Last Updated : 24 Mar, 2022 06:59 AM

Published : 24 Mar 2022 06:59 AM
Last Updated : 24 Mar 2022 06:59 AM

வேளாண் பட்ஜெட்: எதிர்பார்ப்புகள் தொடர்கின்றன

அகில இந்திய அளவில் தமிழ்நாடு ஒரு முன்மாதிரியை உருவாக்கியுள்ளது. விவசாயத்துக்கென தனி நிதிநிலை அறிக்கையை வழங்குவதாகக் கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் திமுக குறிப்பிட்டிருந்தபடி, ஆகஸ்ட் 14, 2021 அன்றும் மார்ச் 19, 2022 அன்றும் இதுவரை இரண்டு வேளாண் நிதிநிலை அறிக்கைகள் தமிழ்நாடு அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

வேளாண் நிதிநிலை அறிக்கையின் வெற்றி என்பது, அதன் பலன்கள் கடைசி விவசாயியையும் சென்று சேர்கிறதா என்பதைப் பொறுத்தே அமையும். தமிழ்நாட்டின் நெல் சாகுபடிப் பரப்பு கடந்த ஆண்டைவிட 4,86,000 ஏக்கர் இப்போது கூடுதலாகிறது. அம்பாரம் அம்பாரமாக அறுவடையான நெல்மணிகள் குவிக்கப்படுகின்றன. ஆனால், விவசாயிகளின் வாழ்க்கை அந்த அளவுக்கு உயர்ந்ததா, குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்த எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரை அடிப்படையில் விவசாய விளைபொருளானது பலன் ஈட்டுகிறதா என்பதெல்லாம் முக்கியக் கேள்வியாகும்.

அருகமை மாநிலங்களுடன் நாம் ஒப்பிடலாம். கேரளத்தில் குவிண்டாலுக்கு நெல்லின் விலை ரூ.2,630. ஆந்திரத்தில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.13,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தெலங்கானாவில் ரயத்பந்த் திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. உத்தர பிரதேசம், பஞ்சாப், மஹாராஷ்ரம் ஆகிய மாநில விவசாயிகளும் பல கூடுதல் உரிமைகளைப் பெற்றுள்ளனர். திமுக அரசோ தன் தேர்தல் அறிக்கையில் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்குவதாக அறிவித்தது. திமுக ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டே தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றும் என எல்லோரும் எதிர்பார்த்தனர்.

நடக்கவில்லை. இப்போது 2-வது நிதிநிலை அறிக்கையிலும் அந்த வாக்குறுதிகள் நிறைவேறவில்லை. அதேசமயம், சீர்மிகு நெல் சாகுபடித் திட்டம் என்று கூறி, அதற்கு ரூ.32 கோடியே 42 லட்சம் என மதிப்பீடு காட்டப்படுகிறது. இதேபோல்தான் கரும்புக்கும் குவிண்டாலுக்கு ரூ.4,000 வழங்குவதாகத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. எப்போது இந்த வாக்குறுதிகள் அமலாக்கப்படும் என்றும் தெரியவில்லை. நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான கடன் உதவி ரூ. 1,83,435 கோடி வழங்கும் விரிவான திட்டம் என்ற அறிவிப்பு உள்ளது.

2022-23-ல் திறன் சார்ந்த கடன் திட்டம் என்று இது அறிவிக்கப்படுகிறது. ஆனால், இதுவும் நடக்குமா என்ற அச்சமே விவசாயிகளிடம் உள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கை 35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆயினும் இப்போது 13 லட்சம் பேர் மட்டுமே நகைக் கடன் தள்ளுபடிக்கு உரியவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய கால மறுமாற்றுக் கடன் தள்ளுபடி ஆகுமா என்ற கேள்வியும் எழுகிறது.

நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும் முன்பு பல கட்டங்களில் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டன. எனினும், விவசாயிகளின் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. குறிப்பாக, அறுவடையான 4 மாதங்களில் வேளாண்மைக் கடனைத் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி வழங்கலாம் என ஆலோசனை கூறப்பட்டது. ஏக்கருக்கு ரூ.40,000 வேளாண் கடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எவற்றையும் வேளாண் துறை கண்டுகொள்ளவேயில்லை.

இதேபோல், பயிர்க் காப்பீடு வழங்குவதிலும் சிக்கல்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றத்தில் இதற்காகத் தனியே வழக்குகள் போடப்படுகின்றன. தனியார் ஏஜெண்டுகளிடம் பயிர்க் காப்பீட்டை ஒப்படைக்கக் கூடாது என்ற கோரிக்கையும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. விவசாயம் டிஜிட்டல் மயமாகும், உயர்தரமான மென்பொருள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும், கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட் வாங்க மானியம் வழங்கப்படும் என்றெல்லாம் நிதிநிலை அறிக்கை கூறுகிறது.

இலவச மின்சாரத்துக்கு ரூ.5,15,157 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு அறிவித்த 1 லட்சம் பேருக்கான இலவச மின் இணைப்பு இன்னும் முறையாக வழங்கப்படவில்லை. இத்தகு மின் இணைப்புக்காக ஏற்கெனவே காத்திருப்போரின் எண்ணிக்கை 4,00,000-க்கும் அதிகமாகும். சிறுகுறு விவசாயிகள் நலன் கருதிப் பூந்தோட்டங்களுக்கான மின் இணைப்புகளை இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் செவிமடுக்கப்படவில்லை.

சென்ற ஆண்டு நிறுத்தப்பட்ட குடிமராமத்துப் பணிகள் இந்த ஆண்டு நடக்குமா? தூர்வாரும் பணிகளைத் தேர்வுசெய்யவும் கண்காணிக்கவும், பாசனதாரர் சபை அமைக்கப்படுமா என்பதிலும் தெளிவு இல்லை. மாறிவரும் பருவநிலைகளின் காரணமாக அடிக்கடி ஈரமாகும் நெல்லுக்கு 22% என்று கொள்முதல் தளர்வு இருக்கலாம். 60,000 விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 2023 ஆண்டை சர்வதேசச் சிறுதானிய ஆண்டாக ஐ.நா. சபை அங்கீகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இதற்கான சிறப்பு நிதிஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சிறுதானிய உற்பத்தியை அரசு கொள்முதல் செய்யாவிட்டால் இத்திட்டம் வெற்றிபெறுவது சந்தேகமே.

10 லட்சம் பனை விதைகள், மண்புழு உரம் உள்ளிட்ட சில நம்பிக்கைக் கீற்றுகள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிகின்றன. அதே சமயம், சென்ற நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திருச்சி-நாகை பகுதி வேளாண் பெருந்தொழில்தடம் அறிவிப்பு செயல் வடிவம் பெறவில்லை. வேளாண் தொழிலை நம்பியுள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. தமிழ்நாட்டில் 7வகையான விவசாய மண்டலங்கள் உள்ளன. அவற்றுக்கு வேளாண் கிளினிக்குகள், வேளாண் டாக்டர்கள் இப்போது தேவைப்படுகின்றனர். மண் மற்றும் நீர்வள ஆய்வு, எந்த மண்ணில் எந்தப் பயிர்வகையைச் சாகுபடி செய்யலாம் என்பது பற்றிய ஆய்வு, தாவர வளர்ச்சியின் ஊடுருவும் திறன் ஆகியவற்றை ஆய்வுசெய்வது வேளாண் டாக்டர்களின் பணிகளாக இருக்கலாம்.

வேளாண் அமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டங்களில் விவசாயிகளுக்கான சிறப்புத் திட்டமான ‘கிருஷி விக்யான் கேந்திரா’ எனப்படும் விவசாய அறிவியல் மையம் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படாமை குறித்து விவசாயிகளால் வினவப்பட்டது. அந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டவில்லை. பயிர்களுக்கு உரம் தேவைப்படும் தருணங்களில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனைக் களையும் வகையில் உர உற்பத்தியையும் விநியோகத்தையும் அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரிப் படுகை பகுதிகளில் கச்சா எண்ணெய்க் கிணறுகளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இதுகுறித்து விவசாயிகள் முறையீடு செய்ய காவிரிப் படுகைப் பகுதியிலேயே ஒரு அலுவலகம் தொடங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் விவசாயிகளிடம் உள்ளது.

தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை என்பது உழவர்களால் கொண்டாடப்படுகிறது. அதே நேரத்தில், நிதிநிலை காரணங்களால் தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்கு மேலும் சில ஆண்டுகளேனும் விவசாயிகள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது.

- வெ.ஜீவகுமார், வழக்கறிஞர், விவசாயிகள் உரிமைச் செயற்பாட்டாளர், தொடர்புக்கு: vjeeva63@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x