Published : 14 Mar 2022 07:14 AM
Last Updated : 14 Mar 2022 07:14 AM
கர்நாடகத்தில் காவிரிதான் அரசியலைத் தீர்மானிக்கிறது. இதனால்தான் நெடுங்காலமாகக் காவிரிப் பிரச்சினை தொடர்கிறது. அடுத்த ஆண்டு வரவுள்ள கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலால் அங்குள்ள பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் மேகேதாட்டு அணை விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளன. கர்நாடகத்தில் உள்ள இரண்டு தேசியக் கட்சிகளும் ஆக்கபூர்வமாகச் செயல்படாமல் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு ஆட்சியதிகாரத்தை அடையும் குறுக்கு வழியை நாடியுள்ளார்கள். கர்நாடக காங்கிரஸானது மேகேதாட்டு அணைக்காகப் பேரணி நடத்தித் தேர்தல் ஆதாயத்தை அடைய நினைக்கிறது என்றால், ஆளும் பா.ஜ.க. அரசு, இப்போது தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையில், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறது.
உச்ச நீதிமன்ற வழிகாட்டலில் நியமிக்கப்பட்டுள்ள காவிரி ஆணையத்தால் கண்காணிக்கப்பட்டுவரும் காவிரியின் ஊடாகப் புதிய கட்டுமானங்கள் கட்டுவோம் என்பதும், அதற்காக நிதி ஒதுக்கீடு செய்வதும் சட்டத்துக்குப் புறம்பானவை. சட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டு அமலாக்கப்படும் திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். ஆனால், மத்திய நீர்வளத் துறை நான்கு மாநிலங்களின் ஒப்புதலையும் காவிரி ஆணையத்தின் அனுமதியையும் சட்டபூர்வமாகப் பெறாமல், மேகேதாட்டு அணை கட்டுமானத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தவறாகும். பொதுக் கணக்குத் தணிக்கைத் துறை இதை எப்படி அனுமதிக்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது.
தவறான நிதி ஒதுக்கீட்டைத் தடுக்க வேண்டிய மத்திய அரசு வேடிக்கைபார்க்கிறது. இந்தச் சூழலில், கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர், ‘எப்படியாவது மேகேதாட்டு அணை கட்டினால் நல்லது’ என்று கூறியுள்ளது கண்டனத்துக்குரியது. கர்நாடக அரசின் நிதி ஒதுக்கீட்டைத் தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் கண்டித்துள்ளது பாராட்டுக்குரியது. கர்நாடக அரசு மேகேதாட்டு அணைக் கட்டுமானத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதைத் தடுக்க வேண்டுமென மத்திய அரசைத் தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும். சட்டத்தின் ஆட்சியைச் சட்டப்படி நடத்தவும், இரண்டு மாநில மக்களின் நல்லுறவைக் கெடுத்திடும் இந்தச் செயல்பாட்டைத் தடுக்கவும் மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
- பி.எஸ்.மாசிலாமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT