

ஆஸ்கர் விருதுகள் அளிக்கப்படுவதற்கு முதல் நாள் நானும் என் மகளும் திரையரங்குக்குச் சென்று ‘கிங் ரிச்சர்டு’ திரைப்படம் பார்த்தோம். படம் பார்த்து முடித்ததும் வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெறுவார் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாக இருந்தது. மறுநாள் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. வில் ஸ்மித் 2021-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதை வென்றுவிட்டார். இந்த விருது ‘கிங் ரிச்சர்டு’ என்கிற தந்தை பாத்திரத்தில் வில் ஸ்மித் கனகச்சிதமாக நடித்ததற்கானதுதான் என்றாலும் கறுப்பினத்தவர்கள் அனைவரின் போராட்டத்துக்குமான அங்கீகாரம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
இந்தப் படம் மிகவும் உணர்வுபூர்வமானது. தன் மகள்களின் லட்சியத்துக்காகத் தன் வாழ்க்கையையும் உழைப்பையும் இளமையையும் தூக்கத்தையும் ஆசைகளையும் விலையாகக் கொடுத்த ஒரு தந்தையின் கதை இது. டென்னிஸ் உலகத் தாரகைகளான வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் ஆகிய இருவரையும் அத்துறையில் மிளிர வைப்பதற்காக அவர்களின் தந்தை ரிச்சர்டு படும் பாடுகள் குறித்து இந்தத் திரைப்படம் பேசுகிறது. இப்படி நாம் ஒரே வாக்கியத்தில் கதையை எளிதாகச் சொல்லிவிட்டாலும், அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளும், அவரின் தவிப்புகளும் நம்மைப் பதைபதைக்க வைக்கின்றன. எவ்வளவு வலி, எவ்வளவு வேதனை.
இந்தப் படம் வெற்றியை மட்டும் பேசவில்லை, அவ்வெற்றிக்காக ஒரு தந்தை தரும் விலையை, குறிப்பாகக் கறுப்பினத்தைச் சேர்ந்த ஏழைத் தந்தை தரும் விலையைப் பேசுகிறது. ஆமிர் கானின் ‘டங்கல்’ திரைப்படம் ஏறக்குறைய இதே சாயல் கொண்டதே. ஆனால், அந்தத் தந்தையைவிட இன்னொரு கூடுதல் சுமை இந்தத் தந்தை ஒரு கறுப்பர் என்பது. தம் பிள்ளைகள் குறித்துக் கனவு காணும் கறுப்பின ஏழைத் தந்தை கூடுதல் சுமை சுமக்க வேண்டியவர். அவருடைய ஒரு நாள் என்பது எத்தகையதாக இருக்கும்?
வில் ஸ்மித்தின் கண்கள் அதைப் படம் முழுக்கப் பேசுகின்றன. தூக்கமும் சோர்வும் அப்பிய கண்கள். இரு வேறு பணிகளை இரண்டு ஷிப்ட்டுகளாகச் செய்யும், ஓய்வு நாடும் உடல்மொழி. எனினும், இடைவெளி விட்டால் கனவு எட்டாத் தூரமாகிவிடும் என்ற பரிதவிப்பில், சிரமப்பட்டேனும் சுறுசுறுப்பாக்கிக்கொள்ளும் பிரயத்தனத்தை வெளிப்படுத்தும் ரிச்சர்டாக வாழ்ந்திருக்கிறார் வில் ஸ்மித். வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் சென்று, தன் மகள்களின் மீதான நம்பிக்கையோடு, கூடவே தன்மானத்தை விட்டுவிடாத தலைநிமிர்ந்த அயராத முயற்சியை வெளிப்படுத்தி, மனிதர் நம்மை அசரடிக்கிறார்.
கட்டுக்கோப்பான குடும்பத்தை வழிநடத்தும் தந்தை. அழகான குடும்பம் என சிறுசிறு காட்சிகள் மனம் கவர்கின்றன. தனியே குழந்தைகளிடம் உரையாடுவதற்கு இந்தத் தந்தைக்கு நேரம் ஏது? எனவே, பயிற்சி முடிந்து வீடு திரும்பும் நேரங்களில்தான் அழகிய உரையாடல்கள். “மகள்களே, என் அம்மா சொல்லுவாள், உலகிலேயே மிக ஆபத்தானவள் தானாகச் சிந்திக்கும் தனித்தன்மை மிக்க பெண்தான் என. நீங்களும் அப்படியே இருக்க வேண்டும்” என்கிறது ஒரு உரையாடல். பள்ளிப் படிப்பு முக்கியம். எனவே, ‘ஸ்பெல்லிங்’ பயிற்சியெல்லாம் வண்டியில் வரும்போதுதான். பூங்காவில் பயிற்சி மேற்கொள்ளும்போதும் மறக்காமல் ‘If you fail to plan, you will plan to fail’ (‘திட்டமிடத் தவறினால் தவறிழைக்கத் திட்டமிட்டுவிடுவீர்கள்) என்ற வாசகம் வீட்டிலிருந்து கொண்டுவந்து ஒட்டப்படுகிறது.
ஏழ்மை எனினும் தன்னம்பிக்கை மிக்க தந்தை. ஒரு பயிற்சிக் கூடத்தில் இலவசம் என்று மகள்கள் இருவரும் பர்கர் உண்கின்றனர். அதைக் கீழே போடச் சொல்லும் தந்தை, இந்த உலகில் இலவசம் என எதுவும் இல்லை. இலவசங்கள் நம் கண்ணுக்குத் தெரியாத கொக்கிகள் கொண்டவை. எனவே, அவற்றிடமிருந்து விலகியே இருங்கள் என அறிவுறுத்துவார். எவ்வளவு உண்மை.
“மகளே நீ தோற்றாலும் ஜெயித்தாலும் உன்னோடு நான் இருப்பேன். கறுப்பினச் சிறுவனாக, தெரியாமல் கையைத் தொட்டுப் பணம் தந்துவிட்டதற்காக வெள்ளையர்களிடம் நான் அடிவாங்கியபோது, அப்பா நம்மைக் காப்பாற்ற மாட்டாரா என்று தேடினேன். அப்போது, ஓடி ஒளிந்துகொண்ட என் தந்தையைப் போல நான் உன்னை விட்டுவிட்டுப் போக மாட்டேன். ஆனால், நீ ஆடப் போகும் இந்த ஆட்டம் உன் எதிர்காலம் குறித்தது மட்டுமல்ல. பல நூறு கறுப்பினக் குழந்தைகளின் எதிர்காலமும் இதில் அடங்கியிருக்கிறது. நீ வெற்றி பெற்றால், பல நூறு கறுப்பினக் குழந்தைகளுக்குப் புது வாசல் திறக்கும். தோற்றால் அது மூடப்படும். அதை கவனத்தில் கொண்டு ஆடு” என்று அந்தத் தந்தை பேசும் இடம் அபாரமானது. கறுப்பர்கள் தங்கள் வெற்றிக்குக் கூடுதல் விலை தர வேண்டியவர்கள். தகுதி இருப்பினும் வெற்றிப் படிகளில் ஏற அது மட்டும் போதாது. கீழே தள்ளப்படவும் அங்கீகாரம் மறுக்கப்படவும் முக்கியக் காரணமாக அவர்களின் நிறம்தான் இருக்கிறது. இந்தியச் சூழலில், இதைச் சாதியோடு பொருத்திப் பார்க்கலாம். ஒரு கலைப் படைப்பால்தான் மானுட வேதனையின், வலியின் வீரியத்தை நுட்பமாக உணர்த்த முடியும். அதை இந்தப் படம் சிறப்பாகச் செய்கிறது.
- சித்ரா பாலசுப்ரமணியன், ‘மண்ணில் உப்பானவர்கள்’ நூலின் ஆசிரியர். தொடர்புக்கு: chithra.ananya@gmail.com