Published : 22 Mar 2022 07:20 AM
Last Updated : 22 Mar 2022 07:20 AM

நிலத்தடி நீர் விடுக்கும் எச்சரிக்கை!

நிலத்தடி நீர் அதிவேகமாகச் சுரண்டப்படுவதன் ஆபத்தை எச்சரிக்கும் வகையில், மார்ச் 22 உலக தண்ணீர் தினத்துக்காக இந்த ஆண்டு ஐநா சபையால் அறிவிக்கப்பட்டுள்ள தலைப்பு ‘நிலத்தடி நீர்: கண்ணுக்குத் தெரியாததைத் தெரியவைத்தல்’. உலக மொத்த மக்களின் குடிநீர்த் தேவையில் 50%-மும், விவசாயத் தேவைக்கு 40%-மும், தொழில் துறைக்குத் தேவைப்படும் நீரில் மூன்றில் ஒரு பங்கும் நிலத்தடி நீர் மூலம் தற்போது பூா்த்திசெய்யப்படுகிறது. இந்தியாவில் நிலத்தடி நீரின் பங்களிப்பு இதைவிட மிக அதிகம்.

ஆனால், நிலத்தடி நீர் பற்றி வரும் தகவல்கள் பயத்தை ஏற்படுத்துகின்றன. மத்திய நீர் வளத்துக்கான நிலைக்குழுவின் 23-வது (2017-18) அறிக்கையின்படி 2020-ல் 21 பெருநகரங்களில் நிலத்தடி நீர் கடுமையாகக் குறைந்து, 10 கோடி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படக் கூடும் என எச்சரித்தது. ஆற்று நீரையும், குளத்து நீரையும் பல்வேறு தேவைகளுக்குப் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்திய நாம், 1970-களுக்குப் பிறகு பெரும்பாலும் நிலத்தடி நீரைச் சார்ந்திருக்கும் சூழலை உருவாக்கிவிட்டோம்.

அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் நாடு இந்தியா என்ற தேவையற்ற பெயரைப் பெற்றுவிட்டோம். விவசாயம், குடிநீர், தொழில் தேவைகளுக்கு நிலத்தடி நீர் தற்போது முதன்மை நீராகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. நிலத்தடி நீர் வேகமாக உறிஞ்சப்படுவதால் நீருக்கான செலவு அதிகரிப்பதுடன் சுற்றுச்சூழலில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மத்திய நிலத்தடி நீர் வாரியம் எச்சரித்துள்ளது.

2021-ல் நிலத்தடி நீர் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரப்படி, ஓர் ஆண்டில் பயன்படுத்தக்கூடிய மொத்த நிலத்தடி நீர் 398 கன கிலோ மீட்டா் (BCM), இதில் தற்போது ஏறக்குறைய 245 கன கிலோ மீட்டர் நீர் உறிஞ்சப்படுகிறது. தமிழகத்தில், ஓர் ஆண்டில் பயன்படுத்தக்கூடிய நிலத்தடி நீரின் அளவு 17.69 கன கிலோ மீட்டர், இவற்றில் 83%-ம் தற்போது பயன்படுத்தப்பட்டுவிட்டது. நிலத்தடி நீரை அதிகமாகச் சுரண்டும் பெரிய மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருப்பதோடு, கணக்கிடப்பட்டுள்ள 1,166 வட்டங்களில், 409 வட்டங்கள் தவிர, மீதமுள்ள வட்டங்களில் நிலத்தடி நீரின் உறிஞ்சும் அளவு மோசமாக உள்ளது.

காரணங்கள்

நிலத்தடி நீர் உறிஞ்சுதல் பற்றிய பிரச்சினைகள் பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னால் இந்தியாவில் இல்லை. இது 1970-க்குப் பிறகு முற்றிலும் மாறிவிட்டது. பயிர் சாகுபடியில் நிலையான நீர்ப்பாசனம் தேவைப்பட்ட காரணத்தால், நிலத்தடி நீர் உபயோகத்தில் பெரும் புரட்சியுடன் வளர்ச்சியும் ஏற்பட்டது. 1970-களில் ஆழ்குழாய்க் கிணறு தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட அதிதீவிர வளர்ச்சியால், 1990-க்குப் பிறகு இதன் உபயோகம் கடுமையாக அதிகரித்துள்ளது.

அதிக நீர் தேவைப்படுகின்ற நெல், கோதுமை, கரும்பு, வாழை போன்ற பயிர்களை விவசாயிகள் அதிகமாகப் பயிரிடத் தள்ளப்பட்டதாலும், நிலத்தடி நீர்த் தேவை அதிகரித்தது. உதாரணமாக, 1960-61-ல் வெறும் 7.30 மில்லியன் ஹெக்டேர்களாக இருந்த நிகர நிலத்தடி நீர்ப்பாசனப் பரப்பளவு, 46 மில்லியன் ஹெக்டேர்களாக 2018-19 அதிகரித்துவிட்டது. மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவில் நிலத்தடி நீரின் பங்கு 29%-லிருந்து 68% ஆக தற்போது அதிகரித்துள்ளது. 1990-91-க்குப் பிறகு ஏற்பட்ட அபரிமித நகர வளர்ச்சியாலும், தொழில் வளர்ச்சியாலும் நீரின் தேவை பன்மடங்காக அதிகரித்துவிட்டன. அணைகள், குளங்கள் மூலமாகக் கிடைக்கும் நீரின் அளவில் 1990-லிருந்து பெரிய வளர்ச்சி பெறாத காரணத்தால், நிலத்தடி நீரைப் பல்வேறு தேவைகளுக்காகச் சார்ந்திருக்கும் சூழல் ஏற்பட்டுவிட்டது.

நிலத்தடி நீரைத் தொடர்ந்து உறிஞ்சுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, பொருளாதாரச் சிக்கல்களும் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. நீர்மட்டம் குறைவதால் குறைந்த ஆழம் கொண்ட கிணறுகளின் பயன்பாட்டுக் காலம் விரைவில் முடிவடைகிறது. 2017-ல் வெளியிடப்பட்டுள்ள குறுநீர்ப் பாசனக் கணக்கெடுப்பின்படி, 2006-07 முதல் 2013-14 வரையிலான காலகட்டத்தில் 4.14 லட்சம் திறந்தவெளிக் கிணறுகள் இந்தியாவில் பயனற்றுப் போய்விட்டன. தமிழக அரசின் புள்ளிவிவரப்படி, 2000-01-ல் மொத்தமாக விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்ட 18.33 லட்சம் கிணறுகளில் 1.59 லட்சம் கிணறுகள் பயனற்றுப் போய்விட்டன. நிலத்தடி நீரை ஆழ்துளைக் கிணறுகள் அதிகம் உறிஞ்சுவதால், குறைந்த ஆழமுடைய கிணறுகளில் நீர் வற்றி, ஏழை விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால், கடலோர மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீரின் தன்மையை மாற்றிவிட்டது. தமிழகத்தில் மொத்தமுள்ள 1,166 வட்டங்களில், 34 வட்டங்களில், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. அதிகமாக நிலத்தடி நீர் சுரண்டப்படுவதால், அரசுக்கும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய மின் மோட்டார்களை அதிக நேரம் இயக்க வேண்டியிருப்பதால் மின்சாரம் அதிகமாகச் செலவாகிறது.

செய்ய வேண்டியவை

ஏறக்குறைய 85% குடிநீர்த் தேவையைப் பூா்த்திசெய்வதுடன், நிலத்தடி நீரின் பங்கு மொத்த இந்திய விவசாய உற்பத்தியில் மட்டும் ஏறக்குறைய மூன்றில் இரண்டு மடங்கு என மதிப்பிடப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை முறைப்படுத்தி அதன் பயன்பாட்டைச் சீா்ப்படுத்தாவிட்டால், மிக மோசமான விளைவுகள் நேரிடும். அதிகமாக நிலத்தடி நீரைச் சுரண்டுவதைக் கட்டுப்படுத்தக் கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும்.

நிலத்தடி நீர்ச் சுரண்டலை நெறிமுறைப்படுத்துவதற்காக மத்திய நீர்வளத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘நிலத்தடி நீர் காப்புக் கட்டணம்’ சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக, பெரிய நிறுவனங்கள் அளவுக்கு மேலாக, நிலத்தடி நீரைச் சுரண்டி விற்பனை செய்வதைத் தடைசெய்ய வேண்டும். குளங்களில் மழை நீரைச் சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கச்செய்வதுடன், மழை நீர்ச் சேமிப்புத் திட்டத்தை ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் அமல்படுத்தி, நீரைப் பூமிக்குள் அனுப்புவதற்கான திட்டங்களை அரசுகள் உருவாக்க வேண்டும்.

இந்தியாவில் மொத்தமாக உள்ள 6,965 வட்டங்களில், 2,529 வட்டங்களில் நிலத்தடி நீரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இப்பகுதிகளில் சொட்டு நீர்ப்பாசனம் மூலமாகப் பயிர்ச் சாகுபடி அதிகம் செய்தால், நிலத்தடி நீர்த் தேவையைக் குறைக்க முடியும். முக்கியமாக, வேகமாகக் குறைந்துவரும் நிலத்தடி நீரால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் பற்றிய நீராதார அறிவையும் (water literacy), அது தொடர்பான தகவல்கள் குறித்தும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம்.

- அ.நாராயணமூர்த்தி, இந்திய விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையத்தின் முன்னாள் முழு நேர உறுப்பினா், புதுடெல்லி. தொடர்புக்கு: narayana64@gmail.co

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x