Published : 15 Mar 2022 06:05 AM
Last Updated : 15 Mar 2022 06:05 AM

முல்லைப் பெரியாறு: அரசியல் வேறு, பாசன உரிமை வேறு

பி.ஆர்.பாண்டியன்

முல்லைப் பெரியாறு, வைகை அணைகள் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் வாழும் சுமார் 2 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், 1 கோடி விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும், 5 லட்சம் ஏக்கர் நஞ்சை, புஞ்சை விளைநிலங்களின் பாசன நீர் ஆதாரமாகவும் விளங்குகின்றன. நெல், கரும்பு, வாழை, தென்னை, திராட்சை உள்ளிட்ட பழ வகைகள், சிறுதானியங்கள், காய்கறிகள், மலர் வகைகள் உள்ளிட்ட அனைத்துவிதமான பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிற பன்முகத்தன்மை கொண்ட விளைநிலப் பகுதியாக இது விளங்குகிறது. கேரளமோ இம்மாவட்டங்களின் பாசன உரிமையைத் தடுத்து, மின்னுற்பத்தி செய்து, விற்பனை செய்வதற்கான வணிக நோக்கோடு முல்லைப் பெரியாறு அணை நீரைப் பயன்படுத்துவதற்காகப் புதிய அணை கட்ட முயல்கிறது.

முல்லைப் பெரியாறு அணை 142 அடி உயரம் கொண்டது. முழு கொள்ளளவு நீரைத் தேக்கினால், மேலும் கூடுதலாக 5 டி.எம்.சி. நீரை மட்டுமே தேக்கிவைக்க முடியும். அதற்குக் கீழே 42 கிமீ தூரத்தில் கட்டப்பட்டுள்ள இடுக்கி அணை 555 அடி உயரம் கொண்டது. 73 டிஎம்சி நீரைத் தேக்கி வைக்கக்கூடிய வலுவான அணையாகக் கட்டப்பட்டுள்ளது. ஆனால், விளைநிலங்களின் பாசனப் பரப்பு 3,000 ஏக்கர் மட்டுமே. ஆனால், இடுக்கி அணை மூலம் 750 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்திசெய்து, பல்வேறு மாநிலங்களுக்கு விற்று மிகப் பெரிய வருவாயைக் கேரளம் ஈட்டிவருகிறது. அணையின் கொள்ளளவை மேலும் கூடுதலாக்குவதற்காக அதற்குத் தேவையான தண்ணீரை முல்லைப் பெரியாறு அணையை அகற்றிவிட்டுப் பெற முயல்கிறது.

முல்லைப் பெரியாறு - இடுக்கி அணைகளுக்கு இடைப்பட்ட 42 கி.மீ. தூரம் மலைக் குன்றுகளாக உள்ளது. இடையிடையே இரு கிராமங்கள் மட்டுமே உள்ளன. முல்லைப் பெரியாறு அணையில் தேக்கப்படும் தண்ணீர், கேரளம் சொல்வதுபோல் அணையை உடைத்துக்கொண்டு வெளியேறினாலும் எந்த ஒரு கிராமமோ, குடியிருப்புப் பகுதிகளோ, விளைநிலங்களோ பாதிக்கப்படும் நிலை கிடையாது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் நமக்கு அனுமதித்ததன் அடிப்படையில் 142 அடி தண்ணீரைத் தேக்கி 4 ஆண்டுகளாகத் தொடர்ந்து சாகுபடிக்குப் பயன்படுத்தியுள்ளோம்.

கடந்த 2021-ல் கேரளத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் தோல்வியடைந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்தது. தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத காங்கிரஸ் முல்லைப் பெரியாறு அணையை வைத்து அரசியல் செய்யும் நோக்கோடு, அந்த அணையை உடைக்க வேண்டும், இல்லையென்றால் பேராபத்து ஏற்படும் என்ற விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதோடு, நடிகர்களையும் சில அமைப்புகளையும் தூண்டிவிடவும் செய்கிறது.

கடந்த நவம்பரில் நடந்த சட்டமன்றக் கூட்டத்திலேயே அணையை உடைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியபோது, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்றும் அணையை உடைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அவ்வாறு விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள்மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பதிலளித்துள்ளார். இச்செய்தி தமிழ்நாட்டுக்கு நம்பிக்கை அளித்தாலும், முல்லைப் பெரியாறுக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதில் சமரசத்துக்கு இடமளிக்க மாட்டோம் என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் 142 அடி கொள்ளளவை உயர்த்துவதற்கான வாய்ப்பு உருவானபோது, அதை உயர்த்த விடாமல் தடுத்து நிறுத்துவதற்குப் பல்வேறு முயற்சிகளில் கேரளம் ஈடுபட்டது. உச்ச நீதிமன்றத்திலும் தவறான தகவல்களை அளித்தது. அதனை தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் குழு ஆதாரங்களுடன் மறுத்துக் கடுமையான சட்டப் போராட்டத்தை நடத்தி முறியடித்தது.

அதே நேரத்தில், ரூல்கர்வ் என்கிற நீர்ப்பாசன முறை, உள்நோக்கத்துடன் கேரள அரசால் முன்மொழியப்பட்டது. அதனை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றது. அதனை ஏற்று, ஆய்வுக் குழு அதனைப் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் வழிகாட்டினார்கள். ஆனால், ஆய்வுக் குழுவோ அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது அணை வலுவாக உள்ளதால் அணைக்குப் பேராபத்து ஏற்படாது என்பதை உச்ச நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியது.

இருந்தாலும் உச்ச நீதிமன்றம் பேரிடரைக் கணக்கில் கொண்டு மறுபரிசீலனை செய்ய ஆய்வுக் குழுவுக்கு இட்ட உத்தரவு நமக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனால், உச்ச நீதிமன்றத்தால் வழிகாட்டப்பட்ட அடிப்படையில், மத்திய அரசால் தேர்வுசெய்யப்பட்ட முல்லைப் பெரியாறு ஆய்வுக் குழுவுக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும், இனி முல்லைப் பெரியாறு பாசனப் பிரச்சினைகள் குறித்து இரு மாநிலங்களும் குழுவிடம்தான் முறையிட வேண்டும். அக்குழுதான் இறுதி முடிவு எடுக்கும் என்று தெளிவாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஏற்கெனவே, 2018-ல் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாகப் புதிய அணை கட்டுவதற்கு வரைவுத் திட்ட அறிக்கையைத் தயார்செய்ய கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதனை இதுவரையிலும் மத்திய அரசு திரும்பப் பெறவில்லை. திரும்பப் பெறுவதற்கான அரசியல் அழுத்தத்தைத் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்குக் கொடுக்க முன்வராத நிலை தொடர்கிறது.

மத்திய அரசால் கொடுக்கப்பட்ட அனுமதியைப் பயன்படுத்தி, கேரள அரசு வரைவுத் திட்ட அறிக்கையைத் தயார்செய்து, அணையைக் கட்டியே தீருவேன் என்று தமிழக நலனுக்கு எதிராகத் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. ஆய்வுக் குழுவோ கடந்த மாதம் திடீரெனத் தனது நிலையை மாற்றிக்கொண்டு, முல்லைப் பெரியாறு அணையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுசெய்துள்ளது. இதனையடுத்து, மத்திய அரசும் ஆய்வுக் குழுவைப் பின்பற்றி மறுஆய்வு கோரும் மனுவைத் தாக்கல்செய்துள்ளதன் மூலம் அதன் இரட்டை வேடம் அம்பலப்பட்டுள்ளது. புதிய அணையைக் கட்ட அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு அரசியல் அழுத்தத்தை தமிழக அரசு கொடுக்க வேண்டும்.

தமிழக நீராதாரப் பிரச்சினைகளை கேரளம், கர்நாடக மாநிலங்களில் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காகவும், அதிகாரப் போட்டிக்காகவும் பயன்படுத்துவதில் பாஜக, காங்கிரஸ் இரண்டுமே ஒத்த கருத்தோடு செயல்படுகின்றன. இந்திய அளவில் ஏற்படுகிற அரசியல் கூட்டணிகள், தமிழக நீராதார உரிமையை மீட்பதில் சில பின்னடைவுகளை ஆளும் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுத்திவிடுகின்றன. எனவே, அரசியல் அணி வேறு, நீர்ப்பாசன உரிமை வேறு என்கிற கொள்கைத் திட்டத்தை உறுதியாக மேற்கொள்ள வேண்டுமானால் அரசியலுக்கு அப்பாற்பட்டு விவசாயிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே அது சாத்தியம்.

- பி.ஆர்.பாண்டியன், தலைவர், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x