Published : 08 Mar 2022 06:12 AM
Last Updated : 08 Mar 2022 06:12 AM
தந்தையும் மகனுமாகச் சாலையில் நடந்து செல்கின்றனர். மகன் சும்மா இருக்கவில்லை. ஒவ்வொரு மைல் கல்லாகப் பார்க்கிறான். பின்னர் கடக்கிறான். கொஞ்ச நேரம் பொறுத்து ஒவ்வொரு மைல் கல்லிலும் எழுதியிருக்கும் எண்களைக் காட்டி “இது என்ன.. இது என்ன?” என்று கேட்கத் தொடங்குகிறான். உடன் வரும் தந்தை “இவையெல்லாம் எண்கள்” எனச் சொல்லித் தருகிறார். இவனும் புரிந்துகொண்டு கற்கிறான். இவ்வாறாகத் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைவதற்குள் சுமார் 100 வரையிலான எண்களுக்கான வார்த்தைகளையும் எண்ணுருக்களையும் கற்றுத் தெளிகிறான். இந்தியிலும் வங்க மொழியிலும் எழுதிக் குவித்த எழுத்தாளரும், சமூகச் சீர்திருத்தவாதியுமான ஈஷ்வர சந்திர வித்யாசாகர்தான் அந்தச் சிறுவன்.
வித்யாசாகருக்குத்தான் என்பதில்லை; பயணிக்கும்போது சாலையில் தென்படும் ஆர்வமான விஷயங்களால் எப்போதும் கற்றல் நடந்துகொண்டேதான் இருக்கும். புதிய மாநிலங் களுக்குச் செல்லும்போது, அங்கிருக்கும் தகவல் பலகைகளிலிருந்து புதுப் புது எழுத்துகளைக் கற்றுக்கொண்டோர் நம்மில் பலர் இருக்கலாம். பொதுவாக, புதிய இடங்கள்தான் என்பதில்லை. புதுப் புதுச் சூழல்கள் கற்றலுக்கு உதவிகரமாய் இருப்பவை என்பதை யார் மறுக்க இயலும்!
கல்வி என்பது வகுப்பறைகளில் பாடப் புத்தகங்களாலும் ஆசிரியர்களாலும் மட்டும் நடைபெறுவதில்லை. மாறாக, குழந்தைகள் தங்கள் சுற்றுப்புறங்களிலிருந்தும் அனைத்துவிதமான புலன்களாலும் கற்றுக்கொள்வதால் நடப்பதே. அதற்குச் சரியான வழிகாட்டுதல்கள் மட்டும் அளிக்கப்பட்டுவிட்டால், அவர்களின் கற்றலின் வீச்சு எல்லையற்றதாய் இருக்கும். இதனை அளிப்பதே ஆசிரியர்களின் முக்கியப் பணி. இவ்வாறான கருத்துகளைக் காலம்காலமாய்க் கல்வியாளர்களும் கல்விக் குழுக்களும் வலியுறுத்திவருகிறார்கள். ‘கற்றல் அனுபவங்கள்’ (Learning experiences) என்று ‘தேசியக் கலைத்திட்டம்-2005’ குறிப்பிடுவதும் இவை போன்றவற்றையேதான். மேலும், வகுப்பறை களுக்கு வெளியே கற்பதை வகுப்பறைகளுக்குள் கொண்டுவர வேண்டும் என அந்த ஆவணம் வலியுறுத்துவதும் குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்ல, சக தோழர்களிடமிருந்தும் கற்பதற்கான வாய்ப்பும் அச்சமின்றிக் கற்றலை நெருங்க உதவும் என்பதும் காலம்காலமாய் வலியுறுத்தப்பட்டுவருகிறது.
இன்று தமிழகத்தின் எந்த ஒரு கிராமத்திலும் இவ்வாறு கற்பதற்கான வாயில்களை ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ திறந்துவிட்டுள்ளது. தங்கள் வீட்டின் அருகிலுள்ள அண்ணன், அக்கா போன்றோர் மூலம் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் எனப் பல்வகைச் செயல்பாடுகள் குழந்தை களுக்கு அளிக்கப்படுகின்றன. தவறுகளை அனுமதிக்கும், குழந்தைமையைப் போற்றும் இவ்வகைச் செயல்பாடுகளால் எவ்வளவு அற்புதமான தன்னம்பிக்கையைக் குழந்தைகளால் பெற இயலும்! இப்படி வீதிகள்தோறும் பள்ளிகள் அமைவதால் குழந்தைகள் வாழும் தலமனைத்தும் பள்ளிகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா காலச் சங்கடங்களுக்கு மத்தியில் சாதிக்கப்பட்டுள்ள சாதனை இது.
கரோனா பெருந்தொற்றால் அனைவரது இயல்பு வாழ்க்கையும் முடங்கியபோது பள்ளிகளும் முடங்கின. அப்போது தடுப்பூசி இருக்கவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வும் இல்லை. மக்களின் வாழ்வாதாரத்தை மட்டும் கணக்கில் கொண்டு, படிப்படியாகத் தளர்வுகளை அறிவித்தனர். அப்போதும் பள்ளிகள் குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி ஒன்றே கற்றலுக்கான வாய்ப்பாக இருந்தது.
இவ்வாறாக, சமூகம் சமநிலை அடைவதற்குள் சுமார் 600 நாட்களுக்கும் மேலாகக் கற்றல் இழப்பு ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில், மாலை நேரங்களில் கற்றல் இழப்பைச் சரிசெய்யும் இந்த ஏற்பாடு பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆசிரியர்களில் பலரும் அல்லும் பகலும் இதற்கான பங்களிப்பைச் செய்து வருவதும் பாராட்டுக்குரியது. இத்திட்டத்தில் சேவையாற்ற கிராமப்புறத்திலுள்ள இளைஞர் களும் இளம்பெண்களும் லட்சக்கணக்கில் திரண்டுள்ளனர்.
அரசின் சீரிய நடைமுறையால் குறுகிய காலத்துக்குள் சுமார் ஒரு லட்சம் மையங்கள் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப் பட்டுள்ளன. பள்ளிகள் திறந்தாலும் இன்னும் கற்றல் செயல்பாடு இயல்புநிலைக்கு வரவில்லை. அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசி அளிக்கப்படும்வரை இப்படியே நீடிக்கும் நிலையில் இல்லம் தேடிக் கல்வி போன்ற தற்காலிக ஏற்பாடுகளால் நிச்சயம் குழந்தைகளின் கற்கும் ஆர்வம் மேம்படும். தங்களுக்குத் தெரிந்த செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கற்றல் அனுபவம் பெற இம்மையங்கள் ஆகப் பெரிய உந்துசக்தியாக இருக்கும்.
இப்போது பரவலாக எழுப்பப்படும் கவலைகள் குறித்தும் கொஞ்சம் விவாதிப்போம். இப்படி நடைபெறும் மையங்கள் மூலம் கரோனா பரவாதா என்பதே அது. நியாயமான கேள்விதான். முகக்கவசத்துடன் சுமார் 90 நிமிடங்கள் மட்டுமே குழந்தைகள் கூடுகின்றனர். பள்ளிகளின் வேலை நேரம் மற்றும் எண்ணிக்கை மிகுந்த மாணவர்கள் என்ற ஒப்பீட்டளவில் இதற்கான பரவும் வாய்ப்பு குறைவே. ஆனாலும் இதனைக் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் பலப்பட வேண்டும். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை. அரசும் இதற்கான பணிகளில் இறங்கியுள்ளது.
இத்திட்டத்தில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். பெரும்பாலானோர் ஓரளவுக்குக் கல்வியை முடித்துவிட்டுத் தங்கள் எதிர்காலக் கனவுகளோடு இருப்பவர்கள். ஆனாலும், தங்கள் வயதுக்கே உரிய துடிப்போடு தங்களுக்குத் தெரிந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சுற்றுப்புறங்களில் இருக்கும் குழந்தைகளுக்குக் கற்பிக்க முன்வருகின்றனர். தங்கள் கையிலுள்ள செல்பேசியின் மூலம் குழந்தைகளுக்குப் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்துக் கற்பிக்கும் எல்லையில்லா சுதந்திரத்தை இவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியும் கையேடுகளும் வழிகாட்டிகள் மட்டுமே. இவற்றையும் தாண்டி, கற்றலை இனிமையாக்கும் வானளாவிய சுதந்திரம் இவர்களுக்கு இருக்கிறது. இவர்களுக்குத் தேவையெல்லாம் சமூக அங்கீகாரம் மட்டுமே. அண்மையில் ஒரு சமூக ஆர்வலர் தனது சொந்தச் செலவில் குழந்தைகள் பயிலும் இடத்துக்கு வண்ணம் பூசித்தந்து உதவியுள்ளார். இவ்வாறுதான் என்றில்லை. சிறு சிறு உதவிகளும் செய்து உற்சாகப்படுத்தலாம். வேறு எதுவும் இயலவில்லை என்றாலும், அந்த வழியாகச் செல்லும் யாரும் ஒருசில நிமிடங்கள் நின்று “நல்லது தங்கச்சி”, “நல்லது தம்பி”, ‘‘நல்ல வேலை செய்கிறீர்கள்” என்ற வார்த்தைகளைக் கூறினால்கூடப் போதும். அது அவர்களுக்கு ஆகப் பெரிய உற்சாகத்தை வழங்கும். அதனை வழங்குவதற்குத் தமிழ்ச் சமூகம் தயங்குமா என்ன?
- என்.மாதவன், மாநில செயற்குழு உறுப்பினர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT