நேர்க்கோட்டுத் தடுப்புச் சுவர் அல்ல... தூண்டில் வளைவே தீர்வு!
தென்தமிழகக் கடற்கரைகளில் 1980-களின் இறுதியில் தொடங்கி, மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகத் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டன. குடியிருப்புப் பகுதிகளில் கடலரிப்பைத் தடுக்கும் பாதுகாப்பு அம்சமாகவே நேர்க்கோட்டுத் தடுப்புச் சுவரும், தூண்டில் வளைவுத் தடுப்புச் சுவரும் அமைக்கப்பட்டாலும் தனிப்பட்ட நேர்க்கோட்டுத் தடுப்புச் சுவர்கள் பெரும்பாலும் பயனற்று நிற்பதோடல்லாமல், கடலரிப்பின் காரணியாகவும் மாறியிருப்பதைக் களஆய்வுகளில் காண முடிகிறது.
செயற்கையாகத் தன்னுள் துருத்திக்கொண்டு வரும் எதையும் கடல் அனுமதிப்பதே இல்லை. தனது போக்கைச் சமப்படுத்துவதற்காகச் செயற்கையான அமைப்பின் ஒருபுறம் மணலைக் கிள்ளி மறுபுறம் சேர்த்துவிடும். கிழக்குக் கடற்கரையில் வடபுறம் கிள்ளி தென்புறம் மணலைச் சேர்க்கும் கடல், தென்மேற்குக் கடற்கரையில் தென்புறம் கிள்ளி, வடபுறம் சேர்த்துவிடுகிறது. சென்னைத் துறைமுகத்துத் தடுப்புச் சுவர்களால் கரையோரம் பாதிக்கப்படும் வடசென்னையும், தொடர்ச்சியாய் வளர்ந்துவரும் மெரினா கடற்கரையும் அதற்கான சான்று.
தீபகற்பத்தில் நதிக்கரைத் துறைமுக அமைவுகள் மாறி, கடல் முகத்தில் துறைமுகங்கள் அமைந்த பின், தடுப்புச் சுவர்கள் தவிர்க்க முடியாத அம்சங்களாய் மாறிவிட்டன. ஆனால், கடல் முகத்தில் அமைந்த தடுப்புச் சுவர்களால் பெரும் கடலரிப்பை அருகில் இருக்கும் மீனவ ஊர்கள் சந்தித்தன. பெரும் போராட்டங்களுக்குப் பின் அவர்களுக்கான தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டன. ஆனால், அவையும் அமைவிடம் சார்ந்து மற்ற ஊர்களைப் பாதித்தன. கடலரிப்பு தொடர்கதையான பின், எல்லா கடலோர ஊர்களுமே தங்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளத் தடுப்புச் சுவர்கள் கேட்பது நியாயமானதுதான்.
கடலில் கற்களைக் கொட்ட ஆரம்பித்ததுதான், கரைக்கடல் மற்றும் அண்மைக் கடலில் மீன்வளம் அழிந்ததற்கான முக்கியக் காரணம். மன்னார் வளைகுடாப் பகுதியிலிருந்து திருவிதாங்கூர் வரையான மீன்கள் இனப்பெருக்கம் செய்யும், பவளப் பாறைகள் நிறைந்த கடல் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. தென்மேற்குக் கடற்கரையில், அக்டோபர் முதல் வாரத்தில் கரைக்கடலில் கேசவன் புத்தன்துறை, பொழிக்கரை, பெரியகாடு, ராஜாக்காமங்களம்துறை போன்ற ஊர்களில் கிடைக்கும் நெத்திலிப்பாடு இல்லாமலே ஆகிவிட்டது. அதுபோலவே நெய்மீன், சீலா, சூரை, குதிப்பு, அயலை போன்ற மீன்களின் வரத்தும் குறைந்துவிட்டது. சரி, குறைந்தபட்சம் இருப்பதைக் காத்துக்கொள்ள என்ன செய்யலாம் என அப்பகுதி பாரம்பரிய மீனவர்களிடம் கேட்டால், அவர்கள் நேர்க்கோட்டுத் தடுப்புச் சுவர் வேண்டாம், தூண்டில் வளைவுகளே வேண்டும் என்கிறார்கள்.
கடலரிப்பு தடுப்பு சார்ந்த அரசின் தகவல் குறிப்புகளிலும், தூண்டில் வளைவுகள் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும் இத்தடுப்புச் சுவர்கள் பற்றி துறைசார் அதிகாரிகளிடம் சரியான புரிதல் இல்லை. நேர்க்கோட்டுத் தடுப்புச் சுவரையும் தூண்டில் வளைவு என்றே அதிகாரிகள் புரிந்துகொள்கிறார்கள். தடுப்புச் சுவர்களில் நேர்க்கோட்டுத் தடுப்புச் சுவர் வேறு, தூண்டில் வளைவு வேறு. இந்த வேறுபாடு புரியாமலேயே, கடந்த காலங்களில் கடற்கரை ஊர்களில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டதால், தென்தமிழகக் கடலோரமே இன்று அல்லல்பட்டுக் கிடக்கிறது.
கடலோரக் குடியிருப்புப் பகுதிகளைக் கடலடி மற்றும் கடலரிப்பிலிருந்து காப்பதற்கு, இன்றைய நிலையில் தூண்டில் வளைவுகள் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை. தவிர்க்க முடியாமல் அமையும் இந்தத் தூண்டில் வளைவுகளால் கரைக்கடல் வளம் பாதிப்படைந்தாலும், கடலரிப்பாவது குறைந்து குடியிருப்புகள் பாதுகாக்கப்படும். கன்னியாகுமரிக்குக் கிழக்கே வாணிவாடும், வாடைக்காற்றுமே வடகிழக்குப் பருவகாலப் பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்க, மேற்கே தென்மேற்குப் பருவகாலத்தின் சோணிவாடும், சோழக்காற்றுமே தொழில் எதிரிகள். திறந்த கடல்வெளியில் பெரும் கடலடியால் தொழில்செய்ய முடியாத சூழல் ஒருபுறமென்றால், மறுபுறம் கடலரிப்பால் காணாமல் போகும் கடற்கரைகள்.
தென்மேற்குக் கடற்கரையின் பிரச்சினைக்குத் தீர்வாகத் தமிழ்நாடு அரசு, சமீபத்தில் கேசவன் புத்தன்துறைத் தடுப்புச் சுவருக்காக சுமார் ரூ.22 கோடியும், பொழிக்கரை தடுப்புச் சுவருக்காகச் சுமார் ரூ.19 கோடியும் நிதி ஒதுக்கியிருப்பதாகத் தகவல் இருக்கிறது. இந்தத் தடுப்புச் சுவர்களைப் பொதுப் புரிதலின்படி தனித்தனியாக நேர்க்கோட்டுத் தடுப்புச் சுவர்களாக அமைக்காமல், பொழிக்கரைக்கும் பெரியகாட்டுக்கும் இடைப்பட்ட பாதுகாப்பான மணல் மேட்டுப்பகுதியில் ஆரம்பித்து, 200மீ கடலில் தெற்காக இறங்கச் செய்து, தென்கிழக்காகத் திருப்பி கேசவன் புத்தன்துறை வரை நீண்ட ஒரே தூண்டில் வளைவாக அமைத்துக்கொடுத்தால், அப்பகுதியின் கடலடியும் கடலரிப்பும் தடுக்கப்படுவது மட்டுமல்லாமல், பெரும் மீன்பிடித் தொழில் வளர்ச்சிக்கான வரப்பிரசாதமாகவும் மாறிவிடும் என்கிறார்கள் அப்பகுதி பாரம்பரிய மீனவர்கள். இது தவிர்த்துத் தமிழகக் கடற்கரைகளில், வடசென்னை உட்பட ஏற்கெனவே அமைக்கப்பட்ட நேர்க்கோட்டுத் தடுப்புச் சுவர்களையும் ஆய்வுசெய்து, தேவைக்கேற்ப அவற்றைத் தூண்டில் வளைவுகளாய்த் திருத்தி அமைத்து, மீனவர் குடியிருப்புகளைப் பாதுகாப்பதும் அரசின் மேலான கடமை.
- ஆர்.என். ஜோ டி குருஸ், ‘கொற்கை’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: rnjoedcruz@gmail.com
