Published : 18 Mar 2022 06:10 AM
Last Updated : 18 Mar 2022 06:10 AM
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் நேரடிப் பொறுப்பும் வாய்ப்புகளும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே அதிகம் உள்ளது. குடிநீர் வசதி, கால்வாய் வசதி, சாலைகள், தெருவிளக்கு வசதி, சுற்றுப்புறச் சுகாதாரம் என மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டியது உள்ளாட்சி நிர்வாகமும் அதன் பிரதிநிதிகளும்தான். அதனாலேயே உள்ளாட்சித் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஆனாலும், எதிர்வரும் காலத்தில் வாக்குகளுக்குப் பணம் கொடுக்காமல் சேவைகளை மட்டுமே முன்னிறுத்திக் கொள்கைகள், தத்துவங்களை முன்வைத்து, அதை வாக்குகளாக மாற்றி வெல்ல முடியுமா என்ற கேள்வி மனதில் எழுகிறது.
இந்தியத் தேர்தல் ஆணையம் போல் இல்லாமல், மாநிலத் தேர்தல் ஆணையம் பெயரளவுக்குக் கட்டுப்பாடுகளையும் அறிவிப்புகளையும் விடுத்துவிட்டு அமைதியாகிவிடுகிறது. இதனால், தேர்தல் ஆணையத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் விதிமுறை மீறல்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் பார்வையாளர்களாக மட்டுமே உள்ளனர். அரசியல் கட்சிகளே சில இடங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டுதான் கொடுக்கின்றன என்று குற்றம்சாட்டப்படுகிறது. மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரையின் பெயரில்தான் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கிறது என்பதால், அவர்களைச் சுற்றிப் பண விளையாட்டு நடக்கிறது.
பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி வாக்காளருக்குப் பணம் கொடுக்கப்படுகிறது என்பதுதான் எதார்த்தம். உதாரணத்துக்கு, சென்னை போன்ற பெருநகரத்தையே எடுத்துக்கொள்வோம். அந்தப் பகுதியில் யார் புதிதாகக் குடியேறியுள்ளனர் என்ற தகவலைக் கட்சிக்காரர்கள் மட்டுமின்றிப் பால் முகவர்கள், தண்ணீர் கேன் போடுபவர்கள் வாயிலாகத் திரட்டுகின்றனர். பின்னர், அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்று உறுதிசெய்கின்றனர். அதற்கடுத்து அவர்களுக்குப் பணம் கொடுத்து, வாக்குகளைப் பெறும் முயற்சிகளில் இறங்குகின்றனர். சில இடங்களில் ‘டிஜிட்டல் பரிவர்த்தனை’ வாயிலாகப் பணப் பட்டுவாடா நடந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
கடந்த தேர்தலில் வாக்காளர்களுக்கான ‘டோர் ஸ்லிப்’பைத் தேர்தல் ஆணையமே வழங்கியது. சமீபத்திய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பிரதான அரசியல் கட்சிகளே அந்தப் பணியை மேற்கொண்டன. ‘டோர் சிலிப்’ கொடுக்கப் போகும் சாக்கில், ‘‘என்ன அக்கா... பால்காரத் தம்பி சொன்னார். உங்களுக்கு எல்லாம் சரியா வந்து சேர்ந்துடுச்சா?’’ என்று கேட்டு, பணப் பட்டுவாடா, பரிசுப் பொருள் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டனவா என்பதை, பிரதான அரசியல் கட்சியினர் உறுதிப்படுத்திக்கொண்டனர் என்று சொல்லப்படுகிறது.
ஒரு வார்டு கவுன்சிலர் எப்படியெல்லாம் சம்பாதிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை, மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் பகிர்ந்துகொண்டார். ‘‘ஒரு வார்டுக்குள் போடப்படும் சாலை, கட்டப்படும் கழிப்பிடம், அதன் பராமரிப்பு, சுகாதாரப் பணிகள் என நிறைய வருமானம் தினப்படி வந்துவிடும். அது தவிர, அரசின் பல்வேறு திட்டங்களைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும்போது, அதில் கிடைக்கும் கமிஷன் தொகை தனி. கட்டிடம் கட்ட அனுமதி வாங்கும்போது பெறும் மாமூல், கட்டிட வேலை நடக்கும்போது தெருவில் மணல், செங்கல் கொட்டி வைக்க அனுமதி, கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதும் பெறப்படும் கழிவு நீர், குடிநீர் இணைப்பு இப்படிக் கட்டிடம் கட்டத் தொடங்கினால், ஒவ்வொரு நிலையிலும், கவுன்சிலருக்கு மாமூல் கொடுக்காமல் மாநகராட்சியில் எதுவுமே நடக்காது.
தெருவோரக் கடைகள், வியாபார நிறுவனங்களுக்கு மாநகராட்சி அனுமதி எனப் பல்வேறு நிலைகளில், பல்வேறு இனங்கள் வாயிலாக கவுன்சிலர்களுக்கு கமிஷன் வந்து குவியும். சொல்லப்போனால், கவுன்சிலராக ஒருவர் வெற்றிபெற்றுவிட்டால், குறிப்பிட்ட அந்த வார்டையே அவர் குத்தகைக்கு எடுத்துவிட்டதுபோலத்தான். கவுன்சிலர்களின் அகோரப் பணப் பசிக்கு ஆளாவது பெரும்பாலும் கட்டிடம் கட்டிக்கொடுக்கும் ஒப்பந்ததாரர்களும் மேஸ்திரிகளும்தான்’’ என்றார் அந்த முன்னாள் அதிகாரி.
‘எவ்வளவு காலத்துக்கு கவுன்சிலர்களுக்கு மாமூல் கொடுப்பது?’ என்று யோசித்த கட்டிட ஒப்பந்ததாரர்களில் சிலர், இந்த முறை பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து, பிரதானக் கட்சிகள் சார்பாகப் போட்டியிட முடிவெடுத்து, ‘சீட்’ பெற்றுப் போட்டியிட்டுள்ளனர் என்றும் சொல்கிறார்கள். குறுக்குவழியில் சம்பாதித்தவர்கள், சட்டத்துக்குப் புறம்பாக வியாபாரம் செய்வோர் எனப் பல வேட்பாளர்களின் பின்புலங்கள் அதிர்ச்சியளிப்பவை. சேவை மனப்பான்மை கொண்டவர்கள், மக்களிடம் நற்பெயர் வாங்கியவர்கள், நடுத்தரப் பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்கள் போன்றோரையும் இந்தத் தேர்தலில் பெரிய கட்சிகள் களமிறக்கியது நம்பிக்கை அளிக்கிறது. அதே நேரம் தவறான உதாரணங்கள் குறுகுறுப்பை ஏற்படுத்துகின்றன.
இதற்கிடையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் பதிவான வாக்குகளின் சதவீதம் படுபாதாளத்துக்குச் சென்றிருக்கிறது. அப்படியென்றால், மக்கள் வாக்களிக்க வராதது ஏன் என்ற ஆழமான கேள்வி வெளிப்படுகிறது.
மக்கள் சேவைதான் வாக்குகளைப் பெறுவதற்கான அளவுகோல் என்று வைத்துக்கொண்டால், அதையே பிரதானமாகச் செய்துவரும் அமைப்புகளும் நபர்களும் மட்டுமே அவர்கள் இயங்கிவரும் பகுதியில் உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். அல்லது, அவர்கள் ஆதரிப்பவர்களாவது வெற்றிபெற வேண்டும். மக்கள் சேவை என்பதை ஒருவழிப்பாதை என்று மக்கள் ஆழமாகத் தங்கள் மனங்களில் பதிவுசெய்து வைத்திருக்கின்றனர். கருணை உள்ளத்தோடு பிறருக்கு உதவியவர்கள், மனிதாபிமானம் படைத்தவர்கள்தான் தமக்கான பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடமே குறைந்துவருகிறது. தான் ஆற்றிய சமூக சேவைகளின் காரணமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்லது கட்சி என்று உதாரணம் காட்ட முடியாத நிலை இருப்பதற்கு அதுவே காரணம்.
அரசியல் வியூகம், சூழ்ச்சிகள், கூட்டணி வலிமை, பணம், சமூக அதிகாரம், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் சதித் திட்டங்கள் இவையெல்லாம்தான், இன்றைய தேர்தல்களில் வாக்குகளைப் பெறுவதற்கான சூத்திரங்கள். அப்படி இருக்கும்போது, நல்லவர்கள் எப்படித் தேர்தல் பாதைக்கு வருவார்கள்? இதனால் சலித்துப்போன மக்களில் பலரும், தாங்கள் வாக்களித்துத்தான் என்ன ஆகப்போகிறது என்ற விரக்தியில், தங்கள் ஜனநாயகக் கடமையிலிருந்து விலகிநிற்கின்றனர். ஆனால், மக்களின் அந்த வெறுப்புணர்வைத்தான் தவறானவர்கள் தங்களது அரசியலுக்கு முதலீடாக்கிக்கொள்கின்றனர். அரசியலிலும் அதன் வழியாகச் சமூகத்திலும் மாற்றங்கள் வேண்டும் என்றால், நம் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் வாக்குச்சீட்டு மட்டும்தான்.
- புதுமடம் ஜாபர்அலி, தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT