Published : 13 Mar 2022 07:41 AM
Last Updated : 13 Mar 2022 07:41 AM

அய்ஜாஸ் அகமது: பன்முக மார்க்சியச் சிந்தனையாளர்

ஜி.செல்வா

ஜந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் அய்ஜாஸ் அகமது மறைவுச் செய்தியும் வெளியானது. அவர் எழுதிய கீழ்க்கண்ட பத்தி அப்போது எனக்கு நினைவுக்கு வந்தது.

‘ஒருவரின் சாதி, மதம், இனம் ஆகியவை வெறும் வெளி அடையாளங்கள் மட்டுமல்ல; மாறாக, அவரின் உணர்வைத் தீர்மானிக்கும் அம்சங்களாகும். இவற்றின் பிரச்சினைகளுக்கு விடை காண்பதன் வாயிலாகவும் நடைமுறைத் தீர்வு காண்பதன் வாயிலாகவும் மட்டுமே புதிய, புரட்சிகரமான வடிவங்கள் எழுச்சி பெறும்.’ இந்த வார்த்தைகளைக் கூறி ‘ஃப்ரண்ட்லைன்’ இதழில் 20-ம் நூற்றாண்டின் வரலாறு குறித்த தனது கட்டுரையை அய்ஜாஸ் அஹமது நிறைவுசெய்திருந்தார்.

விடுதலைக்கு முந்தைய ஒன்றுபட்ட இந்தியாவில் உத்தர பிரதேசத்தின் கான்பூர் முசாஃபர்நகரில் 1941-ல் பிறந்தவர் அய்ஜாஸ் அகமது. குடும்பச் சூழலும், தந்தையின் சமூக அரசியல் தாக்கமும் பதின்ம வயதுக்கு முன்பாகவே அரசியல், இலக்கியம் தொடர்பான வாசிப்பும் உரையாடலும் அய்ஜாஸ் அகமதுக்குக் கைகூடியது. அவருக்கு 10 வயது இருந்தபோது, அவரது குடும்பம் பாகிஸ்தானில் குடியேறியது.

பிரிவினையின் உச்சபட்ச அவலத்தைத் தனது குழந்தைப் பருவத்தில் எதிர்கொண்டவர் அவர். ‘மதரீதியான சடங்கு எதையும் செய்ய சிறு வயதிலிருந்து நான் தடுக்கப்பட்டிருக்கிறேன். குழப்பத்துடன் நாங்கள் பாகிஸ்தானுக்குச் சென்றோம். உருது பேசும் நான் பஞ்சாபி பேசும் நகரமான லாகூர் சென்று சேர்ந்தேன்; கராச்சிக்குச் செல்லவில்லை என்பது மிகவும் சந்தோஷமான நிகழ்வுதான். ஏனெனில், அது புலம்பெயர்ந்தோரின் முகாமாக இருந்தது’ என்று அகமது குறிப்பிட்டிருக்கிறார். பாகிஸ்தான் மண்ணில் இடதுசாரியாக உருவெடுத்த அய்ஜாஸால் அங்கு நீண்ட காலம் தரித்திருக்க இயலவில்லை.

அந்தச் சூழல் காரணமாக அமெரிக்காவில் கல்வி, பணி என்றெல்லாம் தங்க வேண்டியிருந்தபோது வியட்நாம் யுத்தத்துக்கு எதிரான மக்கள் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். காலனியாதிக்கத்துக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டங்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பும் அவரது கருத்துகளின் உருவாக்கத்தில் பெரும் பங்குவகித்திருக்கின்றன.

மார்க்சியத் தத்துவத்தின் வழிநின்று உலக நிகழ்வுகளை, உரிமைப் போராட்டங்களை, இடதுசாரி இயக்கங்களின் சாதக -பாதக அம்சங்களை அலசுவதில் தன் காலத்தில் தன்னிகரற்ற சிந்தனையாளராக அய்ஜாஸ் அகமது செயல்பட்டிருக்கிறார். கம்யூனிஸ்ட் அமைப்புகளின் செயல்பாடுகளை விமர்சிக்கும் அதே வேளையில், மார்க்சியத்தின் இயங்கியல் அடிப்படையில் செல்ல வேண்டிய பாதைகளுக்கான ஒளியைப் பாய்ச்சுவதில் அவருக்கு நிகர் அவர்தான்.

டெல்லியில் அவர் தங்கியிருந்த காலத்தில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியர், அத்துடன் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தோடு இணைக்கப்பட்டுள்ள சமகால வரலாற்று ஆய்வு மையத்தின் மதிப்புறு பேராசியர், கனடாவின் டொரொண்டோ - யார்க் பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியர், ‘ஃப்ரண்ட்லைன்’ இதழின் ஆலோசகர் எனப் பன்முகம் கொண்டவராக அவர் விளங்கினார். பல்வேறு பல்கலைக்கழகங்களில் விரிவுரைகளை நிகழ்த்தியிருக்கிறார். செல்லும் இடங்களிலெல்லாம் அறிவார்ந்த மாணவர்களை உருவாக்கும் அட்சய பாத்திரமாக அவர் திகழ்ந்திருக்கிறார்.

இந்தியாவில் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையையும், இந்துத்துவ அரசியலையும் எதிர்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கருத்தியல் தளத்தில் மிக ஆழமாக எழுதினார். இந்தியாவில் பின்நவீனத்துவக் கோட்பாடு அறிமுகமானபோது, ஆனானப்பட்ட மார்க்சியச் சிந்தனையாளர்களெல்லாம் அதை வியந்து விதந்தோதத் தொடங்கியபோது, பின்நவீனத்துவக் கோட்பாடு உண்மையில் மார்க்சியச் சிந்தனைக்கு முந்தைய சிந்தனைப் போக்கு (Postmodernism is Pre-Marxism) என எடுத்துரைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்களுக்குப் பின்நவீனத்துவம் குறித்து அவர் எடுத்த பாடக்குறிப்பு, இந்தியாவில் வேறு யாரையும்விட அந்தத் தளத்தில் ‘அடையாள அரசியல்' குறித்துக் கருத்தாழமிக்க சிந்தனையை வெளிப்படுத்தியது.

In Theory – Classes, Nations and Literature, Lineages of the Present – Ideological and Political Genealogies of Contemporary South Asia உள்ளிட்ட பல நூல்களையும், உலகம் தழுவிய இதழ்களில் பல கட்டுரைகளும் எழுதியுள்ளார். இந்தியாவில் நிரந்தரமாக வசிக்க விரும்பினாலும் அவருக்கு அதற்கான குடியுரிமை, விசா அனுமதிகள் கிடைப்பதில் இருந்த பிரச்சினைகள் காரணமாக உடல்நிலை நலிவுற்ற நிலையில் அமெரிக்கா சென்றார். அங்கு கலிஃபோர்னியாவில் இயற்கை எய்தியுள்ளார். அவரும் பேராசிரியர் விஜய் பிரசாத்தும் நடத்திய நீண்ட உரையாடல் ஒரு நூலாக வந்திருக்கிறது. அநேகமாக அவரது வாழ்க்கை, நூல்கள், கருத்துகளின் சாரமாக அது அமைந்துள்ளது. ‘மானுடத்திற்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல’ (Nothing Human is Alien to Me) எனும் மார்க்ஸின் பொன்மொழியைத் தலைப்பாகக் கொண்டு அவரது அந்தக் கடைசி நூல் தமிழிலும் (ராஜசங்கீதன் மொழிபெயர்ப்பில், பாரதி புத்தகாலயம் வெளியீடாக) வந்துள்ளது.

- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர். தொடர்புக்கு: selvacpim@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x