

பஞ்சாப் மாநில மறுசீரமைப்புக்குப் பின்னர், ஏறக்குறைய 55 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாநிலத்தில் ஒரு அரசியல் திருப்பம் நிகழ்ந்திருக்கிறது. காங்கிரஸ், சிரோன்மணி அகாலி தளம் அல்லாத மூன்றாவது ஆளுங்கட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது ஆம் ஆத்மி கட்சி. இதற்கு முன்பு எந்தவொரு கட்சியும் இவ்வளவு பெரிய வெற்றியை அம்மாநிலத்தில் பெற்றதில்லை. கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 117 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 77 இடங்களைப் பெற்றதே சாதனையாகப் பார்க்கப்பட்டது. அத்தேர்தலில் 20 இடங்களை மட்டுமே பெற்ற ஆஆக இப்போது 90-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று, அதைவிடப் பெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. பஞ்சாபில் ஆஆகவின் முதல்வர் வேட்பாளராக சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பக்வத் மானை முன்கூட்டியே அறிவித்ததும் அதற்கு முன்பு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தேர்தல் பாதையைத் தெளிவாக்கிவிட்டது.
வழக்கமாக, காங்கிரஸுக்கும் சிரோன்மணி அகாலி தளத்துக்கும் இடையிலான இருமுனைப் போட்டிக் களமாகவே இருக்கும் பஞ்சாபில், தற்போது ஐந்துமுனைப் போட்டி நிலவியது. ஆஆக தவிர, பகுஜன் சமாஜ் கட்சியை உள்ளடக்கிய சிரோன்மணி அகாலி தளக் கூட்டணி, பாஜகவுடனான கேப்டன் அமரீந்தர் சிங் கூட்டணி, விவசாய முன்னணி, சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா ஆகியோரும் தேர்தல் களத்தில் நின்றனர்.
ஆனால், ஆஆக அனைத்தையும் தாண்டி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து, ஐந்து முறை முதல்வராகப் பொறுப்பு வகித்த சிரோன்மணி அகாலி தளத்தின் பிரகாஷ் சிங் பாதல், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்தித்த முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் ஆகியோர் இத்தேர்தலில் ஆஆக வேட்பாளர்களிடம் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
டெல்லி தலைநகர்ப் பகுதியில் ஆட்சியிலிருக்கும் ஆஆக, அரசமைப்புரீதியில் முழுமையான மாநில அந்தஸ்து கொண்ட ஒரு சட்டமன்றத்தைக் கைப்பற்றியிருப்பது இப்போதுதான். டெல்லியிலிருந்து பஞ்சாப் நோக்கிய இந்த அரசியல் விரிவாக்கம், தேசிய அரசியலில் பங்கெடுக்க விரும்பும் அக்கட்சிக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. எனினும், ஆஆகவுக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றிக்கான முக்கியமான இரண்டு காரணங்கள் டெல்லியில் ஓராண்டு காலமாக நீடித்த விவசாயிகளின் போராட்டமும், காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய கடுமையான உட்கட்சிப் பூசல்களும்தான்.
மேலும், ஆட்சி நிர்வாகத்தில் நிலவிய ஊழல், விவசாயிகளின் வருமானம் தொடர்ந்து குறைந்துகொண்டுவருவது, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவருவது, போதைப்பொருட்களின் புழக்கம், வகுப்புவாத உணர்வுகளால் நிலவும் பதற்றம் ஆகியவற்றால் பஞ்சாப் மக்கள் ஒரு மாற்று அரசியலை விரும்பத் தொடங்கினார்கள். பஞ்சாபின் இந்த அரசியல் சூழலால் ஆஆக எளிதாகப் பெற்றிருக்கும் வெற்றி, அக்கட்சி மேலும் சில மாநிலங்களில் கிளைவிரிக்க உதவும். தற்போதைய தேர்தலிலும்கூட கோவாவில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட ஆஆக 2 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக, தேசிய அரசியலில் தன்னை ஒரு வலுவான சக்தியாக வெளிப்படுத்திக்கொள்ள விரும்பும் கேஜ்ரிவாலுக்குப் புதிய வாய்ப்புகளையும் இந்த வெற்றி பெற்றுத்தரும். 2024 மக்களவைத் தேர்தலில், பாஜகவுக்கு எதிராக பிராந்தியக் கட்சிகளுக்கிடையே ஒரு கூட்டணி உருவானால், அதன் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக கேஜ்ரிவாலும் இருப்பார்.