Last Updated : 29 Mar, 2022 06:50 AM

Published : 29 Mar 2022 06:50 AM
Last Updated : 29 Mar 2022 06:50 AM

ஆசிரியர்களே மனம் தளராதீர்கள்!

இரண்டு ஆண்டுகளாக வீடுகளுக்குள் முடங்கியிருந்த மாணவர்கள், தற்போது மறுபடியும் பள்ளிக்கு வந்திருக்கிறார்கள். கரோனா காலத்திய தங்கள் வாழ்க்கை, அது ஏற்படுத்திய உளவியல் தாக்கத்தினூடாக வகுப்பறையை எதிர்கொள்கிறார்கள். ஆசிரியர்களோ, கரோனாவுக்கு முந்தைய வகுப்பறையை மனதில் இருத்திக்கொண்டு, மாணவர்களை அணுகுவதால், அவர்களை ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவர இயலாமல் போராடுகிறார்கள்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் ஆசியர்கள் சிலரிடம் கரோனாவுக்குப் பிறகான மாணவர்களின் வருகை மற்றும் அவர்களின் ஈடுபாடு குறித்து விசாரித்தேன். அரசுப் பள்ளி, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரின் பதில்களும் ஒன்றுபோலவே இருந்தன.

ஒழுக்கம், கல்வி, பிறரன்பு

“மாணவர்கள் ஊரடங்குக்கு முன்பு எப்படி இருந்தார்களோ அதற்கு நேரெதிராக வந்திருக்கிறார்கள்; வேறோர் உலகத்தில் உலவுகிறார்கள்; பள்ளி கூடுகைக்குக் காலையில் வரிசையில் நிற்க வைப்பதே பெரும் போராட்டம்தான்; வகுப்பறையில் எப்படி நடந்துகொள்வது என்பதையும், கற்ற விழுமியங்களையும் மறந்துவிட்டார்கள்; மேல்நிலைப் பள்ளி மாணவர்களையாவது ஓரளவு கையாள முடிகிறது. ஆனால், 6-8-ம் வகுப்பு மாணவர்களுடன் அதிகம் போராட வேண்டியுள்ளது. மாணவர்களால் சிந்தித்து, நிதானமாக ஒரு வேலையைச் செய்ய இயலவில்லை; நன்கு படிக்க வேண்டும், நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும், ஆசிரியர் கொடுக்கும் வேலையை விரைவாகச் செய்து முடிக்க வேண்டும் என்கிற ஆர்வமே இல்லாமல் சோர்வாகவும் சோம்பேறியாகவும் இருக்கிறார்கள்.

உடன் படிக்கும் மாணவர்களிடம் அன்பு காட்டுவது, மன்னிப்பது, பொறுத்துக்கொள்வது, விட்டுக்கொடுப்பது, யோசித்து வார்த்தைகளைப் பயன்படுத்துவதையெல்லாம் பார்ப்பது அரிதாக உள்ளது; உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தொடக்கப் பள்ளி மாணவர்கள்போல நடந்துகொள்கிறார்கள்; மற்ற மாணவர்களைச் சட்டென்று கைநீட்டி அடித்துவிடுகிறார்கள், கோபத்தில் அதிகமாகக் கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்கள்” என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இதுதான் நிலை. தினமும் பள்ளிக்குச் செல்ல வேண்டியதாலும் வீட்டுப்பாடங்களாலும் புதிதாக ஓர் ஒழுங்கைப் பின்பற்ற வேண்டியதாலும் கவலையிலும் விரக்தியிலும் மாணவர்கள் உழல்கிறார்கள். சமூகம் ஏற்றுக்கொண்ட ஒழுங்குக்கு மாறான செயல்களைச் செய்கிறார்கள். “மாணவர்களுக்கு, தங்கள் கருத்தைச் சொல்லத் தெரியவில்லை; நாங்கள் எதிர்பார்த்ததைவிட, மனதளவில் எங்களை நாங்கள் தயாரித்துக்கொண்டிருந்ததைவிட அதிக சவாலை மாணவர்களிடம் எதிர்கொள்கிறோம்” என்பதைப் பிற நாட்டு ஆசிரியர்களிடமும் கேட்க முடிகிறது.

கரோனா காலம் பல்வேறு மன அழுத்தங்களைக் குழந்தைகளின் மீது திணித்துள்ளது. திடீரென நின்றுபோன பள்ளி வாழ்க்கை, உறுதியற்ற எதிர்காலம், பெற்றோரின் வேலையிழப்பு, வறுமை, பெற்றோர் அல்லது உறவினர்களின் மரணம், மற்றும் கூலி வேலைக்குத் திரும்பிய, தங்களை அழகுபடுத்திக்கொண்டு உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதையே மறந்திருந்த குழந்தைகள் வகுப்பறைக்குள் வந்திருக்கிறார்கள். மனஅழுத்தத்தை அடுக்கடுக்காகச் சுவர்போல எழுப்பி, வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தவர்கள், புதிய இடம், சூழல், ஒழுங்கு அனைத்தையும் அனுசரித்துச் செல்வதில் சிக்கலை எதிர்கொள்கிறார்கள்.

அனுசரிப்புச் சிக்கலில் (Adjustment problem / disorder) உழலும் மாணவர்களால் எதிலும் கவனம் செலுத்த இயலாது. சரியாகத் தூங்க இயலாது. பிறருடன் எளிதில் பழகவும் இணைந்து செயல்படவும் இயலாது. பதற்றம், ஆர்வமின்மை, பசியின்மை, கவலை, எரிச்சல், தன்னம்பிக்கைக் குறைவு, மனச்சோர்வு, வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் கூடுதல் மனஅழுத்தம் ஆகியவற்றை எதிர்கொள்வார்கள். இவை அனைத்தும் நடத்தைசார் பிரச்சினைகளாகவும் வெளிப்படும். வலிய சண்டைக்குச் செல்வார்கள். அதீதமாகக் கோபப்படுவார்கள், பொருட்களை உடைப்பார்கள், தங்களையும் காயப்படுத்திக்கொள்வார்கள். இதில், பாலின வேறுபாடோ, கலாச்சார வேறுபாடுகளோ கிடையாது. எல்லாருக்கும் எல்லா அறிகுறிகளும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனாலும், மனநல ஆலோசகரின் வழிகாட்டுதல் தேவைப்படும் மாணவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எனவே, மாணவர்களைக் கவனமாகக் கையாளுங்கள். மாணவர்கள் வந்துவிட்டார்கள், அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். அவர்கள் தவறவிட்ட பாடங்களை உடனடியாகக் கற்றுக்கொடுத்துப் பந்தயத்தில் ஓட வைக்க வேண்டும் என்கிற உங்களின் ஆர்வத்தையும் வேகத்தையும் கொஞ்சம் குறையுங்கள். மாணவர்களைத் தவறாக நினைக்காதீர்கள், திட்டாதீர்கள். உங்கள் வேகத்தைத் தாங்கும் சக்தியும், ஆர்வத்தை உள்வாங்குகின்ற ஆற்றலும் அவர்களுக்கு ஏற்பட கால அவகாசம் தேவை.

நாம் என்ன செய்யலாம்?

1. அனுசரிப்புச் சிக்கலில் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த உளவியல் சிகிச்சை, அவர்களைப் பேச வைப்பதும் அவர்களுடன் பேசுவதுமாகும். இச்சிகிச்சையைத் தனிநபருக்கும் குழுவாகவும் வழங்கலாம். நீங்கள் உங்கள் வகுப்பில் உள்ள பிள்ளைகள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாகப் பேசிவிட்டீர்களா? இரண்டு ஆண்டுகளில் அவர்கள் குடும்பத்தில் நடந்த நல்லது கெட்டது உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் உங்களால் அவர்களை நெறிப்படுத்த இயலும். தேவைப்படின், முக்கியமானவற்றை மற்ற ஆசிரியருடன் பகிர்ந்துகொண்டு அம்மாணவர்களை வலுப்படுத்த முடியும்.

2. மாணவர்களுக்கு மத்தியில் இணக்கம் ஏற்பட என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசியுங்கள். ஏனென்றால், “குழுவாக இணைந்து செய்யுங்கள்” என ஓர் ஆசிரியர் சொன்னவுடன், “அதிக நாட்கள் பள்ளிக்கே வராமல் இருந்ததால், எப்படி மற்றவர்களுடன் பழக வேண்டும் என்பதே மறந்துபோனதுபோல உள்ளது” என்று ஒரு மாணவி சொன்னதை எளிதில் நாம் கடந்துவிட முடியாது.

3. தங்கள் உணர்வுகளைச் சமநிலையில் வைத்துக்கொள்ள, “நேரே அமருங்கள். கண்களை மூடுங்கள். வயிற்றில் உள்ளங்கையை வையுங்கள். மூச்சை நன்கு இழுத்து மெல்ல விடுங்கள். வயிறு முன்னும் பின்னும் வந்துபோவதைக் கவனியுங்கள். வேறு எண்ணங்கள் வந்தாலும் கவலை வேண்டாம். மறுபடியும் வயிற்றுக்குக் கவனத்தைக் கொண்டுவாருங்கள். வேறு எதையும் வலிந்து யோசிக்க வேண்டாம்” என்று, மிகவும் எளிமையான மனம்நிறை கவனத்துக்கான (mindfulness) மூன்று நிமிட மூச்சுப் பயிற்சியைக் கற்றுக்கொடுங்கள்.

4. நீண்ட விடுமுறை, குடும்பச் சூழல், தனிமை உள்ளிட்டவற்றால், நீங்களுமேகூடச் சோர்ந்துதான் போயிருப்பீர்கள். எளிதில் கோபப்படுகிறவர்களாக, பொறுமையற்றவர்களாக மாறியிருப்பீர்கள். உங்களைச் சரிசெய்துகொள்ளவும் முயற்சிசெய்யுங்கள்.

கல்விப்புலத்தில் ஆற்றுப்படுத்துநர்கள் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை கரோனாவுக்குப் பிந்தைய காலம் கற்றுக்கொடுத்திருக்கிறது. நல்ல சமுதாயத்தைக் கட்டமைக்க ஆசிரியர்கள் போராடுகிறார்கள். மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கியுள்ள தமிழ்நாட்டு அரசு, அனைத்து கலைக் கல்லூரிகளிலும் உளவியல் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பையும் தொடங்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் கல்லூரியிலும் ஆற்றுப்படுத்துநருக்கான பணியிடத்தை உருவாக்குவதுடன் வேலைக்கான உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும். உடல் நலமும் மனநலமும் மிகுந்த சமுதாயத்தைக் கட்டமைக்க வேண்டியது நல்லாட்சியின் கடமையல்லவா!

- சூ.ம.ஜெயசீலன், ‘உஷ்… குழந்தைங்க பேசுறாங்க!’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x