Published : 24 Mar 2022 07:04 AM
Last Updated : 24 Mar 2022 07:04 AM
காசநோய் என்ற தொற்றுநோய் 15 கோடி ஆண்டுகளாக உலகில் பரிணமித்துவந்திருந்தாலும் அதற்கான காரணி 140 ஆண்டுகளுக்கு முன்புதான் கண்டறியப்பட்டது. 1882, மார்ச் 24-ம் தேதி ஜெர்மானிய மருத்துவர் ராபர்ட் கோச் தனது தொடர் ஆய்வுகளின் மூலம் காசநோய் என்பது மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது என்பதைத் தக்க சான்றுகளோடு நிறுவினார். காசநோய்க்கு எதிரான பல நூற்றாண்டு கால சமரில், சீரிய முன்னேற்றத்துக்கு வழிவகுத்த ராபர்ட் கோச்சுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 1905-ல் வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி, காசநோயின் காரணியான டியூபர்குலோசிஸ் பாக்டீரியாவைப் பிரித்தெடுக்கும் வழிமுறையை ராபர்ட் கோச் கண்டறிந்த தினமான மார்ச் 24-ஐ உலகக் காசநோய் தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
காசநோய் ஏறத்தாழ 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களைப் பீடித்திருக்கக்கூடும் என்று ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் ‘உட்கொள்ளுதல்’ எனும் பொருள்படும் ‘ஸ்காஸெபெத்’ என்ற ஹீப்ரு சொல் காசநோயைக் குறிக்க இரு இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பண்டைய கிரேக்கத்தில் ‘தைசிஸ்’ என்று அறியப்பட்ட காசநோயை நுரையீரலை அரிக்கும் ஒரு கொடிய உயிர்க்கொல்லி நோய் என்று ஹிப்போகிரட்டீஸ் துல்லியமாகத் தனது குறிப்புகளில் பதிவிட்டிருக்கிறார்.
இடைக்காலத்தில், நிணநீர்க் கழலைகளைத் தாக்கும் நோய் என்று வரையறுக்கப்பட்ட காசநோய், ‘ஸ்க்ரோஃபுலா’ என்றும் அறியப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ‘அரச தீண்டுதல்’ எனும் நடைமுறையின் மூலம் காசநோயைக் குணப்படுத்த முடியும் என்று நம்பி, நோயாளிகளை அரசர்கள் தங்கள் கரங்களால் தீண்டும் நடைமுறை பழக்கத்தில் இருந்துவந்திருக்கிறது. 18-ம் நூற்றாண்டில் மட்டும் ஐரோப்பாவின் 9% இறப்புகளுக்குக் காரணமாகக் காசநோய் இருந்திருக்கிறது.
1950-களில் காசநோய்க் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும் மருந்துகள் கண்டறியப்படும் வரையிலும் சுத்தமான காற்று, சத்துள்ள உணவு, குறைவான உடற்பயிற்சி, நல்ல ஓய்வு என்பவையே காசநோய்க்கான மருத்துவமாக இருந்துவந்தது. காசநோயாளிகளுக்கு இவற்றை வழங்கும் மருத்துவச் சாலைகளாக 1859 முதல் ஒரு நூற்றாண்டு காலம் வரையிலும் சானடோரியங்கள் விளங்கின. சானடோரியங்களால் நோய் குணமடைதல் என்பது பெருமளவில் இல்லையென்றாலும் நோய் பரவுதல் விகிதம் கட்டுக்குள் இருந்தது. இங்கிலாந்தில் மருத்துவம் பயின்று திரும்பிய மருத்துவர் டேவிட் ஜேக்கப் ஆரோன் சவரிமுத்துவால் தமிழகத்தின் முதல் சானடோரியம் 1928-ல் சென்னை தாம்பரத்தில் அமைக்கப்பட்டது.
விடுதலை அடைந்தபோது, இந்தியாவில் கிட்டத்தட்ட 20 லட்சம் காசநோயாளிகள் இருந்த நிலையில் 23,000 சானடோரியம் படுக்கைகள் மட்டுமே நாட்டில் இருந்தன. போதிய படுக்கைகளின்றி நோயாளிகள் வாடிய நிலையில், சானடோரியங்களுக்கு மாற்றாக வேதிச்சிகிச்சையை முன்னெடுக்கும் நோக்கில், இந்தியாவில் மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒன்றிய அரசின் சார்பு அமைப்பான இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.), தமிழக அரசு, உலக சுகாதார ஆய்வு நிறுவனம், பிரித்தானிய மருத்துவ ஆய்வுக் கழகம் ஆகியவற்றின் துணையுடன் பிரித்தானிய மருத்துவ ஆய்வுக் கழகத்தைச் சார்ந்த மருத்துவர் வாலஸ் ஃபாக்ஸின் தலைமையில் 1956-ல் காசநோய் வேதிச்சிகிச்சை மையத்தை சென்னையில் நிறுவியது.
சானடோரியங்களில் மட்டுமே காசநோய்க்கு மருத்துவம் பார்க்க இயலும் என்று உலகம் முழுவதும் நம்பப்பட்ட வேளையில், சென்னையில் அமைக்கப்பட்ட காசநோய் வேதிச்சிகிச்சை மையம் நடத்திய புகழ்பெற்ற மெட்ராஸ் ஆய்வானது, காசநோய் சிகிச்சை முறை குறித்தான உலகின் நம்பிக்கைகளை மாற்றியமைத்தது. மொத்தம் 193 காசநோயாளிகளைக் கொண்டு நடத்தப்பட்ட மெட்ராஸ் ஆய்வில், நோயாளிகள் அவரவர் இல்லங்களிலும் தாம்பரம் சானடோரியத்திலுமாக இரு குழுக்களாகப் பிரித்து, ஒரே வகையான வேதிச்சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.
நல்ல காற்றோட்டம், போதுமான அளவு ஓய்வு, சத்துள்ள உணவு, தகுதிவாய்ந்த மருத்துவ ஊழியர்களைக் கொண்டு தொடர் கண்காணிப்பு என சானடோரியத்தில் கிடைக்கும் சிறப்பு வசதிகள் ஏதுமில்லாத நிலையிலும், இல்லங்களில் சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமடைந்தவர்களின் விகிதம் சானடோரியத்துக்கு நிகராக இருந்தது 12 மாத தொடர் சிகிச்சைக்குப் பிறகான ஒப்பீட்டில் தெரியவந்தது அனைவருக்கும் வியப்பளித்தது. மெட்ராஸ் ஆய்வின் முடிவுகள் உலகெங்கிலும் சானடோரியங்களில் இடமின்றி வாடிய பல நோயாளிகளுக்குப் புது நம்பிக்கைச் சுடரை ஏற்றியதோடல்லாமல், காசநோய் சிகிச்சை வழிமுறையில் ஒரு புதிய மாற்றத்தையும் ஏற்படுத்தின.
1964-ம் ஆண்டு இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் நிரந்தர உறுப்பு நிறுவனமாக மேம்படுத்தப்பட்ட காசநோய் வேதிச்சிகிச்சை மையம், காசநோய்க்கான வேதிச்சிகிச்சை குறித்த ஆய்வுகள் மட்டுமின்றிக் காசநோய் ஏற்படுத்தும் பொருளாதாரச் சிக்கல்கள், நோய்த்தொற்றியல், காசநோய் எதிர்ப்பு, மருந்தகவியல் என காசநோய் குறித்தான பல்வேறு ஆய்வுகளைத் தொடர்ந்து செய்துவந்தமையால், அதன் பன்னோக்குச் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு 1978-ல் ‘காசநோய் ஆராய்ச்சி மையம்’ எனவும் பின்னர் 2011-ல் ‘தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம்’ எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மருத்துவ ஆய்வு வகைமைகளில் உயரிய மதிப்புமிக்க ஆய்வு முறையாகக் கருதப்படும் சார்பற்ற பகுப்புமுறை மருத்துவ ஆய்வுகள் நிகழ்த்தப்படுவது இந்நிறுவனத்தின் தனிச்சிறப்பாகும்.
காசநோய் குறித்தான முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட சார்பற்ற பகுப்புமுறை ஆய்வுகள் இதுவரையிலும் இந்நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகளவில் காசநோய் மருத்துவத்தின் அடிநாதமாக இன்று விளங்கும் குறுகிய கால நேரடிக் கண்காணிப்புச் சிகிச்சை முறையான டாட்ஸ் சிகிச்சை இந்நிறுவனத்தின் தொடர் ஆய்வுகளால் கண்டறியப்பட்டு, மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறை என்பது குறிப்பிடத்தக்கது. காசநோய்க்கும் மனிதர்களுக்கும் பல நூற்றாண்டுகளாக முடிவின்றி நடந்துவரும் சமரில் பன்மருந்து எதிர்ப்புக் காசநோய், முற்றியநிலை பன்மருந்து எதிர்ப்புக் காசநோய், எச்.ஐ.வி.யுடன் அணிசேர்க்கை எனக் காசநோய்க் கிருமி தனது இருப்பை உறுதிசெய்துகொள்வதற்காக வெவ்வேறு வகைகளில் பரிணாம வளர்ச்சியடைந்து மனிதர்களை நோக்கிக் கணைகளை வீசிவரும் சூழலில், மானுடம் காப்பதற்காக ‘தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன’மும் தனது களத்தை விரிவாக்கி, தொடர்ந்து வெவ்வேறு ஆய்வுகளைச் சமரசமின்றிச் செய்துவருகிறது.
கரோனா பெருந்தொற்றைவிடவும் அதிக உயிர்களைப் பலிகொண்டிருக்கும் காசநோய், இம்மண்ணிலிருந்து அழித்தொழிக்கப்படும் நாள்வரையில் ‘உலகக் காசநோய் நாள்’ என்பது கொண்டாட்டத்துக்குரிய தினமாக அல்லாமல், காசநோய் இதுவரை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும், அதனைத் தடுத்து நிறுத்தும் முறைகள் குறித்தும் மக்களிடம் புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பாகவே அமையும்.
- திருமாறன் செங்குட்டுவன், மருத்துவர், மருத்துவ அலுவலர், தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், சேத்துப்பட்டு. தொடர்புக்கு: dr.thirutamizh@gmail.com
இன்று உலக காசநோய் தினம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT