Published : 13 Mar 2022 08:00 AM
Last Updated : 13 Mar 2022 08:00 AM

சமகால தமிழ் சிறுகதைகளின் பிரச்சினைகள் என்ன?

கடந்த பத்தாண்டு கால தமிழ் இலக்கியச் சூழலை எடுத்துக்கொண்டால், சிறுகதைகளின் எண்ணிக்கை மிக அதிகம். இந்தப் பத்தாண்டு காலச் சூழல் கட்டமைப்பில் இணையத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. எழுத்தாளர்கள் - வாசகர்களுக்கு இடையேயான உரையாடல்கள், புத்தகங்கள் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள், இலக்கியச் சந்திப்பு என இலக்கிய ஈடுபாடு உடையவர்களை ஒரு அமைப்பாகவே இணையம் ஒன்றிணையச் செய்தது. புதிய படைப்பாளிகள் பலர் அடையாளம் காணப்படலாயினர். முந்தைய காலகட்டம்போல் இல்லாமல், படைப்புகளின் அச்சாக்க வசதி எளிமையானதால், ஏதேனுமொரு வகையில் ஒவ்வொரு இலக்கிய வாசகரும் தங்களைப் படைப்பாளியாக ஆக்கிக்கொள்ளும் சாத்தியத்தை இணையம் உருவாக்கித்தந்தது. அந்த வகையில், சிறுகதை வடிவம் பலரின் தேர்வாக அமைந்தது என்றுகூடச் சொல்லலாம். கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த இணைய இலக்கிய இதழ்களின் பெருக்கம் அவற்றுக்கு மேலும் உந்துதலாக அமைந்தது. ஒட்டுமொத்தமாகச் சிறுகதைகளின் பெருக்கத்தை இவ்வாறு அடையாளப்படுத்திவிட முடியாது என்றாலும், சிறுகதைகள் உடனடி பிரசுரத் தன்மை கொண்டிருப்பதாலும், தங்கள் இருப்பை அறிவித்துக்கொள்ளும் அளவுக்கான புனைவு வடிவமாக அது அமைந்திருப்பதாலும் பெரும்பாலானோரின் தேர்வு சிறுகதையாக இருந்தது. அந்த வகையில், கடந்த பத்தாண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தன்மை எத்தகையதாக இருந்திருக்கிறது என்பதை அறிவதன் மூலம் தற்காலத் தமிழ் இலக்கியப் போக்கையும் புரிந்துகொள்ள முடியும்.

1. சமூகத்திலிருந்து துண்டித்துக்கொள்ளுதல்: தனிமனிதன் - சமூகம் - குடும்பம், தனி மனிதத் தத்துவத் தேடல்கள், ஆண் - பெண் உறவு என எந்தவொரு இலக்கியப் படைப்பையும் இவ்வகையான வகைப்பாட்டுக்குள் கொண்டுவர இயலும். காலங்காலமாக இவையே இலக்கியப் படைப்புகளின் பேசுபொருளாக இருந்திருக்கின்றன. எனில், இன்றைய படைப்பாளியின் பார்வையில் அவை என்னவாக அர்த்தம் கொள்கின்றன என்பதே சமகாலப் படைப்புச் சூழலைக் கட்டமைக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் தமிழ்ச் சூழலில் எழுதப்பட்ட கதைகளை எடுத்துக்கொண்டால், அவற்றில் உள்ள உலகம் பெரிதும் சமூகத்தின் மீதான பார்வையின் அடிப்படையில் உருவாகிவந்ததாக இல்லை. மாறாக, தமிழ் இலக்கியச் சூழலில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கதை உலகம் மீதான கற்பிதத்திலிருந்து உருவானதாக இருக்கிறது. இதன் விளைவாக, சமூகத்துக்கும் கதை உலகத்துக்கும் இடையேயான உறவு துண்டிக்கப்பட்டுவிடுகிறது.

2. மொழியும் பார்வைக் கோணங்களும்: ஆசிரியரின் பிரத்தியேகப் பார்வையே ஒரு நிகழ்வைக் கதைத் தளத்துக்கு இட்டுச்செல்கிறது என்று வரையறுத்துக்கொள்ளும்பட்சத்தில், இங்கு எழுதப்படும் பெரும்பாலான கதைகளில் இருப்பது, தனிமனித உணர்ச்சி நிலைகள் மீதான விவரணைகள் மட்டும்தான். அந்த உணர்ச்சி நிலையை, நிகழ்வை விவரிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் நயமான சொல் தேர்வுகள், உவமைகள் போன்றவை அந்த நிகழ்வுக்குக் கதைபோலான சாயலை அளிக்கின்றன. தவிர, அது கதையல்ல. மொழியல்ல, நிகழ்வின் மீதான பார்வைக் கோணங்கள்தான் ஒரு பிரதியை இலக்கியப் பிரதியாக்குகின்றன. வெகுஜனக் கதைகள் அவற்றுக்கென்று உருவாகிவந்த வகைப்பாட்டுக்குள் நின்று, வெகுஜனப் பத்திரிகை மொழியில் ஒரு நிகழ்வை விவரிக்கின்றன. இங்கு எழுதப்படும் இலக்கியச் சிறுகதைகள், அவற்றுக்கென்று உருவாகிவந்த தளத்தில் நின்று சிறுபத்திரிகை மொழியில் ஒரு நிகழ்வை அணுகுகின்றன. அது தவிர்த்து, வெகுஜனச் சிறுகதைகளுக்கும் இலக்கியச் சிறுபத்திரிகைச் சிறுகதைகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

3. அர்த்தமில்லா கற்பனைகள்: மிகுகற்பனைக் கதைகள், மாய யதார்த்தக் கதைகள் என எழுதப்படும் கதைகளும் உள்ளீடற்ற, பொருந்தா கற்பனைகளுடனே நின்றுவிடுகின்றன. அதேபோல் சிறுகதைகளின் முடிவுகள் அர்த்தமற்ற அந்தரத் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அதனையே அக்கதைகளுக்கான அர்த்தமாகப் பாவிக்க முயல்கின்றன. யதார்த்தக் கதைகூறல், மாய யதார்த்தம், பின்நவீனத்துவக் கதை சொல்லல்கள் யாவும் வெறும் கதை கூறும் முறைகள் மட்டுமல்ல. அவையெல்லாம் நிகழ்வுகள் மீதான தத்துவப் பார்வையும்கூட. ஆனால், இக்கதை கூறல் முறைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் பெரும்பாலான கதைகள், அவற்றை வடிவ உத்திகளாக மட்டுமே பயன்படுத்திக்கொள்கின்றன.

4. தன்னிலைக் கதைசொல்லிகள்: அடுத்ததாக, கதைசொல்லியின் தன்மை. பெரும்பாலான சிறுகதைகளில் கதை தன்னிலையிலிருந்துதான் சொல்லப்படுகிறது. படர்க்கையிலிருந்து சொல்லப்பட்டாலும் கதையின் இயங்குதளம் தன்னிலைவயப்பட்டதாகவே இருக்கிறது. கதையில் புனைவு உலகத்தைக் கட்டமைக்காமல், சமூக நிகழ்வு ஒன்றுக்குத் தன்னைச் சாட்சியாக்கிக்கொண்டு, கதைசொல்லி தனக்கு நேர்ந்த அல்லது தான் இருக்கும் சூழலைப் பற்றி வாசகர்களிடம் பகிர்ந்துகொள்கிறார். அதிலும் அவர் எந்தத் தரப்பின் வழியே கதையைச் சொல்கிறாரோ அதையே நியாயத் தரப்பாகக் கொண்டு கதை நிகழ்வுகளைக் கட்டமைக்கிறார்.

5. அன்றாடச் சிக்கல்களின் குவியல் : அடுத்ததாக, பெரும்பாலான சிறுகதைகள் புறவயமான சமூக அரசியலைப் பேசுபொருளாகக் கொண்டிருப்பதில்லை. சாதிய ஒடுக்குமுறைகள், பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் பற்றிய கதைகள் என்று பல கதைகள் வந்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை வரையறுக்கப்பட்டுள்ள தளத்தில் நின்றே நிகழ்வுகளை அணுகுபவையாக இருக்கின்றன. புறவயமான சமூக அரசியலைப் பேச வேண்டும் என்பது நியதி அல்ல என்றாலும், அன்றாடச் சிக்கல்களை மட்டுமே பேசுவதை எதன் வெளிப்பாடாகப் புரிந்துகொள்வது? முந்தைய தலைமுறை சிறுகதையாளர்களின் உலகத்தைவிட இன்றைய சிறுகதையாளர்களின் உலகம் விரிந்திருந்தாலும் இன்று எழுதப்படும் கதைகள் முந்தைய தலைமுறையின் தொடர்ச்சியாக, பெரிதும் சிறுபத்திரிகை உலகத்தை நோக்கி எழுதப்படும் கதைகளாக இருக்கின்றனவே தவிர, சமூகத்தை நோக்கி எழுதப்படுபவையாக இல்லை.

ஒரு இலக்கியப் படைப்பு இன்ன விஷயத்தைத்தான் பேசுபொருளாகக் கொள்ள வேண்டும் என்று வரையறை விதிக்க முடியாது. அது எதை வேண்டுமானாலும் பேசுபொருளாகக் கொண்டிருக்கலாம். அதன் தேடல் எதை வேண்டுமானாலும் மையப்படுத்தியதாக இருக்கலாம். ஆனால், அதன் மூலம் அப்படைப்பு என்ன நிகழ்த்துகிறது என்பதே சமூகத்துக்கான படைப்பாக அதனை மாற்றுகிறது.

தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x