

கடந்த ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கப்படவிருந்த 45-வது சென்னை புத்தகக்காட்சி, கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை பரவல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது. இனி புத்தகக்காட்சி நடக்குமா நடக்காதா, நடந்தால் கூட்டம் வருமா வராதா, கூட்டம் வந்தாலும் புத்தகங்கள் விற்பனை ஆகுமா ஆகாதா என்கிற பல கேள்விகளோடு இருந்த நிலையில், கடந்த பிப்.16 அன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், புத்தகக்காட்சியைத் தொடங்கிவைத்தார்.
1,000 அரங்குகள் அமையவிருந்த புத்தகக்காட்சியில், அரசின் விதிமுறைகளால் 800 அரங்குகள் அமைக்கப்பட்டன. 19 நாட்கள் நடைபெற்ற புத்தகக்காட்சி நேற்றுடன் நிறைவுபெற்றது.
இந்தப் புத்தகக்காட்சியை நடத்திய தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) செயலாளர் எஸ்.கே.முருகனிடம் பேசியபோது, ‘‘கடந்த ஆண்டுகளில் நடந்த புத்தகக்காட்சிகளில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை உள்வாங்கி, இந்த ஆண்டு சிறப்பாக நடத்தியிருக்கிறோம். கரோனா பெருந்தொற்றின் காரணமாக புத்தக விற்பனை தொய்வடைந்திருந்ததால் மனச்சோர்வில் இருந்த பதிப்பாளர்களுக்கும் புத்தக விற்பனையாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இந்தப் புத்தகக்காட்சி மீண்டும் புத்துணர்ச்சியை அளித்துள்ளது. வழக்கமாக விடுமுறை நாட்களில் மட்டுமே காலை 11 மணிக்குத் தொடங்கும் புத்தகக்காட்சி, இந்த முறை 19 நாட்களுமே காலை 11 மணிக்குத் தொடங்கப்பட்டது. வாசகர்களும் காலையிலிருந்தே வருகைதந்தனர். அதேபோல் அண்ணாசாலையிலிருந்து கண்காட்சி அரங்குக்கு வருவதற்கு விடுமுறை நாட்களில் 4, மற்ற நாட்களில் 2 என்று இலவச வாகனங்களும் இயங்கின. கழிப்பறைகள் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டன.
“தமிழ்நாடு அரசு வழக்கமாகப் புத்தகக்காட்சிக்கு வழங்கும் ரூ.75 லட்சம் உதவியோடு, கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பதிப்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு ரூ.50 லட்சம் சேர்த்து வழங்கியது பேருதவியாக இருந்தது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசின் ‘இல்லம் தேடிக் கல்வி' திட்டத்துக்கான தனி அரங்கு அமைத்திருந்ததைப் பலரும் பாராட்டிச் சென்றனர்.
அதேபோல் இந்திய விடுதலைப் போராட்டத்தின் 75-ம் ஆண்டைச் சிறப்பிக்கும் அரங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. புத்தகக்காட்சியில் 8 பாதைகள் அமைக்கப்பட்டு, அவற்றுக்கு முறையே சக்தி வை.கோவிந்தன் பாதை, சின்ன அண்ணாமலை பாதை, முல்லை முத்தையா பாதை, முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பாதை, அல்லயன்ஸ் குப்புசாமி பாதை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வ.சுப்பையா பாதை, கி.ராஜநாராயணன் பாதை, தொ.பரமசிவன் பாதை என்று பதிப்பாளர்கள், எழுத்தாளர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன. புத்தகக்காட்சி அரங்கிலேயே கரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவேக்சின், பூஸ்டர் ஆகியன போடப்பட்டன. கூடுதலாக மார்ச் 2 அன்று குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்தும் போடப்பட்டது.
“இம்முறை பள்ளிக் குழந்தைகளும் அதிக அளவில் புத்தகக்காட்சிக்கு வருகைதந்தனர். முதல் முறையாக 19 நாட்கள் புத்தகக்காட்சி நடைபெற்று, வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த ஆண்டு ரூ.10 கோடிக்கு நூல்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு ரூ.15 கோடிக்குப் புத்தக விற்பனை ஆகியிருக்கும் என்று கணித்திருக்கிறோம்" என்று மகிழ்வோடு பகிர்ந்துகொண்டார்.
புத்தகக்காட்சியின் பெரும்பாலான நாட்களில் இங்கே திரண்ட வாசகர்களின் கூட்டம் முன்பிருந்த எல்லா அச்சங்களையும் தகர்த்தெறிந்தது. தங்களுக்கென்று ஏற்கெனவே வாசகர் கூட்டங்களைக் கொண்டிருக்கும் மூத்த எழுத்தாளர்கள், நம்பிக்கையோடு புத்தகங்களை வெளியிட்டிருந்த புது எழுத்தாளர்கள் என்று யாரையும் இந்தப் புத்தகக் காட்சி ஏமாற்றவில்லை. கல்கியின் படைப்புகளுக்கு இணையாக புதுமைப்பித்தன் படைப்புகளும் விற்றது உண்மையிலேயே பெரும் மாற்றம். இந்தப் புத்தகக்காட்சி தந்திருக்கும் ஊக்கமும் உற்சாகமும் படைப்பாளர்களை மேலும் படைப்புகளைத் தருவதற்குத் தூண்டும் என்றும், வாசகர்களும் தங்கள் வாசிப்பின் எல்லைகளை விரித்துச்செல்வதற்கு உதவும் என்றும் நிச்சயம் நம்பலாம்.
- மு.முருகேஷ், தொடர்புக்கு: murugesan.m@hindutamil.co.in