Last Updated : 04 Mar, 2022 07:01 AM

Published : 04 Mar 2022 07:01 AM
Last Updated : 04 Mar 2022 07:01 AM

புத்தகத் திருவிழா 2022 | மகிழ்ச்சியைக் கொண்டாடுபவர் சோர்பா! - மொழிபெயர்ப்பாளர் கோ.கமலக்கண்ணன்

மொழிபெயர்ப்பு, சிறுகதைகள், குறுநாவல், கட்டுரைகள் என்று தொடர்ந்து இயங்கிவருபவர் கோ.கமலக்கண்னன். ஐசக் பாஷவிஸ் சிங்கரின் ‘ஷோஷா’ நாவல் (தமிழினி வெளியீடு) இவரது மொழிபெயர்ப்பில் 2021-ல் வெளியானது. புத்தகக்காட்சியையொட்டி, நீகாஸ் கசந்த்சாகீஸின் ‘சோர்பா என்ற கிரேக்கன்’ இவரது மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கிறது. மேலும், ‘அபத்தமானவனின் கனவு’, ‘மீள்வருகை’, ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய நூல்களும் சமீபத்தில் வெளியாகியிருக்கின்றன. கமலக்கண்ணனுடன் உரையாடியதிலிருந்து…

நீகாஸ் கசந்த்சாகீஸின் ‘சோர்பா’வை மொழிபெயர்க்கும் எண்ணம் எப்படி வந்தது?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்ப்பாளராக ஆக வேண்டும் என்கிற கனவோ தீவிர இச்சையோ என்னிடம் இல்லை. ஆனால் நெடுங்காலமாக, முக்கியமான உலகப் படைப்புகள் பலவும் வெறும் மேற்கோள்களாக மட்டுமே இருந்துவருவதைக் குறித்தும் - ரஷ்ய மேதைகளைத் தவிர - பிற தேசத்து மேதைகளைத் தமிழில் போதிய அளவு அறியாமலும் விவாதிக்காமலும் இருந்துவருகிறோம் என்பது குறித்தும் ஒரு மனக்குறை இருந்தது. ஒரு புள்ளியில் அந்த மனக்குறை எழுப்பிய அறைகூவலை நானே ஏற்று மொழிபெயர்க்க முடிவுசெய்தேன்.

என் புனைவுக்கான பயிற்சியாகவும் மொழிபெயர்ப்புப் பணிகளைப் பயன்படுத்திக்கொண்டேன். முதலில் ஐசக் பாஷவிஸ் சிங்கரின் நாவலை மொழிபெயர்த்தேன். அதைத் தொடர்ந்து, ரொபர்த்தோ பொலான்யோ, யுகியோ மிஷிமா, டேவிட் ஃபாஸ்டர் வாலஸ் உள்ளிட்டோரின் படைப்புகளையும் மொழிபெயர்த்தேன். இந்தப் பயிற்சியையும் உவகையையும் அடிப்படையாகக் கொண்டு, நெடுங்காலமாகத் தமிழ் வாசகர்களால் எதிர்பார்க்கப்படும் நீகாஸ் கசந்த்சாகீஸின் ‘சோர்பா என்ற கிரேக்கன்’ நாவலை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். ஓஷோவில் தொடங்கி ஜெயமோகன், தேவதச்சன் வரை அந்நாவல் சுட்டப்பட்டுவந்திருக்கிறது. ‘சோர்பா என்ற கிரேக்கன்’ நாவலை மொழிபெயர்க்கச் சிலருக்குத் தயக்கம் இருந்தது. கிரேக்கம் என்றதுமே மனதில் எழும் மெய்யியல் குழப்பங்கள் காரணமாக இருந்திருக்கலாம். ’பிறகு யார்தான் செய்வது?’ என்ற எண்ணமே என்னைத் தூண்டியது.

‘சோர்பா’ சொல்லும் உலகளாவிய செய்தி என்று எதைச் சொல்வீர்கள்?

சோர்பா மகிழ்ச்சியைக் கொண்டாடுபவர். அவர் தன் இளமையில் மூர்க்கம், குழப்பம், வன்மம் ஆகியவற்றிலிருந்து கனிந்து காதலாகிக் கசிந்துருகக் கற்றவர். மலைச்சரிவுகளில் வழுக்கி உருண்டோடும் ஒரு பரல்கல்லின் பெளதிகத்தைக் கவித்துவமான பக்தியுடன் வியக்கும் குழந்தை அவரிடம் உண்டு. வாழ்வின் முதன்மை நோக்கம் இன்புற்றிருப்பதே என்பதையும் அதற்கு முற்றான விடுதலை ஒரு கருவி என்பதையும் அவர் தன் ஒவ்வொரு நகர்விலும் கூவிச் சொல்கிறார். அவர் உலகுக்குத் தரும் செய்தி ஒன்றே ஒன்றுதான் - ஹெடோனிசம்!

‘ஷோஷா’வை மொழிபெயர்த்த அனுபவம் பற்றிச் சொல்லுங்களேன்...

ஷோஷா மொழிபெயர்ப்பின்போது ஹசீதிய யூதர்களின் வாழ்க்கைமுறையைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள தோரோவை வாசிக்க நேர்ந்தது. அது ஆபிரஹாமிய மதங்களைப் பற்றிய நற்புரிதலை அளித்ததோடு, ‘ஷோஷா’வின் மொழிபெயர்ப்பிலும் உதவியது. ‘ஷோஷா’ என் முதல் மொழிபெயர்ப்பு என்பதால், அது அளித்த கற்றலும் உவகையும் பதின்ம வயதுக் காதலைப் போல இனிமையான உணர்வாக என் ஞாபகத்தில் பரவியுள்ளது. சிங்கர், தல்ஸ்தோயைப் போலத் தமிழில் வாசித்துப் போற்றப்பட வேண்டியவர்.

16-ம் நூற்றாண்டு ஆங்கிலப் பிரதியான ‘ரோமியோ-ஜூலியட்’டை நவீனத் தமிழுக்குக் கொண்டுவருவதில் எப்படிப்பட்ட சவால்களை எதிர்கொண்டீர்கள்?

‘ரோமியோ – ஜூலியட்’ நாடகம் வில்லியம் ஷேக்ஸ்பியரால் ஆங்கிலத்தில் இயற்றப்பட்டிருந்தாலும் அது இத்தாலியின் வெரோனா நகரில் நடப்பதாகவே அமைந்திருக்கிறது. ஷேக்ஸ்பியர் ஒருசில பண்பாட்டுக் கூறுகளைத் தவிர்த்து, காதலும் அதன் நிமித்தம் தளும்பும் களவொழுக்கத்தையே முன்வைக்கிறார். என்னுடைய தமிழ் சிற்றிதழ் சூழலிலிருந்து உருவானதல்ல. மாறாக, சங்கம், சங்கம் மருவிய இலக்கியங்களிலிருந்தே உருவானது. எனவே, தமிழின் அக இலக்கியங்களுக்கும் ‘ரோமியோ-ஜூலியட்’டின் கதைக்களத்துக்குமான பொது உணர்வை எளிதாகக் கண்டறிந்து மொழிபெயர்க்க முடிந்தது.

அடுத்தடுத்த திட்டங்கள் என்ன?

தற்போது என் முதல் நாவலை முடிக்க வேண்டும். ஜப்பானின் திரைப்படக் கலை மேதையான கெஞ்சி மிசோகுசியைப் பற்றிய நூல் ஒன்று எழுதி முடிக்க வேண்டும். புனைவு மொழிபெயர்ப்பு தொடர்பாக என் மன வரிசையில் நான்கு படைப்பாளிகள் இருக்கிறார்கள். நான் மதிக்கும் இலக்கிய ஆளுமைகளிடம் விவாதித்து, விரைவில் அடுத்த மொழிபெயர்ப்பு பற்றி அறிவிப்பேன்.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x