்த ரயில் நிலையத்திலும், தபால் நிலையத்திலும் பெயர்ப் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில் முத்தரசன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமானதைத் தொடர்ந்து பள்ளிக்கு ஒரு மாத காலம் விடுமுறை விடப்பட்டது.
சக மாணவர்களின் துணையுடன் அலிவலத்தைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்தி எதிர்ப்புப் பேரணியை முத்தரசன் நடத்தினார். அப்போது ரூ.500-க்கும் மேல் உண்டியல் மூலம் வசூலானது. அந்தக் காலத்தில் அது மிகப்பெரும் தொகை. அந்தத் தொகையைக் கொண்டு ‘காந்தி இயக்க மன்றம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். குளம், வடிகால்களை இளைஞர்களைத் திரட்டி மராமத்து செய்தார். தெருக்களில் சேரும் குப்பைகளைக் கூட்டிச் சுத்தம் செய்தார். மன்றத்தின் சார்பில் நாடகங்களை நடத்திய அனுபவமும் அவருக்கு உண்டு.
பள்ளிப் பருவத்திலேயே சமூக அக்கறையுடன் செயல்பட்ட முத்தரசனின் பணிகள், அலிவலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் கோவிந்தராஜின் கவனத்தை ஈர்த்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான ஜனசக்தியை முத்தரசனிடம் கொடுத்து உரக்க வாசிக்கச் சொல்வார். ஊர்ப் பெரியவர்கள் அமர்ந்து கேட்பார்கள். கட்டுரைகளை வாசித்து முடித்தவுடன், அவை குறித்து முத்தரசனின் கருத்துகளைக் கேட்பார். கருத்து, எதிர்க்கருத்து, வாதம், எதிர்வாதம் போன்றவற்றை முத்தரசனுக்கு மெல்ல மெல்லப் பயிற்றுவித்தார் கோவிந்தராஜ்.
கட்சிப் பணி
8-ம் வகுப்பின் இறுதியில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டதோடு, படிப்பை விட்ட முத்தரசன், பொதுப் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசக் குழு அலுவலகத்தில் அவரைச் சேர்த்துவிட்டார் கோவிந்தராஜ்.
தலைவர்களுக்கு டீ, சாப்பாடு, வெற்றிலைப் பாக்கு வாங்கி வருவது, கட்சி அலுவலகத்துக்கு வருவோரை உபசரிப்பது என அவரது கட்சிப் பணிகள் தொடங்கின.
பின், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் திருத்துறைப்பூண்டி ஒன்றியத் துணைத் தலைவராக முத்தரசன் தேர்வு செய்யப்பட்டார். வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கண்டித்து மதுரையில் 1969-ல் இளைஞர் பெருமன்றம் சார்பில் மாநாடு நடைபெற்றது. முத்தரசன் பங்கேற்ற முதல் அரசியல் மாநாடு அதுதான். வெண்மணியில் விவசாயத் தொழிலாளர்கள் படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, விவசாயத் தொழிலாளர்களின் நலன் குறித்து ஆராய்வதற்காக கணபதியா பிள்ளை ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது. ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை மாவட்டத்தில் (தற்போதைய தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் இணைந்த பகுதி) மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது திருத்துறைப்பூண்டியில் மறியலில் ஈடுபட்டுக் கைதானார்.
1970-ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் இருந்த 32 ஊராட்சிகளில் 23 ஊராட்சிகளில் வென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அந்தப் பகுதியில் மிகப்பெரும் அரசியல் சக்தியாக வலுப்பெற்றது. அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் நில மீட்சிப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் அழைப்பு விடுத்தது. ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஏராளமான தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டனர். போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. அந்தச் சூழலில், 300 பேருடன் ஊர்வலமாகச் சென்று வயலில் செங்கொடியை நட்டு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினார் முத்தரசன். பின்னர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
1972-ல் விவசாய பம்புசெட்டுகளுக்கான மின்கட்டண உயர்வைக் கண்டித்து நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு ஒன்றரை மாத காலம் கடுங்காவல் தண்டனையில் திருச்சி மத்தியச் சிறையில் முத்தரசன் அடைக்கப்பட்டிருந்தார்.
1970-ல் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகரக் குழுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து கட்சியில் படிப்படியாக மேலே வந்தவர், 1984-ல் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். 1997-ல் திருவாரூரில் நடைபெற்ற விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாட்டில் அதன் மாநிலச் செயலாளராகத் தேர்வானார். தொடர்ந்து 17 ஆண்டு காலம் அந்தப் பொறுப்பில் அவர் நீடித்தார்.
2015-ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலில் ஒரேயொரு முறை மட்டும் போட்டியிட்டுள்ளார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த முறை தேர்தலில் நிற்கவில்லையென்றாலும், தேர்தலின் முக்கிய முகங்களில் ஒன்றாக மிளிர்கிறார் முத்தரசன்!
தொடர்புக்கு: devadasan.v@thehindutamil.co.in