Published : 14 Mar 2022 07:00 AM
Last Updated : 14 Mar 2022 07:00 AM

கார்ல் மார்க்ஸ்: எந்தக் காலத்துக்குமான சிந்தனையாளர்

கடந்த 1,000 ஆண்டுகளில் தலைசிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர், உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை ஓங்கி ஒலித்த குரல், பொருளாதார மாமேதை, காலம் கடந்தும் அரசியல் தளங்களில் உச்சரிக்கும் பெயர்: கார்ல் மார்க்ஸ். கார்ல் மார்க்ஸ் எனும் மாமேதை மத்திய ஜெர்மனியில் 1816, மே மாதம் 5-ம் தேதி பிறந்தார். யூத இனத்தைச் சேர்ந்த மார்க்ஸின் முன்னோர்கள் ஜெர்மனியில் குடியேறி வாழ்ந்துவந்தார்கள். யூத மதச் சம்பிரதாயத்தை மட்டுமே கடைப்பிடித்து வாழ்ந்துவந்தவர்கள் மார்க்ஸின் முன்னோர்கள். இவருடைய தந்தை சிறந்த வழக்கறிஞராக விளங்கினார். தாயாரோ டச்சு மொழி பேசிய யூதப் பெண்.

அப்போது நிலவிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மார்க்ஸின் தந்தை புராட்டஸ்டன்ட் கிறித்தவ மதத்தைத் தழுவினார். மார்க்ஸ் தனது பல்கலைக்கழகப் பட்டப் படிப்பு முடிந்த பின்னர், சட்டப் படிப்பு படித்தார். அப்போது அவரது தந்தை காலமாகிவிட, மார்க்ஸ் மதக் கொள்கைகளைப் புறக்கணித்து, மெல்ல மெல்ல தத்துவ விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். மார்க்ஸ் தனது அறிவாராய்ச்சியில் பல்வேறு தளங்களில் தனது தத்துவங்களை, சிந்தனைகளைச் செலுத்தத் தொடங்கினார்.

மார்க்ஸியத்தில் என்னென்ன கூறுகள் உள்ளன என்பதைத் தனது தொடர் ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தினார். மார்க்ஸியம் என்பதை மதம் என்று கூற முடியாது. ஏனெனில் கடவுளைப் பற்றியோ, மேலுலக வாழ்க்கையைப் பற்றியோ அது அக்கறை கொள்ளவில்லை. மேலும், அரசியலும் பொருளாதாரமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதையே மார்க்ஸியம் நமக்கு வழிகாட்டுகிறது. இந்த இரண்டினாலும் சமுதாயத்தில் ஏற்படக்கூடிய மாறுதல்கள், அபிவிருத்திகள், சீர்கேடுகள் போன்றவற்றை விவரிக்கும் வரலாற்றுரீதியிலான அரசியல்-பொருளாதாரச் சித்தாந்தமே மார்க்ஸியம். அரசியலின் பெயராலும், பொருளாதாரத்தின் பெயராலும், சமயத்தின் பெயராலும், நீதியின் பெயராலும், மக்களில் ஒரு வர்க்கத்தார் மற்றொரு வர்க்கத்தாரை எப்படியெல்லாம் சுரண்டி வாழ்கிறார்கள், எப்படியெல்லாம் அடிமைப்படுத்துகிறார்கள் என்பதை விவரிக்கும் ஒரு சமூக விஞ்ஞானமே மார்க்ஸியம். ஆகவே, இந்த மண்ணுலகில் மனிதர்கள் மனிதர்களாய் வாழ்வதற்கு வழிகாட்ட முனையும் ஒரு தத்துவக் கோட்பாடுதான் மார்க்ஸியம்.

இதில் முக்கியமான ஜந்து கோட்பாடுகள் மார்க்ஸியம் என்னும் மண்டபத்தைத் தாங்கி நிற்கும் உறுதிவாய்ந்த தூண்களாக மார்க்ஸிய வல்லுநர்களால் உற்றுநோக்கப்படுகின்றன:

1. தத்துவத் துறையில் மார்க்ஸியத்துக்குத் தர்க்கவியல் லோகாயதம் (மதம், கடவுள் இல்லை, உலகமே மேலானது) அடிப்படை. 2. பொருளாதாரத் துறையில், பொதுவுடைமைக் கோட்பாடு அடிப்படை. 3. அரசியல் துறையில் பாட்டாளி மக்களின் சர்வாதிகாரம் அடிப்படை. 4. பண்பாட்டுத் துறையில் தோழமை உணர்வு அடிப்படை, அதாவது, சர்வதேசத் தொழிலாளர் வர்க்கக் கூட்டுறவு அடிப்படை. 5. அறிவுத் துறையில் அறிவியலே அடிப்படை.

இந்தத் தத்துவக் கோட்பாடுகளைக் கொண்டே பல்வேறு தளங்களில் மார்க்ஸியம் இயங்குகிறது. சுருக்கமாகக் கூறினால், ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையே ஏற்படும் சமூகத் தொடர்பையும் பிணைப்பையும், பண்டங்கள் உற்பத்தியையும், தானிய உற்பத்தியையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது மார்க்ஸின் தத்துவம். இதை மார்க்ஸ் வேறு கோணத்திலும் விவரிக்கிறார். அதாவது, பொருள் உற்பத்திப் பெருக்கத்துக்கும், பொதுநல முன்னேற்றத்துக்கும், எந்த அமைப்பு தடையாக நிற்கிறதோ, அதை முற்போக்காளர்கள் தகர்க்க முற்படுவார்கள் என்கிறார்.

மேலும், மார்க்ஸியத்துக்கும் மதங்களுக்கும் இடையில் காணப்படும் பெரிய வேறுபாடு என்னவென்றால், மனித சமூகத்தின் நல்வாழ்வுக்கு மதங்கள் கடவுளின் உதவியை எதிர்பார்க்கின்றன; மார்க்ஸியமோ மனிதர்களுடைய உழைப்பையும் ஒருமைப்பாட்டையும் எதிர்பார்க்கிறது என்பதை மார்க்ஸ் ஐயம் தெளிவுற விளக்குகிறார்.

பாட்டாளி மக்கள் சர்வாதிகாரத்தை மார்க்ஸ் தனது தத்துவங்களில் முன்னிறுத்துகிறார். மார்க்ஸின் கூற்றுப்படி, பெரும்பாலான மக்கள் தொழிலாளர்களும் விவசாயிகளும் ஆவர். எனவே, அவர்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் இருப்பதுதான் உண்மையான ஜனநாயகம் ஆகும் என்பதை அறுதியிட்டு வலியுறுத்துவதோடு, மத உணர்ச்சியானது எப்போதும் தோழமை உணர்ச்சியை வளர விடாமல் தடையாய் இருக்கும் என்றும் தனது தீர்க்கதரிசனமான ஆய்வின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

தொழிலாளர்களும் விவசாயிகளும் சர்வதேசரீதியில் ஒன்றுபட்டு, மத வெறிக்கும் தேசிய வெறிக்கும், இடம்கொடுக்காமல் தோழமை உணர்வை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். இதற்கு உதாரணமாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம். கிறித்தவ ஜெர்மன், மற்ற கிறிஸ்தவ நாடுகளைத் தாக்கியதையும், பௌத்த நாடான ஜப்பான், சீனா, பர்மா முதலிய பௌத்த நாடுகளைத் தாக்கியதையும், ஈரான்-ஈராக் இடையில் ஏற்பட்டயுத்த நிலவரங்களை நாம் பார்த்திருக்கிறோம். இதனால்தான், மக்களிடையே தோழமை உணர்வை வளர்க்க மதங்கள் முயற்சிக்கவில்லை என்று கருதி, தமக்கு வழிகாட்டியாக, மதத்தை ஏற்காமல் அறிவியலையே மார்க்ஸியம் ஏற்றுக்கொண்டுள்ளது. அறிவியலை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்காமல், அதை ஏற்றுக்கொண்டு, மனித குலத்தின் நலனுக்கு நல்வழியில் பயன்படுத்த வேண்டும் என்றே மார்க்ஸ் கனவு கண்டார். மார்க்ஸின் கனவு பல நாடுகளில் வெற்றிபெற்றுள்ளது. இனியும் வெற்றி பெறும்!

“மனித குலத்துக்குச் சேவை செய்யும் வாய்ப்பைத் தேர்ந்தெடுத்துவிட்டால், எந்தச் சுமையும் நம்மை மண்டியிடச் செய்ய முடியாது. ஏனெனில், அனைவரின் நன்மைக்குமான தியாகங்கள்” என்பார் மார்க்ஸ். மனித குலத்துக்கு என்றென்றைக்கும் தேவையான சிந்தனையாளர் அவர்.

- தி.மருதநாயகம், ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர். தொடர்புக்கு: marutha1971@gmail.com

இன்று கார்ல் மார்க்ஸின் நினைவு தினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x