Published : 31 Mar 2022 06:30 AM
Last Updated : 31 Mar 2022 06:30 AM

பள்ளி மேலாண்மைக் குழு எதிர்கொண்டிருக்கும் ஆபத்து

சு.உமாமகேஸ்வரி

கடந்த வாரம் ‘இந்து தமிழ்’ நாளிதழில் ‘பள்ளிக் கல்வியில் ஒரு வெளிச்சக் கீற்று’ என்ற என்னுடைய கட்டுரை வெளியானது. அதில் தமிழ்நாடு அரசின் மிகச் சிறந்த முன்னெடுப்பான, பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மறுகட்டமைப்பு குறித்துக் கூறப்பட்டிருந்தது. கல்வித் துறையால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டிக் கையேட்டில் ஒரு முக்கியமான பகுதி, கல்வி உரிமைச் சட்டத்தின்படி வெளிவந்த அரசாணைகள் (Go 213, Go 42) குறிப்பிடும் பகுதியிலிருந்து மாறுபடுகிறது. அது குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தருவது அவசியமாகிறது.

பள்ளி மேலாண்மைக் குழு தொடர்பான அரசாணைகள் 213 மற்றும் 42-ன் அடிப்படையில், பள்ளி மேலாண்மைக் குழுவில் ஊராட்சித் தலைவர் இடம்பெற முடியாது. ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மட்டுமே இடம்பெற முடியும் என்பதே இங்கு நாம் தெளிவுபடுத்த வேண்டிய பகுதி. ‘Elected members’ என்ற பதமே கல்வி உரிமைச் சட்டத்தின்படி வந்த அரசாணைகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனில், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என்பவர்கள் உறுப்பினர்களே அன்றி, தலைவர்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அனைவருக்கும் கல்வித் திட்டம் (சர்வ சிக்ஷா அபியான்) உருவான காலத்தில்தான் பள்ளிகளில் கிராமக் கல்விக் குழுக்கள் (VEC -Village Education Committee) உருவாக்கப்பட்டன. பள்ளிக்கான கட்டிட நிதியை முழுவதும் SSA வழியாகக் கிராமக் கல்விக் குழுவின் வங்கிக் கணக்கு எண்ணுக்கு அனுப்பப்படும். பள்ளிக்கான எந்தச் செலவினமாக இருந்தாலும். பள்ளித் தலைமை ஆசிரியர் அப்பள்ளி VEC-ன் தலைவராக இருக்கும் ஊராட்சி மன்றத் தலைவரின் அனுமதியுடன் கையொப்பம் பெற்று, செலவுசெய்யும் முறை கடைப்பிடிக்கப்பட்டுவந்தது. பல்வேறு இடங்களில் தலைமை ஆசிரியருக்கும் இந்த ஊராட்சி மன்றத் தலைமைக்கும் தீராத பிரச்சினைகள் ஏற்பட்டன.

2009-கல்வி உரிமைச் சட்டம்தான், பெற்றோர்களால் பள்ளிகள் மேலாண்மை செய்யப்படும் முறையான ‘பள்ளி மேலாண்மைக் குழு’வின் (SMC-School Management Committee) உருவாக்கத்துக்கு வித்திட்டது. தமிழ்நாட்டில் அதற்கான அரசாணைகள் 2011, 2019 ஆகிய வருடங்களில் வெளியிடப்பட்டுப் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் நடைமுறைக்கு வந்தன. ஆனாலும், பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் SMC குறித்த விழிப்புணர்வு ஏற்படாமல் போனதுதான் கள யதார்த்தமாக இருந்தது.

இவற்றைச் சீரமைத்துப் பள்ளிகளின் மேம்பாட்டுக்குப் பெற்றோர்களின் பங்களிப்பை உறுதிசெய்யவே பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மறுகட்டமைப்பு குறித்த கூட்டத்தை, கடந்த 20.03.2022 தேதி, ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் அரசு நடத்தியது.

மீண்டும் வரும் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் குழு உறுப்பினர்களை உறுதிசெய்வதற்கான கூட்டம் நடைபெறவிருக்கிறது. தற்போது குழுவை இறுதிசெய்வதற்காக முடிவெடுக்கும் பணி நடந்துவருகிறது. இந்த நேரத்தில் நாம் கவனம் கொள்ள வேண்டியது, SMC மறுகட்டமைப்புக்கான ஆணையை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ளார். அதில் பள்ளி மேலாண்மைக் குழுவில் ஊராட்சித் தலைவர் இடம்பெற வாய்ப்பளிக்கும் வகையில் வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது.

எனில், ஏற்கெனவே தலைமை ஆசிரியர்களின் ஆளுமையின் கீழ் இருந்த பள்ளி மேலாண்மைக் குழு ஊராட்சித் தலைவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். ஊராட்சி மன்றத் தலைவர்களைப் பள்ளி மேலாண்மைக் குழுவில் இடம்பெற வைத்தால், பெற்றோர்கள் பெயரளவில் மட்டுமே தலைவராக இருக்கும் நிலை உருவாகும். ஊராட்சித் தலைவர், ஆளும் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால், அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் வகையில் ஒரு தீர்மானத்தைக்கூட இயற்ற முடியாது. மேலும், சமீபத்தில் தமிழ்நாட்டு நிதியமைச்சர் வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் வகுப்பறைக் கட்டிடங்களுக்கு ரூ.7,500 கோடி (28,000 வகுப்பறைகள்) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,500 கோடி என்ற வகையில் 5 ஆண்டுகளுக்கு இந்த நிதியை SMC வழியாகவே பள்ளிகளை மேம்படுத்தப் பயன்படுத்தப்போவதாக அறிவிப்புகள் வருகின்றன.

அப்படியானால், இந்த நிதிப் பங்கீட்டுப் பணியில் ஊராட்சி மன்றத் தலைவர்களின் தலையீடுகளும் இருக்க வாய்ப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு ஊரில் மூன்று பள்ளிகள் இருக்குமானால் அவற்றிலேயே பெரிய பள்ளியை ஊராட்சி மன்றத் தலைவர் SMC வழியாகத் தன்வசப்படுத்த வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே அந்த ஊரின், நகரின் பல குழுக்களுக்கும் அவர்களே தலைவர்களாக இருப்பார்கள். மறுபடியும் பள்ளிக்குள்ளும் உறுப்பினராகத் தலைவர்களைக் கொண்டுவருவது ஏற்புடையதாக இருக்காது.

மீண்டும் அரசியல் தலையீடுகளால் அரசுப் பள்ளிகள் சீர்கேட்டை நோக்கிச் சென்றுவிடுமோ என்ற அச்சம் கல்வி குறித்துச் சிந்திப்பவர்கள் மற்றும் செயல்படுபவர்களிடையே உருவாகியுள்ளது. ஆகவே, ஊராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள் என அனைத்துத் தரப்பிலிருந்தும் தலைவர்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் உறுப்பினர் என்ற இடத்தைப் பிடிக்காமல், மக்களால் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களை SMC உறுப்பினர்களாக நியமிக்கும் தெளிவான வழிகாட்டுதலை அரசும் கல்வித் துறையும் பள்ளிகளுக்கும் பெற்றோர்களுக்கும் தந்து SMC-ன் மாண்பைக் காப்பாற்ற வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

- சு.உமாமகேஸ்வரி, ஆசிரியர், கல்வியாளர். தொடர்புக்கு: uma2015scert@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x